இந்த அற்பத்தனமான அரசியலுக்கு எப்போது முற்றுப் புள்ளியோ..!
சாவித்திரி கண்ணன்
ஒட்டு மொத்த தேசமும் ஒரு விவகாரத்தில் மையம் கொண்டுள்ளது!
தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஸ்வரனுக்கு எதிராக தேசமே ஒன்றுபட வேண்டிய தருணம் இது!
ஏனென்றால், விவகாரம் ரொம்ப முக்கியத்துவம் வாய்ந்தது. நேர்மையான தேர்தலுக்கு வாய்ப்பில்லை என்றால், ஜனநாயகம் சவக் குழிக்குள் தள்ளப்பட்டதாகத் தான் அர்த்தமாகும்.
இந்தியாவே இதற்கு எதிராக போர்க்கோலம் கொண்டுள்ள நிலையில் தமிழ் நாட்டில் கட்சி அரசியலிலும், சுய பாதுகாப்பிலும் தான் அனைத்து கட்சிகளும் உள்ளனர்.
இது குறித்த விழிப்புணர்வை முதலில் முன்னெடுத்தது சுயராஜ் இந்தியா கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தான்! இவர் கடந்த சில ஆண்டுகளாக இடையறாது பிரச்சாரம் மேற்கொண்டு தேர்தல் ஆணையத்தின் மோசடிகளை அம்பலப்படுத்தி வருகிறார். அதன் கிளையாக தமிழ்நாட்டில் பல மக்கள் இயக்கங்களை ஒருங்கிணைத்து தோழர் பாலகிருஷ்ணன் ஒருங்கிணைப்பில் குடியுரிமை இயக்கம் கடந்த ஓராண்டாக செயல்பட்டு வருகிறது. நானும் இதில் ஒரு அங்கமாக பங்கேற்று வருகிறேன்.
தமிழ் நாட்டில் சுமார் 74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதில் நேர்மையான அணுகுமுறை கடை பிடிக்கப்பட்டதா? என்பதை அப்போதைய முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் பல முறை வைக்கப்பட்டும் அவர் இதில் ஏனோ ஆர்வம் காட்டவில்லை.
சரி, இப்போதாவது முனைப்பு காட்டலாமே? டெல்லியில் அனைத்து கட்சி எம்.பிக்களும் தேர்தல் கமிஷனை நோக்கி நடத்திய பேரணியில் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்காத ஆம் ஆத்மியின் தலைவர்களும், பிஜு ஜனதா கட்சி எம்.பிக்களும் பங்கேற்கிறார்கள். தங்கள் மாநிலங்களில் காங்கிரசுடன் முரண்பாடுள்ள திரிணாமுள்ளும், கம்யூனிஸ்ட் எம்.பிக்கள், தலைவர்கள் பங்கேற்கிறார்கள்! திமுக எம்.பிக்கள் இதில் கலந்து கொள்ள என்ன தடுக்கிறது?
சரி, அதில் காங்கிரஸ் இருப்பது தான் திமுகவிற்கு பிரச்சினை என்றால், அடுத்த நாளான நேற்று கோக்ரோச் பார்டியின் இளம் தலைவர்கள் நடத்திய போராட்டங்களில் மற்ற இந்தியத் தலைவர்கள் தாங்களாகவே முன் வந்து கலந்து கொண்டதை போல, திமுக எம்.பிக்களும் கலந்து கொண்டு போராடுவதில் என்ன பிரச்சினை?
பாஜகவை எதிர்ப்பதில் எனக்கு நிகர் யாரும் இல்லை எனத் தொடர்ந்து பல ஆண்டுகளாகச் சொல்லி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் இந்திய தேர்தல் ஆணையருக்கு எதிராக பெரும் போராட்டத்தை திமுக சார்பில் நடத்தலாமே..!
அதை விடுத்து மற்ற இயக்கங்களின் போராட்டங்களில் மூக்கை நுழைத்து ஏன் ஆதாயம் தேடுகிறீர்கள்? ஒருசில தனி இளம் தலைமுறையினர் சிலருக்கு இருக்கும் துணிச்சல் கூட இவ்வளவு அரசியல் பாரம்பரியமுள்ள திமுகவுக்கே இல்லையே. உங்களுக்கே தைரியம் இல்லாத போது, எந்த அரசியல் பின்புலமும் இல்லாமல் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் விஜய்யிடம் மட்டும் எப்படி இருக்கும்…?
விஜய்க்கு பாஜகவை எதிர்த்து பேசத் துணிச்சல் இல்லை என விளாசும் நீங்கள் அவருக்கு முன் மாதிரியாக இருக்கலாமே? விஜய்யை பொறுத்த வரை மைனாரிட்டி பலத்தில் ஆட்சியில் உள்ளோம் என்ற இன்செக்க்யூரிட்டி உணர்வில் அவர் ஆட்பட்டிருப்பதால் எச்சரிக்கையோடு இருக்கிறார் என நினைக்கிறேன். அதே சமயம் காங்கிரஸ் தொடர்பும், ராகுலின் நட்பும் அவரை விரைவில் பக்குவப்படுத்தும் என்று நம்புகிறேன்.
நேற்றைய தினம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் விஜய் இரண்டு மணி நேரம் செலவிட்டு இருப்பது அவரது அரசியல் பார்வை மேலும் விரிவடைய துணை புரியும் என்பது நிச்சயம்.
சென்னை பெசன்ட் நகரில் முறையான போராட்ட அறிவிப்போ, அனுமதியோ இல்லாமல் சில இளம் பெண்கள் தேர்தல் கமிஷணுக்கு எதிராக போராட்டம் என அறிவிக்கிறார்கள்! அவர்கள் கொஞ்ச நேரம் போராடிய பிறகு அவர்களை அழைத்துச் சென்று மதிய உணவு தந்து மூன்று மணி நேரத்தில் விடுவித்துள்ளனர் காவல்துறையினர். இந்த இடத்திற்கு திமுக புள்ளிகள் வந்து அவர்களை சந்திக்க வேண்டும் எனக் கூறி ஏன் விளம்பரம் தேடுகிறார்கள்?
நியாயப்படி திமுக மாநில அளவில் சென்னையில் ஸ்டாலின் அல்லது உதயநிதி தலைமையிலும், மாவட்ட அளவில் முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு. கே.என். நேரு, செந்தில் பாலாஜி, மூர்த்தி.. ஆகியோர் தலைமையில் இதை நடத்தி பல்லாயிரம் இளைஞர்களை அணிதிரட்டி போராட என்ன தயக்கம்? இப்படி ஒரு போராட்டத்தை முன்னாள் அமைச்சர்களுக்கு முன்னெடுக்கும் தைரியம் வருமா?
சென்ற ஆட்சியில் ஊரையடித்து உளையில் போட்டு எல்லையில்லா செல்வங்களை திருடி வைத்திருக்கும் குற்றப் பின்ணணி உள்ள தலைவர்கள் நிறைந்திருக்கும் கட்சிக்கு ஒரு போதும் இந்த துணிச்சல் வராது.
சும்மா பாஜகவை எதிர்த்து வாய்ச் சவடாலாக அறிக்கை தந்தும், மற்ற சிலரை போராடத் தூண்டி அவர்கள் பின்னணியில் நின்று வீர வசனம் பேசி ஆதாயம் தேடுவதையும் தான் திமுகாவால் செய்ய முடியும்!
சும்மா பாஜகவை எதிர்த்து அறிக்கைவிடுவதல்ல வீரம். நீட்டை எதிர்த்து அனைத்து எம்.பிக்கள் குரல் கொடுத்து பாராளுமன்ற வளாகத்தில் இருந்து பேரணி நடத்தி போராடிய தருணத்திலும் திமுக எம்.பிக்கள் மட்டும் தனித்துச் சென்று காவிரி பிரச்சினை பேசி திசை திருப்பினர்.
தற்போது தில்லியில் ராகுலும், பிரியங்காவும், மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், பினராய் விஜயன், யோகேந்திர யாதவ், பிரசாந்த் பூசன், அரவிந்த் கெஜ்ரிவால், மணீஸ் சிசோடியா இன்ன பிற தேசிய தலைவர்களும், இளம் போராளிகளான அபிஜித் தீப்கே, செளரவ் தாஸ், அஷிதோஸ் ரங்கா, நேஹா போரா..போன்றோர் உயிரைக் கொடுத்து போராடி வருகின்றனர்.
ஆனால், தேசத்தின் தலை நகரில் நடக்கும் இந்தப் போராட்டங்கள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஓடி ஒளிந்து கொண்ட திமுக எம்.பிக்கள் பாஜகவின் ஒரே தேசம், ஒரே தேர்தல் சட்ட மசோதா ஆய்வுக்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளனர்.
இதை கபில் சிபல் கண்டித்துள்ளார். திமுகவின் இந்த நகர்வு இந்திய அளவில் அனைத்து எதிர்கட்சிகளையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு