சமரச அரசியலா? சரணாகதி அரசியலா?
அறம் இணைய இதழ்
பிரதமர் மோடியின் தமிழகப் பயணம் சொல்லும் அரசியல் செய்தி என்ன..என்பதை திமுக அரசு மோடியை அணுகிய விதத்தைக் கொண்டும், ஸ்டாலின் நடந்து கொண்ட விதத்தைக் கொண்டும் தான் மதிப்பிட வேண்டும். கொள்கை, கோட்பாடு, நம்பகத் தன்மை அனைத்துக்கும் குட்பை சொல்வது தான் தற்கால அரசியலா? அல்லது தற்கொலை அரசியலா?
ஒரு மாநில ஆட்சியாளரான ஸ்டாலின் மத்திய அரசில் இருந்து வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் காட்டும் பேரார்வத்தையும், வெகுஜன மக்கள் வெறுக்கத்தக்க அளவினான பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகப்படுத்தி விசுவாசத்தை வெளிப்படுத்தியதையும் எவ்வாறு புரிந்து கொள்வது? இதற்காகத் தான் முதவரின் மருமகன் சபரீசன் ஆர்.எஸ்.எஸ் தலைவரை முன் கூட்டியே பார்த்து அறிவுரை பெற்று வந்தாரா..?
கருப்புக் கொடி காட்டுவது என்பது என்ன பஞ்சமா பாதகமா? அது ஜனநாயகத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்த அனுமதிக்கப்பட்ட ஒரு அணுகுமுறை தானே! அந்த வாய்ப்பை திமுக எதிர்கட்சியாக இருந்த போது அதிமுக வழங்கியதே! ஆனால் ஆளும் கட்சியாக வந்தவுடன் திமுக அரசு ஏன் பதற்றப்படுகிறது! கருப்புக் கொடி காட்டத் திட்டமிட்ட காங்கிரசார் முன் கூட்டியே கைது செய்யப்பட்டது ஏன்? அதுவும் காங்கிரசின் முக்கிய செயல்வீரர்கள் முதல் நாளே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது எல்லாம் இது வரை தமிழகம் காணாதது ஆகும்.
முன்பெல்லாம் கருப்புக் கொடி காட்டுபவர்களுக்கு பிரதமர் பயணப்படும் இடத்திற்கு சற்று தொலைவில் அனுமதி கிடைக்கும். ஆனால், திமுக ஆட்சியிலோ சில கிலோ மீட்டர்கள் தள்ளி தான் அனுமதி தரப்பட்டது! அதிலும் பலரை கலந்து கொள்ளவிடாமல் திமுகவின் காவல்துறை மோடி விசுவாசத்தை முரசொலித்தது. தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன் தன் அலுவலத்தில் கருப்பு பலூன்களை ரெடி செய்து கொண்டிருப்பதை முன் கூட்டியே மோப்பம் பிடித்துச் சென்ற காவல்துறை அவை அனைத்தையும் கைப்பற்றிவிட்டது.
தங்கள் தாய் இயக்கமான திராவிடர் கழகத்திற்கு தஞ்சை மாவட்டம் சென்று கருப்பு கொடி காட்டிக் கொள்ள திமுக அரசு தந்த விசித்திர ஏற்பாடு வியப்பளிக்கிறது. அதையும் ஏற்று ஆளும் மோடி விஸ்வாசிகள் மீது விஸ்வாசம் பொழிந்த வீரமணியின் பெருந்தன்மை புல்லரிக்க வைக்கிறது. முதல் நாள் தமிழக மக்களையும், தமிழக அரசையும் துச்சமாக பேசி சர்சையில் சிக்கிய கவர்னர் ரவியோடு சேர்ந்து நிற்பதற்கு ஸ்டாலினுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டதா…எனத் தெரியவில்லை, ஆனால், கவர்னர் ரவிக்கு கடுகளவும் சூடு, சொரணை, மானம், மரியாதை இல்லை என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது!
அதிமுக ஆட்சியில் இதே பிரதமர் சென்னைக்கோ தமிழகத்தின் பிற பகுதிக்கோ வந்த போது இவ்வளவு கெடுபிடிகள் இல்லையே! அவரது வருகைக்கு பல மணி நேரம் முன் கூட்டியே போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்க வைக்கப்படுவதும், அவர் வரும் வழி நெடுக உள்ள ஹோட்டல்கள், விடுதிகளில் சோதனை நடத்தி தங்கி உள்ளவர்களுக்கு சிரமத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்துவது ரொம்ப ஓவராகத் தான் உள்ளது என சகல தரப்பு மக்களையும் புலம்ப வைத்துவிட்டது! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் பிரதமர் வருகைக்கு முன்னும், பின்னும் பட்ட அவஸ்த்தைகள் சொல்லில் அடங்காது. சென்ட்ரல் சுற்றுவட்டார வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், விடுதிகள், குடியிருப்பு வாழ் மக்கள் ஏதோ நாட்டில் விபரீதம் ஒன்று நடக்க உள்ளது போன்ற உணர்வை பெற்றனர். ஏர்போர்ட் விசிட்டிலும் பயணிகள் படாதபாடுபட்டுவிட்டனர்.
அதுவும் அவர் மெரீனாவில் உள்ள விவேகானந்தா கேந்திராவிற்கு வருவதற்கு முதல் நாளே மெரீனா கடற்கரையே மூடி வைத்து மீனவர்கள் கடலுக்கு செல்லக் கூடாது என அவர்களின் வாழ்வாதாரத்தையும் கெடுத்து கெடுபிடி காட்டினர்.
இரண்டாம் நாள் நீலகிரி விசிட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்கள் அல்லாடிவிட்டன. நாட்டு மக்கள் நேசிக்க கூடிய ஒருவராக நரேந்திரமோடி இருந்திருந்தால், இத்தனை கெடுபிடிகளுக்கு அவசியம் இல்லை. ஒரு பெரிய மனிதரின் வருகை சாதாரண மக்களின் சகஜ வாழ்க்கைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனில், உண்மையில் அவர் பெரிய மனிதர் தானா? அல்லது இந்த வகையிலாவது ‘ இவர் பெரிய மனிதர் போலும்..’ என நினைக்க வைக்க செய்யும் முயற்சியா..?
இந்தியா சுதந்திரம் பெற்ற போது இந்து-முஸ்லீம் கலகம் வெடித்த போது மகாத்மா காந்தி காவல்துறை துணையின்றி தன்னந்தனியாக மக்களை சந்திக்க சென்றார். அவரது ஆன்மபலம் மக்களிடையே வெறுப்பை களைந்து அன்பும், கருணையும் மேலோங்க வைத்தது. காமராஜர் முதல் அமைச்சராக இருந்த காலம் வரை தன் காருக்கு முன்பு சைலன்சர் பொருத்தப்பட்ட பாதுகாப்பு வாகனம் செல்வதை தவிர்த்துவிட்டார். மக்கள் தலைவர்கள் என்றால், எளிமை தான் முதல் தகுதியாக இருக்க முடியும்.
பிரதமர் விசிட்டின் போது தமிழக முதல்வர் தயங்கித் தயங்கி ஓரடி பின்னாலேயே தன்னை நிறுத்திக் கொண்டார். அதிகாரிகள் விவரங்களை பிரதமருக்கு விளக்கிச் சொல்லும் போது அதை தானும் காதுகொடுத்தும், கருத்தூன்றியும் கேட்க ஏனோ ஸ்டாலின் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், ‘நான் உங்களுக்கானவன்’ என பிரதமருக்கு உணர்த்துவதில் மட்டும் குறியாக இருந்தார் என்று தான் தோன்றுகிறது.பிரதமர் மோடி உடனான ஸ்டாலினின் உடல் மொழியானது அவர் சமரசத்தை விரும்புவதை விட சரணாகதியையே உணர்த்தியுள்ளார் என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
உதயநிதி ஸ்டாலின் வந்து பிரதமரை வரவேற்றதன் நோக்கம் தான் என்ன? காங்கிரசின் வாரிசு அரசியல் குறித்து நாளும்,பொழுதும் வசைமாறி பொழிந்து கொண்டிருக்கும் மோடி, திமுகவின் வாரிசிடம் மட்டும் விஷேச அக்கறை எடுத்து பேசுவது ஏன்?
அரசாங்க பணிகள் தொடர்பான பிரதமர் மோடியின் ஒவ்வொரு வருகையையும் அரசியல் பூர்வமானதாக மாற்றி எவ்வளவுக்கு எவ்வளவு ஆதாயம் அடையலாம் என பாஜகவினர் செயல்படுவது பிரதியட்சமாகத் தெரிகிறது. ஆனால்,அதற்கு கடிவாளம் போடத் திரானியற்று இருக்கிறது திராவிட மாடல் என மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு!
திசைமாறிப் பயணித்துக் கொண்டே திராவிட மாடல் அரசு என சவடால் அரசியல் செய்வதில் திமுகவிற்கு ஈடுஇணையே கிடையாது. திமுக கூட்டணி கட்சிகள் சுதாரித்துக் கொள்ளாமல், திமுக அரசு செய்யும் சிறு, சிறு சகாயங்களுக்காக சகித்துக் கொண்டிருந்தால் அடையாளம் இல்லாமல் அழிந்து விடும் அவலம் நேரக்கூடும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
aramonline.in /13050/modi-t-n-visit-bjp-dmk-relation/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு