அமலாகவிருக்கும் புதியகாலனிய தண்டனை மற்றும் குற்றவியல் சட்டங்கள்
சே ரா
விரைவில் இந்திய தண்டனை சட்டம் மற்றும் குற்றவியல் நடைமுறை சட்டங்களுக்கான புதிய வரைவு வெளியிடப்படும் என மைய அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநில உள்துறை அமைச்சர்களுக்கான சூரஜ்கண்ட்டில் நடந்த “சிந்தனை முகாம்" கூட்டத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இந்தியர்களை தங்கள் சுரண்டல் நோக்கத்திற்காக ஒடுக்குவதற்கும், மக்களை பிரிட்டிஷ் அரசின் அடக்குமுறைக்கு எதிராக போராடும் எண்ணத்தோடு ஒன்று சேர்ந்து பேசக்கூட கூடாது என்னும் நோக்கில் உருவாக்கப்பட்டது அன்றைய தண்டனை சட்டம். பிரிட்டிஷ் கையிலிருந்து இந்திய ஆளும் வர்க்கத்திடம் ஆட்சி கைமாறிய பிறகும் மேற்கண்ட தண்டனை சட்டம் மக்களை ஒடுக்குவதற்கும், ஆளும் வர்க்கத்தின் சுரண்டலை பாதுகாக்கவுமே பயன்பட்டு வந்தது.
1947 லிருந்து 2000 ன் முற்பகுதி வரையிலும் இந்திய பெருமதலாளிகளின் பலமின்மை என்பது இந்திய சட்டங்களில் பழைய சட்ட அமைப்புகளில் பெரிய மாற்றங்களை கோரவில்லை. ஆனால் தற்போது அபரிவிதமான மூலதன பலத்துடன் இருக்கும் இந்திய பெருமுதலாளியத்திற்கு இதுநாள் வரை இருந்த தண்டனை சட்டங்கள் போதவில்லை. அதை விட பலம்வாய்ந்த சட்டங்கள் தேவைப்படுகின்றன.
44 தொழிலாளர் நலச்சட்டங்களை 4 சட்டத்தொகுப்பாக மாற்றி தொழிலாளர்களின் உரிமைகளை பறித்து கடுமையான உழைப்பு சுரண்டலுக்கு தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். நாட்டில் பல கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு எந்த நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. கல்வி மாணவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வு மக்களை படாதபாடு படுத்துகிறது. இவைகளை எல்லாம் அரசு கண்டுகொள்ளாமல் இந்திய பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
வரும் நாட்களில் அரசின் செயல்பாடுகளால் மக்களின் அதிருப்தி அதிகரித்து மக்களின் போராட்டங்கள் அதிகரிக்கும் என்பதால் அதனை கட்டுப்படுத்த தேவையான இன்னும் பலம்வாய்ந்த தண்டனை சட்டத்தொகுப்பும், விசாரணையை எளிமைப்படுத்தி விரைவில் தண்டனை வழங்குவதற்கு ஏதுவாக குற்றவியல் நடைமுறை சட்டங்களையும் மாற்ற வேண்டிய தேவை அரசுக்கு இயல்பாகவே எழுந்துள்ளது.
இந்த தேவையின் அடிப்படையிலே மைய அரசின் உள்துறை அமைச்சர் புதிய தண்டனை மற்றும் குற்றவியல் சட்ட வரைவுகள் விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்.
பழைய பிரிட்டிஷ் காலத்திய சட்டங்களில் மாற்றங்கள் நிகழவேண்டும் என்பதை விட அதை முற்றிலும் மாற்றி அமைக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு தண்டனை சட்டத்தொகுப்பும், குற்றவியல் நடைமுறை சட்டத்தொகுப்பும் ஆளும் முதலாளிய வர்க்க கட்சிகளால் நடைமுறைப்படுத்த முடியாது.
- சே ரா
(முகநூலிலிருந்து)
கட்டுரையாளரின் முகநூல் பக்கத்திற்கு செல்ல கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு