தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் வேரூன்றிய ஜென்-Z இயக்கம்

நிலோத்பால் பாசு - மார்க்சிஸ்ட் இதழ்

தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் வேரூன்றிய ஜென்-Z இயக்கம்

வரலாற்றில் சில தருணங்களில் காலம் விரைந்து ஓடுகிறது. கடந்த சில காலமாக, தங்களது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் சீரழித்து வரும் பெருகிவரும் நெருக்கடிகளுக்கு மத்தியில், ஜென்-Z தலைமுறையினரிடையே வெளிப்படையான ஆவேசம் இல்லையென்பதில் பல இந்தியர்களும் குழப்பமடைந்திருந்தனர். நிர்வாகமும் நாடாளுமன்றமும், இறுதியில் நீதித்துறையும் கூட, ஒரே திசையில் இணைந்து பயணிப்பது வெளிப்படையாகத் தெரிந்தபோதிலும், இந்த செயலற்ற தன்மைக்கான காரணம் தெளிவாகப் புரியவில்லை. இது நிச்சயமாக, பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்காலத்தின் மீள்நிகழ்வைப் போன்றதாக இருந்தது. விடுதலைப் போராட்டம், தியாகங்கள், ஜனநாயக–மதச்சார்பற்ற அரசமைப்புச் சட்டம் ஆகிய அனைத்தும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பது போல் தோன்றின.

ஆனால், ஜூலை 20 அன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (CJP) அழைப்பு விடுத்த போராட்டமும் நாடாளுமன்ற பேரணியும், அமைப்புசார் மாணவர் இயக்கங்களையும் தன்னெழுச்சியான மாணவர் எதிர்ப்புகளையும் ஒரே பெரு ஓட்டமாக ஒன்றிணைத்தன. இது நாட்டின் கவனத்தையும், உலகளாவிய கவனத்தையும் ஈர்த்தது.

இணைய  வெளியில் CJP கண்ட புயல் வேக வளர்ச்சி பலரையும் ஆச்சரியப்படுத்தியது. தேசியக் கல்விக் கொள்கை (NEP) 2020 கொள்கையின் அடிப்படையில் உருவான மையப்படுத்தப்பட்ட தேர்வுகளும், உயர்கல்விச் சேர்க்கைக் கொள்கைளும், தேசியத் தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளை முறைகேடுகளுக்கு உள்ளாக்கும் நிலைமைகளை ஏற்படுத்தியிருந்தது. நமது கல்விக் கட்டமைப்பை முழுமையாக கார்ப்பரேட்–ஆர்எஸ்எஸ் கைப்பற்றுவதற்கான போர்வைதான் NEP என்பது இப்போது பட்டவர்த்தனமாகியுள்ளது. பேரழிவை ஏற்படுத்திய இந்த மையப்படுத்தப்பட்ட நுழைவுத் தேர்வே இந்நிலைமையைத் தீர்மானித்த இறுதி காரணியாக இருந்திருக்கலாம். தேர்வு முறைகேடுகளால் ஏற்பட்ட மன உளைச்சலும், மாணவர்கள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டதும், நாட்டின் மனச்சாட்சியை உலுக்கியது. இந்தக் குளறுபடிகளின் ஆதாரங்கள் அளவுக்கு மீறி வெளிப்படையானதால் கல்வி அமைச்சகமும் அரசாங்கமும் இறுதியில் மறுதேர்வு நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன. NEET-UG தேர்வு முறைகேடுகளே உடனடி தூண்டுதலாக இருந்தாலும், தேசியத்தேர்வு முகமையின் அவமானகரமான செயல்பாடுகள் நன்கு ஆவணப்படுத்தப்பட்டவையே. அவர்கள் நடத்திய தேர்வுகளில், முறைகேடு, ஊழல் குற்றச்சாட்டுகள் எழாத ஒரு தேர்வு கூட இருந்திருக்க வாய்ப்பில்லை.

 தில்லியின் ஜந்தர் மந்தரில்  எழுந்த மாணவர் இயக்கத்தில் காணப்பட்ட மாபெரும் பங்கேற்பு, தனியாக நடந்ததல்ல. இணைய வெளியில் CJP கண்ட வைரலான வளர்ச்சி எவ்வளவு திடீரெனத் தோன்றியிருந்தாலும், ஜென்-z தலைமுறையினரிடையே நிலவிய பரவலான மனநிலையை கணக்கெடுக்காமல் அதை விளக்க முடியாது. ஜந்தர் மந்தர் போராட்டக் களம் ஒரு தூண்டுகோலாகச் செயல்பட்டது; அதன் கூட்டு ஆவேசம் நாடெங்கும் பரவியது.

நாட்டின் வேலைவாய்ப்புச் சூழலில் நிலவும் முழுமையான இருளுக்கு மத்தியில் அதிகரிக்கும் அவநம்பிக்கையும், விரக்தியையும் கணக்கிலெடுக்காமல், இந்த வெடிப்பை புரிந்துகொள்ள முடியாது; அதன் முழுப் பரிமாணத்தை உணர முடியாது. கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. இந்தச் சூழலில்தான் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான NEET தேர்வுக்கு  கூடுதல் முக்கியத்துவம் பெற்றது. பொறியியல், தொழில்நுட்பத் துறைகளில் கல்வி வாய்ப்புகள் வீழ்ச்சியடைந்த காரணத்தால், கடந்த காலத்தைப் போலல்லாமல், மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை வாழ்க்கைக்கான பொருளுள்ள வாய்ப்பாகப் பரவலாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த நிலைமையில் இருந்து பார்க்கும்போது, NEET-UG ஊழல் வெளிப்பட்டது தவிர்க்க முடியாத ஒரு தூண்டுதலாக அமைந்தது. நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். தேர்வில் குளறுபடிகள் , அப்பட்டமான ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளையும், தேர்வெழுதிய 20-க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்ட உண்மையையும் கருத்தில் கொண்டால், தடைசெய்யப்பட்ட பட்டியலில் இடம்பெற்ற ஒப்பந்ததாரர்களை தேசிய தேர்வு முகமையினர் நியமித்தாதால் ஏற்பட்ட ஊழலே தேர்வின் நேர்மையை பெருமளவில் சீர்குலைத்ததற்குப் பொறுப்பாக இருந்தது என்பது தெளிவாகிறது.

வேலையின்மை நிலைமையும், தேர்வுகளில் நடந்த ஊழலும் ஒன்றுக் கொண்டு மோசமாக்கிய நிலைமை ஜென்-z வெடிப்புக்கு எரிபொருளாக அமைந்தன. வேலையில்லாதவர்கள் கரப்பான் பூச்சிகளைப் போன்று பயனற்றவர்கள் என்று நாட்டின் தலைமை நீதிபதியே பொறுப்பற்ற முறையில், வெளிப்படுத்திய கருத்து இந்த  வெடிப்புக்கான தீப்பொறியை ஏற்படுத்தியது. அதனால்தான், கரப்பான் பூச்சிகள் ஒன்று கூடி ஓர் அமைப்பை உருவாக்கினால் நாட்டின் நிலைமை என்னவாகும் என்ற அரை நகைச்சுவையான ஒரு முன்னெடுப்பு காட்டுத்தீ போல் பரவி, CJP மேற்கொண்ட பதிவுகளும் போராட்டமும் புயல்வேகத்தில் விரிவடைய வழி ஏற்பட்ட்டது.

தேசிய கல்விக் கொள்கை 2020  கோவிட் பெருந்தொற்றின் மத்தியில் நடைமுறைப்படுத்தப்பட்டது. எனவே அதன் மீது முழுமையான பொது விவாதத்திற்கான — விவாதமே நடப்பதற்கான — வாய்ப்பு மறுக்கப்பட்டது. கல்விச் செயல்முறையின் வணிகமயமாக்கல், வகுப்புவாதமயமாக்கல்,  மையப்படுத்தல் ஆகிய மூன்று முனைகளில் தாக்குதலை நடத்துவதாக இக்கொள்கை அமைந்திருப்பதை ஆரம்பம் முதலே வெளிப்படையாகக் காண முடிந்தது. எனினும், இதனை நடைமுறைப்படுத்தும் இயந்திரம் பெருமளவில் நிர்வாக /  அதிகாரத்துவத் தோற்றத்தில் செயல்பட்டதால், ஆரம்பக் கட்டங்களில் அதன் ஆபத்தான விளைவுகள் போதுமான அளவில் வெளிப்படுத்தப்படவில்லை. இருந்தபோதிலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினரிடையே இருந்த ஒருங்கிணைந்த சக்திகள், புதிய கொள்கை முன்வைத்த சவால்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியும் எதிர்த்தும் வந்தன. எதிர்க்கட்சிகளில் சில பிரிவுகள், குறிப்பாக இடதுசாரிகள் தலைமையிலான ஜனநாயக / மதச்சார்பற்ற சக்திகள், தேசிய கல்விக் கொள்கையின் உண்மையான நோக்கங்களை அம்பலப்படுத்தும் பணியிலிருந்து பின்வாங்கவில்லை.

உயர்கல்வித் துறையைவிட முதலில் பள்ளிக் கல்வித் துறையில்தான் இந்தக் கொள்கையின் பரவலான தாக்கம் தெளிவாகத் தென்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் 94,000 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஏராளமான பள்ளிகளில் குறைந்தபட்ச உள்கட்டமைப்பும் ஆசிரியர்களும் இல்லை. இவ்வாறு அரசுப் பள்ளிகள் மறைந்து கொண்டிருக்க, தனியார் நிர்வகிக்கும் பள்ளிகள் அதிகரித்து வருவது, தனியார் பெருநிறுவனங்கள் இத்துறையைப் பெரிய அளவில் ஆக்கிரமித்து வருவதற்கான தெளிவான சான்றாகும். இது பள்ளிக் கல்வியின் செலவுச்சுமையையும், கல்வி கிடைத்தலையும் பெருமளவு பாதிக்கிறது. பொதுத்துறையில் பள்ளிகளுக்கான போதிய நிதி ஒதுக்கப்படாதது, தனியார் துறை மட்டுமல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பும் கல்வித் துறைக்குள் ஊடுருவுவதற்கு வழிவகுக்கிறது. ஆர்எஸ்எஸ் தனது சரஸ்வதி சிசு மந்திர் வலையமைப்பை விரிவுபடுத்தி, தனது மதவாத நஞ்சை நிறுவனமயமாக்கி வருகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்முறை நிறுவனங்களை உள்ளடக்கிய உயர்கல்வித் துறையும் மிகப்பெரிய அளவில் நிதிக்குறைப்பையும் அரசின் ஆதரவு விலக்கப்படுவதையும் சந்தித்துள்ளது.

மார்க்ஸும் எங்கெல்ஸும் பின்வருமாறு குறிப்பிட்டனர்:

“ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆளும் வர்க்கத்தின் கருத்துகளே ஆளும் கருத்துகளாக இருக்கின்றன; அதாவது, சமூகத்தின் ஆளும் பொருளாதார சக்தியாக இருக்கும் வர்க்கமே அதே நேரத்தில் அதன் ஆளும் அறிவுசார் சக்தியாகவும் இருக்கிறது. பொருளாதார உற்பத்திக்கான சாதனங்கள் தன் வசம் கொண்டுள்ள வர்க்கம், அதன் விளைவாக சிந்தனை உற்பத்திக்கான சாதனங்களையும் கட்டுப்படுத்துகிறது. எனவே, சிந்தனை உற்பத்திக்கான சாதனங்கள் இல்லாதவர்களின் கருத்துகள் பொதுவாக அந்த வர்க்கத்திற்கு உட்பட்டவையாகின்றன. ஆளும் கருத்துகள் என்பது ஆதிக்கம் செலுத்தும் பொருளாதார உறவுகளின் கருத்தியல் வெளிப்பாடு மட்டுமே; கருத்துகளாகப் புரிந்துகொள்ளப்படுகிற,  ஆதிக்க பொருளாதார உறவுகளே அவை. இதனால், அந்த உறவுகள் ஒரு வர்க்கத்தை ஆளும் வர்க்கமாகவும், அதன் ஆதிக்கத்தின் கருத்துகளை ஆளும் கருத்துகளாகவும் ஆக்குகின்றன. ஆளும் வர்க்கத்தை உருவாக்கும் தனிநபர்களிடம், சிந்திக்கும் உணர்வும் இருக்கிறது; எனவே அவர்கள் சிந்திக்கிறார்கள். ஆகவே, அவர்கள் ஒரு வர்க்கமாக ஆட்சி செய்து, ஒரு வரலாற்றுக் காலகட்டத்தின் பரப்பையும் எல்லையையும் நிர்ணயிக்கும் வரையில், அவர்கள் அந்தக் காலகட்டத்தின் முழுப் பரப்பிலும் — குறிப்பாக சிந்தனையாளர்களாகவும், கருத்துகளின் உற்பத்தியாளர்களாகவும் — செயல்படுகிறார்கள் என்பது உண்மை. அவர்கள் தங்கள் காலத்தின் கருத்துகளின் உற்பத்தியையும் விநியோகத்தையும் ஒழுங்கமைக்கிறார்கள்; எனவே, அவர்களின் கருத்துகளே அந்தக் காலகட்டத்தின் ஆளும் கருத்துகளாகின்றன.”

சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் கல்வியை வடிவமைப்பதிலும், கொள்கை உருவாக்கத்தின் பாதையை வழிநடத்துவதிலும் நிலவிய வர்க்க அடித்தளங்களைப் புரிந்துகொள்வதில் இந்தக் கருத்துகள் ஆழமானவை; சம காலத்திலும் இவை  பொருத்தமுடையவையாகத் தோன்றுகின்றன. வெளிநாட்டு மூலதனத்துடன் தொடர்புடைய, சுதந்திரத்திற்குப் பிந்தைய முதலாளித்துவ–நிலப்பிரபுத்துவ அரசு, ஜனநாயக–மதச்சார்பற்ற மாற்றத்திற்கான சக்திகளுக்கும், கல்வியின் பாதையை நிர்ணயித்த உயர்வர்க்கக் காலனிய மரபுக்கும் இடையிலான முரண்பாட்டைத் திறந்துவிட்டது. சர்வதேச நிதி மூலதனம் தலைமையிலான உலகமயமாக்கலின் பின்னணியில் நவதாராளவாதக் கொள்கைகளும், இந்தியாவின் பிரத்யேகமான நவதாராளவாதப் பாதையும் தோன்றும் வரை இந்த முரண்பாட்டுச் செயல்முறை தொடர்ந்தது.

இலாபத்தையே நோக்கிய வணிகமயமாக்கலையும் தனியார்மயமாக்கலையும் தூண்டிய கட்டற்ற சந்தை சக்திகளால் கல்வித் துறையில் ஏற்பட்டுவரும் நெருக்கடி தீவிரமடைந்தது எப்படியென அதன் பிறகு நடந்தவை விளக்குகின்றன. வகுப்புவாதமயமாக்கலின் அறிகுறிகள் படிப்படியாகத் தோன்றியிருந்தாலும், கல்வியின் உள்ளடக்கம், பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறைகள் பொதுவாக மதச்சார்பற்ற தன்மையிலேயே தொடர்ந்தன.

ஆனால், கார்ப்பரேட்–இந்துத்துவக் கூட்டணியின் ஒரு பகுதியாக கார்ப்பரேட்–வகுப்புவாதக் கூட்டு முழுமையான வடிவத்தைப் பெற்றபோது, 2014 முதல் இந்த மூன்று அம்சங்களும் ஒன்றிணைக்கப்பட்டன. 2008-ஆம் ஆண்டின் உலகளாவிய நிதி நெருக்கடிக்குப் பின்னர், தீவிர வலதுசாரிகளின் மீளெழுச்சி உலகளாவிய ஒரு பின்னணியை உருவாக்கியது. கூட்டுக் களவாணித்தனத்தின் மூலம் வலுப்பெற்ற ஏகபோக சக்திகளின் எழுச்சியே இந்தியாவில் இதன் குறிப்பிட்ட வெளிப்பாடாக அமைந்தது. அதானிகள் / அம்பானிகள் தலைமையிலான பெருநிறுவனங்கள் கல்வித் துறையின் இலாப த்திற்கான வாய்ப்புகளைக் குறிவைத்தபோது, ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்துத்துவா, சிந்தனைகள் / கருத்துகளின் தளத்தில் மேலாதிக்கத்தைக் கைப்பற்றும் பேராசையோடு துடித்தது. மதச்சார்பற்ற–ஜனநாயக இந்தியக் குடியுரிமையின் இயல்பை இந்துத்துவ தேசியவாதமாக மாற்றுவதே அவர்களின் குறிப்பிட்ட இலக்காகும். அந்த இலக்கை அடைவதற்கு, மக்களை மையமாகக் கொண்ட, மக்களை மேம்படுத்தும் கல்வி முறையை அழிப்பது அவசியமாகக் கருதப்பட்டது. தொடக்கப் பள்ளிகளிலிருந்து பல்கலைக்கழக ஆராய்ச்சி ஆய்வகங்கள் வரை, இந்தப் புதிய உந்துதல் தெளிவாக தென்படுகிறது. பன்முகத்தன்மைகளையும் தன்னாட்சி நிலைமையையும் அகற்றி, மையப்படுத்தல் மட்டுமே தாரக மந்திரமாக மாறியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையின் கட்டமைப்புக்குள் முன்வைக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட கொள்கை, கல்வியை நேரடியாக கைப்பற்றுவது மட்டுமல்லாமல், இந்துத்துவ சக்திகளின் மைய அரசியல் / கருத்தியல் நோக்கத்தையும் கல்வியில் ஊடுருவச் செய்தது. CBSE முதல் NCERT வரை, பல்கலைக்கழகங்கள் முதல் UGC வரை, கல்வியின்  உள்ளடக்கத்திலும் பாடத்திட்டத்திலும் பெரிய மாற்றங்கள் திணிக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களில் தெளிவாகத் தென்படுகிற முக்கிய வெளிப்பாடு, பகுத்தறிவு சிந்தனைக்கு எதிரான அருவருப்பான தாக்குதலாகும்.

இந்தத் தலையீட்டின் முக்கிய அம்சங்கள் குறிப்பாக வரலாறு / அறிவியல் தொடர்பான உள்ளடக்கங்களில் தெளிவாக காணப்படுகின்றன. வரலாற்றுக்கு மாற்றாகப் புராணங்களையும், தத்துவத்திற்கு மாற்றாக இறையியலையும் முன்வைப்பதன் மூலம், சமூக மாற்றம் கொண்டு வந்த வளர்ச்சிகளை முற்றிலும் மறுக்கும் அடிப்படைவாத, கட்டுப்பெட்டியான நம்பிக்கைகளின் முழுமையான படையெடுப்பு நிகழ்கிறது.

ஒருவகையில், இந்த பிற்போக்குத்தனமான உருமாற்ற முயற்சிகளுக்கு எதிராக ஜென்-z இயக்கமும் கிளர்ச்சி செய்துள்ளது. ஜந்தர் மந்தரில் நடைபெற்ற பெருமளவிலான தொடர் தர்ணா போராட்டத்தின்போது, அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் இளைஞர்களும் அந்த வெகுஜன நடவடிக்கைக்கு ஆதரவாக வெளியில் வந்தனர். அனைத்து மதப் பிரிவுகளையும் சேர்ந்த எழுச்சிக்கான உணவு / நடைமுறை உதவிகளை வழங்கினர். அதன்பின்னர், காவல்துறையும் இந்துத்துவ குண்டர்களும் முஸ்லிம் / தலித் சமூகங்களைச் சேர்ந்த மக்களைத் தாக்கினர். உணவு வழங்கிக் கொண்டிருந்த ஜுனைத் மீது நடத்தப்பட்ட தாக்குதல், கடந்த காலங்களில் ஒற்றுமையைச் சீர்குலைத்த இஸ்லாமிய வெறுப்பு உணர்வுகளை வலுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டிருந்தது. ஆனால் இம்முறை, அந்தத் தாக்குதல்கள் ஒற்றுமை மூலம் முற்றிலும் முறியடித்தது.

சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவுகளைச் செய்து, இன்ஸ்டாகிராமில் தன்னைப் பின்தொடர்பவர்களிடையே பெரும் ஆதரவைக் கொண்டிருந்த, அம்பேத்கரிய/ தலித் சமூகத்தைச் சேர்ந்த 15 வயது இளம்பெண் நிஷு ஆசாத் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றொரு முக்கியமான நிகழ்வாகும். இவை அனைத்தும் தேசிய கல்விக் கொள்கையின் கருத்தியல் வரைமுறைக்கு எதிராக அதிகரிக்கும் எதிர்ப்பையும், கிளர்ச்சியெழுந்த ஜென்-z இயக்கத்தின் போக்கில் உருவான ஒற்றுமையையும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

மையப்படுத்தலின் ஒட்டுமொத்தப் போக்கும், விமர்சனக் கருத்துகளை (வெளிப்படையான எதிர்ப்பைப் பற்றி சொல்லவே வேண்டாம்) வெளியிடுவதற்கான கட்டுப்பாடுகளைத் திணித்ததும், பரவலாக நிலவி வந்த விரக்தி மனநிலை, ஒரு எல்லையைக் கடந்திட வழிவகுத்திருந்தன. உயர்கல்வி / தொழில்முறை கல்வித் துறைகளில், பெருநிறுவனக் குழுக்களின் ஒருங்கிணைந்த நுழைவும், அரசாங்கம் அவற்றை ஊக்குவித்ததும், இந்தத் துறைகள் மூலம் பெறுகிற கல்வி வாய்ப்புகளை முன்னை விடவும் சுருக்கின. இதனுடன் வேலை வாய்ப்புப் பற்றாக்குறையும் சேர்ந்து, ஜென்-z தலைமுறையினரின் பொறுமையைத் சோதித்துக் கொண்டிருந்தது.

 ஒருங்கிணைந்த மாணவர் இயக்கமும், ஆசிரியர்களும், பிற ஜனநாயகப் பிரிவுகளும் இணைந்து, இந்த அவநம்பிக்கையான நிலைமைக்கு வழிவகுத்த கொள்கை நோக்கங்களை அம்பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வந்தன. ஆனால், தெருக்களில் இந்த விரக்தியை வெளிப்படுத்தத் தேவையான முக்கியமான அளவிலான பங்கேற்பை உருவாக்குவதற்கு, இந்த ஒருங்கிணைந்த இயக்கங்களின் தாக்கம் மட்டும் போதுமானதாக இருக்கவில்லை என்பதே உண்மை. இருப்பினும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியால் தூண்டப்பட்ட தன்னெழுச்சி இயக்கம், அடிப்படையில் நிலவிய எதிர்ப்பு கருத்துக்கள் ஜென்-z தலைமுறையின் பரந்த பிரிவுகளின் கற்பனையைப் பற்றிக் கொள்ளச் செய்தது. எனவே, புதிய கல்விக் கொள்கையின் நோக்கங்களை அம்பலப்படுத்துவதில் ஒருங்கிணைந்த சக்திகள் மேற்கொண்ட நீண்டகாலத் தயாரிப்புப் பணியும், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியால் கட்டவிழ்த்துவிட்ட தன்னெழுச்சியும் — இவ்விரண்டும் இல்லாமல் ஜென்-z வெடிப்பு நிகழ்ந்திருக்க முடியாது.

 ஜென்-z இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் ஒரு முக்கியப் பாடத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுவது அவசியமாகும். மாணவர் போராட்டமும் நடவடிக்கையும் வெற்றியடைய, மாணவர்களை மிகப் பரந்த அளவில் அணிதிரட்டுவது மட்டுமல்லாமல், புதிய வகையான ஒற்றுமையும் தேவைப்படுகிறது; வர்க்கம், மதம், மத அடையாளம், பண்பாடு, பிராந்தியப் பிளவுகள் ஆகியவற்றைக் கடந்து உருவாகும் ஒற்றுமை அது. இந்த வலியுறுத்தலின் காரணமாகவே, நாட்டின் பெரும்பாலான இந்தி பேசும் வடக்குப் பகுதிகள் உட்பட, நாடு முழுவதும் இயக்கம் இவ்வளவு வேகமாகப் பரவியது.

 அவ்வாறன்றி, தமிழ்நாட்டிலும், கேரளத்திலும், கல்வியில் முன்னெடுக்கப்படும்  மையப்படுத்தலுக்கான போக்குகளுக்கும் எதிராகவும், நமது அரசமைப்பின் கூட்டாட்சிக் கொள்கைகளை முன்னிருத்தியும் நீண்டகாலமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை நாம் எவ்வாறு விளக்குவது? NEET தேர்வை ரத்து செய்து, தேசிய தேர்வு முகமையைக் கலைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு குறிப்பாக வலியுறுத்தி வருகிறது. எனவே, ஜென்-z இயக்கத்தின் பின்னணி உண்மையில் NEP 2020-க்கு எதிரான போராட்டத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஆகவே, வரவிருக்கும் நாட்களில் நிலவும் தற்போதைய சூழல், இன்னும் தீவிரமான போராட்டத்திற்கும், மிகவும் பரந்த ஒற்றுமைக்கும் வழிவகுக்க வேண்டும்.

 இந்த இளைஞர்களின் இயக்கம், இந்தியக் கல்வியின் ஜனநாயக / மதச்சார்பற்ற தன்மையைச் சீர்குலைக்க ஆர்எஸ்எஸ்–பாஜக மற்றும் இந்துத்துவ சக்திகளின் கைவசமிருந்த முதன்மை ஆயுதமான பயத்தை மறையச் செய்துள்ளது. இத்தகைய போராட்டம் முன்னேறியதுடன், துணிச்சல் அதிகரித்ததுள்ளது, அதிகாரத்தில் உள்ளவர்களை நோக்கி கேள்வி எழுப்பும் போராட்டமும் முன்னேறியுள்ளது. மோடி அரசாங்கத்தில் எந்த அமைச்சரும் பதவி விலகுவதில்லை என்ற ஆணவப் பேச்சை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அரசாங்கம், கல்வி அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற கூட்டு வற்புருத்தலை ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், மிக முக்கியமாக, மோடி அரசாங்கத்தின் கையாளான அமித் ஷா மக்களவையின் குளிர்காலக் கூட்டத்தொடரின் பெரும்பகுதியில் கலந்துகொள்ளாமல் ஒதுங்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டார். ஜென்-z கிளர்ச்சியை இரக்கமற்ற முறையில், சட்டவிரோதமாகக் கையாண்டதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்கு இருக்கவில்லை.

https://marxist.cpimtn.org/gen-z-against-nep/#gsc.tab=0

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு