பாஜகவுக்கும் திமுகவுக்கும் உள்ள ஒற்றுமைகள் ஏராளம்!
Aram Online
பாஜகவுக்கும், திமுகவுக்கு உள்ள ஒற்றுமைகளை பட்டியலிட்டு பார்க்கும் போது பெருவியப்பேற்படுகிறது. பொதுக் கருத்தாக்கத்தை உருவாக்கி வலுப்படுத்துவதில் இந்தியாவில் பிராமின் லாபிக்கு ஈடு இணை இல்லை என்பது நிருபணமான உண்மை. அந்தப் பார்ப்பன கட்சியான பாஜகவுக்கு நிகராக திராவிட மாடல் திமுக திகழ்வது தான் ஊன்றி உணர வேண்டிய உண்மையாகும்;
நாட்டில் நடை பெறும் எல்லா விவகாரங்களிலும் கருத்துச் சொல்லியே ஆக வேண்டும் என நாம் கருதுவதில்லை. அது சாத்தியமும் இல்லை, தேவையும் இல்லை.
எந்த செய்தி நம்மை பாதித்து எழுதும் உந்துதலை தருகிறதோ, அவற்றை எழுதுகிறோம்.
யார் ஒருவர் – அவர் எந்தக் கட்சியின் தீவிர விசுவாசிகளாக இருந்தாலும் – அவர் ஏதேனும் ஒரு காலகட்டத்தில் நம்மிடம் கடுமையாக முரண்பட நேரும். எந்தக் கட்சியும் சராத மன நிலையில் இருந்து வாசிப்போர் மட்டுமே என்னுடைய எழுத்துக்களோடு உடன்பட முடியும். எந்தக் கட்சி தவறு செய்தாலும் அது நம் விமர்சனத்திற்கு தப்ப முடியாது.
புதிதாக ஆட்சிக்கு வந்த தவெகவைக் கூட நாம் விட்டு வைக்கவில்லை. அதிமுகவில் இருந்து எம்.எல்.ஏக்களை இழுத்தது தொடங்கி அதன் பல்கலைக் கழகங்கள் திருத்த மசோதா, கிராமங்களை விழுங்கும் நகர் மற்றும் ஊரமைப்பு சட்ட திருத்த மசோதா, பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டும் முயற்சி, பாஜகவை விமர்சிப்பதில் தவெக காட்டி வரும் தயக்கம் ஆகியவற்றை கடுமையாக கேள்விக்கு உட்படுத்தியுள்ளோம்.
பாஜகவை ஏன் கடுமையாக விமர்சிக்கிறீர்கள், பாஜக பற்றி உங்களுக்கு சிறிதளவேனும் நல்ல அபிப்ராயம் இல்லையே.. என ஒரு சாரார் கேட்கிறார்கள்! இவர்கள் நம்மை திராவிட ஆதரவாளர் என முத்திரை குத்துகிறார்கள்!
அதே போல திமுகவை நீங்கள் கடுமையாக விமர்சிக்கிறீர்கள். இந்தக் கட்சி மீது வெறுப்பா? என்கிறார்கள், அதன் ஆதரவாளர்கள்! இவர்கள் நம்மை சங்கி என்கிறார்கள். அறம் தவெக ஆதரவானது என்றும் முத்திரை குத்துகிறார்கள்!
இவையெல்லாம் அவரவர் சார்பு மன நிலையில் இருந்து பார்ப்பதால் எழும் தோற்ற மயக்கங்களே! சார்பு மனநிலை தவிர்த்து நம் எழுத்துக்களை வாசிக்கும் பக்குவம் கொண்டவர்கள் அதை சரியாக உள்வாங்கிக் கொள்கிறார்கள்! அப்படியான பல்லாயிரம் வாசகர்கள் பல்லாண்டுகளாக நம்மை பின் தொடர்கிறார்கள்!
அதே சமயம் நாம் பாஜக, திமுக என்ற இரு கட்சிகளை மட்டுமே அதிகமாக விமர்சித்து எழுதுகிறோம். காரணம், இந்திய அளவில் பாஜக எவ்வளவு ஆபத்தான கட்சியோ, அதைப் போல தமிழ்நாட்டிற்கு ஆபத்தான கட்சி திமுக தான்.
இந்த இரண்டுக்கும் உள்ள ஒரு ஒற்றுமை என்னவென்றால், இந்திய அரசியலை ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக தான் தீர்மானிக்கிறது. அதே போல தமிழக அரசியலை ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுக தான் தீர்மானிக்கிறது. மற்ற கட்சிகள் அனைத்தும் இவர்களை சமாளிக்கும் அரசியலை மட்டுமே செய்கின்றன. அதில் தான் சறுக்கல்களே தொடங்குகின்றன.
ஜனசங்கமாகவும், பின்னர் பாஜகவாகவும் இருந்த கட்சியை சமாளிக்கும் விதமாகத் தான் காங்கிரஸ் கட்சியுமே கூட பாதி சங்கியானது. மென்மையான இந்துத்வா போக்கை கடை பிடிக்கிறது. காஷ்மீர் உள்ளிட்ட பல பிரச்சினைகளில் கொஞ்சம் தடம் புரண்டது.
அதே போல திமுகவை சமாளிக்கப் போய் தான் அதிமுகவும் அதிக ஊழல் கட்சியானது. எம்.ஜி.ஆர் ஒரு நேர்மையான ஆட்சியைத் தரத்தான் விரும்பினார். பின்னர் திமுகவால் தடம் புரண்டார். இதே கதி தான் நாளை தவெகவுக்கும் ஏற்படலாம் என எண்ணுகிறேன்.
தன்னைப் போலவே தன் எதிரியையும் மாற்றிவிடும் சாகஸக் கலையில் பாஜகவும், திமுகவும் ஒரே ரகமாகும்.
இந்து மதத்தையும், இந்துக்களையும் காப்பாற்ற வந்த ஒரே கட்சி என பாஜக தன்னை பிரகடனப்படுத்துகிறது. இந்து மதம் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ளும் வலிமை வாய்ந்தது. உண்மையில் பாஜவால் தான் இந்து மதத்திற்கே ஆபத்தாகும்!
அதே போல தமிழகத்திற்கும், தமிழுக்கும், சமூக நீதிக்கும் தானே பாதுகாவலன் என்கிறது திமுக. உண்மையில் மேற்படி இந்த மூன்றும் இன்று பாதிக்கப்பட்டிருப்பதே திமுகவால் தான்!
பாஜகவும், திமுகவும் சொல்லுக்கும், செயலுக்கும் நேர் எதிரான கட்சிகளாகும்…என்பது பல நூறு சம்பவங்களின் வழியே வெளிப்பட்டாலும், இவற்றை ஆதரிப்பவர்கள் இவை என்ன பஞ்சமா பாதகம் செய்தாலும் உறுதியாக ஆதரிப்பார்கள்! அப்படி ஒரு மைண்ட் செட்டை பொதுத் தளத்தில் உருவாக்கி இருப்பதில் இரு கட்சிகளுமே தன் நிகரற்றவை;
எத்தனை மதச் சண்டைகள்! எத்தனை பெருங் கலவரங்கள், எத்தனை உயிர் பலிகள்! எவ்வளவு மோசமான சட்டங்கள், எவ்வளவு கொடூர பாதிப்புகள்..இப்படி பாஜக என்ன செய்தாலும் அதன் பற்றாளர்கள் ஒரு சிறிதும் சலனமின்றி அதை ஆதரிப்பார்கள்!
அதே போல் எத்தனை வெறுப்பு பேச்சுக்கள், வன்மங்கள், ஆபாச பேச்சுக்கள், வரைமுறையற்ற ஊழல்கள், சமூகச் சீரழிவுகள் திமுகவால் ஏற்பட்டாலும் அதன் பற்றாளர்கள் எதிர்தரப்பின் மீதே பழியை திருப்பிவிடுவார்கள்!
பாஜகவை விமர்சிப்பவர்களுக்கு தேச விரோதி பட்டம் கட்டுவார்கள்! திமுகவை விமர்சிப்பவர்களுக்கு தமிழின துரோகி, சங்கி என முத்திரை குத்துவார்கள்! இந்த ஒற்றை வார்த்தையில் தங்கள் அநீதிகள் அனைத்தையும் நியாயப்படுத்திக் கொள்வார்கள்!
திமுக, சமூக நீதியை பேசிக் கொண்டே குடும்ப வாரிசு அரசியலை சாத்தியப்படுத்தும். சனாதனத்தை எதிர்த்துக் கொண்டே சனாதனத்தோடு சரசமாடும். சலுகைகளை அள்ளி வழங்கும். பார்ப்பன எதிர்ப்பை வெளியில் பேசிக் கொண்டு அனைத்து நிலைகளிலும் பார்ப்பனர்களை பயன்படுத்திக் கொள்ளும். இந்தியை எதிர்ப்பது போல பாசாங்கு செய்து தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழ் அழித்து, இந்தி கோலோச்ச துணை போகும். தமிழகத்தில் இந்திக்காரர்களின் மேலாதிக்கத்திற்கு மறைமுகமாக துணை புரியும். திமுக யார், யாரையெல்லாம் எதிரி என்று அடையாளப்படுத்துமோ, அவர்களையெல்லாம் எப்போது வேண்டுமானாலும் நட்பு சக்தியாக்கிக் கொள்ளும். பாஜகவுடன் கை குலுக்கும், அதிமுகவில் உள்ள பெரிய தளபதிகளை இழுத்து அரவணைத்துக் கொள்ளும், சீமானை அழைத்து சீராட்டும், ஹெச்.ராஜாவுக்கு ஒன்றென்றால் ஓடிச் சென்று உதவும். இது திமுக ஆதரவாளர்களை எந்த விதத்திலும் சலனப்படுத்தாது.
இந்தியாவில் வேறு எந்தக் கட்சிக்கும் இது சாத்தியமில்லாதது. இது பாஜகவும், திமுகவும் வாங்கி வந்த வரம்! மக்களுக்குத் தான் சாபம்!
இந்த இரண்டுக் கட்சிகளுக்கும் முற்றிலும் மாற்றான மனித நேய அரசியலை முன்னெடுக்கும் ஆட்சி இந்தியாவில் எப்போது சாத்தியமாகிறதோ, அன்று தான் உண்மையான மக்களாட்சி மலரும்.
சாவித்திரி கண்ணன்
Aram Online
https://aramonline.in/33102/bjp-dmk-similarities-politics/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு