இப்ப மட்டும் பாஜக அரசின் ஏஜெண்டான ஆளுநர் தேவைப்படுகிறாரோ…?
சாவித்திரி கண்ணன்
இஷ்டத்துக்கு ஊழல் செய்ய வேண்டியது, நடவடிக்கை என்று வந்தால், உடனே கோர்ட்டுக்கு போய் தடை வாங்குவது!
திருவண்ணா மலையில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாநாட்டுக்கு அன்றைய அமைச்சர் எ.வ.வேலு மழவண்ணாம்பாடி ஏரியில் முறைகேடாக 12 ஏக்கர் பரப்பளவுக்கு 23 அடி ஆழத்திற்கு மண்ணை அள்ளி பல நூறு லாரிகளில் எடுத்துச் சென்று மனசாட்சியில்லாமல் செயல்பட்டுள்ளார். அந்த ஏரிக்கும், சுற்றிலுள்ள விவசாய நிலங்களுக்கும் இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து கிஞ்சித்தும்கவலைப்படவில்லை.
தற்போது எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியதில் அவர் மீதும், அவர் மகன் குமரன் மீதும் நடவடிக்கை கூடாது என உத்தரவாம்!
இதே பாணியில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி 100 கோடி ரூபாய் மோசடி செய்ததாக பிடி அரசகுமாரை வைத்து வசூல் வேட்டையாடிய அன்பில் மகேஷ் பொய்யாமொழி உயர் நீதிமன்றம் சென்று தன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி உத்திரவிடக் கோரியுள்ளார், இன்று( அக்டோபர், 12, 2026).
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர், ரிச்சர்ட் ‘’ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய முடியாது’’ என்பதால் ரத்து செய்ய வேண்டும் என்று வாதம் வைத்தார்.
உடனே நீதிபதி அவர்கள் கடுப்பாகி, ‘'ஆளுநரின் அதிகாரம் குறித்தெல்லாம் திமுக எப்போது பேச ஆரம்பித்தது? ஆளுநர் பதவி என்பது ஆட்டு தாடியை போல தேவையற்றது என்று தானே திமுக கூறும். திமுக-வை பொறுத்தவரை ஆளுநர் பதவி என்ற ஒன்றே தேவை இல்லாதது தானே?'' என்று கேள்விகளை எழுப்பினார்.
மக்களின் மனசாட்சியாக அவ்வப்போது சில நீதிபதிகள் வெளிப்படுகிறார்கள்…! இது ஓரளவுக்கு ஆறுதல் தந்தாலும், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகையில் என்னாகும் எனச் சொல்ல முடியாது.
எந்த ஊழல் அரசியல்வாதிகளையும் தண்டிக்கவே முடியாது என்றால், அது அவர்கள் ஊழலில் தொடர்ந்து ஈடுபடுவதை அல்லவா ஊக்குவிக்கும்?
அப்புறம் நீதிமன்றங்கள் எதற்கு? விசாரணைகள் எதற்கு?
சில வழக்கறிஞர்கள் சம்பாதிப்பதற்கும், சில நீதிபதிகள் சம்பளம் பெறுவதற்கும் தானா?
சாவித்திரி கண்ணன்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு