யுகப் புரட்சியின் நாயகன் தோழர் லெனின் நினைவைப் போற்றுவோம் !!

செந்தளம் செய்திப்பிரிவு

யுகப் புரட்சியின் நாயகன் தோழர் லெனின் நினைவைப் போற்றுவோம் !!

இயங்கியல் ரீதியாக, பல பரிணாமங்களை சந்தித்திருக்கிறது மனித குலம். முதலாளித்துவ சமுதாயத்தில், மூலதனம் அதன்  உபரி உற்பத்தி என்று  ஒட்டு மொத்த நவீன தொழில்நுட்ப வளர்ச்சியானது முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு சிலரின் கையில் சிக்குண்டது.  மனித குலத்தின் அடுத்த நிலையான பாட்டாளி வர்க்க புரட்சி,  “சோவித் ஆட்சி முறையே” மனித குலத்தின் அனைவருக்குமான ஆட்சியாக நிலைக்க முடியும் என்ற மாபெரும்  தத்துவமான "மார்க்சியம்"  உலகெங்கும் பரவிய நிலையில்;  பாட்டாளி வர்க்கத்தின் தலைவராக தொழிலாளி வர்க்கத்தை ஒன்று திரட்டி, அரசியலை கற்பித்து, முதன் முதலாக ஒரு சோவியத் குடியரசை நிறுவி நடைமுறை தத்துவத்தை படைத்த மாபெரும் தலைவராக திகழும் தோழர் லெனின் நினைவு நாளை (21 ஜனவரி, 1924)  தொழிலாளி வர்க்கத்தின்,  உலககெங்கும் உள்ள நாடுகளின் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் எழுச்சி நாளாக கொள்வோம்!

விளாடிமிர்  இலியீச்  உலியனாவ் இரசியாவில், சிம்பிர்ஸ்கி என்னும் மாகாணத்தில் 22 ஏப்ரல், 1870ல் படித்த மகிழ்ச்சியான குடும்பத்தில்  பிறந்தார்.  விளாடிமிர் லெனின் என்று நன்கு அறியப்பட்டவர், மார்க்சிய சித்தாந்தத்தை முதலாளிய வர்க்கத்தை எதிர்த்த,  பாட்டாளி வர்க்க புரட்சியை நடைமுறைப்  படுத்தி,  உலக   பாட்டாளி வர்க்கத்திற்கு வழிகாட்டிய மாபெரும் பாட்டாளி வர்க்க தலைவர். அவரது தத்துவ அரசியல் “லெனினியம்”. இரசியாவில் போல்ஷிவிக் கட்சியின் தலைவரும், சோவியத் ஒன்றியத்தின் முதல் அதிபரும், மற்றும் பின்னாளில் ஜோசஃப் ஸ்டாலினால் மார்க்சியம்-லெனினியம் என்று விரிவுபடுத்தப்பட்ட லெனினியம் என்ற கோட்பாட்டின் நிறுவனரும் ஆவார். அவர் 1901 ஆம் ஆண்டில் சைபீரியாவில் நாடுகடத்தப்பட்ட நிலையில், இரகசிய கட்சி வேலையின் போது லெனின் என்ற புனைப்பெயரை கொண்டு செயல்பட்டார். பின்னர் லெனின் என்ற பெயரே நிலைப்பெற்றது. 

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் வறுமையில் சிக்கிய ஒரு பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்த, மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட  க்ருப்ஸ்கயாவை, 1894ல் ஒரு மார்க்சிஸ்ட் கலந்துரையாடல் குழுவில் லெனின் சந்தித்தார்.  புரட்சிகர நடவடிக்கைகளுக்காக இருவரும் 1896 இல் கைது செய்யப்பட்டனர், இவ்விருவருக்குமான தோழமை உறவு, காதலாக வலுப்பெற்றது. இக்காதல் பாட்டாளி வர்க்க புரட்சிக்கு வித்தாக அமைந்தது என்றால்  அது மிகையல்ல.  லெனின் சைபீரியாவிற்கு நாடுகடத்தப்பட்ட பிறகு, 1898 இல் லெனின் -க்ருப்ஸ்கயா திருமணம் நடந்தது.  இருவரும் நாடு கடத்தப்பட்ட பிறகு முனிச்சிலும் பின்னர் லண்டனிலும் குடியேறினர். 1905 இல் ரஷ்ய புரட்சி தோல்வியுற்ற பின்பு நாடுத் திரும்பினார்கள். 

முதல் உலகப் போரின்போது, தொடங்கிய முன்னாள்  ரஷ்யப் பேரரசில் நிகழ்ந்த அரசியல் மற்றும் சமூகப் புரட்சியின் காலகட்டமாகும். இந்த காலகட்டத்தில் ரஷ்யா தனது  இரண்டு தொடர்ச்சியான புரட்சிகளை உள்ளடக்கியது. முதல் புரட்சியில் ஜாராட்சி வீழ்த்தப்பட்டு; டூமாவின் மூலம் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டது. இந்த அரசாங்கம் முக்கியமாக முதலாளித்துவம் மற்றும் ரஷ்ய பிரபுக்கள் மற்றும் பிரபுத்துவத்தின் நலன்களால் ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது புரட்சி,  நகர்ப்புற தொழில்துறை பாட்டாளிகள், கிராமப்புற விவசாயிகள்  உள்ளடக்கிய சோவியத் செம்படைகள் கொண்டு போல்ஷிவிக்  கட்சியால் வழிநடத்தப்பட்டனர். ரஷ்யாவில் கொந்தளிப்பான சூழ்நிலையில் அக்டோபர் புரட்சி உச்சக்கட்டத்தை எட்டியது. இது பெட்ரோகிராடில் தொழிலாளர்கள் மற்றும் போல்ஷிவிக் செம்படைகளின் ஆயுதமேந்திய புரட்சியாகும். இது தற்காலிக அரசாங்கத்தை வெற்றிகரமாக தூக்கியெறிந்து. அதன் அனைத்து அதிகாரங்களையும் சோவித் மயமாக்கியது.  1917, நவம்பர் 7முதல் இரசிய சோவியத் குடியரசின் தலைவரானார் தோழர் லெனின். “ஆஹாவென்று எழுந்தது பார் ஒரு யுகப் புரட்சி”  என்று பாடிய பாரதியின் பாட்டிற்கு ஏற்ப, மக்கள் சமத்துவம்  அடைந்தனர், நாடு சமூகமயமாக்கப்பட்டது, விவசாயம் பெருகி நவீனமானது, தொழில்சாலைகள் அரசுடைமையானது, முதல் விண்கலம் விண்ணில் ஏவியது என்று அனைத்து துறைகளிலும் வல்லமைப் படைத்தது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் என்ற நிலை வந்தது.  1924 வரை சோவியத் ரஷ்யாவின் முதல் மற்றும் ஸ்தாபகத் தலைவராகவும், 1922 முதல் 1924 வரை சோவியத் யூனியனின் தலைவராகவும் பணியாற்றினார். அவரது நிர்வாகத்தின் கீழ், ரஷ்யாவும் பின்னர் சோவியத் யூனியனும் கம்யூனிஸ்டுகளால் ஆளப்படும் ஒரு கட்சி சோசலிச அரசாக (USSR) மாறியது.   

காவுத்ஸ்கி, டிராட்ஸ்கி போன்ற திருத்தல்வாத வழிகளையும்  வலது, இடது சந்தர்ப்பவாத  கருத்துக்களையும் முறியடித்து, போல்ஷிவிக்  தலைமையில் யுக புரட்சியை நடத்தி முடித்தார் லெனின். அவ்வழியில்,  குருசேவ்-கோர்பசேவ் வழிவந்த CPI, CPM வலது  திருத்தல்வாதிகளையும், டிராட்ஸ்கியவாதிகளையும், இடது விலகல் போக்குகளையும், மண்ணுக்கேற்ற மார்ச்சியம் என்று  மார்க்சியத்தை சிதைக்க முயலும சந்தர்ப்பவாதிகளையும் முறியடித்து; விவசாயிகள், மாணவர்களை, பிற ஜனநாயக சக்திகளுடன் ஒன்றிணைத்து  பாட்டாளி வர்க்க தலைமையில் புதிய ஜனநாயக புரட்சியை படைப்போம்.

 
சோவியத் அரசமைக்க, பாட்டாளி வர்க்க புரட்சியை முன்னெடுப்போம்! 
மாவீரன் லெனின் விட்டுச்சென்ற அதே  சோவியத்தை மீண்டும் உலகெங்கும் படைப்போம்!! வாருங்கள் ஓரணியில் !!!

- செந்தளம் செய்திப்பிரிவு