விஜய் வழக்குகளை வாபஸ் பெற்றது உண்மையா?
அறம் இணைய இதழ்
கிட்டத்தட்ட எல்லா அதிகார மையங்களுமே உண்மைக்கு மாறானவை தாம்!
இதில் மத்திய அரசு, மாநில அரசு சென்ற அரசுகள், தற்போதைய அரசு என எதுவும் விதிவிலக்கில்லை.
போராடும் மக்களை அடக்குவதிலும், ஒடுக்குவதிலும், வழக்கு போடுவதிலும் எந்த அரசும் விதிவிலக்காக இருப்பதில்லை. வில்லன் பாத்திரத்தையே வகிக்கின்றன;
”நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் அனைத்தையும் எங்கள் அதிகாரத்தைக் கொண்டு ரத்து செய்கிறோம்” என்ற உச்ச நீதிமன்றம், அதே தீர்ப்பில் ”எனினும் டெல்லியில் போராட்டக்காரர்கள் மத்தியில் குற்றப் பின்னணியுடன் கண்டறியப்பட்ட 2,873 நபர்கள் மீது புதிய வழக்குகளை பதிவு செய்யலாம்’’ என பாஜக அரசுக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளது.
குற்றப் பின்னணியுடன் கண்டறியப்பட்ட 2,873 நபர்கள் என்பது மக்களை குழப்பவல்லது. ஏதோ கிரிமினல்கள் மீது தான் நடவடிக்கை பாய்கிறது போலும் என்று நினைக்க வைக்கிறது.
இது உண்மையல்ல. இந்த மாணவர்களில் சிலர் ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிரான போராட்டங்களிலோ, தேர்தல் ஆணையத்தின் எஸ்.ஐ.ஆருக்கு எதிரான போராட்டங்களிலோ.. இது போன்ற ஏதோ ஒரு பொது நல நோக்கத்திற்காக போராடி வழக்கு வாங்கி இருந்தால், அவர்களை ‘குற்றப் பின்னணி உடையவர்கள்’ எனக் கருதுகின்ற பாஜக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உடன்படலாமா?
நீட் தேர்வை பல வருடங்கள் மோசடியாக நடத்தியதால் தானே மாணவர்கள் அரசுக்கு எதிராக போராடும் நிர்பந்தம் ஏற்பட்டது. 2,783 நபர்கள் என்பது சாதாரண எண்ணிக்கையா? இவர்கள் அனைவரும் மாணவர்களே. பாஜக அரசின் கெடு நோக்கம் கொண்ட சட்டங்களை, திட்டங்களை எதிர்ப்பதே குற்றப் பின்னணியாகுமா?
சரி, பாஜக அரசு தான் அப்படி என்றால், கேரளத்தில் காங்கிரஸ் அரசும் அங்கே நீட் தேர்வு மோசடிகளை எதிர்த்து போராடிய மாணவர்கள் மீது காவல் துறையைக் கொண்டு கடும் அடக்குமுறைகளை கையாண்டது. இத்தனைக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் மாணவர்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி இல்லத்தை முற்றுகையிட்டு போராடினார். எதிர்கட்சி என்பதால் அங்கே டெல்லியில் ஒரு நிலைபாடு. ஆளும் கட்சி என்பதால் மாநிலத்தில் ஒரு நிலைபாடு.
இவை ஒரு பக்கம் இருக்க, இங்கே தமிழக சட்டமன்றத்தில், ”2021 முதல் 2026 வரை முந்தைய ஆட்சியில் ஆசிரியர்கள், விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்” என முதலமைச்சர் விஜய் தெரிவித்தார்.
உடனே அவரை தொடர்ந்து வாசிக்கவிடாமல் திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து கத்த தொடங்கிவிட்டனர்.
”முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் என்று எப்படிச் சொல்லலாம். எங்களை வம்புக்கு இழுக்காதீர்கள். சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவே அவ்வாறு வழக்கு போட்டோம். நீங்களும் தான் போடுகிறீர்கள்” என எ.வ.வேலு கொந்தளித்தார்.
முந்தைய ஆட்சியில் போடப்பட்ட வழக்குகள் என்றாரே அன்றி, அவை அராஜக முறையில் போடப்பட்ட வழக்குகள் என்றோ, சட்டத்திற்கு புறம்பாக போடப்பட்ட வழக்குகள் என்றோ விஜய் கூறவில்லை. அப்படியிருக்க திமுகவினருக்கு இவ்வளவு கோபம் வருவானேன்?
இப்படி இயல்பாக ஒன்றை சொல்லும் போது கூட, நீங்க ஆவேசமாகிறீர்கள் என்றால், அந்த அளவுக்கு உண்மையிலேயே திமுகவினருக்கு குற்றவுணர்வு இருக்கிறது. அதுவும் எ.வ.வேலு மேல்மா விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தை பாய்ச்சிய கொடூர மனம் படைத்தவர். தன் மாவட்டத்திற்குள் 900 நாட்களாக போராடிய விவசாயிகளை நேரடியாக சென்று பார்த்து கலந்துரையாட மனமின்றி காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்தவர்.
உண்மையில் முதலமைச்சர் விஜய்யின் அறிவிப்பே ஒரு அரைகுறை அறிவிப்பு தான். விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை மாத்திரம் தான் அவர் வாபஸ் பெற்றுள்ளார். ஏனெனில் இவர்களின் வாக்கு வங்கி பலமானது. அதே சமயம் ”தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள்,சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து துறை தொழிலாளர்கள், மின்வாரியத் தொழிலாளர்கள் என்ன குற்றப் பின்னணி உள்ளவர்களா? அவர்கள் மீதான வழக்குகளையும் சேர்த்து வாபஸ் வாங்குவது தானே முறையாகும்?” என திமுகவினர் கேட்டு இருக்க வேண்டும்.
2011 முதல் 14 வரை கூடம் குளம் அணு உலைக்கு எதிராகப் போராட்டம் ஒரு வரலாற்று சிறப்பு வாய்ந்த சுற்றுச் சூழல் காப்பதற்கான போராட்டமாகும்.
இந்த காலகட்டத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த அதிமுக அரசு சுமார் 65 ஆயிரம் மக்கள் மீது பல்வேறு பிரிவுகளில் 349 வழக்குகள் போட்டது. ‘வரலாற்றில் இத்தனை அதிக மக்கள் மீது இவ்வளவு அதிக வழக்குகள் இதற்கு முன்பு பதிவாகி இருக்குமா?’ தெரியவில்லை.
இவர்கள் ஆண்டுக்கணக்கில் கோர்ட் , வழக்கு என்று பல வருடங்கள் அலைக்கழிந்து, கீழ் கோர்டுகள் தொடங்கி உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடித் தான் 270 வழக்குகளை வாபஸ் பெற வைத்தனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தால் அனைத்து வழக்குகளும் வாபஸ் என்ற ஸ்டாலின் வெறும் 26 வழக்குகளை மட்டுமே வாபஸ் பெற்றார். இதன் மூலம் மீனவர்கள் இன்று வரை சந்தித்து வரும் இழப்புகள் சொல்லி மாளாது.
சுற்றுச் சூழல் போராளிகளான தோழர் சுப.உதயகுமார் உள்ளிட்டோர் மீதான 53 வழக்குகளை சென்ற ஆட்சியில் மூன்று முறை அன்றைய முதல்வர் ஸ்டாலினைப் பார்த்து முறையிட்டும் வாபஸ் பெறவில்லை.
இந்த ஆட்சி வந்து மூன்றரை மாதங்கள் கடந்த நிலையில் கூடம்குளம் அணு உலை போராளிகளான சுப.உதயகுமார் உள்ளிட்டவர்கள் தங்கள் மீதான வழக்குகளை தவெக முதல்வர் விஜய்யாவது வாபஸ் வாங்குவார் என்ற நம்பிக்கையுடன் அவரை சந்திக்க பல முறை முயன்றனராம்.
”முதல்வரின் செயலாளர் லஷ்மி பிரியாவை பல முறை தொடர்பு கொண்டும், பல இமெயிகள் முதல்வருக்கு அனுப்பியும், பெலிக்ஸ் ஜெரால்டு. லயோலா மணி போன்றவர்களை தொடர்பு கொண்டு முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யக் கேட்டும் அதில் சின்ன முன்னேற்றம் கூட இல்லை” என்கிறார், சுப.உதயகுமார்.
ஆக, தென் தமிழகத்தை காப்பாற்றப் போராடிய பல்லாயிரம் மக்களின் தியாகத்திற்கு இன்றைய தவெக ஆட்சியாளர்கள் உட்பட யாரும் மதிப்பளிக்கவில்லை. ‘இந்த வழக்கை வாபஸ் பெறுவதை மத்திய பாஜக அரசு சுத்தமாக விரும்பாது’ என்பதே அன்றைக்கு ஸ்டாலினும், இன்றைக்கு விஜய்யும் தயங்குவதற்கு காரணமாகும்.
ஆக, இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் எழுதப்பட்ட இரண்டு வரிகளில் உள்ள நிஜம் ரொம்ப வலி நிரம்பியதாகும்.
மக்கள், கட்சிகளால் சிதறுண்டு கிடக்கிறார்கள். தற்போதைக்கு எல்லா கட்சிகளும் கிட்டத்தட்ட ஒரே ரகம் தான். லேபிள் தான் வித்தியாசம்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/32872/cases-booked-protesters-by-govt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு