ஐக்கிய நாடுகள் சபையில் வீண் பேச்சுக்கள்: ஓபன்ஏஐ - அன்த்ரோபிக் மற்றும் செயற்கை நுண்ணறிவு விற்பனை
counter currents
அவர்கள் மக்களின் பொறுமையைச் சோதிக்கும் ஒரு கூட்டத்தினர்; அதிகப்படியாக மதிப்பிடப்பட்ட, நஷ்டத்தில் இயங்கும் தங்கள் நிறுவனங்களை ஆரவாரமாக விளம்பரம் செய்து, பிளவையும் பயத்தையும் விதைத்து, நிலைமை கைமீறி மோசமடையும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் அதில் சிக்க வைக்கும் வகையில் அரசுடனான கூட்டாண்மையை நாடுகிறார்கள். மீதமுள்ள நமக்கு என்ன கிடைக்கும்? நிச்சயமாக வாக்குறுதியளிக்கப்பட்ட சொர்க்கம் கிடைக்கப் போவதில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் சபை, வரலாற்றிலேயே முதன்முறையாக, செப்டம்பர் மாத ஆலோசனைகளின் போது செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் பிரச்சாரகர்களுக்கான முதன்மை மேடையாக மாறியது; ஓபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன் மற்றும் அவருக்கு இணையான அன்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் டாரியோ அமோடே போன்ற நபர்களின் சலிப்பூட்டும் அறிவிப்புகளை இராஜதந்திரிகள் ஆவலுடன் உற்றுக்கவனித்துக் கொண்டிருந்தனர்.
ஐநா பாதுகாப்புச் சபையிலேயே செப்டம்பர் 23 அன்று ஆற்றிய உரையில், ஆல்ட்மேன் வழக்கமான இரட்சகரின் தோரணைக்கு மாறினார்; ஏனெனில், மனிதகுலத்தின் எஞ்சிய பகுதியினருக்கான தேர்வுகள் முக்கியமாக அவரைப் போன்ற கூட்டத்தினராலேயே தீர்மானிக்கப்படுகின்றன. “நமக்கு முன்னால் ஒரு தேர்வு உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்பது படைப்பாற்றல் மற்றும் கண்டுபிடிப்புகளின் புதிய மறுமலர்ச்சியாக இருக்கலாம், அல்லது கொந்தளிப்பும் சீர்குலைவும் நிறைந்த ஒரு புதிய தொழிற்புரட்சியாக இருக்கலாம்”. ஏன் இந்த இரண்டு மட்டுமே கொண்ட முன்மொழிவு? முதலாவதாக, இப்படி ஒரு தேர்வின் அவசியம் தான் என்ன?
ஆல்ட்மேன் எரிச்சலூட்டும் வகையில் மேலிருந்து கீழ்நோக்கும் தோரணையில் பேசுகிறார்; “மனிதர்கள் தங்களைப் பற்றி நினைத்துக் கொள்வதை விட மிகவும் திறமையானவர்கள், ஆனால் அவர்களுக்கு அதிகாரமளிக்க உருவாக்கப்பட்டு, மாறாக கவனத்தை சிதறடித்து, அடிக்கடி கவனத்தைக் திருடும் வரம்பிற்குட்பட்ட தொழில்நுட்பத்தால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்” என்று அவர் குறிப்பிடுகிறார். இதற்கான சான்றுகள் எதுவும் வரவில்லை, ஆனால் அந்தச் சலிப்பூட்டும் தொனி தீர்மானிக்கப்பட்டுவிட்டது: நல்லிறைவனின் மகனைப் போல, செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கு வழங்கப்பட்ட ஒரு கொடையாகும். “எப்பொழுதும் சிக்கலாகி வரும் உலகில் மக்களுக்கு அதிக தன்னாதிக்கத்தை வழங்குவதே இதன் நோக்கம்: கற்றுக் கொள்ளவும், உருவாக்கவும், கண்டறியவும், கட்டமைக்கவும், பங்கேற்கவும் அதிக ஆற்றலை அளிப்பதாகும்”. இது முற்றிலும் வெற்றுப் பேச்சாகும்; ஏனெனில், இந்த வரிகள் எழுதப்படும் இக்கணத்தில் கூட, செயற்கை நுண்ணறிவு கற்றல் முறையைச் சோம்பேறித்தனமான, உணர்ச்சியற்ற நுகர்வாக மாற்றி அதற்குக் குறைபாடுகளை ஏற்படுத்துகிறது; மனிதப் படைப்பாளர்களிடமிருந்து திருடுவதன் மூலம் படைப்பாற்றலை அழிக்கிறது; புதியனவற்றைக் கண்டுபிடிப்பதை விட திரட்டப்பட்டவற்றைத் தொகுத்து வழங்குகிறது; மேலும், கட்டமைப்பதற்குப் பதிலாக மனிதனைப் பங்கேற்பிலிருந்து நீக்கித் தகர்க்கிறது. இதன் உள்நோக்கம் தெளிவாகவே மனிதகுலத்திற்கு எதிரானதாகும்.
இருப்பினும், ஆல்ட்மேன் தனது வேகத்தை அதிகரித்து, “செயற்கை நுண்ணறிவு மக்களுக்காக உருவாக்கப்பட வேண்டும், வெறும் இயந்திரங்களின் இயங்குவேகத்தை அதிகரிப்பதற்காக மட்டும் உருவாக்கப்படக் கூடாது. செயற்கை நுண்ணறிவை உருவாக்க உழைப்பவர்கள் கூறிய சில விஷயங்கள் மிகவும் பேரழிவு சித்திரமாக (dystopian) இருப்பதால், அவை மோசமான அறிவியல் புனைகதைத் திரைப்படங்களின் கதைக் களம் போல ஒலிக்கின்றன” என்று கூறினார். இந்த புலம்பல், ஓபன்ஏஐ மற்றும் அன்த்ரோபிக் ஆகிய இரண்டு நிறுவனங்களிலும் பணியாற்றித் தனது பார்வையை மாற்றிக்கொண்ட தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர் ஜேக்கப் காக்சனின் உணர்ச்சிமிக்க எச்சரிக்கைகளை நோக்கியே என்பதில் சந்தேகமில்லை. “அவர்கள் சுயமாய் மேம்படும் பேரறிவு (superintelligence) நோக்கி நேராகப் பாய்ந்து கொண்டிருக்கிறார்கள், நம் உயிரோடு சூதாடுகிறார்கள்” என்று கடந்த மாதம் அன்த்ரோபிக் நிறுவனத்திலிருந்து விலகியபோது காக்சன் கூறினார். “செயற்கை நுண்ணறிவை உருவாக்குபவர்கள், இந்த தசாப்தத்தின் இறுதிக்குள் அது நம் அனைவரையும் கொன்றுவிடக்கூடும் என்று உண்மையாகவே நம்புகிறார்கள்”.
இந்த பேரழிவு முன்னறிவிப்புகள் ஆல்ட்மேனுக்கும் செயற்கை நுண்ணறிவுச் சமூகத்திற்கும் கிடைத்த வரப்பிரசாதங்களாகும். ஒரு இருண்ட முடிவுக்கான ஆபத்து எந்தளவுக்கு அதிகமாகிறதோ, அந்த முடிவை அடைவதைத் தடுக்கும் முன்னணி ஆற்றலாக மாற வேண்டிய தேவையும் அந்தளவுக்கு அதிகமாகிறது. “மக்கள் பேரழிவின் ஆபத்தை 10%, 1%, 12%, அல்லது 0.1% என்று எதைக் கணித்தாலும் பரவாயில்லை. இதில் எந்த அளவும் சற்றேனும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல”. “மனிதக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும் என்பதற்கு மிக வலுவான சான்றுகளை வழங்க முடியாத எந்தவொரு மாதிரியையும் நாம் பயிற்றுவிக்கக் கூடாது” என்றும் அவர் பரிந்துரைக்கிறார். வேடிக்கையாக, இத்தகைய அமைப்புகள் உயரடுக்கினரின் பிரத்யேகச் சொத்தாக மாறக்கூடும் என்றும் ஆல்ட்மேன் எச்சரிக்கிறார் - “மிகக் குறைந்த மனிதர்களின் கைகளில் மிக அதிக அதிகாரம் சேருவது ஆபத்து. எந்தவொரு தனிநபரோ, நிறுவனமோ அல்லது நாடோ மிகவும் சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பயன்படுத்தித் தங்களது உலகப் பார்வையை மற்ற அனைவர் மீதும் திணிக்கக் கூடாது”. ஆனால், ஐநா பாதுகாப்புச் சபையில் அவர் செய்து கொண்டிருந்ததும் சரியாக அதைத் தான்; குவிக்கப்பட்ட அதிகாரம் எவ்வாறு இருக்கும் என்பதை அவர் அங்கே நிரூபித்துக் கொண்டிருந்தார்.
அப்படியானால், என்னதான் செய்வது? ஆல்ட்மேன் மூன்று கொள்கைகளை முன்வைக்கிறார்; அவற்றில் எதுவுமே அவ்வளவு ஆழமானவை அல்ல. முதலாவது, செயற்கை நுண்ணறிவின் மையத்தில் மனித அம்சத்தைத் தக்கவைத்துக்கொள்வதாகும். மனிதனை இந்தச் சமன்பாட்டிலிருந்து நீக்க உழைக்கும் ஒரு நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியிடமிருந்து வரும் ஒரு சுவாரஸ்யமான முன்மொழிவு இது! ஜூன் மாதத்தில் ஓபன்ஏஐ ஏஜென்ட் ஒன்று ஆஸ்திரேலியாவின் மெடிகேர் (Medicare) அமைப்பை ஊடுருவி தனியுரிமைப் பாதுகாப்புகளைத் தகர்த்தது இதற்கு நல்லதொரு உதாரணமாகும். இரண்டாவது, முதலாவதன் தொடர்ச்சியாகும்: “அறிவியல் முன்னேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் நன்மைகள் மக்களால் மற்றும் மக்களுக்காகவே இருக்க வேண்டும்”. கருவிகள் மனிதத் தன்னாதிக்கத்தைப் பறிப்பதற்காக அல்ல. மூன்றாவது, அகராதிச் மயானத்திற்கு உண்மையிலேயே நாடு கடத்தப்பட வேண்டிய ஒரு வார்த்தையைக் கொண்டுள்ளது. இத்தகைய “தொழில்நுட்பம் மக்களைத் தனித்தனியாக அதிகாரமளிப்பதாக இருக்க வேண்டும்”. “அதிகாரமளித்தல்” என்ற சொல், முதன்முதலில் அதிகாரத்தைப் பங்கீடு செய்பவர்களாலேயே எப்போதும் பயன்படுத்தப்படுகிறது.
எதைப் பற்றியும் கவலைப்படாமல், ஆல்ட்மேன் ஒரு விளம்பரதாரரைப் போலப் பேசுகிறார். அவர் ஒரு பொருளை விற்பனை செய்கிறார். இதில் அரசாங்கங்களும் ஈடுபட வேண்டும் என்கிறார். “செயற்கை நுண்ணறிவு ஜனநாயகமயமாக்கப்பட வேண்டும் என்றால், மிக முக்கியமான முடிவுகளை சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஆய்வகங்கள் மட்டுமே எடுக்க முடியாது. அவை ஜனநாயக வழிமுறைகள் மூலமாகவும், மக்களுக்குப் பதிலளிக்கும் கடமை கொண்ட அரசாங்கங்கள் மூலமாகவும் வடிவமைக்கப்பட வேண்டும்”. அவர் சர்வதேச ஒத்துழைப்பையும் “தேசிய மற்றும் சர்வதேச அளவிலான எல்லைப்புற AI தரநிலைகளுக்கான ஒரு நிரப்பு பொறிமுறையையும்” பரிந்துரைக்கிறார். இவை திறன்களை அளவிடும், அபாயங்களை மதிப்பிடும், பாதுகாப்பு நடவடிக்கைகளின் போதுமான தன்மையை தீர்மானிக்கும், “மற்றும் இத்தொழில்நுட்ப அமைப்புகள் அதிக தன்னாட்சி பெறும்போது அர்த்தமுள்ள மனித மேற்பார்வையைப் பாதுகாக்கும்”. பொதுவான தரநிலைகள், சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கவும் இணக்கத்தை உறுதிப்படுத்தவும் நாடுகளுக்கு உதவும். அசம்பாவிதங்களை உடனுக்குடன் புகாரளிக்கவும் அவற்றிலிருந்து விரைவாகக் கற்றுக்கொள்ளவும் ஒரு நடைமுறை மிகவும் அவசியமாகும். அரசாங்கங்கள் மற்றும் ஆல்ட்மேன் குறிப்பிடும் “முக்கிய உள்கட்டமைப்பு இயக்குபவர்கள்” மற்றும் “தொழில்நுட்ப வல்லுநர்கள்” (இதுதான் அவரது நிறுவனத்திற்கான மறைமுக விளம்பரம்) ஆகியோருக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்புகள் “புதிதாக உருவாகும் பாதிப்புகளையும் புதிய அச்சுறுத்தல்களையும் பகிர்ந்து கொள்ளும்”.
அமோடேயின் உரையோ, 'கிளாட்' (Claude) பெரு மொழி மாதிரியின் சிறப்புகளைக் கூறி சுய விளம்பரம் செய்வதில் இன்னும் வெளிப்படையாக இருந்தது. “இன்றுதான், அன்த்ரோபிக் நிறுவனம் கிளாட் உதவியுடன் ஒரு புதிய மூலக்கூறு இயந்திரத்தின் கண்டுபிடிப்பை அறிவித்தது” என்று அவர் தம்பட்டம் அடித்தார். இது “மரபணு சிகிச்சையில் பயன்படுத்தக்கூடிய ஒரு புதிய மரபணு எடிட்டிங் முறைக்கு” வழிவகுக்கும் என்றார். ஆனால் ஆபத்துகள் நிறைந்துள்ளன. உதாரணமாக, உயிரியல் பயங்கரவாதிகள் உயிரியல் ஆயுதங்களை உருவாக்க AI மாதிரிகளைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும். மற்றொரு ஆபத்து “கட்டுப்பாட்டை இழப்பதாகும்; மாதிரியின் திறன்கள் உருவாக்குபவர்களின் கட்டுப்பாட்டுத் திறனையும் தாண்டி வேகமாக அதிகரிப்பதாகும்”. ஆல்ட்மேனைப் போலவே, இவரிடமும் ஒரு ஒத்த கருத்து வெளிப்பட்டது: அரசாங்கங்கள் உட்பட மனிதகுலம் முழுவதும் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். “சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால், செயற்கை நுண்ணறிவு மனிதகுலத்திற்கே பேர ஆபத்தாக மாறக்கூடும் என்று நான் நம்புகிறேன்” என்றார். அதன் பிறகு அவரது அசல் விளம்பரம் வருகிறது: “செயல்பாட்டு ரீதியாகவும் எங்களது ஆராய்ச்சியிலும் இத்தகைய அபாயங்களைத் தடுப்பதில் இத்துறையிலேயே மிகச்சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளதால்”, அன்த்ரோபிக் நிறுவனம் தான் மனிதகுலத்தைக் காக்க வரும் இரட்சகனாக இருக்க மிகவும் பொருத்தமானது என்றார். அபாயங்கள் குறித்து அனைத்து மாதிரிகளுக்கும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. “எங்களது மிகவும் திறமையான மாதிரிகளில் பாதுகாப்புகள் நிறுவப்பட்டுள்ளன, மேலும் இந்தத் துறைகளில் எங்களது பணிகளை நாங்கள் வெளியிடுகிறோம்”. வெளிப்படைத்தன்மை நடைமுறைகளிலும் இந்த நிறுவனத்திற்கு இணையானவர் யாருமில்லை.
இது மற்றொரு மூன்று கட்டப் பரிந்துரைக்கான முன்னுரையாகும். முதலாவதாக, ஒரு “உணவுப் பரிசோதகரைப்” போல (இவர்களுக்கு உண்மையிலேயே கற்பனை வளம் அதிகம்), AI நிறுவனங்களில் வெளிப்புற மதிப்பீட்டாளர்கள் இணைக்கப்பட வேண்டும். இரண்டாவதாக, தொழில்முறைத் தரநிலைகள் அமைக்கப்பட வேண்டும், அதன் மூலம் “முன்னேற்றத்தின் வேகத்தை” சீராக்க முடியும். இறுதிப் புள்ளி, “சர்வதேச தரநிலைகளை அமைப்பதற்கு” அரசாங்கங்களுக்கு இடையே உலகளாவிய ஒத்துழைப்பைக் கோருகிறது. குறிப்பாக பாதுகாப்புச் சபைக்கு, “உயிரியல் ஆயுதங்களை உருவாக்க AI ஐப் பயன்படுத்துவதைத் தடைசெய்வது அல்லது உயிரியல் ஆயுதங்களைத் தயாரிக்க உங்கள் AI தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அனுமதிப்பதைத் தடுப்பது போன்ற ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரிக்கக்கூடிய” ஆரம்பக்கட்ட ஒப்பந்தங்களை அமோடே பரிந்துரைத்தார். (அந்த ஆயுதங்கள் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு மோகம்?) “எல்லைப்புற மாதிரியின் திறன்களை நேரடியாகக் கண்காணிக்கும்” மதிப்பீடு மற்றும் சரிபார்ப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். மேலும் “கட்டுப்பாட்டை இழக்கும் அபாயங்கள் மற்றும் தவறான பயன்பாட்டு அபாயங்களுக்காக AI மாதிரிகளைச் சோதிப்பதற்கான பொதுவான உலகளாவிய தரநிலைகள், மற்றும் உலகளாவிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வாய்ந்த AI சம்பவங்களுக்கான அறிவிப்பு அமைப்பு” அமைக்கப்பட வேண்டும். விரிவுரை நிறைவடைந்தது.
நஞ்சூட்டப்பட்ட கிண்ணமாகவும், அதே நேரத்தில் வாய்ப்புகளின் அமுதசுரபியாகவும் விளங்கும் இத்தொழில்நுட்பத்தை எவ்வாறு அணுகுவது என்பதில் ஐநா அதிகாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். ஐநாவின் உயர்மட்ட மனித உரிமைகள் அதிகாரியான வோல்கர் டர்க் (Volker Türk), ஒரே நேரத்தில் இதைக் கண்டு மயங்கியவராகவும் திகிலடைந்தவராகவும் காணப்படுகிறார். பாதுகாப்புகள், சுய கட்டுப்பாடு மற்றும் அபாயங்களை மதிப்பிடுதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஆறு AI நிறுவனங்களின் தலைவர்கள் செப்டம்பர் 29 அன்று கையெழுத்திட்ட அர்த்தமற்ற தன்னார்வ ஒப்பந்தத்தை ஒப்புதலுடன் சுட்டிக்காட்டி, அவர் மிகவும் எளிதில் நம்பக்கூடியவராகத் தெரிகிறார். ஒரு விசித்திரமான தருணமாக, அதிபர் உண்மையில் “நன்னெறிக்கு உட்பட்டது” (morally binding) என்ற சொல்லைப் பயன்படுத்தினார்; இவ்விரு வார்த்தைகளுக்கும் அவரது அகராதியில் என்றுமே தொடர்பிருந்ததில்லை. குறைந்தபட்சம், தொழில்நுட்ப வளர்ச்சியில் கட்டாய மனித உரிமைப் பாதுகாப்புகள் மற்றும் உரிய ஆய்வுகளின் அவசியத்தை டர்க் ஏற்றுக்கொள்கிறார்; கவனிக்கப்படாமல் மெதுவாக ஊடுருவும் பேரழிவிற்கு எதிராக எச்சரிக்கிறார். மனித உயிர் தொடர வேண்டுமா அல்லது முடிய வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் முடிவெடுக்கும் அதிகாரத்திலிருந்து இயந்திரங்களை முற்றிலுமாக அகற்றுவது குறித்த ஒருமித்த கருத்து இதற்கு நல்லதொரு தொடக்கமாக இருக்கும். ஆனால், மனிதர்கள் ஏற்கனவே தங்களது பொறுப்புகளையும் நன்னெறி வழிகாட்டிகளையும் AI இயந்திரங்களிடம் ஒப்படைத்து வரும் நிலையில், இது ஒரு மென்மையான அறியாமையாகத் தோன்றுகிறது. ஆல்ட்மேனும் அமோடேயும் துணிச்சலுடன் செய்து கொண்டிருப்பது என்னவென்றால், மனிதகுலத்திற்கு எதிரான தங்களது தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட குற்றங்களை அனைவரின் கண்முன்னே வெளிப்படையாக அரங்கேற்றுவதுதான்.
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு