நக்சல்பாரி புரட்சியாளர் திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் குணாளன் தோழருக்கு சிவப்பஞ்சலி!

ஏ.எம்.கே வழியில் கலைப்புவாதத்தை எதிர்த்தும் புதிய ஜனநாயகப் புரட்சிக்காகவும் இறுதி வரை போராடி உயிர் நீத்த தோழருக்கு வீரவணக்கம் !

நக்சல்பாரி புரட்சியாளர் திருப்பத்தூர் - வேலூர் மாவட்ட ம.ஜ.இ.க அமைப்பாளர் குணாளன் தோழருக்கு சிவப்பஞ்சலி!

1

இளைஞர் பருவத்திலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக தோழர் குணாளன்  அவர்கள் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர அரசியலான மார்க்சிய-லெனினிய-மாவோ சிந்தனை தத்துவ அரசியலை உள்வாங்கி, ஏ.எம்.கே. வழியில் செயல்பட்டவர். மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தில் இணைந்து தன் வாழ்நாள் இறுதிவரையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்தியா மீதான புதிய காலனிய சுரண்டல் ஆதிக்கத்திற்கு எதிராக போராடியவர்.  சாதி தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவுகட்டவும், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமைகளை வென்றெடுக்கவும், ஈழத் தமிழின ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தாய்மொழிக் கொள்கைக்காவும் ஏ.எம்.கே. வழியில் நின்று விடாப்பிடியாக போராடியவர்.

பாட்டாளி வர்க்க அரசியலுக்கு எதிரான டிராட்ஸ்கியவாத கோஷ்டிவாத  கலைப்புவாத பின்நவீனத்துவ அடையாள அரசியல் மூலம் கட்சியை சீர்குலைக்க முயன்ற கலைப்புவாதிகள் அனைவரையும் எதிர்த்து கட்சியை காப்பதற்கு இறுதி வரையில் போராடியவர். ஏ.எம்.கே வழியே தன் வழியென வாழ்ந்த தோழரே ! உங்கள் வழியில் நடப்போம்! என உறுதி எடுத்து விடைகொடுக்கிறோம். நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள். எங்கள் செவ்வணக்கம்.

மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்

==========================================

2

தோழர் க. குணாளன் மறைவு . . . (நட்பு 54)

தோழர் க. குணாளன் அவர்கள் மறைந்த செய்தி தற்போது தோழர் கா. குணாளன் அவர்கள் முகநூல் பதிவின்மூலம் கிடைத்தது. மிகவும் வேதனையான செய்தி. நட்பு வட்டத்தில் அவரைப்பற்றி எழுதுவதாகத் திட்டமிட்டிருந்தேன். அதற்குள் இந்தச் செய்தி.

1976-77 இல் நான் சென்னையில் திருவல்லிக்கேணியில் விடுதியில் தங்கி, முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தேன். அப்போது தோழர் குணாளன் எனக்கு அறிமுகம் ஆனார். ஒரு கையை இழந்த நிலையில் எனக்கு அறிமுகமானார்.

ஒரு வெடிகுண்டு விபத்தில் அவரது ஒரு கையின் 5 விரல்களுடன் உள்ள பகுதி சேதமடைந்துவிட்டது. அதற்கான மருத்துவ சிகிச்சைக்காக என்னுடன் தங்கியிருந்தார். அவரைச் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் பிளாஸ்டிக் அறுவைச் சிகிச்சைக்காகச் சேர்த்தோம். ஏறத்தாழ ஒரு மாதத்திற்குமேல் அங்கு இருந்தார். சேதமடைந்த அவரது கையின் முன்கைப் பகுதியில் இருக்கிற இரண்டு எலும்புகளையும் இரண்டு விரல்களாக மருத்துவர்கள் மாற்றி அமைத்தார்கள். அதையொட்டி என்னுடன் பல நாள்கள் தங்கியிருந்தார்.

அதன்பிறகு, அந்தக் கைகளைக்கொண்டே எல்லா வேலைகளையும் செய்வதற்குப் பழகிக்கொண்டார். அடிக்கடி சென்னை வருவார். என்னுடன்தான் தங்குவார். தோழர் ஏ எம் கே-வுக்கு மிகவும் பிரியமான தோழர் இவர்.  

அவரைப் பார்த்து வெகுநாள்கள் ஆகிவிட்டதால், அவரை விரைவில் பார்க்கவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். ஆனால் மறைந்துவிட்டார். மிகுந்த வேதனை.

எனது நட்பு வட்டத்தில் ஒருவரை இழந்துவிட்டேன். ஆழ்ந்த இரங்கல்.

- தெய்வ சுந்தரம் நயினார்

===========================================

3

தோழர் குணாளன் இளமையிலேயே மார்க்சிய லெனினிய வழிதான் சரியானது அது தான் பாட்டாளி வர்க்கத்தினை எல்லா விதமான அடிமை தலைகளில் இருந்தும் விடுதலை பெற செய்யும் என்ற லட்சியத்தை உறுதியாக ஏற்றுகொண்ட தோடு அந்த பாட்டாளி வர்க்க லட்சியத்தை நிறைவேற்றிட தனது இறுதி மூச்சு உள்ளவரை பாடுபட்டார்.

தோழர் குணாளன் இளைஞராக இருந்த போதே அரசியலில் ஈடுபாடு உடையவராக மா லெ இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு துடிப்புடன் செயல்பட்டார். போராட்டத்திற்கான தயாரிப்பின் போது தனது ஒரு கையை இழந்தார். அரசியல் அர்ப்பணிப்புடன் செயல்பட திருமண வாழ்வு தடையாகி விட கூடாது என்பதற்காக திருமணமே செய்து கொள்ளாமல் தன்னை இயக்க பணியில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஜோலார்பேட்டை பகுதி மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கும் மதிப்பும் மரியாதையும் இவருடைய சமரசம் இல்லாத அரசியல் வழிக்கும் அயராத உழைப்பிற்க்கும் கிடைத்ததாகவும்.

 

 பாட்டாளி வர்க்க லட்சியத்தை ஏற்றுக்கொண்ட ஒருவர் தனது இறுதி வரை எவ்வளவு உறுதியாக நிலைபாட்டில் ஊன்றி நின்று வாழ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்து சென்றுள்ளார் தோழர் குணாளன் 

மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை ஏஎம்கே வழியில்  நீங்கள் விட்டு சென்ற புரட்சி தீயை நாங்கள் உயிராக காத்து பாட்டாளி வர்க்கத்திடம் பற்றி படர வைத்திடுவோம்.

தோழர் குணாளன் அவர்களுக்கு செவ்வணக்கம்

 பூபதி கண்ணன்

==========================================

4

பெருந்துயர் எம்மை 

பிழிகிறது தோழரே!

உமது இறப்பின் வலியால் 

இதயம் கனக்கிறது! 

சுமை தாங்கிய 

விழுதொன்றின்

இழப்பின் சுமைதனை

எமது தோள்கள் சுமக்கும்!

உமது உள்ளத்தின் உறுதியை 

எமக்குள் ஏற்றிக்கொள்கிறோம்!

வீரவணக்கம்! வீரவணக்கம்!

 

செங் காற்று