தமிழ்மொழி ஆய்வு - இலக்கண அறிவு இனித் தேவை இல்லை! அனைத்துக்கும் செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் வந்துவிட்டன!!!

தெய்வசுந்தரம் நயினார்

தமிழ்மொழி ஆய்வு - இலக்கண அறிவு இனித் தேவை இல்லை! அனைத்துக்கும் செய்யறிவுத்திறன் மென்பொருள்கள் வந்துவிட்டன!!!

இன்று "Indian Express"  நாளிதழில் வெளிவந்துள்ள ஒரு கட்டுரையைப் (India's Race Moves from Chatnbats to Voice Agents) படித்தேன். அதையொட்டியது எனது இன்றைய பதிவு! 

'படித்து பார்த்தான்' 'வந்து பார்த்தான்' - முதல் எடுத்துக்காட்டில் நிலைமொழியானது ('படித்து') வன்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச்சொல். வருமொழியில் ('பார்த்தான்') முதல் எழுத்து வல்லினம். எனவே இங்கு ஒற்று மிகும் - 'படித்துப் பார்த்தான்'!. 

இரண்டாவது எடுத்துக்காட்டில் வருமொழியில் வல்லினம் முதல் எழுத்து வந்தாலும் நிலைமொழியில் ('வந்து') என்பது மென்தொடர்க் குற்றியலுகர ஈற்றுச்சொல். எனவே இங்கு ஒற்று மிகாது. 'வந்து  - பார்த்தான்'!

இதுபோன்ற ஆய்வு இனித் தேவையா? குறிப்பாக, மாணவர்களுக்கு இதுபோன்ற விதிகளைக் கற்றுக்கொடுக்கவேண்டுமா? 

இன்றைய செய்யறிவுத்திறன் மென்பொருள்களைப் பயன்படுத்தினால் போதும்! தாமாகவே அவை தவறுகளைத் திருத்தி, சரியான தொடர்களை அளித்துவிடும் (Word processing) ! 

அதற்கும் அடுத்த கட்ட  வளர்ச்சி! எழுதினால் அல்லது தமிழைத் தட்டச்சு செய்தால் பிழை ஏற்படுகிறதா? ல,ள,ழ , ர, ற, ந, ன, ண குழப்பம் ஏற்படுகிறதா? இனிக் கவலையே வேண்டாம். நாம் தொடர்களைப் பேசினாலேபோதும்! மென்பொருள்களே சரியாகத் தட்டச்சு செய்து (Voice to Text) கொடுத்துவிடும். 

எழுதியதை  அல்லது தட்டச்சு செய்ததைச் சரியாக வாசிக்கவேண்டுமா? 'கடல்' - 'தங்கம்' 'பாகம்' - மூன்றிலும் 'க' வெவ்வேறு மாதிரி ஒலிக்கப்படும். மாணவனுக்குக் குழப்பமா? கவலை வேண்டாம்! மென்பொருளே இனிச் சரியாக வாசித்துக் கொடுத்துவிடும் (Text to Voice) ! 

எனவே, இனி, பெயர், வினை, வினைமுற்று, வினையெச்சம், பெயரெச்சம் போன்ற இலக்கண அறிவு ஒருவர் தமிழில் தவறு இல்லாமல் தட்டச்சு செய்வதற்கோ அல்லது வாசிப்பதற்கோ தேவை இல்லை! பயன்பாட்டிற்காகத்தானே இலக்கணம் அறிவு! 

இன்றைய செய்யறிவுத்திறன் மென்பொருள் வளர்ச்சி அந்த அளவு வளர்ந்துள்ளது! தமிழ் அறிவைக் கணினிக்குக் கொடுப்பதற்கு இலக்கண அறிவு தேவை இல்லை! கோடியே கோடி தரவுகள் - மொழித்தொடர்கள் (trillions of sentences) இருந்தால் போதும்! உலகின் எல்லாப் பகுதியிலும் பயன்படுத்தப்பட்ட தமிழ்த் தரவுகளைப் பெறுவதற்குத் தேவையான கணினித்தொழில்நுட்ப வளர்ச்சியுடைய பன்னாட்டு நிறுவனங்கள் - மைக்ரோசாஃப்ட், கூகுள், பேஸ்புக் போன்ற நிறுவனங்கள் உள்ளன. 

ஒரு தொடரில் 'வந்தது' என்னும் சொல் வினைமுற்றா, வினையாலணையும்பெயரா, தொழிற்பெயரா என்று அறிவதற்குத் தேவையான மொழிச்சூழலைக் (linguistic context)  கணினியே ஆராய்ந்து, 'அது வந்தது' என்பதில் வினைமுற்று; 'வந்தது எது' என்பதில் வினையாலணையும் பெயர்; 'நீ வந்தது எனக்குப் பிடிக்கவில்லை' என்பதில் தொழிற்பெயர் என்று கோடிக்கணக்கான தரவுகளின் அடிப்படையில் கணினியே கண்டறியமுடியும்! தட்டச்சு செய்யவேண்டுமா, பிழையின்றி உரை அமையவேண்டுமா? வாசிக்கவேண்டுமா? மொழிபெயர்ப்பு செய்யவேண்டுமா (Translation)? நூலின் சுருக்கம் தேவையா (Summarization)? அனைத்துமே இப்போது கணினியால் செய்யமுடியும்! பிறகு எதற்குத் தமிழ்மொழி ஆய்வு? தமிழ் இலக்கணக் கல்வி? 

ஆனால் ஒன்று! இதுபோன்ற மென்பொருள்களை நீங்களும் நானும் உருவாக்கமுடியாது! கோடிக்கணக்கான டாலர்களை முதலீடு செய்யும் நிறுவனங்களால்தான் முடியும்! இந்த நிறுவனங்கள் முதலில் தங்கள் மென்பொருள்களைப் பயன்படுத்துவதற்கு கட்டணம் இல்லாமலோ அல்லது குறைந்த கட்டணத்திலோ அனுமதிக்கும்! ஒரு கட்டத்தில் இந்த மென்பொருள்கள் இல்லாமல் நம்மால் மொழியைச் சரியாக ஆளமுடியாது என்ற ஒரு நிலை வந்தபிறகு, கட்டணங்கள் அதிகரிக்கும்! அவை என்ன மக்கள் சேவைக்காகவோ கோடியே கோடி டாலர்களை முதலீடு செய்கின்றன்றன? நோம் சாம்ஸ்கி கூறுவதுபோல , ஒரு பொருள் தேவை என்ற ஒரு இசைவை மக்களிடம் உருவாக்கி  ("manufacturing consent") , பின்னர் அப்பொருளை பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும்! 

இலக்கண அறிவை நேரடியாகக் கொடுக்காமலேயே மிகப்பெரிய தரவு (trillions of data), நிகழ்தகவுமூலம் (Probability) ஆகியவற்றின் மூலம் ஒரு சொல் அல்லது தொடரைச் சரிபார்க்கும் மொழித்தொழில்நுட்ப அறிவைக் கணினிக்குக் கொடுக்கமுடியும் என்று வந்தபிறகு, -பெரும்மொழி மாதிரி  (Large Language Model -LLM ) மொழி ஆய்வு, இலக்கண ஆய்வு, இலக்கணப் படிப்பு தேவையா? தேவை நீடிக்குமா? 

இதற்கு விடை தேவை! இந்தியாவின் இயற்கை வளங்களையும் மனித உழைப்பையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அளித்துவிட்டு நிற்கிற இந்திய ''வளர்ச்சி'' இனி இங்கு நீடிக்கிற மொழிகளையும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் விடுவதற்குத் தயாராகிவிட்டன! பன்னாட்டு நிறுவனங்களின் மேற்குறிப்பிட்ட பணிகளை இங்குள்ள மூலதனத்தைக்கொண்டு, தன்னிறைவு வளர்ச்சியைக் கொண்டுவரமுடியாதா? விடை தேடவேண்டிய வினா! இதைப் (Indian Express) பார்த்ததும் எனக்கு  வ உ சி தான் நினைவுக்கு வந்தார்.

தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/story.php?story_fbid=pfbid0pMB6fpQK2mitmoVWFPu3FryVyDAmr69MwxN2tCq1tcHpZghuPhUQFak9exJGScJvl&id=100004424580477&sfnsn=wiwspwa&mibextid=6aamW6&_rdr

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு