பாசிச பாஜக அரசு எதிர்ப்பில் ஒன்று சேராத திமுக அதிமுக நாதக கட்சிகள் தவெக எதிர்ப்பில் ஒன்று சேருகின்றன

துரை.சண்முகம்

பாசிச பாஜக அரசு எதிர்ப்பில் ஒன்று சேராத திமுக அதிமுக நாதக கட்சிகள் தவெக எதிர்ப்பில் ஒன்று சேருகின்றன

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் போது எங்களிடம் பெரியாரிய நோக்கில் சிறந்த கொள்கைகள் இருக்கிறது! ஆனாலும் இந்த அரசியல் அமைப்பு சட்டப்படி நடக்க வேண்டி இருக்கிறது! பலவற்றுக்கு எதிர்ப்பு அறிக்கைகள் விடுகிறோம்! திமுகவுக்கு முற்போக்கு நல்லெண்ணம் இருந்தாலும் அதுவும் ஒரு முதலாளித்துவ கட்சி தானே! இதைத் தாண்டி என்ன செய்துவிட முடியும்? என்ன எதிர்பார்க்க முடியும்? என்று சலுகை வழங்கியவர்கள்,  தவெக என்று வரும்போது பாஜக எதிர்ப்பு இல்லை! அவ்வாறு அது பேசுவது சொல்லுவது எல்லாம் ஏமாற்று என்று வரையறுத்து பேசுகிறார்கள். 

தவெக அரசும் சரி பழைய திமுக அரசும் சரி வடிவங்கள் வார்த்தை வீச்சுகளில் வேறுபட்டவைகள் அவ்வளவுதான். ஒன்றிய அரசை அரசியல் சட்ட அமைப்பு முறைக்கு மாறாக எதிர்த்து இயக்கம் எடுக்கும் கட்சிகள் அல்ல இவைகள். 

மேலும் பாசிசம் என்பதை அரசியல் பொருளாதார இலக்கற்றதாக ஆரிய திராவிட வாதத்திற்குள் சமன் செய்ய பார்ப்பவர்களின் சாமர்த்தியங்கள் பாசிசம் பற்றிய திரிபு வாதங்களாகவும் தலை தூக்கி நிற்கிறது. ஆரியம் மட்டுமல்ல திராவிடமும் பாசிச இலக்கில் கரையும் ஆளும் வர்க்க கொள்கை கொண்டது என்பதை திட்டமிட்டு மறைக்கிறார்கள். வர்க்கத்திற்கு அப்பாற்பட்டதாக திராவிடத்தையும் திரிக்கிறார்கள்.

உண்மையில் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும் கட்சிகள் பாசிச எதிர்ப்பில் இறங்கி அடித்து அரசியல் செய்ய முடியாமைக்கும் 

இயக்கமாக முன்னெடுக்க முடியாமைக்கும் காரணம் கட்டுப்படுத்தும் அரசியல் சட்ட அமைப்பு முறை மட்டுமல்ல, இந்தக் கட்சிகளே கார்ப்பரேட் மூலதன குவியலுக்கும் ஆதிக்கத்திற்கும் அதாவது பாசிச அடித்தளத்திற்கு சேவை செய்யும் இலக்குள்ள கட்சிகள் என்பதுதான் அடிப்படையான உண்மை.

இந்த நிலைமையில் இத்தகைய கட்சிகளின் ஆட்சியில் வெளிப்படும் அன்றாட நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ஆர்எஸ்எஸ் சதியாக வரையறுத்து உரை எழுதுவது இவர்களுக்கு போதுமானதாக இருக்கிறது. 

ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச கட்சி என்பது பட்டவர்த்தனமாகும் போது சமூக களத்தில் இந்த கட்சிகளின் எதிர்வினை அவர்கள் மீது என்ன? 

அறிக்கைகளை தாண்டி குறைந்தபட்சம் கேரளா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இந்துத்துவ வாணரங்களுக்கும் இடையிலான தெருச்சண்டை அளவுக்கு சித்தாந்த விளைவு ஏதும் இங்கு உண்டா ? எனில் கிடையாது.

தங்கள் கட்சிகள் இருக்கும் பகுதி அளவில் ஆர் எஸ் எஸ் பாஜக நடவடிக்கைகளுக்கு எதிரான அரசியல் இயக்கம் உண்டா? என்றால் பிரச்சாரம் உண்டா? என்றால் அதுவும் கிடையாது. 

அவ்வாறு பிரச்சார இயக்கத்தை யாரும் வீச்சாக முன்னெடுக்க இயலாத வகையில் சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி தடுத்தது தான் திமுக அரசும்.

மேலும் மேலும் உழைக்கின்ற மக்களை கொடுமையாகச் சுரண்டி 

மூலதன ஆதிக்கத்தை நிறுவும் பாசிச மயம் என்பது தேசிய தனிச்சிறப்பு எல்லைகள் பண்பாட்டு அம்சங்கள் அனைத்தையும் உடைத்து திட்டமிட்ட வகையில் முன்னேறுகிறது. இதை எதிர்க்க வேண்டுமானால் சித்தாந்த ரீதியாகவே சமரச அரசியல் அற்ற பாட்டாளி வர்க்க இயக்கங்களை கட்டியமைத்து பதிலடி கொடுப்பதால் மட்டும்தான் முடியும.

ஒப்பந்த முறை வேலைகள் ,

தனியார்மயம், விலைவாசி உயர்வு, அரசு வேலை வாய்ப்பு இன்மை, தொழிற்சங்க உரிமைகள் பறிபோதல் போன்ற தொழிலாளர் வர்க்க விரோத கொள்கைகளை எதிர்க்கும் மாற்று அரசியல் மூலமாக தவெக அரசை எதிர் கொள்ள வேண்டும். 

இந்த அடிப்படைகளுக்கு திராவிட அரசியலும் திமுகவும் தோழமை சத்தியாக இணைந்து வேலை செய்ய அரசியல் சக்தியா? என்பதிலிருந்து மதிப்பிட‌ வேண்டுமே ஒழிய ஆரியத்தை எதிர்த்து வசனம் பேசுவதால் 

பாசிச எதிர்ப்பில் வல்லமை சக்தி என்று அதன் நலனுக்காக தவெக அரசை எதிர்ப்பது பாட்டாளி வர்க்கத்தின் வேலை அல்ல. 

பாட்டாளி வர்க்கம் தன்னுடைய சொந்த அரசியல் நலனிலிருந்து எதிர்க்க வேண்டும். 

பாசிச சமரச சக்தி திமுகவையும்

அம்பலப்படுத்தி நிலைமைக்கு மாற்று இடதுசாரி அரசியல் என தங்களது அரசியலை ஆணையில் வைக்க வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் சொந்தக் கோரிக்கைகளுக்காக அதன் சொந்த வர்க்க நலன்களுக்காக, இப்போதைய அரசான தவெக பிற எதுவாயினும் அதன் முதலாளித்து வர்க்கச் சார்பை அதற்கேற்ற பண்பாட்டு அடிமைத்தனத்தை எதிர்ப்பதன் வழியில் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் பலத்தை பெருக்க வேண்டும். இந்த வரையறுப்பில் இருந்து வெளிப்படுத்திக் கொள்வதே இடதுசாரி பார்வையாக இருக்க முடியும்.

மாறாக ஏற்கனவே உழைக்கும் மக்களுக்கு எதிராக அம்பலப்பட்ட திமுகவின் குரலில்  இடதுசாரி திராவிட அரசியல் பேசுவது என்பது மக்களிடம் கம்யூனிஸ்டுகளையும் தனிமைப்படுத்திவிடும்.

எனவே தவெக அரசு எதிர்ப்பு என்பதை பாட்டாளி வர்க்க அரசியல் கண்ணோட்டத்தில் இருந்து, கார்ப்பரேட் மூலதன கொடுங்கோண்மைக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஜனநாயக சக்திகளுக்கு தலைமை தாங்கும் தாங்கு திறனோடு செய்யப்பட வேண்டியதாகும்.

களத்தில் நிற்பது என்பது இந்த அரசியல் உறுதியில் நிற்பது என பொருள்படும்படி பேசப்பட வேண்டியதாகும்.

துரை.சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1171346608905467/?rdid=O0b4zvvJWjiUfZsX

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு