வ. உ .சி என்று சொல்லடா ஏகாதிபத்திய எதிர்ப்பில் நில்லடா!

துரை. சண்முகம்

வ. உ .சி என்று சொல்லடா ஏகாதிபத்திய எதிர்ப்பில் நில்லடா!

இனவாத சாதியவாத பார்வை எப்போதும் ஒரு பிரச்சனையின் முழுமையை ஆராய உதவாது. அடிப்படையை அகற்றுவதற்கான வேலைத் திட்டங்களை விட வெளிப்பாட்டை பேசுவதிலேயே தனது இருப்பின் நியாயம் கொள்ளும். 

அப்படித்தான் இப்போது 

வ. உ. சி சாதி பிரச்சனையை ஒழிக்கப் போராடாமல், பிரிட்டிஷ் அரசை எதிர்த்தது

தவறு! அயோத்திதாசரே சொல்லி இருக்கிறார் என்று காலனிய ஏகாதிபத்திய அடிமைத்தனம் சாதி ஒழிப்பு வடிவத்தில் நியாயம் கொள்கிறது. 

பகத்சிங் கூடத்தான் முதன்மை முரண்பாடாக பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்தார்.

இவர்கள் பார்வையில் அவரும் ராஜா துவேஷி. அரசின் அடிமை திலகங்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?

தனி உடமையின் சமூக அடித்தள இருப்பிலும் அதற்கான பண்பாட்டு உளவியல் நியாயம் வழங்கும் 

சடங்கு சம்பிரதாயம் சட்டம் போன்றவைகளை ஆதரிக்கும் அரசமைப்பு அதிகாரத்திலும் 

உயிர் வாழ்கிறது சாதி. இந்த அடிப்படையோடு மோதாமல் ராஜ விசுவாசத்தோடு சீர்திருத்த பிரார்த்தனை செய்வது என்பதன் மூலம் இன்றளவும் சாதிய ஆதிக்கம் 

தேர்தல் ஓட்டு சீட்டு ஜனநாயக வடிவம் வரை ஆதிக்கம் செய்கிறது. 

பிரிட்டிஷ் காலகட்டத்தை பார்க்கையில் அன்றைய முக்கிய முரண்பாடு நாட்டுக்கும் அந்நிய ஆதிபத்தியத்திற்கும் என்பது. 

இதில் சீர்திருத்தக்காரர்கள் நாட்டையும் மக்களையும் அடிமைப்படுத்திய பிரிட்டிஷ்காரன் பக்கம் நின்று கொண்டு லாலி பாடினார்கள். 

இவர்களில் பல வண்ண பேர்வழிகள் இருந்தார்கள்.

பிரிட்டிஷ் காரன் ஒரு எக்கு எக்கிய உடனேயே மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்

பெரியாரும் கூட. 

பட்டியலின மக்களின் மீதான பார்ப்பன கூட்டுத்தொகை சாதியாதிக்கத்தை காட்டி, அதாவது பட்டியலின மக்களை பார்ப்பான் மட்டும் கொடுக்கவில்லை பார்ப்பனரல்லாத ஏய்ப்பானும் சேர்ந்தே ஒடுக்கினர்.

நீதிக்கட்சியில் மேட்டுக்குடி மேல்படிநிலை பார்ப்பனர் அல்லாத சாதி பண்ணைகள் 

சகல சௌபாக்கியம் தேடிக்கொண்டனர். பச்சையப்பன் அறக்கட்டளை பச்சையப்பன் கல்லூரியில் குறிப்பிட்ட காலங்கள் வரை பட்டியலின மக்களுக்கு கல்வி உரிமையே மறுக்கப்பட்டு இருந்தது வரலாறு. இதை எந்த பார்ப்பான் தடுத்தான். பார்ப்பனர் அல்லாத சாதி கொழுப்பர்களும் ஏகாதிபத்திய பிரிட்டிஷ் அரசும் இந்த விசயத்தில் சமரச கூட்டணியாக தான் அப்போது இருந்தது. நீதிக்கட்சியின் சர்.பிடி தியாகராஜர் இந்த பச்சையப்பன் கல்லூரி நிர்வாக சபையில் இருந்தவர்தான்.

நால்வர்ண அமைப்பு முறையில் சில தனிப்பட்ட பிரிட்டிஷ் கவர்னர்கள் சில நிகழ்வுகளை ஏற்படுத்தியதை வைத்து பிரிட்டிஷ் அரசு பார்ப்பனியத்துக்கு எதிராக இருந்ததால் பாரதி உட்பட பலரும் போராடினார்கள் என கொச்சையாக பார்த்தார்கள். 

உண்மையில் முதலாளித்துவ வளர்ச்சி தொடக்கப் போக்கின் சில சமூக நிர்வாகத் தேவைகளுக்காக அதன் ஊடே சாதி ஆதிக்க சமூக அமைப்பில் நெகிழ்வு போக்குகள் ஏற்பட்டன என்பதுதான் உண்மை. 

இதைத்தான் மார்க்ஸ் கூட இந்தியாவைப் பற்றி சொன்னதில், ரயில் தபால் தந்தி போக்குவரத்து போன்றவற்றின் ஊடான மாற்றங்களை மதிப்பிட்டு சொன்னார்.

இது நில உடமை உற்பத்தி முறையில் ஏற்பட்ட முதலாளித்துவம் உற்பத்தி முறையில் உறவுகளில் தாக்கத்தில் உலகெங்கும் விளையக்கூடிய மாற்றம்.

இதற்காக எந்த ஒரு பழங்குடி இனமும் வெள்ளைக்காரன் வந்தான் பிஸ்கோத்து கொடுத்தான்! படிப்பு சொல்லிக் கொடுத்தான்! என்பதற்காக தங்களது துண்டு நிலத்தை அந்நியனால அனுமதிக்காமல் எதிர்த்து கலகம் செய்து போராடியதுதான் இந்திய நாட்டின் வரலாறு. சொந்த நாட்டின் சுயமரியாதை உணர்ச்சி வரைக்கும் சிந்திக்காத வெந்ததை தின்று

தந்ததில் வாழ்வோம்! எனும் சந்துக்களால் மட்டுமே பிரிட்டிஷ்காரன் நம்மை வாழ வைக்க வந்தான்! என்று சிந்திக்க முடியும். இன்றும் கூட அந்நிய மூலதனம் தமிழ்நாட்டை வாழ வைக்க வருகிறது என்று அரசின் உலகமயக் கொள்கை பேசுவதை வளர்ச்சி என்று அடித்து விடும் நபர்கள் இந்த ஜந்துக்களின் வாரிசுகள்தான்.

உண்மையில் பிரிட்டிஷ் காலணி ஆதிக்க அரசு இந்தியாவில் சாதியை மதத்தை ஒழிக்கவில்லை அதனோடு சமரசம் செய்து கொண்டது என்பதுதான் வரலாற்று விவரங்கள். அதன் ராணுவ பொருளாதார அதிகாரத்தை பார்த்தால் ஒரு நிமிடத்தில் இந்தியாவில் பார்ப்பனி ஆதிக்கத்தை ஒழித்து இருக்க முடியும். ஆனால் காலனி அரசு இங்குள்ள பிரிவுகளை பிளவுகளை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் செய்தது.

இன்னும் சொல்லப்போனால் ஏற்கனவே நிலவிய கோயில் மடங்கள் சொத்துக்கள் சாதிய சமூகப் பழக்கங்கள் போன்றவற்றை அனுமதித்தது.

இதற்கு எதிராக யாரும் கலகம் செய்தால் அரசு என்ற முறையில் படைகளை வைத்து அழித்து ஒழிப்பதுதான் அதன் வேலை. 

அரசமைப்பு அதிகாரத்திலும் அதன் சட்டங்களிலும் உயிர் வாழும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் முடிக்காமல் அரசை எதிர்த்துப் போராடாமல் ஜாதியை ஒழிக்க முடியாது. அத்தகு அரசை எதிர்த்து போராடியவர்கள் பாரதியும் வ. உ .சி யும். இன்றும் கூட அரசை அண்டிப் பிழைக்கும் அரசியல்வாதிகள் பல இவர்களைவிட குறைவான வேலை திட்டத்திலிருந்து கொண்டு அவர்களை விமர்சிப்பது நகைச்சுவை. 

தவிர நீதிமன்ற பரிபாலனை கூட மத சாதி சம்பந்தப்பட்ட விவகாரங்களில் ஃபீனல் கோடுகளுடன் மனுதர்ம பூணூல் கோடுகளின் இறுக்கத்திலேயே கையாண்டது பிரிட்டிஷ் அரசமைப்பு. இதில் சந்தேகம் கேட்டு உறுதி செய்ய அதற்கான சாஸ்திர பார்ப்பன விற்பன்னர்களிடம் கருத்தும் கேட்டது. துபாசிகள் என்று சொல்லக்கூடிய இரு மொழி பெயர்ப்பாளர்களை பார்ப்பனர்களை அமர்த்திக் கொண்டது. பார்ப்பனியத்துடன் சமரசம் செய்து கொண்ட பிரிட்டிஷ் அரசை பார்ப்பனியத்தை ஒழிக்க வந்ததாக கதை கட்டினார்கள் பிரிட்டிஷ் தாசர்கள். 

எனவே பாரதி வ. உ .சி போன்றவர்கள் கம்யூனிச புரட்சியாளர்களோ அதன் அடிப்படையிலான சித்தாந்தவாதிகளோ அல்ல. என்றாலும், அவர்களுடைய ஏகாதிபத்திய எதிர்ப்பிலேயே தவிர்க்க இயலாமல் சாதி ஒழிப்புக்கான அரசியல் பாதையும் இருக்கிறது. அதை அடுத்த கட்டத்துக்கு சித்தாந்த ரீதியாக சிந்திக்க வேண்டியது அனைவரின் பொறுப்பு. அவர்கள் கால சூழலில் இந்தியாவின் சகல பிற்போக்கையும் சேர்த்து ஆட்சி செய்த பிரிட்டிஷ் அதிகாரத்தை எதிர்த்து என்பதுதான் சரியானது. சாதி ஆதிக்கத்தோடு சமரசம் செய்து கொண்ட வெட்டி சரசுடன் சமரசம் செய்து கொள்ளாதவர்களாக இருந்தது தான் அவர்களிடம் வரவேற்கத்தக்க அரசியல்.

மற்ற அவர்களின் சமூக சிந்தனை கருத்தியல் போக்குகளில் உடன்பாடு இல்லாதவைகளை ஏற்க வேண்டிய அவசியம் இல்லை.

வெள்ளை அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் போலவே 

காலனி ஆதிக்க பிழைப்புவாத கும்பலும் அவர்களை ராஜதுவேஷி என்று சொல்வது சரியான மதிப்பீடு. அதுதான் அவர்களுக்கான பாராட்டும் கூட. ஏனென்றால் சொல்பவர்கள் ராஜ விசுவாசிகள். ஆதிக்கம் செய்யும் அரசை எதிர்க்கத் துணியாத காரிய கோழைகள்!

விடுதலைப் போராட்ட மாவீரர் மருது சகோதரர்கள் மொழியில் சொன்னால் உடம்பில் அடிமை ரத்த ஓடும் .....ப்பிறவிகள்!

https://www.facebook.com/100080904177819/posts/893927773314020/?rdid=3t2y4XvnSnxxMHfv

=======================================

வ. உ .சி யை வாழ்த்தும் போது "வேளாளன் சிறை புகுந்தான்!" என்று பாரதி எழுதி விட்டாராம்.

ஆகவே அது அவரது சாதி புத்தியை காட்டி விட்டதாம்.

அப்போதிருந்த சூழலில் வாங்க பிள்ளைவாள்! வாங்க முதலியார் வாள்! வாங்க செட்டியார் வாள்! என்பது பேச்சு வழக்கில் இருந்திருக்கிறது.

பழைய சினிமாக்களில் கூட அந்தக் காலச்சுழல் இப்படி வசனங்களாக இருக்கும். 

முக்கியமாக எப்போதும் பிரிட்டி சிஐடி கண்காணிக்கும் ஒரு நபரை வெளிப்படையாக வாழ்த்துவதும் பழகுவதுமே அந்த காலத்தில் வரம்பு மீறிய ஒரு செயல்தான். அடிமை ஊர்வன அறிந்தது இல்லை பறவையின் சிறகுகளை.

சரி பாரதியார் இப்படி சொன்னதற்காக சாதிப் பெயரை சொல்லி அழைப்பதை இப்போது நாம் ஏற்கவில்லை.

ஆனால் பகுத்தறிவு பகலவனே குடியரசில் பல இடங்களில் வ.உ.சி யை வ. உ. சிதம்பரம் பிள்ளை என்றும், பிள்ளை என்றும் கூட எழுதி இருக்கிறார். 

இதுவும் சாதி புத்திதானோ! 

ஏன் ஆரம்ப காலத்தில் சுயமரியாதை இயக்கம் வந்த பிறகும் அவருடைய பழைய அரசியல் நண்பர்கள் பலர் நாயக்கர் என்று தான் அழைத்திருக்கிறார்கள். 

உடனே அவர் தடி கொண்டு தாக்கவில்லை. 

அதைவிட ராஜாஜியை

பாப்பார பயலே என்று பெரியார் எங்காவது திட்டியிருக்கிறாரா?

இளிச்சவாய் ஏழை பார்ப்பான் என்றால் ஒரு வர்க்க கொழுப்போடு பேசுவதுதான் இதில் வெளிப்படுகிறது. 

பாரதி பார்ப்பான் ஊரறிந்த விசயம். நீங்கள் செட்டியார் கோனார் வன்னியர் சாதி இந்துக்கள் ஆக 

வலம் வருவதும் உலகுக்குத் தெரியும்.

இல்லையென்றால் தனிநபராக உண்மையில் தமிழகத்தின் தந்தையாக போற்றப்பட வேண்டிய வ .உ. சி ஏழ்மையில் விழுந்து தன் மகன் வேலைவாய்ப்புக்கு எழுதிய ஒரு தனிப்பட்ட கடிதத்தை யாராவது பிரேம் போட்டு மாட்டி அசிங்கப்படுத்துவார்களா? 

ஏழ்மையை இழிவுபடுத்துபவன் எப்பேர்ப்பட்ட அயோக்கியனாக இருப்பான்! பண்ணையார் புத்தி. இதுதான் இவர்களின் வர்க்க தராதரம்.

நீங்கள் ஆளுங்கட்சிக்கு அண்டர்கிரவுண்டில் எழுதும் சிபாரிசுகளை பிரேம் போட்டு மாட்ட தயாரா? 

உங்கள் காக்கா பிடிப்புகள் ஊருக்கு தெரியாதா?

போங்கய்யா நீங்களும் உங்க பகுத்தறிவும்!

தமிழக அரசியல் களத்தில் முதன் முதலில் அரசியல் தொடர்புகளை சாதிப் பெயர் இல்லாமல் தோழர் காம்ரேட் என்று அழைத்த அருகதை கம்யூனிஸ்டுகளுக்கே உண்டு!

https://www.facebook.com/100080904177819/posts/894248513281946/?rdid=THbGjlQW11hdsIq9

============================================================

நேற்று தோழர் குருசாமி மயில்வாகனன் அவர்கள் எழுதிய "கேளாத கதை" நூல் வெளியீட்டு விழா பயனாக அமைந்தது.

எனது வேலையில் இருந்து உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இருந்தாலும் 

முதல் பேச்சாளர் பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்

செல்ல முடிந்தது பெரு மகிழ்ச்சி. 

ஏனென்றால்,  நூல் மதிப்புரை வழங்கியவர் வெகு சிறப்பாக நூலின் சாரத்தை அறியத் தந்தார். ஆயிரம் பக்கங்கள் கொண்ட நூலை படிக்க வேண்டியதன் வரலாற்று அவசியத்தை உணரும்படி வார்த்தைகளில் காட்சிப்படுத்தினார். 

உடனடியாக அந்த நூலை

வாங்க முடியவில்லை. இருப்பினும் சிறிது நேரம் அந்த நூலின் பக்கங்களை புரட்டியதில், பேச்சாளர் வழியாக கேட்டதில் பல பிரிட்டிஷ் கால அரசு ஆவணம் சான்றுகளுடன்  திறம்பட தயாரித்துள்ளார் தோழர்.

காலனி ஆதிக்கத்திற்கு எதிராக சரியான இடத்தில் அடி கொடுத்த வ.உ .சி தன்னைப் பற்றி அறியத் தரும் குறிப்புகளை விவரமாக எங்குமே தரவில்லை. காலனிய  தாசர்களுக்கு  வரலாறுகள் மண்டி கிடக்கும் சூழலில் மாபெரும் விடுதலைப் போராட்ட ஆளுமையின் வாழ்க்கை குறிப்புகள் சிதறி கிடக்கின்றன. 

பிரிட்டிஷ் அரசு ஆவணங்களின் வழி பல தகவல்கள் இந்நூலில் சொல்லப்படுகின்றன.

நவீன டிஜிட்டல் படுத்துதல் முறையில் பல அரசு ஆவணங்களை அறிய உதவி இருக்கும் இந்தத் துறையின் அரசு பணியையும் பாராட்ட வேண்டும்.

காலனிய எதிர்ப்பு போராளி 

வ.உ.சி. யை வரலாற்றில் நினைக்கும் போதெல்லாம் இரண்டு விசயங்கள் என்னை மலைக்க வைக்கும்.

ஒன்று இந்திய வளங்களை கொள்ளையடித்து வணிக முதலாளித்துவமாகவும் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்திய போக்கை அறிந்து கொண்ட அவரின் பகுத்தறிவு. 

இந்தப் பகுத்தறிவு அப்போது எந்த தலைவரிடமும் இல்லை.

அந்த வகையில் சுதேசி கப்பல் ஓட்டுவது என்பதும் அடுத்து கோரல் மேல் தொழிலாளர் போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய பிறகு புதிய பஞ்சாலையை சுதேசியாக நிறுவும் அவரது நோக்கமும் வெள்ளைக்காரனை பயங்கர ஆத்திரமாக்கியுள்ளது. இப்படி வெள்ளைக்காரன் உயிர் நாடியில் தாக்கிய அடி வ.உ.சி.

யின் உண்மையான காலனிய எதிர்ப்பு சுயமரியாதை இயக்கமாக விரித்து கொண்டு செல்லப்படாதது துயரம்.

அடுத்து காலனிய எதிர்ப்பின் அரசியலை குறிப்பாக தொழிலாளர் வர்க்கத்தின் பக்கம் சேர்ந்து நின்று கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் உருவாகாத காலத்திலேயே தொழிற்சங்க அரசியலை கையில் எடுத்த அவரது அரசியல் கூர்மை மிகச் சிறப்பானது.

இந்த இரண்டு விதமான காலனிய எதிர்ப்பின் சிறப்பு தன்மைகள் வ. உ. சி எங்கிருந்து பெற்றார் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

வன்முறையாக நிறுவப்பட்டிருக்கும் ஒரு அரசை வன்முறையாக தான் தூக்கி எறிய முடியும் எனும் சில சிந்தனைகளும் அவர் மத்தியில் இருந்ததும் அக்காலத்திய வியப்பு. 

ஏனென்றால் காங்கிரசிலிருந்து வந்த பலரும் வெளியேறிய பிறகும் பெரியார் உட்பட வன்முறையே கூடாது எனும் தத்துவம் பேசும் நபராக இருந்திருக்கிறார்கள். 

வ .உ .சி போன்ற பிரிவினர் 

வாய்ப்புள்ள போதெல்லாம் அடிடா!  என அரசியல் பார்வை கொண்டு இருந்துள்ளனர். 

சிறைக்குள் ஆங்கிலேய அதிகாரிக்கு எதிராக நடந்த கலகங்களில் கூட, சிறைக் கைதிகள் வ.உ .சி இடம் ஆலோசனை கேட்கும் போது

அவனுடைய இந்தத் தவறுக்கு கொலை செய்ய வேண்டாம்! ஆனால் அடியை கொடுங்கள்! என்று கூறிய செய்திகள் இருக்கிறது.

இப்படிப்பட்ட மாபெரும் போராளி சிறை வாழ்க்கை பிற துன்பங்களை அனுபவித்த போது அவரிடம் தொடர்பு கொண்ட பலரில் பார்ப்பனர்கள் உள்ளிட்ட பலரும் உதவியுள்ளார்கள். அதன் புகைப்படங்கள் நூலில் ஆதாரங்களாக உள்ளன. 

வெள்ளைக்காரன் பொழுதிற்கும் கண்காணிக்க சிஐடி வைத்துள்ள போதும் 

அவரை அஞ்சாமல் பாரதியார் போன்ற நபர்கள் பழகியுள்ளனர். புறநிலை எதை கோருகிறதோ அதை, அப்போது மறுக்காமல் ஒருவன் தன்னிடம் இருந்து வழங்குவது தான் வீரம்!

அந்த வகையில் ஒரு தலைமுறை இயங்கியுள்ளனர்.

வ உ .சி பாரதியார் உட்பட அப்போது இயங்கியுள்ளனர்.

இதை மதவாதத்திற்குள் பிரிட்டிஷ் அரசாலேயே முடக்க முடியவில்லை.

ஆஷ் படுகொலை சனாதன எதிர்ப்புக்காக நடந்தது என  தமிழகச் சூழலில் அடித்து விடப்படும் சனாதன கதையை மறுக்கிறது  நூலின் சில ஆவண கருத்துகள். அதைப் பற்றி பின்பு விரிவாக பேசுவதாக நூலாசிரியர் மேடையில் கூறியுள்ளார். 

வெள்ளைக்காரனுக்கு நல்ல பிள்ளையாக சமத்தாக நடந்த தலைவர்கள் வ .உ. சி இடம் உரிய நேரத்தில் களத்தில் நிற்கவில்லை என்பது மற்றொரு பகுதி வரலாறு. 

ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கமும் மங்கிப் போய் அதற்கான அரசியல் சேர்க்கைகள்  தொலைந்து போய் இறுதி காலத்தில்  தனித்து விடப்பட்டு தவித்து

தவித்து நின்றது வ .உ. சி யின் அவலத்தை மட்டுமல்ல அக்காலத்தில் அவலத்தையும் நமக்கு அறிய தருகிறது.

"கேளாத கதை" நாம் கேட்க வேண்டிய வரலாறு!

* நூலினை பெற தொடர்புக்கு: ஆ. அறிவு- 9382135385

https://www.facebook.com/100080904177819/posts/896129833093814/?rdid=dadJihWZF5ZswSSu

      - துரை. சண்முகம்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு