பல வருட நூலக முறைகேடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது
சாவித்திரி கண்ணன் - ஜோதிஜி திருப்பூர் - Tha SivaKumar - IsKra - Nelson Babu Antony - தோழமையுடன் மறைமலை ஈரோடு
1
பல வருட நூலக முறைகேடுகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது!
அதிர வைக்கின்றன, கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்திற்கான நூல் கொள்முதல் முறைகேடுகள்! நூலகங்களுக்கு திருட்டு நூல்கள் வாங்கப்படுவது புதிதல்ல. 20 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கும் அறிவுத் திருட்டின் புதிய வடிவம் ஏ.ஐ உதவியில் பரிணாமம் பெற்றுள்ளது. பதிப்பகத்தார், அதிகாரிகள், அரசியல்வாதிகள்..என்ற முக்கூட்டணியில் எத்தனையோ நடந்திருந்தாலும், இதில் மத்தியில் செல்வாக்குள்ள ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருக்கிறார்;
ஒரு போலிப் பதிப்பகம், அதிலிருந்து மட்டுமே 1,800 நூல்கள் கொள் முதல், போலிப் பெயர்களில் காணப்படும் திடீர் எழுத்தாளர்கள்! நூலில் காணப்படுவை எல்லாம் பொய்த் தகவல்கள்.. போன்ற செய்திகள் தமிழகத்தில் நூலகத் துறையின் பேரவலம் உச்சத்தை தொட்டுள்ளதின் சாட்சிகளாகத் திகழ்கின்றன.
பேராசிரியர் பெருமாள் முருகன் தன் கட்டுரையில் இந்த நூல்கள் படிக்கத் தகுந்தவையல்ல. மிகவும் பொய்யான முறையில் தமிழ் இலக்கிய தகவல்களை கொண்டுள்ளன என மிகத் தெளிவாக எழுதியுள்ளார். இவ்வளவு தகவல்களை சொன்ன பேராசிரியர் அவர்கள் நூல்கள் தேர்வு குழுவில் தானும் இருந்ததை தன் கட்டுரையில் ஏன் சொல்லாமல் தவிர்த்தார் என்பது புரியவில்லை. நாங்கள் பாடுபட்டு தேர்வு செய்து தந்தவை எங்கே காணவில்லை என்ற தார்மீகக் கேள்வியை அவர் ஏன் எழுப்பவில்லை. குறைந்தபட்சம் அந்த தேர்வுக் குழுவில் அச்சமயம் தன்னோடு தொடர்பில் இருந்த அதிகாரிகளிடமாவது இந்த வருத்ததை வெளிப்படுத்தினாரா? என்பதையும் தெரிவிக்கவில்லை.
அதே சமயம் அந்தக் கட்டுரையில் நூல்கள் எல்லாம் வாங்க வல்லுனர்களின் பரிந்துரை எல்லாம் பெறப்பட்டதாகத் தெரிகிறது…என்று தனக்கு சம்பந்தமே இல்லாதது போல ஏன் நிறுவ முயல்கிறார் என்பதும் தெரியவில்லை.
இதை விட எனக்கென்ன ஆச்சரியம் என்றால், விஜய் திரிஷா பெயரில் எழுதப்பட்டுள்ள ஒரு நூலின் அட்டைப் படத்தை தன் முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்படியாக மேம்போக்காக அணுகக் கூடிய விவகாரமல்ல இது.
ஒவ்வொரு நூலகமும் ஒரு பல்கலைக் கழகத்திற்கு சமமானது. ஒவ்வொரு நூலும் படிப்பவருக்கு ஒரு ஆசானாகிறது. பல ஆசான்களை நமக்கு தரிசிக்க கொடுக்கும் இடம் தான் நூலகம்! அப்படிப்பட்ட உன்னத நூலகத்திற்கு நூல்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் அக்கறையோடு செயல்படுவதற்கு மாறாக பெரும் முறைகேடுகள் பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதுவும் கடந்த சில வருடங்களாக நூலக ஆர்டர்கள் என்பவை பழந்தின்று கொட்டை போட்ட புத்தக வியாபாரிகளின் சூதாட்ட களமாக இருக்கிறது. தற்போதோ அது அவர்களையும் பின்னுக்குத் தள்ளி, புதிய ஆட்டக்காரர்களை காட்டுகிறது என்பது தான் இன்றைய முறைகேட்டின் ஹைலைட்டாகும்.
சரி, தற்போதைய விவகாரத்திற்கு வருவோம். கடந்த ஆட்சியில் நவம்பர் -5, 2025 அன்று பெரியார் நூலகம் உள்ளிட்ட நூலகங்களுக்கு நூல்களை தேர்ந்தெடுக்க பரிந்துரைக் குழு உருவாக்கப்பட்டது. அந்தக் குழு பிப்ரவரியில் பரிந்துரை தருகிறது. இந்த பரிந்துரைப்படியான புத்தகங்கள் மார்ச் மாதத்தில் இருந்தே படிப்படியாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த அகல்விளக்கு பதிப்பகத்தின் நூல்கள் மட்டும் ஜூன் 22 கொள் முதல் செய்யப்பட்டுள்ளது.
ஆட்சி மாற்றத்திற்கு பிறகான இந்த கொள்முதல் நூல்களின் எழுத்தாளர்கள் பெயரில் தாமரை, ஜோதி, விஜய் ஆகிய பெயர்களை முன்னொட்டாக போட்ட நூல்கள் மட்டுமே தாமரை கார்த்தி, தாமரை பன்னீர், தாமரை முரளி, ஜோதி ஹரிகரன், ஜோதி சரவணன், விஜய் ஆதித்தன், விஜய் பாலு, சூர்யா விஜய் என்பதாக எக்கச்சக்கமாக நூல்கள் இருப்பது எப்படி? அதுவும் விஜய் திரிஷா என்று இல்லாத எழுத்தாளர் பெயரில் நூல் போட்டு நூலகத்திற்கு தந்துள்ளவர்களின் உள் நோக்கம் தான் என்ன? இதில் தமிழ் பெயரோடு வட நாட்டு பெயர்களையும் இணைத்து மனிஷா சரவணன், மனிஷா தினேஷ், கார்த்திக் அவினாஷ் போன்ற பெயர்கள் காணப்படுவது கவனத்திற்குரியது. நிச்சயமாகச் சொல்கிறேன், இதில் மத்திய பாஜக அரசில் செல்வாக்குள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி சம்பந்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
எழுதியவர் பெயர் என்னவென்றே தெரியாமல் நூல் ஆர்டர் தரப்படுவதில்லை. முதலாவதாக ஒரு பிரதியை தந்து தான் பல பிரதிகளுக்கான ஆர்டர் பெறுவார்கள்! தற்போது ஒவ்வொரு நூலிலும் 10 பிரதிகள் வாங்கப்பட்டு அவை சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலகம், கோவை பெரியார் நூலகம், திருச்சி பெரிய நூலகம் மற்றும் ஆறு மாவட்டங்களுக்கு தரப்பட்டுள்ளதாம். வெளி வந்துள்ள உண்மைகள் குறைவு.
பாபாசி நிர்வாகிகளிடம் பேசியதில் ஆங்கில நூல்களுக்கான ஆர்டர்கள் தமிழ் நாட்டில் உள்ள ஆங்கில பதிப்பகங்களுக்கு தராமல் முழுக்கவே வட நாட்டு பதிப்பகங்களுக்கு தரப்பட்டது தொடர்பாக சென்ற ஆட்சியிலேயே நாங்கள் புகார் தந்தோம். ஆனால், பலனில்லை என்றார்கள். அந்த வகையில் ஆங்கில நூல்கள் கொள்முதலில் தற்போது வெளியானதை விட மிகப் பெரிய முறைகேடுகள் நிச்சயம் நடந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
பரிந்துரை குழு என்ற ஒன்றை போட்டு சிறந்த எழுத்தாளர்களை வருத்தி வேலை வாங்கி பரிந்துரையும் பெற்று, அவர்கள் பரிந்துரைக்காத இத்தனை அதிகமான நூல்களை யார் ஆர்டர் தந்தனர். அப்படி என்றால், இது போன்ற குழுக்கள், அவர்களுக்கான சம்பளம், இன்ன பிற செலவுகள் எல்லாம் வீண் தானே! வெறும் கண் துடைப்பு தானே!
1,800 நூல்களை அனுபவமில்லாத ஒரு புதிய பதிப்பகம் உருவாக்க ஆறேழு மாதங்கள் போதுமா? உண்மையில் பிரமிப்பாக உள்ளது! நிச்சயம் இந்த நூல்கள் பரிந்துரை குழு அமைக்கப்படுவதற்கு முன்பிருந்தே உருவாக்கப்பட்டு வந்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. எப்படி இருந்தாலும் இதற்கு அசுர உழைப்பும், மிகப் பெரிய ஆள்பலமும், அதிக முதலீடும் தேவை. இதை ஒரு புதிய அமெச்சூர் பதிப்பகம் செய்கிறது என்றால், அதன் பின்புலமாக ஒரு வலுவான அரசியல் சக்தி கண்டிப்பாக இருந்திருக்க வேண்டும்.
ஆக, சென்ற ஆட்சியில் இந்த கொள் முதலுக்கான ஆர்டர் தரப்பட்டுள்ளது மன்னிக்க முடியாத குற்றம் என்றால், அதை இந்த ஆட்சியாளர்கள் என்ன? ஏது? என்று கவனம் காட்டாமல், அப்படியே வாங்கி அடுக்கி வைத்துள்ளதும் பெரும் அலட்சியப் போக்கு தான்.
நூலகத் துறையில் அத்தனை அதிகாரிகளில் ஒருவருக்கு கூடவா இந்த அட்டுழியம் உறுத்தவில்லை. கோவை மாநகரத்தில் உள்ள எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் கண்களுக்கோ, கவனத்திற்கோ கூட வராமல் நாமக்கல்லில் இருந்து ஒரு கல்லூரி பேராசிரியர் கோவை வந்து கண்டுபிடித்துச் சொல்லி இருக்கிறார்! வாவ்!
அவர் ஏதோ மேலோட்டமாக பார்த்தேன் என்று சொல்லாமல் ஒரே பதிப்பகத்தில் இருந்து 1,800 புத்தகங்கள் வாங்கியுள்ளதை மெனக்கெட்டு எண்ணியதாக எழுதி இருக்கிறார். இதை அவர் தனியாக செய்வது மிகவும் கஷ்டம். ஒரு குழுவாகத் தான் செய்ய முடியும். இப்படி ஒரு நூலகத்தின் நான்காவது தளத்தை சலித்து எடுத்து முழுமையும் அவரே சொல்லியபடி – மெனக்கெட்டுப் பார்த்தால் மட்டுமே – இவ்வளவு துல்லியமாக சொல்ல முடியும். இதற்குப் பல மணி நேரங்கள் தேவைப்பட்டிருக்கும். இதையெல்லாம் செய்ய அங்குள்ள நூலகரின் அனுசரணையும் வேண்டும். ஆக, ஒரு தெளிவான திட்டமிடலோடு இந்த புலனாய்வு நடத்தப்பட்டுள்ளதாகவே கருதுகிறேன்.
இதை வெளிப்படுத்திய வரை மகிழ்ச்சி. நன்றி. ஆனால், அதே சமயம் இந்த தில்லுமுல்லுகளுக்கு ஊக்கம் தரும் விதமாக இதே போன்ற தில்லுமுல்லுகள் கடந்த 20 ஆண்டுகளாக பதிப்பகத் துறையில் நடப்பதையும், இது போன்ற போலி புத்தகங்களை போலி எழுத்தாளர்கள் பெயரில் பிரபல பதிப்பகங்களே நூலகங்களுக்கு விநியோகம் செய்துள்ளதையும் இது நாள் வரை கண்டும் காணாமல் இருந்தவர் தான் பெருமாள் முருகன்! இப்போதாவது இதை பேச முன்வந்தாரே என்ற வகையில் சந்தோஷம் தான்.
தமிழ்நாட்டில் பல பெரிய பதிப்பகங்கள், பல பழம்பெரும் பதிப்பாளர்கள் கூட சிறிதும் குற்றவுணர்ச்சியின்றி, அந்தக் காலத்தில் பல பெரும் தமிழ் அறிஞர்கள் எழுதிய அற்புத நூல்களை அப்படியே காப்பி பேஸ்ட் செய்து, சிற்சில சின்ன மாற்றங்களைச் செய்து பதிப்பாளர் பெயரிலோ, அல்லது பதிப்பாளரின் அம்மா, மகள், மகன், பேரன், பேத்திகள் பெயரிலோ பதிப்பித்து வருவதை இங்கு இத்தனை நாட்களாக சான்றோர்கள் பலரும் கண்டிக்காமல் வேடிக்கை பார்த்ததன் விளைவே, தற்போதைய பேரவலமாகும்.
குறிப்பாக, அரசு நூலகங்களில் திருட்டு நூல்கள் பல பல்லாண்டுகளாக வாங்கப்பட்டு வருவதை நானும் அறம் இணைய இதழில் எழுதி கவனப்படுத்தி உள்ளேன்.
வனிதா பதிப்பகத்தின் உரிமையாளரும், பாபாஸியின் முன்னாள் முக்கிய நிர்வாகிமான பெ.மயிலவேலன் என்பவர், அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா எழுதிய, ‘கணினி கலைச் சொல் களஞ்சிய அகராதி’ என்ற நூலை தன் பெயரில் அச்சிட்டு, ‘கணினி கலைச்சொல் அகராதி’ என்ற பெயரில் தமிழக நூலக ஆர்டரையும் பெற்று அதிமுக ஆட்சியில் நூலகங்களுக்கு விநியோகித்துள்ளார். அதே போல கெளரா பதிப்பகம் நடத்தும் திமுக ஆதரவாளரான ராஜசேகரன் என்பவரும் இது போன்ற நூல் திருட்டுகளுக்கு மிகவும் பெயர் போனவர்.
ஆனால், தற்போது நடந்துள்ள இந்த பெரியார் நூலக முறைகேடுகளை தமிழர்கள் செய்திருக்க வாய்ப்பு குறைவு. அரைகுறை அறிவுள்ள தமிழ் டெக்னிஷியன்களை வைத்து ஒரு வட இந்திய ஐ.ஏ.எஸ் அதிகாரி அரசியல் ஆளும் கட்சி செல்வாக்கோடு செய்திருக்க வாய்ப்புள்ளது.
ஆக, இந்த விவகாரத்தில் திமுக, தவெக ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொண்டாலும், முழு உண்மைகளை வெளிப்படுத்தும் தைரியம் தவெக அரசுக்கு கிடையாது.
சாவித்திரி கண்ணன்
https://aramonline.in/33310/periyar-libraries-scame/
====================================
2
விஞ்ஞான நூலக ஊழல் நடந்தது எப்படி?
நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்குவதில் நடக்கும் ஊழல் இப்போது தொடங்கியது அல்ல. பல ஆண்டுகளாகவே இந்த ஊழல் நடைபெற்று வருகிறது. திமுக ஆட்சியில்தான் இந்த ஊழல் பெருமளவு அரங்கேறியிருக்கிறது. அதற்குக் காரணம் திமுகவில் உள்ள அறிவுஜீவிகளின் சிண்டிகேட். இவர்களை “திராவிட மாஃபியா” என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.
“திராவிட சித்தாந்தங்களை” மேடைதோறும் பேசும் நபர்களே இந்த முடைநாற்றமெடுக்கும் அருவருக்கத்தக்க ஊழல்களில் ஈடுபடுகிறார்கள். திராவிட இயக்க ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் என்று திமுக தலைமைக்கு நெருக்கமாக இருக்கும் ஒரு கூட்டம், “பிராமண எதிர்ப்பு, ஆரிய ஆதிக்கம், இந்தித் திணிப்பு, வடவர் ஆதிக்கம், மாநில உரிமை” என்ற பொருட்களில் பேசியும் எழுதியும் வருவது, திமுக அடிக்கும் பேரங்களிலும் கொள்ளைகளிலிருந்தும் மக்களைத் திசைதிருப்ப உதவும் என்பதால், திமுக தலைமை இந்தத் திராவிட மாஃபியாவின் செயல்களைக் கண்டும் காணாமலும் இருந்துகொள்ளும்.
இதற்குப் பிரதிபலனாக திராவிட மாஃபியாவைச் சேர்ந்தவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு, அரசு குழுக்களில் பதவி, அவர்கள் எழுதிய புத்தகங்களுக்கு நூலக ஆர்டர், திமுக மேடைகளில் இடம் என்ற அளவுக்குச் சலுகைகள் வழங்கப்படும்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இந்தத் திராவிட மாஃபியா பெருமளவு கட்டுக்குள் இருந்தது. இந்தத் திராவிட மாஃபியாவைச் சேர்ந்த வைரமுத்துவுக்கு வீட்டு மனை ஒதுக்கீடு, நூலக ஆர்டர் போன்ற சலுகைகளை வழங்கி, அதற்குப் பதிலாக வைரமுத்துவைத் தினந்தோறும் அவரது புகழையும், திமுக புகழையும் பாட வைப்பார் கருணாநிதி.
2021–2026 திமுக ஆட்சிக் காலத்தில் இந்தத் திராவிட மாஃபியாவுக்குச் செல்வாக்கு அதிகரித்தது. கருணாநிதியைப் போல முக. ஸ்டாலினுக்குப் பேரும் ஆளுமையும் இல்லையென்பதால், திமுக ஆட்சியைப் புகழ்ந்துரைக்கவும், அதன் ஊழல்களை மறைக்கவும் திராவிட மாஃபியாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது. இந்தக் காரணத்தினால்தான் வெறும் மேடைப் பேச்சாளராக இருந்திருக்க வேண்டிய ஜெயரஞ்சன் போன்றோரை, முக. ஸ்டாலின் திட்டக்குழுத் தலைவராக நியமித்தார். அவரை மிகப்பெரிய சிந்தனைச் சிற்பியாக திமுக கொண்டாடியது.
இன்றைக்குச் சந்தி சிரிக்கும் புத்தகக் கொள்முதல் ஊழலின் சூத்திரதாரியே #ஜெயரஞ்சன்தான்.
திமுக ஆட்சிக் காலத்தில்தான் அதிக நூலகங்கள் கட்டப்பட்டன என்பதால், நூல்கள் கொள்முதலில் பெரிய அளவில் பணம் பார்க்கலாம் என்று ஜெயரஞ்சன் திட்டமிட்டார்.
திமுக ஆட்சியில் தமிழக நூலகங்களில் புத்தகங்கள் கொள்முதல் செய்வது அனைத்தையும் இந்தத் திராவிட மாஃபியாதான் முடிவு செய்யும். ஜெயரஞ்சன் தலைமையிலான இந்தத் திராவிட மாஃபியாவை ஸ்டாலின் ஆட்சி பெருமளவு நம்பியிருந்ததன் காரணமாக, இவர்களின் செயல்பாடுகள் எவ்விதக் கண்காணிப்பும் இல்லாமல் போனது.
நூலகங்களில் ஆண்டுக்கு மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் என்று நான்கு முறை நூல்கள் கொள்முதல் செய்யப்படும். இவ்வாறு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்யப்படும். வாசகர்கள் விரும்பவில்லை என்றாலோ, புத்தகங்கள் சேதமாகிவிட்டன என்றோ காரணங்களைக் கூறி இப்புத்தகங்களை dispose செய்ய விதிகளில் இடமிருக்கிறது.
இந்த விதியைப் பயன்படுத்தி ஊழல் செய்யத்தான் திராவிட மாஃபியா திட்டமிட்டது. அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பெயர்களில் பதிப்பகங்களைத் தொடங்குவது. லட்சக்கணக்கில் அவர்களிடமிருந்து புத்தகங்களை வாங்குவது. அந்தப் புத்தகங்களை அட்டைப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்காமல் அப்படியே இரண்டு ஆண்டுகளுக்கு வைத்திருப்பது. இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் அப்புத்தகங்களை dispose செய்வது. இதுதான் இந்தத் திராவிட மாஃபியாவின் திட்டம்.
பெரியார் நூலகம் திறக்கப்பட இருக்கிறது, அதற்குப் புத்தகங்கள் வாங்க 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்றதும் ஜெயரஞ்சனுக்குப் பெரிய அளவில் கொள்ளையடிக்கலாம் என்ற ஐடியா உதித்தது. மீண்டும் திமுக ஆட்சிதானே வரப்போகிறது. புத்தகங்கள் அட்டைப் பெட்டியிலிருந்து ஏன் வெளியே வரப்போகிறது? யாருக்கு இது தெரியப்போகிறது என்று திட்டத்தைத் தீட்டினார்.
வேலையில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களை அழைப்பது. அவர்கள் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 300 பக்கங்களில் ஒரு புத்தகத்தை உருவாக்கி PDF வடிவில் தரவேண்டும். இப்படி வழங்குவதற்கு ஒரு புத்தகத்துக்கு 2,000 ரூபாய். என்ன நூல், என்ன தலைப்பு, ஆசிரியர் பெயர் என்ன என்பதையெல்லாம் புத்தகத்தை உருவாக்கும் இளைஞர்களே முடிவு செய்துகொள்ளலாம். இந்தக் காரணத்தினால்தான் நூலாசிரியர்களின் பெயர்கள் “திரிஷா விஜய், விஜய் செல்வம், சுமேகா விஜய், பவித்ரா கருணாநிதி, கமலாம்பாள் கருணாநிதி” என்று இருக்கின்றன.
திமுக ஆட்சி வந்திருந்தால் இந்த ஊழல் வெளியே வந்திருக்கவே வந்திருக்காது. ஏனெனில், திரிஷா விஜய், கமலாம்பாள் கருணாநிதி உள்ளிட்டோர் எழுதிய நூல்கள் அட்டைப் பெட்டியை விட்டு வெளியே வந்திருக்காது.
தவெக ஆட்சி வந்ததும், முதல்வர் விஜய் அந்நூலகத்தைத் திறந்து வைத்ததும், அதிகாரிகள் முதல்வர் வருகையின்போது எல்லாப் புத்தகங்களையும் அடுக்கி வைக்க வேண்டுமே என்று “திரிஷா விஜய்” எழுதிய புத்தகங்களையெல்லாம் அடுக்கி வைத்துவிட்டார்கள். அப்புத்தகங்களை அலமாரியிலிருந்து மீண்டும் அட்டைப் பெட்டிக்கு அனுப்ப இந்தத் திராவிட மாஃபியா கடந்த நான்கு மாத காலமாக முயன்றிருக்கிறது.
ஆட்சி மாற்றத்தால் அதைச் செய்ய முடியவில்லை.
பெருமாள் முருகன் போட்டுடைத்துவிட்டார்.
அகல்விளக்கு, பீனிக்ஸ் போன்ற பதிப்பகங்கள் திராவிட மாஃபியா தலைவர் ஜெயரஞ்சனின் #பினாமி நிறுவனங்களே.
இந்த ஊழலில், திமுக தலைமையோ, அமைச்சரோ சம்பந்தப்படவில்லை என்பதை உறுதி செய்த பிறகுதான் திமுகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்குப் புகார் அனுப்பியுள்ளது.
முறையான விசாரணை நடந்தால், ஜெயரஞ்சன் போன்ற போலி அறிவுஜீவிகளின் உண்மை முகம் வெளிப்படும்.
தாமதமின்றி அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டு, சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும்.
*“படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோன்னு போவான்” –
மகாகவி பாரதி
Thanks - Shankar ( Savukkushankar )
ஜோதிஜி திருப்பூர்
====================================
3
சிக்குவது அகல்விளக்கு மட்டுமல்ல
பெரியார் நூலக கொள்முதல் ஊழல் பிரச்சனை திமுக ஆட்சியில் தான் நடந்தது என்பதற்கான தேதிதிவாரியான ஆவணங்களுடன் பஞ்சாயத்து முடித்து வைக்கப்பட்டது.
இனிமேலும் புத்தகத்தில் சீல் ஜூன் மாதம் உள்ளது என்று திமுக இடதுசாரி உபிகள் யாரும் கம்பு சுத்த வேண்டாம்.
உண்மையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம், மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் உள்ளிட்ட ஏற்கனவே திமுக ஆட்சியில் செய்யப்பட்ட அனைத்து நூலக கொள்முதல்களிலும் இது போன்ற ஊழல்கள் நடைபெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாகத் தெரிகின்றன. அதனால் திமுக இடதுசாரி உபிக்களின் வலுவான முட்டுக்கள் அப்போது தேவைப்படும். இப்பொழுதே முட்டினால் மண்டை வீங்கிவிடும். ஏற்கனவே திராவிட அரசியல் அறிவால் மண்டை வீங்கித்தான் போயிருக்கிறது. இப்போது மண்டைக்கு உள்ளே வீங்கி இருப்பது வெளியிலும் வீங்கி விட்டால் மீண்டும் திமுகவிற்கு முட்டுக் கொடுப்பதற்கு நீங்கள் இன்னும் சிரமப்பட வேண்டி இருக்கும்.
அதனால் சற்று ஓய்வெடுங்கள்.
மொத்த நூல்களும் திமுக ஆட்சியில் ஆர்டர் செய்யப்பட்டு உள்ளது
அகல் விளக்கு பதிப்பகத்திற்கு Order கொடுத்தது - 14.02.26
அகல் விளக்கு புத்தகங்களை பெரியார் நூலகத்திற்கு வழங்கிய தேதி 26.02.26- அப்பொழுது திமுக ஆடசி.
47 Box களில் 1700 புத்தகங்களை அகல்விளக்கு பதிப்பகம் 25.2.26 அன்று வழங்கியுள்ளது.
Box பிரிக்கப்படவில்லை. அனைவரும் தேர்தல் பணிக்காக சென்று விட்டனர்
ஜூன் மாதம் Box பிரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது
Total Publisher எண்ணிக்கை 405, அதில் தமிழ் பதிப்பாளர்கள் 298, ஆங்கிலப் பதிப்பாளர்கள் 107
மொத்த தொகை 19.19 கோடி
மொத்தப் புத்தகங்கள் எண்ணிக்கை 60,268
அதில் தமிழ் 25,425, ஆங்கிலம் 34,841
#அகல்விளக்கு, #பீனிக்ஸ் ஆகிய இரண்டுக்கும் ஒரே உரிமையாளர்
விண்ணப்பிக்கும்போது குடைவாசல் முகவரியும், புத்தகம் வழங்கும் போது மடிப்பாக்கம் முகவரியும் பதிப்பாளர் குறிப்பிடுகிறார்.
குடைவாசல் முகவரியில் RVR Press இயங்கி வந்தது. அது அகல்விளக்கு உரிமையாளரின் மைத்துனருடையது. அதை அகல்விளக்கு உரிமையாளர் விலைக்கு வாங்கிவிட்டார்.
Radhaktishnsn.K.R பதிவு.
Tha SivaKumar
https://www.facebook.com/100002588787148/posts/29070112192658354/?rdid=zBODdtQpFjymnC4y
=======================================
4
அகல்விளக்கும் ஃபீனிக்ஸும்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
300 பக்க ‘நாலடியார் வாழ்வின் வழிகாட்டி’ நூலின் விலை ரூ.1,445. உள்ளே நாலடியார் ஒரு “கவிஞர், தத்துவ ஞானி” என்ற கதை. மதுரைக்காஞ்சியின் ஆசிரியர் ஒரு “அரசர்”. பாரதியார் எழுதாத கதைகள் பாரதியார் கதைகள். ஒரே நாளில் தமிழ்நாடு முழுவதும் பேசுபொருளான பெரியார் அறிவுலகத்தின் அறிவுஜீவித ஊழல் கதையின் சுருக்கம்தான் இது.
நூல்கள் செய்யறிவால் உருவாக்கப்பட்டவை, ஆசிரியர் பெயர்கள் பொய்ப்பெயர்கள், ISBN எண்கள் போலி என்று பெருமான் முருகன் பதிவு செய்திருக்கிறார். ஆனால் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் நம் ஆய்வில் வெளிவந்துள்ளன. அகல்விளக்கு, Phoenix Publications என்று இரு பதிப்பகங்கள் (சரியாகச் சொன்னால், இரு Imprint) ஒரே முகவரியில் இயங்கியுள்ளன. சுருக்கமாக, ஒரே முதலாளி – வேடமணிந்து இரு Imprintகளில் மோசடி நடத்தியுள்ளார். அவற்றைப் புள்ளி விபரங்களுடன் பார்ப்போம்.
1. முதல் திருத்தம்: ISBN எண் உண்மை, நூல்தான் பொய்:
அகல்விளக்கின் 2,393 ISBN எண்களும்; ஃபீனிக்ஸின் 2,923 எண்களும் 13 இலக்க ISBN சரிபார்ப்பு சோதனையில் 100% தேறுகின்றன (சான்று: Raja Rammohun Roy National Agency for ISBN). ஒரு எண்ணும் மீண்டும் வரவில்லை. அதைவிடச் சுவாரஸ்யம் எண்களின் அமைப்பு. அவை தனித்தனியாக வாங்கப்பட்டவை அல்ல, தொகுதி தொகுதியாக வாங்கப்பட்டவை:
ISBN தொகுதி அகல்விளக்கு நூல்கள்
978-93-7450 1,000
978-93-7700 743
978-93-89780 100
978-93-47000 100
978-81-983xxx வகை (பல தொகுதிகள்) தலா 10
ஃபீனிக்ஸிலும் அதே பாணி: 978-93-7583 தொகுதியில் 999 நூல்கள், 978-93-7771 தொகுதியில் 423, ஆறு தொகுதிகளில் தலா 100. யாரோ ISBN-ஐ மொத்தமாக வாங்கி, சில்லறையாகச் செலவழித்திருக்கிறார்கள். எனவே “போலி ISBN” என்பதைவிட “முறையான எண் பெற்ற போலி நூல்கள்” என்பதே சரி. அவை இந்திய ISBN முகமையால் யாருக்கு ஒதுக்கப்பட்டன என்பதை முகமையின் பதிவேடுதான் உறுதி செய்ய வேண்டும். எண் சரியானது என்பது, நூலின் சரித்தன்மைக்குச் சான்று அல்ல. அட்டைக்குள் இருப்பதுதான் கேள்வி.
2. அகல்விளக்கு எனும் அணையாவிளக்கு:
அகல்விளக்குப் பதிப்பகத்தின் 2,393 நூல்களும் 3 டிசம்பர் 2024 முதல் 6 பிப்ரவரி 2026 வரை ISBN கோரப்பட்டுள்ளன. ஆனால் இந்த 2,393 நூல்களின் ISBNஉம் வெறும் 71 தேதிகளில் பெறப்பட்டவை. ஆண்டு வாரியாக: 2024இல் 100; 2025இல் 1550; 2026இல் 743. இந்த 743உம் பிப்ரவரி 2026க்குள் அடங்கிவிடுகிறது.
• செப்டம்பர் 2025: 1,157 நூல்கள் (செப்டம்பர் 19 முதல் 24 வரை மட்டும் 6 நாட்களில் 800-க்கு மேல்).
• 4 பிப்ரவரி 2026: 314 நூல்கள். 5 பிப்ரவரி 2026: 344 நூல்கள்.
• அதாவது 48 மணி நேரத்தில் 658 நூல்கள். இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் கால் பங்கு.
இவை ISBN பதிவான வெளியீட்டுத் தேதிகள்தான். நூல் எழுதிய தேதிகள் அல்ல. பிறகு என்ன குழப்பம் எனச் சரிகட்டி விடலாமா? இல்லை, இதற்கான பதிலைக் கீழே காணுங்கள்.
3. மோனிகா ரவி: எழுத்தாளரா, உற்பத்திக் கூடமா?
“Monica Ravi” 136 (நூல்கள்), “Monika Ravi” 24 (நூல்கள்), “Monika ravi” 2 (நூல்கள்) என ஆங்கிலத்தில் பதிவாகியுள்ள வெவ்வேறு பெயர் மாதிரிகளை ஒன்றிணைத்தால் மோனிகா ரவி பெயரில் மட்டும் 162 நூல்கள் வெளியாகியுள்ளன.
விபரங்கள்:
காலம் நூல்கள்
செப்டம்பர் 2025 55
அக்டோபர், டிசம்பர் 2025 6
பிப்ரவரி 2026 (2 முதல் 5 வரை) 101
மொத்தம் 162
2026இன் 101 நூல்களும் நான்கே தேதிகளில் வந்தவை. 4 பிப்ரவரி அன்று 46; 5 பிப்ரவரி அன்று 48. ஒரு நாளில் 48 நூல் என்றால், இடைவிடாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு அரை மணிக்கும் ஒரு நூல் எழுதியிருக்கிறார். இடையில் உறக்கம், தேநீர், அட்டை வடிவமைப்பு எதுவும் கிடையாது. அந்தப் புத்தகங்களின் தலைப்புகளைப் பார்த்தால் இந்த ஒருவர் உணவுப் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாற்றங்கள், தொற்றுநோய் அரசியல், AR சந்தை, “வாழ்க்கையின் அர்த்தம்” எல்லாவற்றிலும் ஆழ்ந்த நிபுணர் போல தெரிகிறது. கண்ணிமைக்கும் நேரம் கூட இல்லை. ஒவ்வொரு துறையாக வலம் வந்திருக்கிறார்.
மோனிகா மட்டும் இச்சாதனையைத் தனியே செய்யவில்லை . அதே 5 பிப்ரவரி அன்று தாமரை முரளியும் 48, லட்சுமி மோகனும் 48 என அன்றைய நாள் வெளியான அகல்விளக்கின் 344 நூல்களையும் எழுதியவர்கள் வெறும் 11 எழுத்தாளர்கள்தான்.
4. திருட்டு ஓநாய்கள்:
அகல்விளக்கில் மொத்தம் 418 எழுத்தாளர்கள் (ஆங்கிலத்தில் உள்ள சிற்சில எழுத்து மாற்றங்களைக் கருதினால், 541 பெயர்கள்). அவர்களில்:
--6 பேர் தலா 100 நூல்களுக்கு மேல் எழுதியவர்கள்; அவர்கள் மட்டும் 745 நூல்கள் பங்களித்திருக்கிறார்கள்.
--9 பேர் தலா 50 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார்கள்; மொத்தம் 953 நூல்கள்.
முதல் ஐந்து இடங்கள்: மோனிகா ரவி 162, லட்சுமி மோகன் 124, தாமரை பன்னீர் 123, தாமரை முரளி 115, ஜோதி ஹரிஹரன் 114. தமிழ் இலக்கிய வரலாற்றில் எந்தப் பதிப்பகத்திலும் ஒரு எழுத்தாளர் இவ்வளவு எழுதியதாகத் தெரியவில்லை.
பெயர்களிலும் ஒரு வடிவம் தெரிகிறது. 418 எழுத்தாளர்களின் பெயர்கள் 442 சொற்களால் ஆனவை. “மனிஷா” என்று தொடங்கும் 13 எழுத்தாளர்கள் மொத்தம் 163 நூல்கள் எழுதியிருக்கிறார்கள். “தாமரை” என்று தொடங்கும் 5 பெயர்கள் 260 நூல்களுக்குச் சொந்தக்காரர்கள். இதெல்லாம் ஒரே குடும்பம் என்று சொல்லலாம். அல்லது ஒரே பெயர்ப் பட்டியலை மாற்றி மாற்றிப் போடும் ஒரு கருவி என்றும் சொல்லலாம். எது சரி என்பதை விசாரணைதான் சொல்ல வேண்டும்.
5. ஃபீனிக்ஸ்: ஆங்கிலத்திலும் அதே ஆட்டம்!
ஃபீனிக்ஸ் பதிப்பகத்தின் 2,923 நூல்களில் 2,690 ஆங்கிலம், 174 தமிழ், 51 மராத்தி, 4 தெலுங்கு, 2 மலையாளம். வெளியீட்டுத் தேதிகள் 219. ஒரே நாளில் 499 நூல்கள் (19 டிசம்பர் 2025, 50 எழுத்தாளர்கள்) மற்றும் 422 நூல்கள் (30 ஜனவரி 2026, 50 எழுத்தாளர்கள்) வெளிவந்த நாட்களும் உண்டு. அதாவது ஒரு நாளில் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ஏறத்தாழ 10 நூல்கள்.
இங்கே ஒரு விஷேசக் குறிப்பு. ஆங்கிலத்தில் அதிகம் பதிவான ஒற்றைப் பெயரும் மோனிகாதான். “Monika R”: 37 நூல்கள். “Moni Ravi R” என்ற பெயரில் மேலும் 29. மோனிகா, மோனி, ரவிச்சந்திரன் வடிவங்கள் அனைத்தையும் சேர்த்தால் 76 நூல்கள் (அவற்றில் 70 நூல்கள் 2025இல்). இரண்டையும் இணைத்துப் பார்த்தால் இரண்டு பதிப்பகத்திலும் “மோனிகா” என்ற பெயர் முன்னணியில் நிற்பது தற்செயல் என்று நம்ப ஆசைதான்.
6. இரட்டைப் பிறவிகள்: இரண்டு பதிப்பகம், ஒரே புத்தகம்!
இரண்டு பதிப்பகங்களும் ஒரே ஆட்களால் நடத்தப்படுகின்றன எனத் தெரிய வந்துள்ளது. தரவில் அவர்களைப் பிணைக்கும் இழைகள்:
• 13 தலைப்புகள் இரண்டு பதிப்பகத்திலும் வெளிவந்துள்ளன. அவற்றில் 10 போட்டித்தேர்வு MCQ நூல்கள் (எ.கா. “SSC Exam Booster”, “CSAT Crackdown”, “Geographia”). அகல்விளக்கு அவற்றை 24 ஜூன் 2025இல் (ISBN 978-81-988748-x) வெளியிட்டது. இரண்டே நாள் கழித்து, 26 ஜூன் 2025இல், ஃபீனிக்ஸ் அதே தலைப்புகளை, அதே ஆசிரியர் பெயர்களுடன், வேறு ISBN-ஓடு (978-81-988901-x) வெளியிட்டது. ஒரே புத்தகம், இரண்டு பதிப்பகம், இரண்டு எண், இரண்டு நாள் இடைவெளி.
• மீதி 3 தலைப்புகள் 2026இல் வந்தவை. இங்கே ஆசிரியர்களும் மாறியுள்ளனர். “Deepfakes: The Coming Infocalypse” நூலுக்கு அகல்விளக்கில் (4 பிப்ரவரி 2026) மனிஷா சரவணன், ஃபீனிக்ஸில் (30 ஜனவரி 2026) சாருலதா விவேக் என்று இரண்டு வெவ்வேறு ஆசிரியர்கள் உள்ளனர். (இந்தத் தலைப்பின் உண்மையான ஆசிரியர் நீனா ஷிக். விபரம் கீழே)
• இரு கோப்புகளிலும் 74 ஆசிரியர் பெயர்கள் பொதுவாக உள்ளன. அவற்றின் கீழ் அகல்விளக்கில் 557 நூல்கள், ஃபீனிக்ஸில் 96 நூல்கள்.
7. புலிட்சர் முதல் நோபல் வரை: பெயர்களின் கொள்ளை!
ஃபீனிக்ஸின் 2,923 நூல்களில் 770 (26.3%) தலைப்புகள் ஏற்கெனவே உள்ள புகழ்பெற்ற படைப்புகளோடு பொருந்துகின்றன. அவை மூன்று வகை:
Profound Creations வகையில் 313 நூல்கள் உள்ளன. இவை நாட்டுடைமை எழுத்தாளர்களின் “முழுப் படைப்புகள்” பாணியில் தொகுக்கப்பட்டவை; தலைப்பிலேயே மூல ஆசிரியரின் பெயர் இடம்பெறும். Phoenix Companion வகையில் 344 நூல்கள் உள்ளன. இவை ஏற்கெனவே வெளியான நாவல்களின் தலைப்புகளைக் கொண்டவை; அவற்றில் ஃபெர்கஸ் ஹியூமின் 35 நூல்கள், ஜே. எஸ். பிளெட்சரின் 23 நூல்கள், நெவில் ஷூட்டின் 19 நூல்கள் அடங்கும். புகழ்பெற்ற நூல்கள் வகையில் 113 நூல்கள் உள்ளன; அவை வெளியான நூல்களின் தலைப்புகளுடன் வேறு துணைத்தலைப்பையும் கொண்டவை.
இவற்றில் சில ஆசிரியர் பெயர்கள் பாருங்கள்:
• Brown Girl Dreaming (ஜாக்குலின் உட்சன், அமெரிக்க தேசிய நூல் விருது 2014): ஃபீனிக்ஸில் ஆசிரியர் தேன்மொழி அரவிந்தன்.
• Caste (இசபெல் வில்கர்சன்): ரஞ்சனி அசோக்.
• Dopamine Nation (அன்னா லெம்கே): நந்தினி பிரதீப் மற்றும் ரேவதி கார்த்திக் ஆகிய இருவர்.
• Orientalism (எட்வர்ட் செய்த்): ஹரிணி அருண். Americanah (சிமாமாண்டா அடிச்சி): கல்பனா ஜகதீஷ்.
• One of Ours (வில்லா கேதர், 1923 புலிட்சர் பரிசு): “Phoenix Companion to One of Ours”, ஆசிரியர் ராதா கிருஷ்ணன்.
• ஹெமிங்வே, ஷா, யேட்ஸ், கிப்ளிங், தாகூர், ஃபாக்னர், ஸ்டீன்பெக், சர்ச்சில் ஆகிய நோபல் வென்ற எழுத்தாளர்களின் 19 தலைப்புகள் இதில் அடங்கும்.
ஏன் இப்படி செய்ய வேணடும்? பேரா. டி. தர்மராஜ் முகநூலில் எழுதியதை இங்கு நினைத்துப் பார்க்கலாம். புகழ்பெற்ற நூல்களின் பெயரைக் கொண்ட பட்டியலை தேர்வு குழுவிற்கு வழங்குகிறார்கள். நூல்களின் பெயரைப் பார்த்து, அறிஞர் குழுவும் டிக் செய்து விடுகின்றனர். ஆனால் இவை போன்ற Proxy பதிப்பகங்களின் மோசடி வேலையின் நுணக்கமே அதுதான். புகழ்பெற்ற நூலின் பெயரை, இவர்களுக்குள்ளாக ஏதேனும் பெயரைப் போட்டி பதிப்பித்து, உள்ளே எதோ கருமத்தை ஏற்றிவிடுகிறார்கள்.
8. திரிஷா விஜய் தெரியும்; சங்கீதா விஜய் தெரியுமா?
சங்கீதா விஜய் பெயரில் மட்டும் 27 நூல்கள். அவற்றுள் “Profound Creations of Virgil”, “Profound Creations of Sarah Orne Jewett”, “Phoenix Companion to After Many a Summer” (ஆல்டஸ் ஹக்ஸ்லி), “…The Irrational Knot” (பெர்னார்ட் ஷா), “…Domitia” (சேபின் பேரிங்-கோல்ட்) ஆகியவை உள்ளன. ஒருவர் வர்ஜில் முதல் ஹக்ஸ்லி வரை, ரோமானியக் காவியத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டு நாவல் வரை எழுதுவதை நாம் நிச்சயம் பாராட்டியே ஆகவேண்டும்.
9. நிறைவாக:
அளவுகோல் அகல்விளக்கு ஃபீனிக்ஸ்
நூல்கள் 2,393 2,923
காலம் டிச 2024 – பிப் 2026 ஆக. 2022 – ஜன 2027
வெளியீட்டுத் தேதிகள் 71 219
அதிக நூல் எழுதியவர் மோனிகா ரவி 162 Monika R 37
ஒரே நாளில் உச்சம் 344 (5 பிப் 2026) 499 (19 டிச 2025)
ஃபீனிக்ஸ் தரவில் 41 மராத்தி நூல்கள் 1 ஜனவரி 2027 தேதியோடு உள்ளன. அடுத்த ஆண்டின் புத்தகங்களுக்கு இந்த ஆண்டே ISBN. திட்டமிடலில் குறை சொல்ல முடியாது.
10. கேள்விகளும் கோரிக்கைகளும்:
1. ஒரே எழுத்தாளர் பெயரில் இரண்டு ஆண்டுகளில் 162 நூல்கள், நான்கு நாட்களில் 101 நூல்கள் என்ற பதிவுகளை நூல் கொள்முதல் குழு ஏன் கேள்வி கேட்கவில்லை?
2. ISBN தொகுதிகளை வாங்கியவர் யார்? இந்திய ISBN முகமையின் பதிவேட்டில் இந்த இரண்டு பதிப்பகங்களின் பதிவு விவரம் என்ன?
3. ஒரே தலைப்பு, ஒரே ஆசிரியர், இரண்டு பதிப்பகம் என்ற இரட்டைப் பதிவுகளுக்கு நூலகம் இரண்டு முறை பணம் கொடுத்ததா?
4. ரூ.1,445 என்ற விலை நிர்ணயம் யாருடையது? கொள்முதல் ஆணைகளும் பட்டியல்களும் வெளிப்படையாக வெளியிடப்படுமா?
5. மூல ஆசிரியர்களின் அனுமதி அல்லது நூல்களின் பொதுவுடைமை நிலை உறுதி செய்யப்பட்டதா?
விசாரணை முடியும் வரை இந்த நூல்களை அலமாரியிலிருந்து அகற்றுவதே நூலகத்துக்கும் வாசகர்களுக்கும் மரியாதை.
IsKra
Nelson Babu Antony
https://www.facebook.com/100003565078997/posts/28699616456407141/?rdid=avL3PQgEL59eJyBA
========================================
5
பக்கங்கள்: 300. விலை: 9,990. இன்னொரு போலி பதிப்பகம்
அகல்விளக்கு, ஃபீனிக்ஸ் பதிப்பகங்களைத் தொடர்ந்து விண்டேஜ் பிரஸ் லிமிடெட் பதிப்பகத்தின் முறைகேடும் தற்போது தெரியவந்திருக்கிறது. இதுகுறித்து நேற்று “The debate” நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன்.
முதலில் இந்நிறுவன வெளியீடுகளின் சந்தேகத்திற்குரிய அம்சத்தைக் கண்டடைந்து என் கவனத்திற்கு கொண்டுவந்தது, நண்பர் Prem Kumarதான். உடனே புகைப்படங்கள் எடுத்து அனுப்பித் தந்தார்.
நான் அதன் உள்ளடக்க, உருவாக்க நேர்த்திகளை ஆராயத் தொடங்கினேன். ஒவ்வொரு புத்தகங்களின் விலையும் ₹9990 என இருந்தது. (30-35%) தள்ளுபடி விலையில் கொள்முதல் நடைபெற்றிருக்கலாம். பக்கங்களின் சராசரி எண்ணிக்கை 300.
முதலில், இப்பதிப்பகம் லண்டனில் செயல்படுவதாக நூலில் குறிப்பிடப்படுகிறது. இணையத்தில் தேடினால், வலைதளம் ஒன்றும் அதே லோகோ மார்க்கில் செயல்படுவதை அறிந்தேன். அதிலும் நூலில் இடம்பெற்ற அதே முகவரி. அதே நூல்கள். ஆனால் வலைதளத்தில் பல கோளாறுகள் இருந்தன.
1. FAQ பக்கத்தில், இன்னும் Placeholder Textகளே இருந்தன. T-shirt வாங்குவதற்கான Provisionனும் இருந்தது. Template இல் இருந்து, சரிவர கட்டமைக்கவில்லை எனத் தெரிந்துகொண்டேன்.
2. நூல்களை எங்கிருந்து ஆர்டர் செய்தாலும், Cash On Delivery வசதி மட்டுமே இருந்தது. லண்டனிலிருந்து இந்தியாவிற்கு ஆர்டர் செய்தாலும், பதிப்பகத்தின் அடுத்த தெருவில் ஆர்டர் செய்தாலும் ஒரே டெலிவரி கட்டணம்!
3. வங்கி விபரங்களோ, பதிப்பாளர் விபரங்களோ, ஆசிரியர் குழு, எழுத்தாளர் அறிமுகங்களோ இல்லை.
4. முக்கியமாக பதிப்பகத்தின் முகவரி “போலி” - 71-75 என்றொரு நிறுவனத்தின் முகவரியை தவறாகப் பயன்படுத்தி உள்ளீடு செய்திருக்கிறார்கள்.
5. 71-75 என்ற நிறுவனமானது UK அரசாங்க வலைதளத்தில் “பதிப்பகம்” குறிப்பிடும் முகவரியுடன் சரியாகப் பொருந்துகிறது!
அடுத்ததாக நூல்கள் குறித்து ஆராய்ந்தால் இந்திய ISBN தளத்திலோ, UK ISBN முகமைகளின் தளத்திலோ, Worldcat போன்ற தளத்திலோ - No data found! போலி ISBN எண்கள்.
நூலின் உள்ளடக்கத்தை, பணம் செலுத்தி Drillbit தளத்தில் இறுதியாக ஆராய்ந்தேன். Emily Lawson என்பவர் எழுதியதாகச் சொல்லப்படும் ‘Tourism: Principles, Practices and Philosophies’ நூலின் முதல் 15 பக்கங்களை ஆராய்ந்ததில் 64% கருத்துத் திருட்டும்; 70.72% AI எழுத்தும் இருப்பது தெரியவந்தது.
நூலின் பின்னட்டைக் குறிப்பில் இருக்கும் எழுத்தாளரின் புகைப்படமும் போலி (வேறொரு நபர்) - Identified via Google reverse search.
ஒரேவார்த்தையில் சொல்வதானால், திட்டமிட்டக்கையாடல்!
இத்தகு vintage press ltd நிறுவனத்தின் 100-க்கு நிகரான நூல்களை பெரியார் அறிவுலகத்தில் காணமுடிகிறது.
பதிவு அவ்வளவுதான். இனி வழக்கம்போல் தமிழ்ச் சமூகம் ‘உச்சுக்கொட்டிக்கொண்டு’ கடந்து செல்லலாம்.
IsKra
தோழமையுடன் மறைமலை ஈரோடு
https://www.facebook.com/100037492510331/posts/1794874075105659/?rdid=hscooPNgzFqeXtI6
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு