தேர்தலுக்கு தேவைப்படாத கம்யூனிஸ்டுகள்!

துரை.சண்முகம்

தேர்தலுக்கு தேவைப்படாத கம்யூனிஸ்டுகள்!

" பெரும் கேட்டினும் சிறுகேடு நன்று!" என்று பாசிசத்தை எதிர்ப்பதற்கான செயல் தந்திரமாக தேர்தலுக்கு தேர்தல் இங்கிருக்கும் கம்யூனிசம் அற்ற கம்யூனிஸ்டுகள் கண்டுபிடித்தது கூட அவர்களுடைய சொந்த சரக்கல்ல. வரலாற்றில் ஹிட்லர் உள்ளிட்ட பாசிஸ்டுகளை எதிர்க்கும் காலகட்டத்தில் ஜெர்மன் 

சமூக ஜனநாயக தலைவர்கள் தொழிலாளர் வர்க்கத்தின் தலையில் கட்டிய தத்துவம்தான்.

தமிழ்நாட்டில் குறிப்பாக திமுகவை பாசிச எதிர்ப்புக்காக ஆதரிப்பது வாக்களிப்பது எனும் வகையில் இது வெளிப்பட்டது. தமிழ்நாட்டில் 

இதன் எடுப்பான 'இடதுசாரி சிந்தனையாளர்' மருதையன்.  

ஜெர்மானிய சமூக ஜனநாயக தலைவர்கள்  முதலாளித்துவ நெருக்கடி பாசிசமயம் ஆகும் இந்தக் கட்டத்தில் வேலை நிறுத்தம் செய்வது கூட கொடுங் குற்றம் என்பது போல வேலை நிறுத்தம் செய்யாதபடிக்கு தொழிலாளர்களை பின்னுக்கு இழுத்தனர். பாசிசத்தை தடுத்து நிறுத்துவதற்கான முதலாளித்துவ சக்திகளை வென்றெடுப்பதற்காக இப்படி செயல்படுவது அரசியல் தந்திரம் என்று வாதாடினார்கள். 

இங்கும் கூட திமுக ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட திராவிட கம்யூனிஸ்டுகள் காவி மதம் பார்ப்பனியம் என்று வாய் திறந்த அளவுக்கு நடைமுறையில் வெளிப்பட்ட சாம்சங் போன்ற தொழிலாளர் வர்க்க பிரச்சனைகளுக்கு, தனியார் மயத்தை எதிர்க்கும் அம்சம் கொண்ட தூய்மைப் பணியாளர் போராட்டத்தையோ இவர்கள் முன்னெடுத்து பேச தயார் இல்லாத ஜெர்மன் அற்பவாதிகளாக தம்மை குறுக்கிக் கொண்டனர்.

ஜெர்மன் அனுபவம் எதார்த்தத்தில் முதலாளித்து வர்க்கத்தின் மிதவாத பிரிவுகளுடன் ஒத்துழைக்கும் போக்கானது கடைசியில் ஒன்றன்பின் ஒன்றாக பிற்போக்கிற்கு விட்டுக் கொடுப்பதாகவும் பாசிச தாக்குதலுக்கு எதிரான தொழிலாளர் வர்க்க ஆற்றலை அணிதிரட்டாமல் வீணாக்கிய காலகட்டமாகவும் அமைந்தது. 

முதலாளித்துவ நாடாளுமன்ற ஆட்சிகள்தான் கொஞ்ச நஞ்ச சீர்திருத்தவாத ஜனநாயகத்திற்காவது அடிப்படை. அதையே இழந்து விட்டால் வலதுசாரிகள் ஆதிக்கம் பெறுவார்கள்! எனவே "பெரும் கேட்டுக்கு எதிராக சிறு கேட்டை அனுசரிப்பது" என்று நிலை எடுத்தனர். இந்த அரசியல் நடவடிக்கையின் காலப்பகுதி பாசிசம் வளர்ச்சி அடைவதற்கு உதவி புரிந்த செயலற்ற பின்னிழுக்கும் தன்மையில் போய் முடிந்தது.

இவைகளையெல்லாம் ஆராய்ந்த அன்றைய கம்யூனிஸ்ட் அகிலம் ( 1931 ) முதலாளித்துவ வர்க்கம் நெருக்கடியின் முழு சுமையையும் உழைப்பாளி மக்களின் தலைக்கு மாற்றிட முயல்வதையும் அரசியல் பிற்போக்கை தீவிரமாக்கும் பாசிச பாதையில் அது இறங்கி வருவதையும் எச்சரித்தது. மூலதனத்தின் தாக்குதலை எதிர்த்து முதலாளித்துவ சர்வாதிகாரத்தை அதன் எல்லா வடிவங்களிலும் எதிர்த்து முழு மூச்சுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட வேண்டும் என்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளை வலியுறுத்தியது.

தொழிலாளர் வர்க்கத்தின் உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டம் என்பதும் மக்களுக்கு புரட்சிகர அணிதரட்டலுக்கு வகை செய்யும் ஒரு வழிமுறையும் காரணியும் ஆகும் என்று அது வழிகாட்டியது. 

இந்த வழிமுறையிலான அரசியலால்  இட்லர் அரசின் தொழிலாளர் விரோத மற்றும் ஜனநாயக விரோத கொடுங்கோன்மைக்கு எதிராக மேலும் மேலும் அதிகமான தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளில் சேர்ந்தார்கள். இந்தக் கடுப்பில்தான் அவனுடைய இலக்கு முதன்மை எதிரிகள் கம்யூனிஸ்டுகள் என குறிவைக்கப்பட்டு பின்னர் பாராளுமன்ற கட்டிடத்தில் அவனே தீ வைத்துக் கொண்டு கம்யூனிஸ்டுகளின் மீது பழியை போட்டு வெறிகொண்டு வேட்டையாடினான்.

இந்தக் காலகட்டத்தில் முக்கியமாக கவனிக்கத்தக்கது தொழிலாளர் வர்க்க அரசியலை முன்னெடுத்து போராடி அணி திரட்டி அதன் மூலம் பாசிச எதிர்ப்பு இயக்கத்தில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின்

உறுப்பினர் எண்ணிக்கையும் அதிகரித்தது கட்சி விரிவடைந்தது என்பது ஒரு முக்கிய அடிப்படை விவரம். வரலாற்றின் முன்னுதாரணம் மிக்க சித்தாந்தப் போராளிகளையும் உலகிற்கு வழங்கியது.

ஜெர்மனியில் மட்டுமல்ல பாசிச எதிர்ப்பிலான தொழிலாளர் வர்க்க இயக்க அணி திரட்டலின் வீச்சு, செக்கோஸ்லோவேக்கியா பின்லாந்து போன்ற நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கையும் அப்போது அதிகரித்தது. இந்தோசீனாவிலும் மலேயாவிலும் ஐஸ்லாந்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகள்  நிறுவப்பட்டன. லத்தீன் அமெரிக்காவின் சால்வடார் பனாமா வெனிசுலா கொலம்பியா கோஸ்டாரிக்கா ஆகிய நாடுகளில் கூட சிதறுண்டு கிடந்த கம்யூனிஸ்ட் பிரிவுகள் கம்யூனிஸ்ட் கட்சிகளாக ஒருங்கிணைந்தனர். 

கம்யூனிஸ்ட் அகிலம் பற்றிய பல நூல்களில் அனுபவங்களில் இந்த உண்மைகளை காண முடியும்.

முக்கியமாக தொழிலாளர்கள் தொழிற்சங்க நிறுவனங்கள் அமைப்பாக்கப்படாத தொழிலாளர்கள் போன்ற பிரிவுகள் மத்தியில்  வலுப்பெறுவதன் முக்கியத்துவம் பாசிச எதிர்ப்பில் கம்யூனிஸ்டுகள் 

வலுப்பெறுவதற்கான அடிப்படையைக் கொடுத்தது. கொடுக்கிறது. 

இந்த அடிப்படையில் பாசிச எதிர்ப்புக்கான மாற்று இயக்கம் என்பது வர்க்க அரசியல் அடிப்படையில் கட்டப்பட வேண்டிய தேவையை இங்கும் நமக்கு நடைமுறை அனுபவங்கள் உணர்த்துகின்றன. 

பாசிச எதிர்ப்பு பம்மாத்து காட்டும் திமுகவோ புதிய வரவான தவெக வோ பாசிச சமரச சக்திகளாகவும் அதன் கீழான ஆட்சி அதிகார பங்கு பேர சக்திகளாகவும் இருக்கின்றன என்பதை அவர்களே அவ்வப்போது உணர்த்துகிறார்கள். 

ஆளை மாற்றுவதால் பிரச்சனை தீர்ந்து விடும் என்பது போன்ற கட்சி சார்ந்த பிரச்சனையாக இதை படம் காட்டுகிறார்கள். உண்மையில் இந்த அரசமைப்பு முறையை மாற்றுவதற்கான அரசியல் போராட்டத்தின் நிகழ்ச்சி நிரல் ஆக பாசிச எதிர்ப்பை மக்களிடம் வளர்த்தெடுக்கும் வர்க்க அரசியல் பார்வையே தாமதமானாலும் 

தவிர்க்க முடியாதது என்பதை நிலைமைகள் உணர்த்துகின்றன.

இதன் ஆதாரப் புள்ளியாக தொழிலாளர் வர்க்க இயக்க போராட்டங்களை எந்த அளவுக்கு கட்டியமைத்து போராடி வழிகாட்டுகிறதோ அந்த அளவுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் பாசிச எதிர்ப்புக்கான தனது அடித்தளத்தை வலுப்படுத்த முடியும் என்பதுதான் நாம் பொருள் கொள்ளப்பட வேண்டியது.

வாக்குரிமைக்கு கூட ஜனநாயகம் அற்ற இந்த தேர்தலில் போய் கிழித்து காலத்தை விரயப்படுத்துவதை விட இவ்வகையான அரசியல் போக்கில் அறுவடைகள் தாமதங்கள் ஆனாலும் அளப்பரிய பயன்களைத் தரக்கூடியது.

இந்த வகை தேர்தலுக்கு தேவையில்லை கம்யூனிஸ்டுகள்! என மக்களே தங்களுக்குத் தெரிந்த வழிமுறையில் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

துரை.சண்முகம்

https://www.facebook.com/100080904177819/posts/1142812035092258/?rdid=xFDYstAYEU259xYp

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு