கரூர் கூட்ட நெரிசலில் 41 மரணங்களுக்கு யார் பொறுப்பு?
அறம் இணைய இதழ்

கரூரில் நடந்துள்ள பெருந் துயரத்தில் விஜய்க்கு எதிரான கருத்துருவாக்கங்கள் ஆளும் கட்சியாலும், அவர்கள் ஆதரவாளர்களாலும் தீவிரமாக பரப்பப்படுகின்றன. இந்த சம்பவத்தில் விடை தெரியாத மர்மங்கள் உள்ளன. உண்மைகள் வெளிவர தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத விசாரணை அமைப்பின் தேவையை விவரிக்கிறார் வழக்கறிஞர் எம்.எல்.ரவி.
த.வெ.க தலைவர் விஜய் திமுகவை கடுமையாக சாடி வரும் நிலையில் – இருதரப்புக்கும் ஒருவருக்கொருவர் பகைமை முற்றியுள்ள அரசியல் சூழலில் – விஜய் பேசும் கூட்டத்தில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாடுகளை – குற்றம் சாட்டப்படும் திமுக அரசின் காவல் துறையே எப்படி விசாரிக்க முடியும்…? என்பது ஒரு புறமிருக்க, விஜய் தரப்பிலும் பல குறைபாடுகள் இருக்கிறது. அவரை ஆதரிக்கும் நோக்கிலும் நாம் இந்த சம்பவத்தை பார்க்கவில்லை. அதே சமயம் இந்த சம்பவத்தில் மறைக்கப்பட்ட பல விஷயங்களை வெளிக் கொணர வேண்டியுள்ளது.
த.வெ.க கட்சி தலைவர் விஜய் செப்டம்பர்- 27, அன்று கரூர் மாவட்டத்தில், அரசியல் பரப்புரை கூட்டம் நடத்த காவல் துறை முந்தின நாள் இரவு வரை இழுத்தடித்து, 21 கட்டளைகளுடன், மதியம் 3 மணியிலிருந்து 10 மணி வரை கூட்டம் நடத்த வேலுசாமிபுரத்தில் அனுமதித்தது.
அதன் அடிப்படையில் விஜய் பகல் 12 மணிக்கு வருவதாக X தளத்தில் பதிவிட்டிருந்தாலும், காலதாமதமாக இரவு 7 மணிவாக்கில் அவர் உரையாற்ற வந்தார்.
பத்தாயிரம் பேர் வருவார் என்று சொல்லிய நிலையில், முப்பதாயிரம் பேர் கூடியது, குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்டது. காலை 11 மணியிலிருந்து கூடிய கூட்டம் உணவு, குடிநீரின்றி தவித்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கிய நிலை..ஆகிய காரணங்களால் இந்த பெருந்துயரம் நடந்துள்ளது என காவல்துறை தெரிவிக்கிறது.
இந்த சம்பவம் குறித்து அறிய நாங்கள் ஒரு வழக்கறிஞர் குழுவாக நேரடியாக கரூர் களத்திற்கே சென்று மக்களிடம் பேசினோம். அங்கே மக்கள் பல வலுவான கேள்விகளை எழுப்பினர்.
மக்கள் எழுப்பிய சந்தேகங்கள்
விஜய்யின் வீதிக் கூட்டங்கள் ஏற்கனவே நான்கு மாவட்டங்களில் நடந்துள்ள வகையில், அவரது கூட்டத்திற்கு கட்டுக்கடங்கா கூட்டம் வருவதை காவல்துறை கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தவறியதும், குறுகலான சாலை வழங்கப்பட்டதும் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தின் இடையில் வலிந்து ஆம்புலன்ஸ் வாகனம் செலுத்தப்பட்டு, அது கூட்ட நெரிசலில் புகுந்த வகையில் 9 குழந்தைகள் 13 ஆண்கள் 18 பெண்கள் என்று மொத்தம் 41 பேர் உயிரிழந்தனர், பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் பெற்றனர்.
விஜய் கூட்டம் நடந்த இடத்தை சுற்றிலும் இரு சக்கர வாகனங்கள் ரோட்டில் நிறுத்தப்பட்டு இருந்ததில், அந்த வாகனங்களில் விழுந்தும், அந்த வாகனங்கள் மக்கள் மீது விழுந்தும் பலர் படுகாயமுற்றனர். கூட்டம் நடைபெறும் இடத்தில் வாகனங்களை அனுமதித்துள்ளது காவலர்களின் அலட்சியத்தை காட்டுகிறது.
சம்பவ இடத்தில் 500 காவலர்கள் பாதுகாப்புக்கு போடப்பட்டதாக சொல்வதை அங்குள்ள மக்கள் மறுக்கிறார்கள். மிகக் குறைவான காவலர்களே களத்தில் இருந்ததாக மக்கள் கூறுகின்றனர். காட்சிப் பதிவுகளும் இதையே சொல்கின்றன.
சம்பவ இடத்தில் சில உயர்தர தனியார் மருத்துவமனைகள் இருக்கும் போது சுவாசிக்க முடியாமல் உயிருக்கு போராடுபவர்களை உடனே முதலுதவி தர அவற்றை பயன்படுத்திக் கொள்ளாமல், தூர இருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனைவரையுமே தூக்கி செல்ல யார் கட்டளையிட்டார்கள்?
இது போன்ற எண்ணற்ற கேள்விகள், சந்தேகங்கள் உள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட அமைப்பே விசாரணை செய்ய முடியாது
இதையொட்டி கரூர் டவுன் காவல் நிலையம் ஆய்வாளர் அவர்கள் தன்னிச்சையாக, முதல் தகவல் அறிக்கை (FIR), பதிவு செய்துள்ளார். அவர் செய்த தவறை அவரே விசாரிப்பாரா?
முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் அவர்கள் நிர்வாகத்தை முடுக்கி விட்டும், இரவு 10.30 மணி அளவில் அவசரமாக தலைமை செயலகம் சென்று இதை விசாரிக்க முன்னால் நீதிபதி அருணா ஜெகதீசன் அவர்களை, தனி நபர் ஆணையமாக, நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
இறந்தவர்களுடைய சடலங்கள் இரவோடு இரவாக உடற் கூறாய்வு செய்து அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மலரஞ்சலி செலுத்துவதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா?
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் நான் லஞ்சம், ஊழல், காவல்துறை அத்துமீறல்கள் போன்ற பல்வேறு அநீதிகளை எதிர்த்து கட்சி பாகுபாடின்றி நீதி மன்றத்தை நாடி வழக்கு தொடுத்துள்ளவன் என்ற நிலையில், இந்த கரூர் மரணங்கள் குறித்து, ஊடகங்கள், வலைதளங்களில் பல்வேறு விதமான செய்திகள் நிலவி வருவதால், உண்மைத் தன்மையுடன் நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்பதால், முதலமைச்சர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல் துறை விசாரிப்பது சரியல்ல, சிபிஐ விசாரிக்க வேண்டும் என, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தேன்.
நீதி வழங்கப்படுவது மட்டுமல்லாமல், அது வழங்கப்படும் விதமும் வெளிப்படையாக காணத் தக்கதாக வேண்டும்” (Justice must not only be done but must also be seen to be done) என்னும் தத்துவத்தின் அடிப்படையில், கூட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்ததும், அனுமதி வழங்கியதும் காவல்துறை. எந்த ஒரு கூட்டத்திற்கும் அனுமதி வழங்கிய பின் பாதுகாப்பு அளிக்க வேண்டியது காவல் துறை. அவ்வாறு இருக்க இந்த மரணங்கள் ஏற்பட காவல் துறையின் குறைபாடுகளும் ஒரு காரணம்.
அனுமதி வாங்கிய இடம் நேரான ஒரு சாலை, இது போன்ற சூழலில் மக்கள் சிதறி ஓட வாய்ப்பில்லை (ஜாலின்வாலா பாக் நினைவுக்கு வருகிறது) என்பதாலும், காவல் துறையின் குறைபாடுகளை, அவர்களே விசாரிப்பது சரியல்ல.
கரூர் நெரிசல் பலியை விசாரிக்கவுள்ள சிறப்பு விசாரணை குழு தலைவர் அஸ்ரா கர்க், ஐ.ஜி
அவ்வாறு இருக்க காவல்துறையே வழக்கு பதிவு செய்து காவல்துறையே தன் மீதான விசாரணையை நடத்த முடியுமா, முடியாது. மேலும், த.வெ.க கட்சி விஜய், ஆளும் திமுக கட்சியை கடுமையாக சாடி வருவதால், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ஏதேனும் சூழ்ச்சிகளால் தவறுகள் நடந்துள்ளதா?, என்பதையெல்லாம் விசாரிக்க வேண்டிய கடமை உள்ளது. கூட்டம் நடைபெற்ற இடத்தில் மூடபடாமல் கால்வாய் இருந்துள்ளது, அதில் விழுந்தும் நிறைய பேர் இறந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.
இதை எல்லாம் கருத்தில் கொண்டு காவல்துறை விசாரித்தால் நேர்மையும் உண்மையும் வெளிப்படுமா? என்கின்ற ஒரு கேள்விக் குறி மக்கள் மனதில் இருக்கிறது. ஆகவே தான், நான் தேசிய மக்கள் சக்தி இயக்கம் சார்பில், சிபி ஐ விசாரணை தேவை என்று ( WP (MD) No 27563/2025) வழக்கு தொடர்ந்தேன்..
இதில் இரண்டு நிதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரணையில், காவல்துறை இன்னும் விசாரணையை முடுக்கி விடவில்லை அதற்குள் அவர்கள் மீது சந்தேகப்பட்டு நீங்கள் வேறு விசாரணை குழுவுக்கு மாற்ற வேண்டுமென்றால், எவ்வாறு சரியாக இருக்கும், அதனால் நாங்கள் இந்த வழக்கை ஏற்க வில்லை நிராகரிக்கிறோம் என்று டிஸ்மிஸ் செய்தனர்.
அவசர கதியில் அரசு நியமித்த ஒரு நபர் ஆணையம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்ட துப்பாக்கி சூடு தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கையில் 17 காவல்துறை அதிகாரிகள் மீது குற்ற அறிக்கை சமர்ப்பித்து நடவடிக்கை கோரியும் இது வரை இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கான செலவு 5.6 கோடி ரூபாயாகும். ஆனால், பயனற்றுப் போனது. அது போல தற்போதைய அறிக்கையும் இந்த அரசால் கிடப்பில் போடப்படாது என்பதற்கு உத்திரவாதமில்லை.
மேலும், அருணா ஜெகதீசன் ஒரு மாதத்திற்கு முன்பு தான் குண்டர் தடுப்பு சட்டம், தென் மண்டல ஆலோசனைக் குழு உறுப்பினராக இந்த அரசால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு இருக்க மீண்டும் அவருக்கே இன்னொரு பதவியா?, தனி நபர் ஆணையம், அதுவும் அவசர கதியாக இரவு 10.30 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. அவருக்கான அலுவலகம் எங்கு உள்ளது?, தொலைபேசி எண்கள் என்ன? உதவியாளர்கள் தரப்பட்டார்களா? என்று எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை. இவ்வாறு அவசரகதியாக நியமித்தது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. முன்னாள் நீதிபதிகள் பலர் இருக்க, இவரை மட்டுமே அரசு மீண்டும், மீண்டும் தேர்ந்தெடுப்பது ஏன்?
இதுபோக மதுரை கிளை உயர்நீதிமன்றம் இரண்டு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் காவல்துறை இன்னும் விசாரணை முடுக்கிவிடவில்லை என்று குறிப்பிடுகிறது.
நீதிபதியின் வரம்பு மீறிய பேச்சு;
அதே சமயம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்கள் வேறு ஒரு வழக்கை விசாரிக்கும் போது, த.வெ.க கட்சியை மிகவும் கடுமையாகச் சாடி, காவல் துறை விசாரணையை மெத்தனமாக, சரியாக நடத்தவில்லை. அதனால் சிறப்பு விசாரணை குழு அமைக்கபடுவதாக உத்திரவு பிறப்பிக்கிறார். அந்தக் விசாரணைக் குழுவின் உறுப்பினர் பெயர்களை அறிவித்து உடனடியாக விசாரணையை மாற்றவும் உத்தரவிடுகிறர். நீதிபதி செந்தில்குமார் தெரிவித்துள்ள ஒரு சார்பான கருத்துக்கள் விசாரணையின் போக்கை பாதிக்கும் என்ற கவலையும் ஏற்படுகிறது.
மேலும் தனி நீதிபதி செந்தில்குமார் அவர்களுடைய தாயார் ஒரு முன்னாள் திமுக எம்.எல்.ஏ என்றும் மேலும் அவரது மகள் திருமணத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்ட வீடியோ பல்வேறு ஊடகங்களிலும் வலை தளங்களிலும் செய்தி பரவி வருகிறது. இது மேலும் மக்களுக்கு உண்மை தன்மையும் நீதித் துறையின் மாண்பையும் கேள்விக் குறியாக்கி உள்ளது. இது போன்ற விசாரணைகளில் அரசு வழக்கறிஞரிடம், அதிகாரிகளின் பெயர் பட்டியலை பெற்று அதிலிருந்து தான் நீதிபதிகள் விசாரணை குழுவை தேர்தெடுப்பது வழக்கம். ஆனால், இங்கு நீதிபதி உடனடியாக பெயர்களை அறிவித்துள்ளது அவர் யாரோ எழுதிக் கொடுத்து அதை வாசிப்பது போல் உள்ளது.
பெருந்திரளான பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு அறிஞர்கள் த.வெ.க மீது குற்றம் சாட்டி கையெழுத்திட்ட கடிதம் வெளியிட்டுள்ளது மேலும் திமுக அரசின் மீது சந்தேகத்தை வலுவடைய செய்கிறது.
இவ்வாறான சூழலில், தமிழக அரசின் நடவடிக்கையை பார்க்கையில் நேர்மையும், உண்மையுமான விசாரணை நடைபெறுமா? என்னும் சந்தேகம் வலுவடைகிறது.
அதனால் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்தாலே நீதி வழங்கப்படுவதை காண முடியும் என வலியுறுத்தி நான் உச்ச நீதிமன்றம் செல்ல உள்ளேன்.
கட்டுரையாளர்; எம். எல். இரவி, மூத்த வழக்கறிஞர், தலைவர், தேசிய மக்கள் சக்தி இயக்கம்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/22944/karur-deaths-wnat-cpi-investigation/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு