தேர்தல் ஆணையத்தின் லெட்டர் பேடில் பாஜகவின் தாமரை!
அறம் இணைய இதழ்
இப்படியும் நடக்குமா? நடந்து இருக்கிறதே..! தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு அனுப்பியுள்ள அதிகாரபூர்வ கடிதத்தில் – அதாவது அதன் லெட்டர் பேடில் -பாஜக முத்திரை இருப்பது அதிர்ச்சியை மட்டுமல்ல, பாஜகவும் தேர்தல் கமிஷனும் வேறு, வேறல்ல என்பதற்கு அத்தாட்சியாகவும் மாறிவிட்டது. முழு விபரமாவது;
இந்த பாவச் செயலுக்கு அதிகாரப்பூர்வ விளக்கம் ஒன்றை வெளியிட்ட தேர்தல் ஆணையம், ”இது ஒன்னுமில்லைங்க நம்ம அலுவலகத்தில் உள்ள எழுத்தர் ஒருவர் செய்த ஒரு பிழை தான். அவரை வேலையில் இருந்து தூக்கிட்டோம். வேட்பாளர்களின் குற்றப் பின்னணிகளை வெளியிடுவது தொடர்பான வழி காட்டுதல்கள் குறித்துக் கோரப்பட்ட விளக்கத்தின் ஒரு பகுதியாக, பாரதிய ஜனதா கட்சி (பாஜக) தனது கட்சி முத்திரையுடன் கூடிய ஆவணத்தைச் சமர்ப்பித்தது. அது என்னடாவென்றால், அலுவலகத்தின் கவனக்குறைவு காரணமாக, அதே ஆவணம் அதே விளக்கத்திற்காக மற்ற கட்சிகளுக்கும் அனுப்பப்பட்டுவிட்டது” என ஒரு விளக்கம் தந்துள்ளது.

ஆனால், இதை நாம் பார்க்கும் போது தேர்தல் கமிஷன் லெட்டர் பேடில் பாஜக தான் எல்லா கட்சிகளுக்கும் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளதோ..? என்று கூடத் தோன்றுகிறது. ஏனென்றால், பாஜகவின் சின்னம் கொண்ட முத்திரை தேர்தல் அலுவலத்திற்கு எப்படி கிடைத்தது? என்ற கேள்விக்கு பதில் இல்லை.
”தேர்தல் ஆணையம் அந்த முத்திரை கொண்ட அரசியல் கட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டிய சிபிஐ(எம்) கேரளா, அந்தக் கடிதத்தின் படங்களைப் பகிர்ந்துள்ளது. மேலும், பாஜக குறைந்த பட்சம் தனக்கும், தேர்தல் கமிஷனுக்கும் “தனித்தனி மேசைகளைப் பராமரிக்கும் கண்ணியத்தையாவது கொண்டிருக்க வேண்டும்” என்று ஒரு நக்கல் அடித்துள்ளது.
சிபிஐ(எம்) கட்சியின் அதிகாரபூர்வ X பக்கத்தில் , “பாஜக தனது பாசாங்குகளை எல்லாம் கைவிட்டுவிட்டதா? இந்தியத் தேர்தல் ஆணையத்தையும், பாஜகவையும் ஒரே அதிகார மையம் தான் கட்டுப்படுத்துகிறது என்பது ஒன்றும் இரகசியமல்ல. ஆனாலும், குறைந்த பட்சம் இரண்டு தனித் தனி அலுவலகங்கள் என்ற மரியாதையையாவது கடைப் பிடித்திருக்க வேண்டும். இப்போது, அதுவும் தேவையற்றதாகப் போய்விட்டதோ..,” என்று கூறியுள்ளது.
வழக்கம் போல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த விவகாரத்திற்கு கடும் எதிர் வினையாற்றி உள்ளார். ”இந்த சம்பவத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தை இயக்குவது யார் அம்பலப்பட்டுவிட்டது” எனக் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் தன் முத்திரையை சர்வ சாதாரணமாக மாற்றிவிட்டதோ? தேர்தல் ஆணையத்தின் கடிதத்தில் பாஜக முத்திரையா? என்று ஆச்சரியப்படுகிறார்கள் அனைவரும்! மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எந்தப் பொத்தானை அழுத்தினாலும், தாமரை மின்னும் அதிசயத்தையும், வாக்குகள் பாஜகவிற்கே விழுவதையும் நாம் ஏற்கனவே பார்த்தவர்கள் தான். அப்போது, ”இல்லையில்லை. அது எங்கோ நடந்த ஒரு தற்செயல் நிகழ்வு” என்று சமாளித்ததைப் போலவே தற்போதும் சமாளித்துள்ளார்கள்.
பாஜக என்ற கட்சியும், தேர்தல் ஆணையமும் வேறு வேறல்ல . தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் தேர்தல் அணிகளில் பிரதானமானது. அதிகாரமிக்கது. உச்ச நீதிமன்றத்தால் கூட தட்டிக் கேட்க முடியாதது. அது பாஜகவின் வெற்றிக்காக செய்யும் அனைத்து விதிமீறல்களும் விதிகளுக்குள் கொண்டு வரப்பட்டுவிடும். அனைத்து குற்றச் செயல்களுக்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுவிடும்.
இதை எதிர்த்து கதறலாம், பதறலாம், அலறலாம்.. ஆனால், அவர்களை தடுக்க முடியாது. தண்டிக்கவும் முடியாது. இதுவே இன்றைய இந்தியாவில் எழுதப்படாத விதியாகிவிட்டது.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
https://aramonline.in/24310/election-commision-kerala-bjp/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு