பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்!(பகுதி -3)
உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!
(பகுதி-2 ன் தொடர்ச்சி)
உக்ரைன் போரின் அரசியல் - பொருளாதரம்
முதலாளித்துவ நாடான உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடல் மற்றும் அஜோவ் கடலின் (Sea of Azov) வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. கிரீமியா அஜோவ் கடலின் மேற்கு கடற்கரை மற்றும் கருங்கடலின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ளது. ஜார்ஜியா கிழக்கு ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசியாவிற்கு இடையில் கருங்கடலையொட்டி காகசஸ் (Caucasus) பிராந்தியத்தில் அமைந்துள்ளது. செசன்யா காஸ்பியன் கடலுக்கு அருகில் வடக்கு காகசஸில் அமைந்துள்ள கிழக்கு ஐரோப்பிய நாடாகும். கருங்கடல், காஸ்பியன் கடல், அஜோவ் கடல் மற்றும் காகசஸ் மலைப்பகுதிகள் கடல்வழி எண்ணெய் - எரிவாயு வர்த்தகம் மற்றும் இராணுவ ரீதியாக ரசியாவிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக விளங்குகின்றன. இந்நாடுகளை ஆக்கிரமித்து பொம்மை ஆட்சியை உருவாக்குவதன் மூலம் கிழக்கு ஐரோப்பாவில் மேலாதிக்கத்தை நிறுவுவது; அதை மத்திய தரைக்கடல் நாடுகளுக்கு விரிவுபடுத்துவது; அதன் மூலம் ஐரோப்பிய நாடுகளுடன் எண்ணெய் வர்த்தகத்தை அதிகப்படுத்தி அமெரிக்க - ஐரோப்பிய உறவுகளைப் பலவீனப்படுத்துவது; சீனாவுடன் இணைந்து உலக மேலாதிக்கத்திற்குத் திட்டமிடுவது போன்ற கணக்கீடுகளிலிருந்து ரசியா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தைத் தொடுத்துள்ளது. செசன்யா மற்றும் ஜார்ஜியா மீதான ரசியாவின் ஆக்கிரமிப்புகளையும் மேற்கூறிய புவிசார் அரசியலிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
உக்ரைனில் நேரடி யுத்தத்தில் ஈடுபடாமல், உக்ரைன் ஆட்சியைக் கருவியாகப் பயன்படுத்தி மறைமுக யுத்தம் (அ) பதிலிப் போர் நடத்துவதன் மூலம் பொருளாதார நெருக்கடியில் சிக்காமல் இருப்பது; ரசிய - ஐரோப்பிய உறவுகளைப் பலவீனப்படுத்துவது; ரசியாவின் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவது; ஐரோப்பாவின் எண்ணெய் - எரிவாயுவிற்கான ரசியச் சார்பைக் குறைத்து தனது திரவ எரிவாயுவை (LNG) அங்கு சந்தைப்படுத்தி பொருளாதார பலம் பெறுவது போன்றவை அமெரிக்காவின் இலக்குகள் ஆகும்.
உக்ரைனில் ஏராளமான கனிம வளங்கள், மூலப் பொருட்கள் மற்றும் எண்ணெய் வளங்கள் உள்ளன. அவை வருமாறு :
யுரேனியதாது (ஐரோப்பாவில் முதல் இடம்); மெர்க்குரி (ஐரோப்பாவில் 2-வது இடம்); டைட்டானியம் - மங்கனீசு (உலகில் 2-வது இடம்); இரும்பு (உலகில் 5-வது இடம்); ஷேல் எரிவாயு (22 மில்லியன் கியூபிக் மீட்டர் - ஐரோப்பாவில் 3 வது இடம், உலகில் 4 வது இடம்); நிலக்கரி (உலகில் 7 வது இடம்).
இவை தவிர வேளாண் துறை மற்றும் தொழிற்துறையில் வளர்ச்சி பெற்ற முதலாளித்துவ நாடாக உள்ளது. சூரியகாந்தி மற்றும் சூரிய காந்தி எண்ணெய் ஏற்றுமதியில் உலகில் முதல் இடம் வகிக்கிறது. பார்லி உற்பத்தி, மக்காச் சோளம், உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை உற்பத்தியில் உலகில் முதல் 5 இடங்களுக்குள் உள்ளது. மேலும் அமோனியா உற்பத்தியில் (ஐரோப்பாவில் முதல் இடம்); இயற்கை எரிவாயு குழாய் திட்டம் (ஐரோப்பாவில் 2-வது); அணு உலைகளை நிறுவும் திறன் (ஐரோப்பாவில் 3 வது உலகில் 8-வது இடம்); ராக்கெட் லான்ச்சர் உற்பத்தி (உலகில் 4வது இடம்); இராணுவம் - பாதுகாப்பு சார்ந்த தளவாட உற்பத்தி (உலகில் 9 வது இடம்) மற்றும் இரும்பு உற்பத்தியில் உலகில் 7-வது இடம் வகிக்கிறது. இந்த வளர்ச்சிக்கான அடித்தளமிட்டது ரசிய சோசலிசப் புரட்சி என்பதை மறந்துவிடக் கூடாது. சோசலிசப் புரட்சி உருவாக்கிய சோசலிசக் கட்டுமானங்கள் முதலாளித்துவ கட்டுமானங்களாக மீண்டும் மாற்றியமைக்கப்பட்டு உழைக்கும் மக்கள் சுரண்டலுக்கு ஆளாகத் துவங்கினார்கள்.
மேற்கூறிய கனிம வளங்கள், மூலப்பொருட்கள், எண்ணெய் வளங்கள் மற்றும் வேளாண் - தொழிற்துறைகளை யார் கைப்பற்றுவது என்ற போட்டியே அமெரிக்க-நேட்டோ, ரசிய-சீன முகாம்களுக்கு இடையிலான பனிப்போராக உக்ரைனில் வெடித்துள்ளது. உக்ரைனில் தனது பொம்மை ஆட்சியைத் தக்க வைக்க நேட்டோவும், அந்த ஆட்சியைத் தூக்கியெறிந்து தனது பொம்மை ஆட்சியை உருவாக்க ரசியாவும் பனிப்போரில் ஈடுபட்டு வருகின்றன.
அ) ஐரோப்பாவில் ரசியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக மேலாதிக்கம் பலமடைதல்
ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி செய்வதில் ரசியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியில் உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பாவிற்கு எண்ணெய் - எரிவாயு ஏற்றுமதி செய்வதில் ரசியா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
ரசியா மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான எரிவாயு குழாய் திட்டங்கள் வருமாறு:
1) நார்ட் ஸ்ட்ரீம்-மி திட்டம் (Nord Stream-I)
இத்திட்டம் நார்ட் ஸ்ட்ரீம் ஏஜி (Nord Stream AG) மற்றும் காஜ்ப்ரோம் (Gazprom) என்ற இரண்டு ரசியாவின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், யுனிபெர் (Uniper), ஜெர்மனியின் வின்டர்ஷெல் (Wintar shell) போன்ற ஐரோப்பிய நிறுவனங்களுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 2012 முதல் செயல்பட்டு வரும் எரிவாயுக் குழாய் திட்டமாகும். இது பால்டிக் பெருங்கடலுக்கு அடியில் வடமேற்கு ரசியாவில் துவங்கி வடகிழக்கு ஜெர்மனியில் முடியும் திட்டமாகும்.
2) துர்க் ஸ்ட்ரீம் திட்டம் (Turk Stream)
இத்திட்டமும் காஜ்ப்ரோம் (Gazprom) நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. இது கருங்கடல் வழியாக ரசியாவிலிருந்து துருக்கிக்குச் செல்கிறது.
3) செர்பியன் ஸ்ட்ரீம் திட்டம் (Serbian Stream)
இது காஜ்ப்ரோம் நிறுவனத்திற்கும், செர்பியாவின் பிஜாகன் (Srbijagan) நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்த அடிப்படையில் செயல்படும் திட்டமாகும். இது கருங்கடல் மற்றும் பல்கேரியா வழியாக ரசியாவில் துவங்கி செர்பியாவில் முடிவடைகிறது.
4) டெஸ்லா திட்டம்
காஜ்ப்ரோம் நிறுவனத்தால் இயக்கப்படும் இத்திட்டம் துர்க் ஸ்ட்ரீம் குழாயில் இணைக்கப்பட்டு மத்திய ஐரோப்பா மற்றும் ஆஸ்திரியாவிற்கு எரிவாயு விநியோகம் செய்கிறது.
இத்திட்டங்கள் மூலம் ரசியாவிற்கு அதிகளவு வருமானம் கிடைப்பதுடன் (இது நிதிநிலையில் முக்கிய பங்கு வகிக்கிறது), தற்போது அதன் அந்நிய பரிவர்த்தனை கையிலிருப்பு 630 பில்லியன் டாலர்களாக உள்ளது. ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் மற்றும் எரிவாயுவிற்கு இத்திட்டங்களைச் சார்ந்தே உள்ளன. ஏனெனில் அமெரிக்காவின் போட்டியை வீழ்த்த ஒப்பீட்டளவில் விலை குறைவாகத் தருகிறது ரசியா. ஐரோப்பாவிற்கு 40% அளவிற்கு ரசியா எரிவாயு விநியோகம் செய்கிறது. ஜெர்மனி மட்டும் தனது 65% எரிவாயு தேவைக்கு ரசியாவையே நம்பியுள்ளது. இத்தாலி 43%, பிரான்ஸ் 16%, நார்வே 22%, அல்ஜீரியா 20%, அஜர்பைஜான் 10%, என்ற சதவீதங்களில் ரசியாவிடமிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்கின்றன. கிழக்கு ஐரோப்பிய நாடுகளான செக் குடியரசு, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய மூன்று நாடுகள் 100% சதமும், போலந்து 50% சதமும் ரசியாவின் எரிவாயுவைச் சார்ந்து உள்ளன. இது தவிர கச்சா எண்ணெய் தேவைக்கு 34% முதல் 40% வரை ஐரோப்பா ரசியாவை சார்ந்துள்ளது; நிலக்கரி தேவைக்கு 53% ரசியாவை சார்ந்துள்ளது. ஐரோப்பா தனது 20% மின்சார உற்பத்தியை ரசியாவின் எரிவாயுவிலிருந்து தயாரிக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் வளர்ந்து வரும் இந்த ரசிய எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தக மேலாதிக்கம் அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டுகிறது.
துர்க் ஸ்ட்ரீம் முன்னதாக சௌத் ஸ்ட்ரீம் திட்டம் எனும் பெயரில் துவக்கப்பட்டபோது, அதற்கு போட்டியாக நெபுக்கா திட்டம் (Nebucca Pipeline) துவங்கப்பட்டது. இத்திட்டம் துருக்கிக்கும் ஆஸ்திரியாவிற்கும் இடையில் துவங்கப்பட்டு (அமெரிக்கா ஆதரவுடன்) 2013-ல் கைவிடப்பட்டது. பிறகு அமெரிக்க ஆதரவுடன் TANAP (Trans Anatolian Natural Gas Pipeline) திட்டம் துவங்கப்பட்டது. துருக்கியிலிருந்து செயல்படும் இந்த திட்டம் அஜர்பைஜானிலிருந்து ஐரோப்பாவிற்கு எரிவாயு விநியோகம் செய்கிறது. இது தெற்கு காகசஸ் திட்டம் மற்றும் அட்ரியாடிக் குழாய் திட்டம் (Trans Adriatic) வழியாக எரிவாயுவை விநியோகம் செய்யும் திட்டமாகும். இத்திட்டங்கள் ஐரோப்பிய நாடுகளின் ரசியச் சார்பைக் குறைப்பதற்காகத் தொடங்கப்பட்டன. 2000-ம் ஆண்டுகளுக்கு முன்புவரை உக்ரைன் ஐரோப்பிய நாடுகளுக்கு 110 பிசிஎம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) கொள்ளளவு வரை ஆண்டொன்றிற்கு விநியோகம் செய்து வந்தது. நார்ட் ஸ்ட்ரீம், துர்க் ஸ்ட்ரீம் திட்டங்கள் துவங்கப்பட்ட பிறகு அவை 80 பிசிஎம் எரிவாயுவை விநியோகம் செய்யத் துவங்கின. இதனால் உக்ரைன் அரசுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது.
ஐரோப்பாவிற்குத் திரவ எரிவாயு (LNG) விநியோகம் செய்வதில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இது தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிக்கலானதாகவும், விலை உயர்ந்ததாகவும் உள்ளது. இதற்கு திரவமயமாக்கும் உலைகளும், வாயுமயமாக்கும் உலைகளும் தேவைப்படுகின்றன. இதற்குப் பல பில்லியன் டாலர்கள் செலவாகின்றன. இதனால் எரிவாயு விலை அதிகமாகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகள் ரசியாவின் விலை குறைந்த எரிவாயுவை அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. தனது சந்தையை வீழ்த்துவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைத் தடுக்கவே ரசியா ஒப்பீட்டளவில் குறைந்த விலைக்குத் தருகிறது.
5) நார்ட் ஸ்ட்ரீம்-2 திட்டம்
இந்த சூழலில் 2018ஆம் ஆண்டு நார்ட் ஸ்ட்ரீம் குழாய் திட்டத்தின் கொள்ளளவை இருமடங்காக்கும் (110 பில்லியன் கியூபிக் மீட்டர்) நார்ட் ஸ்ட்ரீம்- 2 திட்டத்தை ரசியாவும், ஜெர்மனியும் முன்னெடுத்தன. 11 பில்லியன் டாலர் மதிப்பீட்டிலான இத்திட்டம் பால்டிக் பெருங்கடல் வழியாக ரசியாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையில் செயல்படவுள்ளது. இத்திட்டம் 2021 செப்டம்பரில் முடிவடைந்து செயல்படத் தயாராக உள்ளது. இத்திட்டம் ஐரோப்பிய நாடுகளின் ரஷ்ய சார்பை மேலும் அதிகரிக்கும் என்று அமெரிக்காவும் பிற கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. உக்ரைன் மீது ரசியா ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்த பின்பு இத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. இத்திட்டம் நார்ட் ஸ்ட்ரீம்- 2 ஏஜி (AG) மற்றும் காஜ்ப்ரோம் போன்ற ரசிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பிற ஐரோப்பிய நிறுவனங்களால் இயக்கப்படுகிறது. நார்ட் ஸ்ட்ரீம்1, துர்க் ஸ்ட்ரீம் போன்ற திட்டங்களால் ரசிய நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டுகின்றன. நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மூலம் மேலும் கொள்ளை லாபம் அடிக்கும் லாப வெறியில் உள்ளன.
நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டம் உக்ரைனின் கடல் எல்லைகளைத் தவிர்த்துவிட்டுச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உக்ரைன் எல்லை வழியாகச் செல்லும் துர்க் ஸ்ட்ரீம் போன்ற திட்டங்களுக்கு ரசியா ஆண்டுதோறும் 2 பில்லியன் டாலர்கள் கட்டணமாகச் செலுத்த (Transit fee) வேண்டியுள்ளது. நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டம் நடைமுறைக்கு வருமானால் உக்ரைன் அரசுக்கு ஆண்டுதோறும் 2 பில்லியன் டாலர்கள் அளவிற்கு வருமான இழப்பு ஏற்படும். மட்டுமின்றி உக்ரைன் தனது எல்லையில் அனுமதிப்பதற்கான கட்டணமாக ரசியா தந்து வரும் 3 பில்லியன் டாலர் வருவாயும் உக்ரைன் அரசு இழக்க நேரிடும். (எல்லை இறையாண்மை குறித்து உக்ரைன் அரசு ஆடும் நாடகம் பாருங்கள்!) . இத்திட்டத்தால் மேலும் 26 மில்லியன் ஜெர்மானிய நாட்டின் வீடுகள் பயன்பெறும். ஜெர்மனி நாடாளுமன்றம் காஜ்ப்ரோம் நிறுவனத்திற்கு இன்னும் சட்டரீதியான அனுமதி தராமல் நிறுத்தி வைத்துள்ளது. கிரீமியா மீதான ரசிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு அங்கு எதிர்க்கட்சிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததே இதற்குக் காரணம்.
ஜனவரி 13 2022-ல் அமெரிக்க செனட்டில் நார்ட் ஸ்ட்ரீம் 2 திட்டத்தின் மீது தடைகளை விதிக்க குடியரசு கட்சி சட்ட வரைவைக் கொண்டு வந்தபோது செனட் அதற்கு மறுப்பு தெரிவித்தது. ஜெர்மன் நிறுவனங்களின் நலன்களை இத்திட்டம் பாதிக்கும் எனவும், ஜெர்மன் மக்களின் எதிர்ப்பை ஜெர்மன் அரசு எதிர்கொள்ள நேரிட்டால் அது அமெரிக்க - ஜெர்மன் உறவுகளைப் பாதிக்கும் எனவும் ஜோ பைடன் கருதினார். மே 2021ல் ரசிய நிறுவனங்கள் மீது மட்டும் தடையை அறிவித்தார் பைடன். ரசியா மீதான ஐரோப்பியச் சார்பை (எரிவாயு-எண்ணெய் சார்பு) அமெரிக்காவால் உடனடியாக குறைப்பது சாத்தியம் இல்லை என அமெரிக்காவும் ஐரோப்பாவும் அறிந்தே வைத்துள்ளன.
ஆப்கானிலிருந்து அமெரிக்க-நேட்டோ தோல்வியடைந்து வெளியேறிய பிறகு, நேட்டோ சார்பற்ற அமெரிக்கச் சார்பற்ற சுயேச்சையான ஐரோப்பிய யுத்த தந்திரம் மற்றும் சுயேச்சையான ஐரோப்பிய ராணுவம் உருவாக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய வல்லரசு நாடுகளாக உள்ள ஜெர்மனியும் பிரான்சும் தமது ஐரோப்பிய மேலாதிக்க நலன்களிலிருந்து பேசத் துவங்கியுள்ளன. பிரான்சுடனான நீர்முழுகி கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்துவிட்டு ஆஸ்திரேலியா ஆக்கஸ் கூட்டமைப்பில் இணைந்துள்ளது. இதையும் கணக்கில் கொண்டே அமெரிக்கா காய்களை நகர்த்துகிறது.
ரசியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளிலிருந்து மீள சீனா உதவி செய்வதாகக் கூறியுள்ளது. ஆசியன் நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய காஜ்ப்ரோம் நிறுவனத்துடன் சீனா ஒப்பந்தம் போட்டுள்ளது. சோயுஸ் - வோஸ்டாக் (Soyuz - Wostok) என்ற எரிவாயு திட்டத்தை (மங்கோலியா வழியாகச் சீனாவை சென்றடைந்து ஆசிய நாடுகளுக்கு விநியோகம் செய்யும் திட்டம்) செயல்படுத்தச் சீனா காஜ்ப்ரோம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆசியன் நாடுகளுக்கு இதன் மூலம் 50 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு விநியோகம் செய்யப்படும் எனச் சீனா கூறுகிறது.
காகசஸ், கருங்கடல், பால்டிக் கடல் மற்றும் அஜோவ் கடல் மீதான முழுக் கட்டுப்பாட்டையும் பெறுவது ரசிய கார்ப்பரேட் நிறுவனங்களின் எண்ணெய்-எரிவாயு பசிக்கு மிகவும் அவசியம். அதன் பொருட்டே இவற்றைச் சுற்றி பூகோள ரீதியாக அமைந்துள்ள ஜார்ஜியா, உக்ரைன் மற்றும் அதன் கிரீமியா, டோன்பாஸ் பகுதிகள் (டோன்பாஸ் பகுதியில்தான் உக்ரைனின் 90% சத நிலக்கரி வளம் உள்ளது) மீது ரசிய வல்லூறு ஆதிக்கத்தை நிறுவ விரும்புகிறது. உக்ரைன் மீதான ரசிய ஆதிக்கம் வெற்றி பெறுமானால் அதன் ஆதிக்கம் கிழக்கு ஐரோப்பா மற்றும் பால்டிக் நாடுகளுக்கு விரிவடையும் என அமெரிக்கா அஞ்சுகிறது. இதற்காகவே உக்ரைன் மீதான அரசியல் ஆதிக்கத்திற்கு அமெரிக்க நேட்டோ வல்லூறுகளும், ரசியாவும் போட்டிப் போடுகின்றன.
ஆ) உக்ரைனில் பொம்மை ஆட்சியை உருவாக்குவதற்கான அமெரிக்க-ரசிய நாடுகளின் முயற்சிகள்
மின்ஸ்க் ஒப்பந்தம் 1991 (Minsk Agreement)
சோவியத் யூனியன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்ட போது, 8. 2. 1991 - அன்று உக்ரைன், பெலாரஸ், ரசியா ஆகிய 3 நாடுகளிடையே மின்ஸ்க் ஒப்பந்தம் கையெழுத்தானது. மூன்று நாடுகளின் குடிமக்கள் உரிமைகளைப் பாதுகாப்பது (Article 2); பரஸ்பரம் தத்தமது நாடுகளில் உள்ள மத, மொழி சிறுபான்மையினரையும், சிறுபான்மை தேசிய இன உரிமைகளையும் பாதுகாப்பது (Article 3); மூன்று நாடுகளும் பரஸ்பரம் எல்லைப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை மீறாமல் செயல்படுவது மற்றும் நிலவுகிற எல்லைகளை அங்கீகரிப்பது (Article 5) போன்ற அம்சங்கள் அதில் இடம் பெற்றன. பிறகு அமெரிக்கா, ரசியா, பிரிட்டன் போன்ற ஏகாதிபத்திய நாடுகளிடையே அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானபோது, 1994-ல் உக்ரைன் தன்னிடமிருந்த 1000க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களை ரசியாவிடம் ஒப்படைத்தது. உக்ரைனின் எல்லை இறையாண்மையை மதிப்பது எனவும், அதன் உள் விவகாரங்களில் தலையிடுவதில்லை எனவும் அமெரிக்கா, ரசியா மற்றும் பிரிட்டன் நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் உறுதி தந்தன.
ஆனால் மூன்று நாடுகளுமே இவ்விரு ஒப்பந்தங்களையும் குப்பையில் போட்டன. உக்ரைனில் பொம்மை ஆட்சியை உருவாக்குவது என அமெரிக்கா - நேட்டோ மற்றும் ரசியாவும், உக்ரைனில் சுயாட்சிப் பிரதேசமாக இருந்த கிரீமியாவைக் கைப்பற்றுவது, டோன்பாஸ் ஆக்கிரமிப்பு என ரசியாவும் ஒப்பந்தங்களுக்கு எதிராகச் செயல்படத் துவங்கின. கிரீமிய தீபகற்பம் உக்ரைனின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கிவந்த தன்னாட்சி பிரதேசம் ஆகும். 1954ம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் (1954 Treaty) சோவியத் யூனியனிலிருந்து பிரித்து கிரீமியாவை உக்ரைனுடன் குருசேவ் இணைத்தார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.
கிரீமியா மற்றும் டோன்பாஸ் பிராந்தியம் ரசியர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியங்கள் ஆகும். கிரீமிய தீபகற்பத்தில் சிறுபான்மையினராக உக்ரைன் மக்களும், கிரீமியா டாடர் (Tatar) எனப்படும் தேசிய இன மக்களும் வாழ்கின்றனர். 1995ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கா ஆதரவுடன் உக்ரைன் ஆளும் வர்க்கங்கள் தேசிய இன முரண்பாடுகளை உருவாக்கின. கிரீமியாவின் தன்னாட்சி உரிமைகளை உக்ரைன் அரசு பறிக்கத் துவங்கியது. உக்ரேனிய பெரும்பான்மை தேசிய இனத்திற்கும் ரசிய சிறுபான்மை தேசிய இனத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கின. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யர்களின் போராட்டத்தை ரஷ்யா ஒரு கருவியாகப் பயன்படுத்தத் தொடங்கியது. புதின் 2002ல் ஆட்சிக்கு வந்தபிறகு உக்ரைன் எதிர்ப்பு பிரிவினைவாத குழுக்களுக்குப் பொருளாதார மற்றும் இராணுவ உதவிகளை செய்யத் துவங்கினார்.
2004 ஆம் ஆண்டு ரசிய ஆதரவாளரான விக்டர் யூகோனுவிச் உக்ரைன் தேர்தலில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாக்கெடுப்பில் முறைகேடு நடந்ததாகக் கூறி உச்ச நீதிமன்றம் தேர்தல் முடிவை ரத்து செய்தது. ஊழல் புகார்கள், தேர்தல் முறைகேடுகளை எதிர்த்து மக்கள் போராட்டங்கள் வெடித்தன. இதைப் பயன்படுத்தி அமெரிக்கா தொண்டு நிறுவனங்கள் வாயிலாக 'ஆரஞ்சு புரட்சி' எனப்படும் மக்கள் கலகங்களைத் தூண்டிவிட்டு விக்டர் ஆட்சியை கவிழ்த்து தனது அடிவருடியான யூஸ்சென்கோ தலைமையில் பொம்மை ஆட்சியை உருவாக்கியது.
2008 ஆம் ஆண்டு ஜார்ஜியா, உக்ரைன் நாடுகளை நேட்டோவில் சேர அமெரிக்கா அழைப்பு விடுத்தது. ஜார்ஜியா நேட்டோவில் இணைந்தது. ரசியா இதை கண்டித்ததோடு மட்டுமின்றி டோன்பாஸ், கிரீமியா பகுதிகளில் தீவிரமாகத் தலையிட துவங்கியது. அங்குள்ள ரசியர்களுக்கு ஆயிரக்கணக்கில் ரசியாவிற்கு செல்ல பாஸ்போர்ட் வழங்கியது. ரசியாவில் நடந்த அதிபர் தேர்தலில் இங்கிருந்து சென்று வாக்களித்தார்கள். உக்ரைனை நேட்டோவில் இணைப்பதற்கான அமெரிக்காவின் முயற்சியை ரசியா கண்டித்த பிறகு ஜெர்மனியும் பிரான்சும் ரசியச் சார்பு நிலையிலிருந்து உக்ரைனை நேட்டோவில் இணைக்க ஆதரவு தெரிவிக்கவில்லை. 2009ஆம் ஆண்டு உக்ரைன் ஆட்சிக்கு எதிராக கிரீமியா, டோன்பாஸ் பகுதிகளில் போராட்டங்கள் பெருமளவு வெடித்தன.
2010ஆம் ஆண்டு மீண்டும் ரசிய ஆதரவாளரான விக்டர் யூகோனுவிச் அதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஐரோப்பிய யூனியன் மற்றும் நேட்டோவில் உக்ரைன் இணையாது என்று அவர் அறிவித்தார். ஐரோப்பிய வர்த்தக உறவுகள் மூலம் வாழ்நிலை மேம்பாடு அடையும் என்ற பிம்பம் அமெரிக்க எடுபிடி ஆட்சியாளர்களால் மக்களிடையே உருவாக்கப்பட்டிருந்தது. மட்டுமின்றி பெரும்பான்மை தேசிய இனவெறியை உக்ரைன் அரசு தூண்டி வந்தது. எனவே 2013ல் மீண்டும் விக்டர் ஆட்சிக்கு எதிராக மக்கள் கலகங்களை அமெரிக்க - ஐரோப்பியத் தொண்டு நிறுவனங்கள் தூண்டி விட்டன. இது யூரோ மைதான் போராட்டம் அல்லது சுயமதிப்பு புரட்சி (Revolution of dignity) என அழைக்கப்படுகிறது. இது முழுக்க அமெரிக்காவின் சூழ்ச்சியே ஆகும். இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டங்களில் குதித்தனர். உக்ரைன் ஆளும் வர்க்கங்களிடையே முரண்பாடுகள் வெடித்தன. 2014 ஆம் ஆண்டு விக்டர் ஆட்சியைக் கவிழ்த்து தனது பொம்மை ஆட்சியை பொர்ஷன்கோ தலைமையில் அமெரிக்கா உருவாக்கியது. கிரீமியாவின் தன்னாட்சி உரிமை குறித்து ரசிய ஆதரவு ஆட்சி அமைந்த போது ரசியா எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கவில்லை. தேசிய வெறியூட்டி முரண்பாடுகளைப் பயன்படுத்தி வர்த்தக மற்றும் ராணுவ நலன்களிலிருந்து கிரீமியா மற்றும் டோன்பாஸ் பகுதிகளைத் தன்வசம் கட்டுப்படுத்தவே முயன்றது.
பிப்ரவரி 2014 இறுதியில் விக்டர் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது கிரீமியா மற்றும் டோன்பாஸ் பகுதிகளில் ரசியர்களின் போராட்டம் வெடித்தது. மார்ச் 2014 ல் ரசிய ராணுவம் நேரடியாக கிரீமியாவில் இறங்கியது. உக்ரைன் மற்றும் கிரீமிய ராணுவம், ரசிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் மற்றும் ரசிய ராணுவங்களுக்கிடையில் நேரடி மோதல் வெடித்தது. இறுதியில் உக்ரைன் ராணுவம் தோற்கடிக்கப்பட்டது. கிரீமியாவின் பாராளுமன்றம் மற்றும் அரசு நிர்வாகம் ரசிய ராணுவத்தால் கைப்பற்றப்பட்டது. 18/3/2014 அன்று கிரிமியாவை உக்ரைனிலிருந்து பிரித்து தன்னுடன் பலவந்தமாக இணைத்துக் கொண்டு அங்குத் தனது பொம்மை அரசை ரசியா நிறுவியது. கிரீமியாவின் அமைச்சரவை கவுன்சில் கலைக்கப்பட்டு புதிய ரசிய ஆதரவு பிரதமரை புதின் ஆட்சியில் அமர்த்தினார். கிரீமிய குடியரசு மற்றும் செவஸ்டோபோல் சுயாட்சி நகர அரசுகளை உருவாக்கி அவற்றை சுதந்திர குடியரசுகளாக அங்கீகரிப்பதாக புதின் அறிவித்தார்; ரசியாவுடன் இணைத்துக்கொண்டார். கிரீமிய பாராளுமன்றத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தி அதற்கு ஒரு ஜனநாயக வடிவம் தந்தார். (இந்த பொது வாக்கெடுப்பு ஐநாவில் தோற்கடிக்கப்பட்டது).
உக்ரைனின் தெற்கு எல்லையில் உள்ள கிரீமியாவை ரசியா கைப்பற்றிய பிறகு போராட்டங்களும் ராணுவ மோதல்களும் டோன்பாஸ் பகுதிக்கும் (கிழக்கு உக்ரைன்) பரவின. ஏப்ரல் 2014 இல் ரசிய ராணுவம் மற்றும் கிளர்ச்சியாளர்களின் குழுக்கள் உக்ரைன் ராணுவத்தைத் தோற்கடித்து அங்குள்ள அரசு நிர்வாகத்தையும் சட்டமன்றத்தையும் கைப்பற்றின. மே 2014இல் டோன்பாஸ் பிராந்தியத்திலுள்ள டொனாட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதி வாழ் ரசியர்கள் தங்களை டொனாட்ஸ்க் மக்கள் குடியரசு மற்றும் லுஹான்ஸ்க் மக்கள் குடியரசுகளாக அறிவித்து கொண்டன. உக்ரைனில் தன்னாட்சி பிரதேசமாக இருந்த கிரீமியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டதுடன் உக்ரைன் நாட்டின் அங்கமான டோன்பாஸையும் (Donbass) 2014 முதல் ரசியா கட்டுப்படுத்தி வருகிறது.
இதன் பிறகு அமெரிக்க எடுபிடி உக்ரைன் ஆட்சிக்கும், டோன்பாஸ் குடியரசுகளுக்கும் இடையில் தொடர்ந்து இராணுவ மோதல்கள், கலவரங்கள் நடைபெற்று வந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். உக்ரைன் அரசுக்கும் டோன்பாஸ் பிரிவினைவாத குழுக்களுக்கும் இடையில் பெலாரசின் தலைநகரான மின்ஸ்க் நகரில் போர் நிறுத்த ஒப்பந்தம் செப்டம்பர் 2014ல் கையெழுத்தானது. இது மின்ஸ்க் ஒப்பந்தம் 1 (Minsk Agreement-I) என்று அழைக்கப்படுகிறது. ஆனால் இருதரப்பும் ஒப்பந்தங்களை மீறின. ராணுவ மோதல் தொடர்ந்தது. இருதரப்பிலும் மக்கள் கொல்லப்பட்டனர். அதிகளவில் ரசிய மக்கள் உக்ரைன் ஆட்சியால் கொல்லப்பட்டனர்.
இதனையடுத்து ரசியா, உக்ரைன் மற்றும் பிரிவினைவாத குழுக்களிடையே ஜெர்மனி, பிரான்ஸ் முன்னிலையில் (OSCE – Organisation for Security and cooperation in Europe சார்பாக) மின்ஸ்க்-II ஒப்பந்தம் பிப்ரவரி 2015 இல் கையெழுத்தானது. இருதரப்பிலும் ராணுவத்தைத் திரும்பப் பெறுவது; ரசிய ராணுவம் வெளியேறுவது; உக்ரைன் சட்டத்திற்கு உட்பட்டு டோன்பாஸை சுயாட்சி பிரதேசமாக அங்கீகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது; உக்ரைன் தனது எல்லை கட்டுப்பாட்டை முழுவதும் மீட்டெடுப்பது; டோன்பாஸில் தேர்தல் நடத்துவது போன்ற அம்சங்கள் அதில் இடம் பெற்றன. இந்த ஒப்பந்தமும் தோல்வியடைந்தது. ரசிய ராணுவம் அங்கிருந்து வெளியேற மறுத்து விட்டது. உக்ரைன் அரசுக்கும் டோன்பாஸ் குடியரசுகளுக்கும் இடையிலான அந்த ஒப்பந்தம் தன்னைக் கட்டுப்படுத்தாது என ரசியா அறிவித்தது. ரசிய ராணுவம் வெளியேறும் வரை அங்குத் தேர்தல் நடத்த முடியாது என உக்ரைன் அரசு கூறியது.
2019 இல் ஜெலன்ஸ்கி ஆட்சிக்கு வந்த பிறகு ரசிய மொழிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அமெரிக்க நேட்டோவின் எடுபிடியான ஜெலன்ஸ்கி உக்ரேனிய பெருந்தேசிய வெறியின் அடிப்படையில் மிகவும் பிற்போக்கான வலதுசாரி பாசிச ஆட்சியைத் தீவிரமாகக் கட்டியமைத்தார். உக்ரைன் ராணுவத்தில் நாஜிப்படை எனப்படும் அஜோவ் படைப்பிரிவு (Ajov Regime) உருவாக்கப்பட்டது.
கிரீமியாவைக் கைப்பற்றிய பின்பு அங்குள்ள செவஸ்டோபோல் (Sevastopol) என்ற துறைமுக நகரில் கப்பல் தளத்தை ரசியா நிறுவியது. கிரீமிய- ரசிய எல்லைகளைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, கிரீமியாவின் கடலை ஒட்டியுள்ள இந்த ராணுவ தளம் மூலம் மத்திய தரைக்கடல் நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது ரசியா. குறிப்பாக சிரியாவில் உள்ள தனது இரு இராணுவத் தளங்களுடன் (லடாக்கியா, டார்டஸ் ராணுவ தளங்கள் – Latakia and Tartus) செவஸ்ட்போல் ராணுவத் தளத்தை இணைத்து மத்திய தரைக்கடல் விரிவாக்கத்திற்குத் திட்டமிட்டது ரசியா.
கிரீமியாவில் ராணுவ தளத்தை நிறுவிய ரசியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்வினை ஆற்றியது நேட்டோ. 2019ல் பிரிட்டன் உக்ரைன் அரசுடன் பரஸ்பர ஒத்துழைப்பு உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டது. இதனடிப்படையில் கருங்கடல் மற்றும் அஜோவ் கடலில் கூடுதலாக இரண்டு கப்பல் துறைமுகங்களை (Naval ports) நிறுவ பிரிட்டன் முடிவெடுத்தது. இதனை அடுத்து உக்ரைனைக் கூடுதல் வாய்ப்புகளுக்கான கூட்டாளியாக (Enhanced opportunity Partner) 2020இல் நேட்டோ அறிவித்தது. இதற்குப் பிறகு கருங்கடலில் அமெரிக்காவும், பிரிட்டனும் போர்க்கப்பல்களை அதிகமாக நிறுத்த துவங்கின. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் ரசியா தனது விரிவாதிக்க நலன்களுக்குக் கூடுதல் அச்சுறுத்தலாகப் பார்த்தது. இதைத் தொடர்ந்து இருதரப்பும் போருக்கு தயாரிப்பு செய்துவந்தன.
கிரீமியா மற்றும் டோன்பாஸ் பிராந்தியங்களில் ரசியா தனது பொம்மை ஆட்சியை உருவாக்கியுள்ளது. கிரீமியாவை கைப்பற்றியதன் மூலம் அஜோவ் மற்றும் கருங்கடல்களை பகுதியளவு மட்டுமே கட்டுப்படுத்தி உள்ளது ரசியா. அஜோவ் கடல் மீதான முழு கட்டுப்பாட்டையும் அது பெற விரும்புகிறது. அதற்கு கிரீமியா, டோன்பாஸ் மட்டுமின்றி முழு உக்ரைனும் தனது கட்டுப்பாட்டில் வர வேண்டும் என்பதற்காகவே உக்ரைன் மீது யுத்தம் கொடுத்துள்ளது. அதன்மூலம் கருங்கடலையொட்டி கிரீமியாவில் மாபெரும் கடற்கரை மண்டலம் (Coastal Corridor) எனப்படும் செல்வாக்கு மண்டலத்தை நிறுவ ரசியா திட்டமிட்டுள்ளது.
இ) உக்ரைன் போரால் இலாபம் அடையும் ஏகாதிபத்திய நாடுகளின் இராணுவ கார்ப்பரேட்டுகள்
இரண்டு ஏகாதிபத்திய முகாம்களும் உக்ரைன் போருக்காக இதுவரை சுமார் ஒரு டிரில்லியன் டாலர் அளவிற்கு இராணுவத்திற்கு மட்டும் செலவிட்டுள்ளன.
உக்ரைனின் ஜெலன்ஸ்கி ஆட்சிக்கு (போர் துவங்கிய பிறகு) அமெரிக்கா 350 மில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ உதவிகளைச் செய்துள்ளது. டாங்கிகளை தகர்க்கும் ஜாவ்லின் ஏவுகணை உள்ளிட்ட பேரழிவு ஆயுதங்களை வழங்கியுள்ளது. இந்த நிதியைச் சேர்த்தால் கடந்த ஆண்டு மட்டும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பில் ராணுவ தளவாடங்களை உக்ரைனில் கொட்டி குவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 3 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்துள்ளது. ஐரோப்பிய யூனியன் 560 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுதங்களை வழங்கியுள்ளது. ஜெர்மனி மட்டும் 1000 டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் 500 ஸ்ட்ரிஞ்சர் (Stringer) வகை போர் விமானங்களையும் தந்து உதவியுள்ளது.
அமெரிக்காவின் ரேதியான் (Raytheon) எனப்படும் இராணுவ தளவாட கார்ப்பரேட் நிறுவனம் ஸ்ட்ரிஞ்சர் ஏவுகணைகளையும், லாக்கீடு மார்ட்டின் (Lockheed Martin) எனும் நிறுவனம் டாங்கிகளை வீழ்த்தும் ஜாவ்லின் ஏவுகணைகளையும் உக்ரைன் ஆட்சிக்கு வழங்கியுள்ளது. உக்ரைன் போர் துவங்கிய பின்பு இவற்றின் பங்குச் சந்தை மதிப்புகள் முறையே 16% சதமும், 3 % சதமும் உயர்ந்துள்ளன. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் இராணுவ கார்ப்பரேட் நிறுவனமான பி.ஏ.இ நிறுவனத்தின் (BAE Systems) பங்குகள் 26 % சதம் உயர்ந்துள்ளன.
ரேதியான் நிறுவனத்தின் முதன்மை அலுவலர் "கிழக்கு ஐரோப்பிய மற்றும் தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் போர் பதற்றங்களால் நாங்கள் அதிக இலாபம் அடைய வாய்ப்புள்ளது" என வெளிப்படையாகவே ஜனவரி'25 2022 அன்று கூறினார்.
உலகத்தின் மொத்த ஆயுத விற்பனையில் அமெரிக்கா (37%) முதல் இடத்திலும், ரசியா இரண்டாம் இடத்திலும் (20%) உள்ளன. மேற்குலக நாடுகளை விட ரசியாவின் ஆயுதங்கள் விலை குறைவாகவும், இயக்குவதற்கு எளிதாகவும் உள்ளதால் அதன் விற்பனை அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
ரசியாவின் இராணுவ-தொழிற்துறை கார்ப்பரேட் கூட்டமைப்பு (Russian Military Industrial complex) நிறுவனங்களான ரோஸ்டெக் (Rosetec), அல்மாஸ் ஆண்டே (Almaz Antey), யுனைடெட் ஏர் கிராப்ட் கார்ப்பரேசன் (United Air craft corp), யுனைடெட் ஷிப் பில்டிங் கார்ப்பரேசன் (United ship building corp) உள்ளிட்ட நிறுவனங்கள் உக்ரைன் மீதான ரசியாவின் போரால் இலாபம் அடைகின்றன.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்வதற்குச் சீனா ரசியாவிற்கு உதவி செய்வதாக உத்தரவாதம் தந்துள்ளது. காஜ்ப்ரோம் நிறுவனத்திற்கு ஆசிய நாடுகளின் சந்தைகளைத் திறந்து விடச் சீனா முடிவு செய்துள்ளது. காஜ்ப்ரோம் நிறுவனம் சோயுஸ் - வோஸ்டாக் (Soyuz - Wostok) என்ற எரிவாயு திட்டத்தை (மங்கோலியா வழியாகச் சீனாவை சென்றடைந்து ஆசிய நாடுகளுக்கு வினியோகம் செய்யும் திட்டம்) செயல்படுத்தச் சீனாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆசிய நாடுகளுக்கு இதன் மூலம் 50 பில்லியன் கியூபிக் மீட்டர் எரிவாயு விநியோகம் செய்யப்படும் எனச் சீனா கூறுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள ஜெர்மனி, பிரான்சு, துருக்கி ஆகிய வல்லரசு நாடுகள் (குறிப்பாக ஜெர்மனி), அமெரிக்கா மற்றும் ரசிய-சீன முகாம்களுக்கு இடையில் காய்களை நகர்த்தி தமது ஐரோப்பிய மேலாதிக்க நலன்களுக்கு திட்டமிடுகின்றன. அதன் பொருட்டே உக்ரைன் நேட்டோவில் இணைக்க அமெரிக்காவிற்கு ஒத்துழைக்கவில்லை. மேலும் மின்ஸ்க் 2015 ஒப்பந்தத்தில் முக்கிய பங்கு வகித்தன. ஜெர்மனி இராணுவத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு கூடுதலாக 8.5 இலட்சம் கோடி டாலர் இராணுவத்திற்கு நிதி ஒதுக்கியுள்ளது. இனி மொத்த தேசிய உற்பத்தியில் 2% சதத்திற்கு மேல் நிதி ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது. போருக்குப் பிறகு ஜெலன்ஸ்கி ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நேட்டோவில் இணைவதற்கான ஜெலன்ஸ்கியின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது. ரசியாவிலிருந்து ஜெர்மன் வங்கிகள் வெளியேறாது எனவும் ஜெர்மன் அறிவித்துள்ளது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கண்டன தீர்மானம் கொண்டு வந்த போது ரசியாவிற்கு ஆதரவு தரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் (சீனா, இந்தியாவுடன்) வெளிநடப்பு செய்தது. ரசியாவிலிருந்து எண்ணெய் - எரிவாயு இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்ததை அடுத்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் இரண்டும் அமெரிக்காவிற்கு எண்ணெய் - எரிவாயு ஏற்றுமதி செய்ய மறுத்துவிட்டன. உலகின் பெரும் எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா இனி எண்ணெய் வர்த்தகம் டாலருக்குப் பதில் சீனாவின் யென் பணத்தில் நடத்துவது குறித்து சீனாவுடன் பேசி முடிவெடுக்கப்படும் என அறிவித்துள்ளது. பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையில் முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன. ஒபெக் நாடுகள் ஷாங்காய் கூட்டமைப்புடன் நெருக்கம் காட்டுகின்றன. அமெரிக்க-நேட்டோ சீன-ரசிய முகாம்களுக்கு இடையில் மட்டுமின்றி அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலும் முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன.
தொகுத்துக் கூறுவதெனில்...
2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து அமெரிக்கா மீள முடியாமல் திணறி வருதல்; மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அதன் ஆட்சிக் கவிழ்ப்புகள் பொம்மை ஆட்சிகள் தோற்கடிக்கப்படுதல்; பயங்கரவாத எதிர்ப்பு போரில் 6 டிரில்லியன் டாலர் அளவுக்குச் செலவாகி நிதி நெருக்கடியில் மேலும் அமெரிக்கா மூழ்குதல்; அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் உருவாகி வந்த முரண்பாடுகள் கூர்மையடைந்ததாலும், ரசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடனான எண்ணெய் மற்றும் எரிவாயு உள்ளிட்ட வர்த்தக நலன்களில் இருந்தும் பிரான்சும் ஜெர்மனியும் உக்ரைனை நேட்டோவில் இணைக்க முட்டுக் கட்டை போடத் துவங்குதல்; ஆகவே நேட்டோவில் உக்ரைனை இணைக்கும் அமெரிக்காவின் முயற்சி கைகூடாமல் இழுபறி நீடிக்கத் துவங்குதல்; ரசிய-சீனாவின் ஷாங்காய் கூட்டமைப்பு உலக மேலாதிக்கத்திற்கு அமெரிக்காவுடன் நேரடியாக மோதும் அளவிற்கு பலமடைதல்; அமெரிக்கா இந்தோ பசிபிக் கொள்கையை உருவாக்குதல்; சிரியாவில் இரண்டு முகாமிற்கும் இடையில் பனிப்போர் தயாரிப்புகள் 2018 இல் துவங்குதல்; ஆப்கானில் இருந்து தோல்வி பெற்று வெளியேறிய போது, இனி நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபடாது என அமெரிக்கா அறிவித்தல் அதாவது அமெரிக்காவின் உலக மேலாதிக்க கனவு முற்றிலும் தகர்ந்து போன நிலைமை உருவாதல்; ஆப்கானில் நேட்டோவின் படுதோல்விக்குப் பிறகு நேட்டோ சார்பற்ற, அமெரிக்கச் சார்பற்ற தனி இராணுவக் கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டும் என ஜெர்மனியும் பிரான்சும் தனது ஐரோப்பிய மேலாதிக்க நலன்களிலிருந்து பேசத் துவங்குதல் அதாவது நேட்டோ பிளவுபடுவதற்கான நிலைமைகள் துவங்குதல்; நேட்டோவில் உக்ரைனை இணைக்கும் அமெரிக்காவின் முயற்சி ஜெர்மனி - பிரான்சின் முட்டுக் கட்டையால் முழுதும் தோல்வி அடைந்துவிடுதல்;
இந்த நிகழ்வு போக்குகளின் தொடர்ச்சியாகவே, நேட்டோ விரிவாக்க எதிர்ப்பு-ஜெலன்ஸ்கி ஆட்சியின் நாஜி நீக்கம் எனும் ஜனநாயக முகமூடியுடன் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை ரசியா தொடுத்துள்ளது. அது அமெரிக்க நேட்டோ மற்றும் ரசிய சீன முகாம்களுக்கு இடையிலான பனிப்போராக உக்ரைனில் வெடித்துள்ளது.
உக்ரைன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தத் தயாராகுமாறு ரசிய பாதுகாப்புத் துறைக்குப் போர் வெறியன் புதின் உத்தரவிட்டுள்ளார். போருக்கு எதிரான ரசிய மக்களின் போராட்டங்களைப் பாசிச முறையில் ஒடுக்கி வருகிறார். உக்ரைன் போருக்குப் பிறகு பாலஸ்தீனம், சிரியா, ஏமன், சோமாலியா நாடுகளில் அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகள் அதிகமாகியுள்ளன. தைவானில் சீனாவின் அத்துமீறலை எதிர்த்து அந்த நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு அமெரிக்கா ராணுவ உதவிகளை அதிகப்படுத்தியுள்ளது. தைவானையும் தென் சீனக் கடலையும் மையப்படுத்திப் போர் தயாரிப்புகள் நடந்து வருகின்றன. போஸ்னியா, கொசோவாவில் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ இருப்பு அதிகமாகியுள்ளது. ஜெலன்ஸ்கி உக்ரைனில் விமானங்கள் பறக்கத் தடை விதிக்குமாறு அதாவது உக்ரைனை No Fly Zone ஆக அறிவிக்குமாறு நேட்டோவைக் கோரினார். அதற்கு நேட்டோ மறுத்து விட்டது. அது நேரடி போருக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்கா நேரடிப் போருக்குத் தயார் இல்லாததற்கு காரணம் அதன் பொருளாதார பலவீனமே ஒழிய மக்கள் நலன்களிலிருந்து அல்ல. இதனிடையே மார்ச் 20 அன்று ரசியா டோன்பாஸ் பிராந்தியத்தில் விமானங்கள் பறக்க தடைவித்துள்ளது.
ஏகாதிபத்திய நாடுகள் உலகத்தை மறுபங்கீடு செய்து கொள்வதற்காக மூன்றாம் உலகப்போருக்குத் தயாராகின்றன. உக்ரைன் போர் அதன் முன்னோட்டமாகவோ அல்லது தொடக்கமாகவோ இருக்கலாம். இது உலகப் போராகப் பரிணமிக்குமா அல்லது தொடர்ந்து பனிப் போராக நீடிக்குமா என்பது ஏகாதிபத்தியங்களின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்ததாகும்.
(தொடர்ச்சி பகுதி -4 ல்)