அரசுப் பணிகளை ‘அரோகரா’வாக்கிய தவெக அரசு!

அறம் இணைய இதழ்

அரசுப் பணிகளை ‘அரோகரா’வாக்கிய தவெக அரசு!

தவெக அரசு அரசு வேலைகள் அனைத்தையும் இனி ஒப்பந்த முறையில் தான் நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. அதற்காக overseas manpower corporation limited நிறுவனத்தை பொறுப்பாக்கி உள்ளது. இனி அரசு வேலை என்பதும், அரசு ஊழியர் என்பதும் வெறும் கனவாய், பழங்கதையாக மாறவுள்ளது என்ற நிலையில், இந்த அக்கிரமத்தை தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக ஏன் எதிர்க்கவில்லை..?

மனித உழைப்பும் வாங்கும் பொருளாகிவிட்டது!

சந்தை நுகர்வு கலாச்சார காலத்தில், அரசாங்கமே தன் அடையாளத்தை மாற்றிக் கொள்கிறது!

தனியார் கார்ப்பரேட் முதலாளியை போலவே அரசும் செயல்படுகிறது!

இனி எந்த அரசியல் கட்சியும் சமூக நீதி, இட ஒதுக்கீடு என்று பேசுவதற்கே இடமில்லாத நிலையை நோக்கி அரசாங்கம் நகர்ந்து கொண்டுள்ளது. அயல் மனிதவளக் கழகம் (overseas manpower corporation limited -OMCL)  என்றதொர் அமைப்பு இதுவரை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ஆள் சேர்ப்பு சேவைகளை வழங்கி வந்தது.

இனி இந்த நிறுவனம் தான் தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளுக்கும் தேவையான ஊழியர்களை தருமாம்..!

தமிழக அரசின் நிதித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் எம்.ஏ. சித்திக் இப்படி ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவு, அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அது போன்ற அமைப்புகளுக்கு ஆள்சேர்ப்பை வெளிப்படையாக வழங்கும் ஒரே முகமையாக OMCL-ஐ அரசு நியமித்துள்ளதாகச் சொல்கிறது.

வெளியுறவு அமைச்சகத்தில் பதிவு செய்யப்பட்ட  ஓஎம்சிஎல் நிறுவனம், சுமார் 47 ஆண்டுகளாக பொது மற்றும் மறுவாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் அரசுக்குச் சொந்தமான ஒரு சிறு நிறுவனமாகவே இத்தனை ஆண்டுகளாக அறியப்பட்டுள்ளது. அதாவது ஓஎம்சிஎல்லானது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு முகமையாகச் செயல்பட்டு, வெளிநாடு செல்லும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்து கொண்டிருந்தது.

தற்போது அது தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்திற்கே முற்றிலும் மாறாக, அரசாங்கத்திற்கு ஒப்பந்தக் கூலிகளை அனுப்பும் வேலையை செய்யப் போகிறதாம். அரசாங்கத்தில் ஏகப்பட்ட துறைகள் உள்ளனவே. அந்தந்த துறைகளுக்கு தக்க ஆட்களை தேர்வு செய்வதற்கான ஆட்பலம், நிர்வாக கட்டமைப்பே ஓஎம்சிஎல் நிறுவனத்துக்கு கிடையாது. ஆனால், குருவி தலையில் மலையை வைக்கும் கதையாக இந்தப் பணி தரப்பட்டுள்ளதென்றால், அது பல தனியார் முகமைகள் வாயிலாகவே இந்தப் பணியை நிறைவேற்றும். ஆக, நேரடியாக தனியார் நிறுவனங்கள் மூலம் ஆள் எடுத்தால் சர்ச்சை வெடிக்கும் என்பதால் தந்திரமாக இதை செய்கின்றனர்.

தமிழ் நாட்டு இளைஞர்கள் பெரும்பாலோரின் கனவு அல்லது லட்சியம் அரசு வேலை என்பதாகும். இதற்காக இரவு பகல் படித்து டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் எழுத தயாராவார்கள். செடியின் வேரில் ஊற்றப்படும் கொதிக்கும் வெந்நீரைப் போல, இந்த அறிவிப்பை தவெக அரசு வெளியிட்டுள்ளது.

# 2026-ம் ஆண்டு நிலவரப்படி, தமிழ்நாட்டின் வேலையின்மை விகிதம் 5.5 % உள்ளது!

# தமிழகத்தின் நகரப்புற வேலையின்மை விகிதம் 6.6 சதவீதமாகவும், கிராமப்புற வேலையின்மை 5.0 சதவீதமாகவும் உள்ளது!

# பற்பல கள ஆய்வுகளின்படி, படித்த இளைஞர்கள் மத்தியில் தற்காலிகப் பணி (informal work) மற்றும் உரிய வேலைவாய்ப்பின்மை சவால்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது அவர்களை மனப்பிறழ்வில் தள்ளியுள்ளது. சமூக விரோத செயல் பரவலாக்கத்திற்கும் காரணமாகிறது.

இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை சிதைக்கின்ற, அரசு நிர்வாக கட்டமைப்பின் அடித்தளத்தையே அசைக்கின்ற இந்த மிக மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள தவெக அரசை தமிழகத்தின் பிரதான எதிர்கட்சிகளான திமுக, அதிமுக கடுமையாக எதிர்த்திருக்க வேண்டுமல்லவா? ஆனால், எந்த எதிர்ப்பும் இந்த இரு கட்சித் தலைவர்களிடம் இருந்தும் வரவில்லை! என்ன காரணம்?

அயல் மனித வள கழகம்  இது போன்ற  அரசு வேலை வாய்ப்புகளுக்காக அவுட்சோர்சிங் ஏற்பாடுகளை செய்யலாமென அதன் செயல் வரம்பு 2012 இல் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது…என்பதையும், இது ஸ்டாலின் முதல்வராக இருந்த திமுக ஆட்சியின் போது 2024-இல் தமிழ்நாடு அரசின் அங்கீகரிக்கப்பட்ட அவுட் சோர்சிங் முகமைகளின் பட்டியலில் இணைக்கப்பட்டது என்பதையும் நாம் கவனத்தில் கொண்டால்,  தமிழக அரசின் அனைத்துத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்களுக்கான முகமையாக OMCL மாற்றப்படுவதற்கான நகர்வுகள் 14 ஆண்டுகளாக இருந்துள்ளன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

ஏற்கனவே அதிமுக, திமுக ஆட்சிகள் அரசின் பல துறைகளுக்கு காண்டிராக்ட் லேபர்ஸ் சிஸ்டத்தை தான் செயல்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர், பல்கலைக் கழக பேராசிரியர் தொடங்கி மின்சாரத் துறை ஊழியர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள்..என ஏகப்பட்ட துறைகளில் ஏற்கனவே ஒப்பந்த பணிமுறை தான் நடந்து கொண்டுள்ளது. ஆக, இதில் முன்னோடியாக உள்ள அதிமுக, திமுக தலைவர்கள் இதை எதிர்க்காதது ஆச்சரியமல்ல.

ஓட்டு வங்கிக்கான இலவச திட்டங்களை தவிர்த்துவிட்டு அரசு நிர்வாகத்தை முறையாகவும் , வலுவாகவும் கொண்டு செல்வதற்கான நிரந்தர ஊழியர் கட்டமைப்பை தமிழக அரசாங்கம் பலப்படுத்த வேண்டும்.

அரசு ஊழியர்களின் சம்பள உயர்வுக்கான போராட்டங்கள், பழைய ஓய்வு ஊதியத்திற்கான போராட்டங்கள் இவற்றை தவிர்க்கும் வழிமுறையாகவே “நெகிழ்வான தொழிலாளர் சந்தை” என்பதாக மனிதர்களின் உழைப்பையும் சந்தையில் விலை பேசி வாங்கும் பொருளாக பார்க்கின்றன, மத்திய, மாநில அரசுகள்!

அவுட்சோர்சிங் முகமை என்பதைக் கொண்டே ஒரு அரசு நிர்வாகத்தை நடத்திவிடலாம் என்பது ஆபத்தானது. அரசு ஊழியர் என்ற பொறுப்புக்கு  இருக்கும் அக்கெளண்டப்லிட்டி, கிரிடிலிபிட்டி போன்றவற்றை நாம் ஒப்பந்த ஊழியர்களிடம் எதிர்பார்க்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. இந்த ஏற்பாடு அரசு நிர்வாகத்திற்கும், நல்லதல்ல, உழைக்கும் பணியாளர்களுக்கும் கண்ணியமானதல்ல, மக்கள் சேவை பெறுவதற்கும் உகந்ததல்ல.

இத்தகைய அநீதியை ஆத்ம சுத்தியோடு எதிர்க்கும் அரசியல் கட்சிகள் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்க்கிறார்கள் என்றாலும், அவர்கள் ஆட்சி செய்த மாநிலங்களிலும் இதைத் தான் அரங்கேற்றி வந்தனர். ஆக, மக்களாகிய நாம் தாம் நமக்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் கட்சி சார்புகளை கடந்து, பொது நல நோக்கு என்ற ஒன்றை மட்டுமே இலக்காக வைத்து போராடும் ஓர் இளைஞர் சக்தி கொண்ட இயக்கம் காலத்தின் தேவையாகும்.

பார்க்கலாம், காலம் வெற்றிடத்தை விட்டு வைக்காது.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/33269/tn-govt-contract-labour-syestem/

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு