நேற்று..இன்று..நாளை..!

பேரா.சோ.மோகனா

நேற்று..இன்று..நாளை..!

சூரிய குடும்பத்தின் சிறந்த புதல்வன்..!

நாம் வாழும் புவிக்கோளம், சூரிய குடும்பத்திலேயே அரிதான முக்கியமான கோளம் என்றால் மிகையில்லைதான். இங்குதானே நீர் இருக்கிறது; ஜீவராசிகளும் சஞ்சரித்துக்கொண்டு இருக்கின்றன. மனிதன் தன் நினைவு தெரிந்த காலத்திலிருந்து, பூமி பற்றிய விவாதங்களை நடத்திக்கொண்டே இருக்கின்றது. துவக்கத்தில், சூரியக் குடும்பம் என்ற விஷயமே, யாருக்கும் தெரியாது. பூமி தனித்திருப்பதாகவும், பூமியை சூரியன் வலம் வருவதாகவும் நம்பினர். இக்கோட்பாட்டினை முன் மொழிந்தவர் கி.மு 360 களில் வாழ்ந்த இயோடார்கஸ் என்பவராவார்.

சூரிய மையக்கொள்கையின் பிதாமகர்!

கிரேக்கத்தின், சாமோஸ் நகரில், கி.மு.310-230 களில் வாழ்ந்த அரிஸ்டார்கஸ், என்ற தத்துவஞானிதான் சூரியன் பூமியை வலம் வருவதில்லை என எதிர்க்கணை தொடுத்தார். இவர்தான் “விண்மீன்களும், சூரியனும் நகராமல், அசையாமல், நின்ற இடத்திலேயே நிலைத்து நிற்கின்றன. சூரியணை மையமாக வைத்து, பூமிதான் வட்டமடிக்கிறது” என்று சூரிய மையக் கொள்கையை சொன்ன முதல் மனிதர் ஆவார்.

சூரிய மையக்கொள்கை உதயம்..!

அரிஸ்டார்கசுக்குப் பின்னர் சுமார் 1800 ஆண்டுகள் கழித்துத்தான் சூரிய மையக் கோட்பாடு என்ற தத்துவத்தை கி.பி. 1473-1543ல் வாழ்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் என்ற பல்துறை வித்தகரான  வானவியலாளர் சொன்னார்.

எப்போது தெரியுமா?. தான் இறக்கும் தறுவாயில்தான் , தனது சீடர்கள் மூலம், வான் கோளத்தின் புரட்சி (On the Revolutions of the Celestial Spheres) என்ற புத்தகத்தை வெளியிட்டார். காரணம் என்னவெனில், உயிரோடு இருக்கும் போது, பூமி சூரியனைச் சுற்றுகிறது என்று சொன்னால், மதவாதிகள் தன்னைக் கொன்றுவிடுவார்கள் எனப் பயந்தார். அன்றைய மதவாதிகளின் நிலைமை அது?

பூமியின்/உங்களின் சுற்றுவேகம்!

பூமியின் சுற்றளவு 40,075.036 கி.மீ. பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் நேரம் 23 மணி, 56 நிமிடம், 4.09 வினாடிகள்/சுமார் 86,000 வினாடிகள். இதையே நாம் ஒரு நாள் என்று கூறுகிறோம். பூமி, தன்னைத்தானே, ஒரு மணி நேரத்தில் சுற்றிக் கொண்டு பயணிக்கும் தூரம் 1,670 கி.மீ ஆகும். அதாவது, நீங்கள் அசையாது நின்று கொண்டிருந்தாலும் , ஒரு மணி நேரத்தில் 1670 கி.மீ தூரம் கடந்த்திருக்கிறீர்கள்.

ஆனால் நம் பூமி சூரியனை தன் சுற்றுப்பாதையில் எவ்வளவு வேகமாய் சுற்றி வருகிறது தெரியுமா? சொன்னால் நம்பமாட்டீர்கள்! மணிக்கு சுமார் 1000 கி.மீ வேகத்தில்..பூமி சுற்றுகிறது.! ஒரு நொடியில்..? நண்பா பூமிமேல் அலாக்காக உட்கார்ந்துகொண்டு, நாம் மணிக்கு 1,07,000௦௦௦ கி.மீ வேகத்தில்/நொடிக்கு 30 கி.மீ வேகத்தில் பயணிக்கிறோம்.? ஆச்சரியமாக இல்லையா?

ஒரு நொடியில் நம் பயணதூரம்..!

பூமி, நம் குடும்பத் தலைவனான பகலவனுடன், தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டே ஓடிவரும் குழந்தை போல, பூமியும், சூரியனைச் சுற்றிக்கொண்டே, சூரியனுடன் சேர்ந்தே சுற்றுகிறது. சூரியன் ஒரு நொடிக்கு 250 கி.மீ வேகத்தில் புவியையும் இழுத்துக்கொண்டே ஓடுகிறது. அது மட்டுமா? நம் சூரியக் குடும்பம் குடியிருக்கும் பால்வழி மண்டலமும், தட்டு எறியும் போட்டியில் வீசி எறியப்படும் தட்டு போலவே, நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. எவ்வளவு வேகம் தெரியுமா? நொடிக்கு சுமார் 600 கி.மீ வேகத்தில் மட்டும்தான். அதற்குள் உள்ள தொகுதிகள் நொடிக்கு 40 கி.மீ வேகத்தில் நகருகின்றன. நீங்கள் வானை அண்ணாந்து பார்த்துக்கொண்டு/ கற்பனையில் சிறகடித்துப் பறந்தாலும் கூட/தூங்கினாலும் கூட..ஆடாமல் அலுங்காமல், குலுங்காமல், நொடிக்கு சுமார் 600 கி.மீ வேகத்தில் பறக்கிறீர்கள். எப்படி என்கிறீர்களா?

பூமியின் வேகம், நொடிக்கு 30 கி.மீ, சூரியனின் சுற்றுவேகம் நொடிக்கு 230 -250 கி.மீ. பால்வழிமண்டல குட்டி தொகுதிகள் நகர்வது நொடிக்கு, 40 கி.மீ. இவைகளை எல்லாம் சேர்த்து, ஒட்டு மொத்தமாக, பால்வழி மண்டலம் நொடிக்கு 520 கி.மீ வேகத்துக்கு மேலே பறந்து,பறந்து ஓடிக்கொண்டே இருக்கிறது. எனவே, நாம் பூமி, சூரிய குடும்பத்துடன் இணைந்தே, பால்வழி மண்டலத்துடன் சேர்ந்தே பறக்கிறோம்!

இந்த வேகத்தில், கீழே விழுந்தால் என்ன ஆகும்? என்ன! கற்பனையில் பயத்தில் மயக்கம் போட்டு விடாதீர்கள்? விழ முடியாதுப்பா! பயப்பட வேண்டாம். பயப்படவே வேண்டாம்! ஈர்ப்புவிசை இருக்கும்வரை யாரும் பூமியிலிருந்து மட்டுமல்ல, சூரியகுடும்பம் மற்றும் பால்வழி மண்டலத்திலிருந்து தப்பித்து, உருண்டு விழுந்துவிட முடியாது. இந்த பிரபஞ்சத்தில், அனைத்து பொருள்களும் ஈர்ப்பு விசையில்தான் இயங்குகின்றன!

புவியின் மாறா நீர்! மாறும் சுற்று..!

மார்ச் 21 தான் புவிநாளாக அனுசரிக்கப்படுகிறது. கல்வி, தகவல் தொழில்நுட்பம், உலகத்தின் இயற்கை வளங்களின் பாதுகாப்பை முன்னிட்டு, ஏப்ரல் 22ம் தேதியை சர்வ தேச புவி தினமாக 1970 முதல் கொண்டாடி வருகிறோம். நமது பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டுகள் என பல ஆய்வுகள் மூலம் கண்டுபிடித்துள்ளனர். நமது கோளத்தில் சுமார், 1,460,000,000 க.கி.மீ நீர் நிறைந்துள்ளது. புவியில், துவக்கத்தில் இருந்த, உலகின் மொத்த நீர் அளவு இன்றுவரை கிட்டத்தட்ட அதே அளவு மாறாமல் இருக்கிறது. ஆனால் அதுதவிர, வேறுபல மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. பூமியின் சுற்றுவேகம் இன்று இருப்பதைவிட, முன்பு அதிகமாக இருந்தது.

ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் பூமியின் ஒரு நாள் என்பது, 18 மணி நேரமாக இருந்தது. பல்வேறு காரணங்களால், பூமியின் சுற்றுவேகம் குறைகிறது. நமது துணைக்கோளான சந்திரனின் ஈர்ப்புவிசையால், பூமிமேல் ஏற்படும் தாக்கம்தான், அலை ஓத ஏற்ற இறக்கம். இதனால் எல்லாம் பூமியின் சுழற்சி வேகம் குறைகிறது. பூமி முந்தைய காலத்தைவிட, இப்போது மெதுவாக சுற்றுவதால், சந்திரன்மீது ஏற்படுத்தும் ஈர்ப்பையும், தாக்கத்தையும் கூட குறைத்துள்ளது. இதனால், சந்திரனார், பூமி மீது கோபித்துக்கொண்டு, வருடத்துக்கு சுமார் 3.8 செ.மீ. தள்ளி/விலகி போய்க்கொண்டே இருக்கிறார். . பூமி மெதுவாக சுற்றுவதற்கு, நிலவு விலகுவதும் ஒரு காரணம்.கடல் அலைகளால் ஏற்படும் உராய்வும், வான்வெளியிலுள்ள அண்டத்துகள்களின் மோதலும் கூட பூமியின் சுற்று வேகம் குறைய காரணங்கள்! ஆண்டுக்கு 0.005 மில்லி வினாடி குறைகிறதாம். 100ஆண்டுகளில், சுமாராக 1.5 மில்லி வினாடி (1.5 milliseconds) நேரம் வேகம் குறைகிறதாம். கடந்த 20 ம் நூற்றாண்டில், அதாவது, சரியாக 100 ஆண்டுகள் கணக்கிட்டதில்,சரியாக 0.0017 வினாடிகள்/1.7 மில்லி வினாடிகள் (0.0017 seconds (or 1.7 milliseconds) குறைந்துள்ளது.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு நாளின் நேரம்!

370 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பவளங்கள் மற்றும் மீன்கள் உருவான காலத்தில் பூமியின் ஒரு நாள் என்பது சுமார் 22 மணி நேரம்தானாம். அப்போது ஒரு வருடத்திற்கு, 400 நாட்களாம். அம்மாடியோவ்! கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு மேல் (35 நாட்கள்) அதிகம். யார் அத்தனை நாட்கள் பள்ளிக்கு/அலுவலகம் செல்ல என்கிறீர்களா? இதனை பின்னோக்கி நீட்டி கணக்குப் போட்டால், உலகம் உருவானபோது, அதாவது 460 மில்லியன் ஆண்டுகளுக்கு முன், பூமியின் சுற்று வேகம் சுமார் 14 மணி நேரம் தானாம். போதும்..போதும். நிறுத்துங்கள்! தலையைச் சுற்றுகிறது என நீங்கள் சொல்வதும் கேட்கிறது நண்பா.! இன்னும் உள்ளதே.!

மாற்றமே நிரந்தரம்! எங்கும் எப்போதும்..!

இன்னும் 100௦௦ ஆண்டுகள் கழித்து, ஒரு நாளின் நேரம், 0.0015 வினாடி (1.5 milliseconds) அதிகமாக இருக்கும். பூமியின் சுற்றுவேகம் குறைவது என்பதும் ஒரே மாதிரியாக இல்லை. ஒவ்வொரு 1,௦0,௦௦௦ ஆண்டுக்கும் 1.5 நொடி குறையுமாம். ஒவ்வொரு மில்லியன் வருடங்களுக்கும் 15 நொடிகள் குறையும். ஒவ்வொரு 100 மில்லியன் வருடங்களுக்கும், 15,500 நொடிகள் குறையும். இதிலிருந்து என்ன தெரிகிறது? இன்னும் 100 மில்லியன் ஆண்டுக்குப் பின், பூமியின் சுற்று வேகம், இன்னும் 5 மணி நேரத்திற்கு மேல் அதிகமாக இருக்குமாம் ! ஒரு நாளுக்கு.. 29 மணிநேரத்துக்கு மேல் ! நல்ல வேளை நாம் இருக்க மாட்டோம் என்கிறீர்களா? ஒருக்கால், மனித பரிணாமும் கூட மாறி இருக்கலாம்! என்ன நண்பா வியப்பாக உள்ளதா? இந்த மாற்றம்தான் இயல்பு, இயற்கை..! அதுமட்டுமா? இன்னும் 50 மில்லியன் வருடங்களுக்குப் பின், ஐரோப்பாவும், ஆசியாவும் இணைந்து விடுமாம்.! நாமெல்லாம் இதில் தாற்காலிக வசிப்பு வாசிகள்தான்..!

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு