மிரட்டும் லே ஆஃபுக்கு பின்னால் 2 காரணங்கள் - யார் மீது ‘தவறு’, யாருக்கு அதிக பாதிப்பு?
இந்து தமிழ்
ட்விட்டரில் திங்கள்கிழமை முழுவதும் இந்திய அளவில் #layoffs2023 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது. கடந்த ஆண்டு இறுதி தொடங்கி ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்ட நிறுவனங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்லும் நிலையில், இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகியது. ட்விட்டர் தொடங்கி பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, அமேசான், கோல்டுமேன் சாக்ஸ், மைக்ரோசாஃப்ட், விப்ரோ, கூகுள், ஷேர்சேட் இந்திய நிறுவனமான ஸ்விகி வரை லே ஆஃப் செய்த நிறுவனங்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் கடைசியாக திங்கள்கிழமை இணைந்தது ஸ்பாட்டிஃபை நிறுவனம்.
காரணத்தைத் தேடி... - வெறும் 38 தொடங்கி 11 ஆயிரம் பேர் பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு செய்ய அதுவும் ஏதோ நிலநடுக்கத்தின் அதிர்வலைகள் தொடர்வதைப் போல் ஆட்குறைப்பு செய்ய பல்வேறு காரணங்களையும் சுட்டிக் காட்டலாம். உலகம் முழுவதும் அதிகரிக்கும் பணவீக்கம், பொருளாதார மந்தநிலையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பேரினப் பொருளாதார சவால்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த பொருளாதார நுணுக்கங்களை எல்லாம் கடந்து லே ஆஃப் பொதுவெளியில் சில விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் ஒன்றுதான் ‘லே ஆஃப் யார் குற்றம்?’ என்பது.
லே ஆஃப் ஏன் அவசியமாகிறது? - இப்படி ஒரு கேள்வியை முன்வைத்தால் பெரும்பாலான நிறுவனங்களுக்கு தீர்க்கமான பதில் சொல்ல வாய்ப்பிருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். சிலர் ‘காஸ்ட் கட்டிங்’ அதாவது செலவினக் குறைப்பு எனக் கூறலாம். இன்னும் சிலர் லாபம் சரிவு எனக் கூறலாம். வேறு சிலர் பணியாளர்களின் செயல்திறனில் தொய்வு எனக் கூறலாம். ஆனால், இவை எல்லாம் நிறுவனத்திற்கு நிறுவனம் மாறும். இதே நிறுவனங்கள் அடுத்த ஆண்டே மீண்டும் முழுவீச்சில் வேலைக்கு ஆள் சேர்க்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
அப்படியென்றால் இதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்விக்கு, ஈரோடு கலை அறிவியல் கல்லூரி பொருளாதாரத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் பேரா.நா.மணி பதில் அளித்திருக்கிறார். அவர் கூறியது: “இப்போது நடைபெறும் லே ஆஃப்களுக்கு இரண்டு காரணங்களைச் சுட்டிக் காட்டலாம். ஒன்று, உலகம் முழுவதும் இன்று நிலவும் பொருளாதாரச் சூழல். இன்னொன்று, இயல்பான சுழற்சி.
முதல் காரணத்தை எடுத்துக் கொண்டால், 2009-ல் பொருளாதார தேக்கநிலை ஏற்படுவதற்கு முன்னர் உலக ஜிடிபி 4.48 சதவீதமாக (2006) இருந்தது. ஆனால், அதுவே 2019 கரோனா பெருந்தொற்று காலத்திற்குப் பின்னர் 2.61 சதவீதமாக சரிந்தது. கரோனா தடுப்பு மருந்துகள் வந்தபின்னர் மீண்டும் உலக வர்த்தகம் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்ட சூழலில் உலகப் பொருளாதாரம் மீண்டு வருகிறது. ஆனால், அது முழுமையாக புத்துயிர் பெற்றுவிடவில்லை. இன்னும் உலக ஜிடிபி புத்துயிர் பெறாத காரணத்தால் சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் மலை போல் நிற்கிறது. சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகள் 2022-23 நிதியாண்டில் உலக ஜிடிபி 2 சதவீதம் வரை முன்னேற்றம் காணலாம் என்று கணித்துள்ளன. ஆனால், இன்னும் சாதகமான போக்கு வரவில்லை.
உலகமயமாக்கலுக்குப் பின்னர் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் வீழ்ச்சியும் சர்வதேச பொருளாதாரத்தின் ஏற்படும் தாக்கங்களையும் சேர்த்தே பிரதிபலிக்கின்றன. கரோனா பெருந்தொற்றுக்குப் பின்னர் பெரும் பணக்கார நாடுகள் பல மந்தநிலையை தடுக்க, சர்வதேச பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிறைய ஸ்டிமுலஸ் பேக்கேஜ்களை அறிவித்தன. பல ட்ரில்லியன் டாலர்களை இந்த பேக்கேஜ் மூலம் பல்வேறு அரசுகளுக்கும் பகிர்ந்தளித்தன. ஆனால், அந்த ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் எல்லாம் யாரைச் சென்றடைந்தது என்பதுதான் கேள்வி. கரோனாவால் வேலையிழந்தவர்கள், தொழில் இழந்தவர்கள், குடும்பத்தை இழந்தவர்களுக்கு சென்று சேர்ந்ததா, இல்லை கார்ப்பரேட்டுகளுக்கு சென்றதா என்ற கேள்வி இருக்கிறது. பொருளாதார மந்தநிலை அச்சுறுத்தல் மேலோங்கி இருப்பதால் லே ஆஃப்கள் நடக்கின்றன.
இயல்பான சுழற்சி: இரண்டாவது காரணத்தை எடுத்துக் கொண்டால் இதுபோன்ற லே ஆஃப் என்பது பொருளாதாரத்தில் இயல்பான சுழற்சியாகவே அவ்வப்போது வந்து சென்றிருக்கிறது. அதுவும் தனியார், எம்என்சி நிறுவனங்கள் ஆதிக்கம் வந்த பின்னர் அதிகமாகவே இருந்துள்ளது. முன்பு மேலை நாடுகளில் மட்டுமே இருந்த இந்த ஹயர் அண்ட் ஃபயர் நடைமுறை உலகமயமாக்கலால் மூலை முடுக்குகள் எல்லாம் பிரதிபலிக்கிறது.
எம்என்சி நிறுவனம் என்றால் அதன் தலைமையகம் எடுக்கும் முடிவு, கிளைகளை எல்லாம் பாதிக்கும் தானே. அப்படித்தான் இந்த பாதிப்பும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பொருளாதார மந்தநிலை தரும் அச்சத்தால் முன்னெச்சரிக்கையாகவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் என்பதெல்லாம் அரசாங்க நிறுவனங்களிலேயே கேள்விக்குறியாகும் சூழலில் பன்னாட்டு நிறுவனங்களில் அதை எதிர்பார்க்க இயலாது” என்கிறார்.
தீர்வு தான் என்ன? - ஆனால், இதை இப்படியேயும் அனுமதிக்கக் கூடாது என்கிறார் பேராசிரியர் மணி. “உலகமயமாக்கலுக்கு முன்னர் இருந்த சூழலையும் இப்போதைய சூழலையும் ஒப்பிட வேண்டும். அன்றைய காலகட்டத்தில் இதுமாதிரியான ஆட்குறைப்பு நடவடிக்கைகள் எல்லாம் கிடையாது. அதற்கு முக்கியக் காரணம், தொழில்நுட்பங்கள் இல்லாதது. தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததால் எல்லாவற்றிற்கும் ஆள் பலத்தை நம்ப வேண்டியிருந்தது. ஆனால், தொழில்நுட்பம் வளர வளர பக்கவாட்டு சிதைவு போல் ஆட்குறைப்பும் வரத்தான் செய்யும்.
ஆனால், அரசாங்கம் ஒரு வெல்ஃபேர் ஸ்டேட்டாக இயங்க வேண்டும். ஒரு நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கையை எடுக்கிறது என்றால், அது எத்தனை ஆண்டுகள் அந்தத் தொழிலை செய்கிறது. எவ்வளவு லாபத்தை அது சம்பாதித்துள்ளது. அவற்றைப் பொறுத்து லே ஆஃப் செய்யப்படும் ஊழியர்களுக்கான பணப் பாதுகாப்பை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் சட்டதிட்டங்களை வகுக்க வேண்டும்.
இந்த மாதிரியான சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும்போது ஓவர் ஹையரிங் என்ற பிரச்சினைக்கும் தீர்வு காணலாம். ஒரு நிறுவனம் வளர்ந்து வரும்போது அது தன்னை பகட்டாக வெளிப்படுத்திக் கொள்ள நிலைநிறுத்திக் கொள்ள பல அடுக்குகளிலும் பலரை பணியமர்த்தலாம். ஆனால், இதுபோன்ற சர்வதேச நெருக்கடிகள் எழும்போது தன்னை தற்காத்துக் கொள்ள ஓவர் ஹையர் செய்யப்பட்டவர்களை தூக்கி எறியலாம். லே ஆஃப் வரையறுக்க கடுமையான சட்டங்கள் இருந்தால், இதுபோன்று கொத்துக் கொத்தாக ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கட்டுக்குள் கொண்டு வரலாம்" என்றார்.
அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய லேபர் ஃபோர்ஸை உருவாக்கக் கூடிய எம்எஸ்எம்இ எனப்படும் குறு, சிறு, நடுத்தர தொழில்களை அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அவற்றிற்கு நிறைய ஸ்டிமுலஸ் பேக்கேஜ்கள் அறிவித்து வளர்த்துவிட வேண்டும். அங்கே லே ஆஃப் பிரச்சினைகள் நிச்சயம் வரப்போவதில்லை” என்கிறார்.
பிரபலங்களின் பார்வை என்ன? - டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த அதிகாரி கஜேந்திர சிங் சாகெல் கூறுகையில், “எல்லா நிறுவனத் தலைவர்களும் ஏதோ ஒரு கட்டத்தில் பகுத்தறிவில்லாதவர்கள் போல் அளவுக்கு அதிகமாக பணியாட்களை எடுத்துள்ளனர். அவர்கள் தொழில் சுழற்சி என்பதை மறந்துவிட்டு செயல்பட்டுள்ளனர். அவர்களின் ஓவர் ஹையரிங் செயலை எப்படி நியாயப்படுத்த முடியாதோ, அதேபோல் அவர்களின் இந்த ஆட் குறைப்பு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த முடியாது” என்று கூறியுள்ளார்.
அவரின் கூற்றின்படி பார்த்தாலே தொழிலில் தவறான கணிப்புகளும், பகுத்தாய்வு செய்யாமல் வைக்கப்பட்ட எதிர்பார்ப்புகளும் இப்போது அணிவகுக்கும் லே ஆஃப் நடவடிக்கைகளுக்கு முக்கியக் காரணம்தான். மதர் டெய்ரி என்ற நிறுவனத்தின் சிஹெச்ஆர்ஓ ப்ரத்யும்னா பாண்டே, "அறநெறி சார்ந்து பார்த்தால் இத்தகைய லே ஆஃப்களை நாம் நியாயப்படுத்தவே முடியாது. தன் வரலாற்றில் டாடா நிறுவனம் இதுபோன்ற லே ஆஃப்களை செய்ததே இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
இங்கே ஒரு விஷயத்தை தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். பெரிய நிறுவனங்கள் பல முதலீட்டாளர்களை கொண்டிருக்கும். இன்றைய காலகட்டத்தில் பொருளாதாரம் இவர்களைப் போன்ற நிதி முதலாளிகளால் தான் நிர்ணயிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் மந்தநிலை வரலாம் என்ற பேச்சு அடிபட்டாலே போதும், நிறுவனங்கள் மீது நிதி முதலீடு செய்பவர்கள் அழுத்தம் தர ஆரம்பிப்பார்கள். அப்படியான சூழல் எழும்போது நிதி முதலீட்டாளர்களின் அழுத்தத்தால் உண்மையான நெருக்கடி நிலை வருவதற்கு முன்னரே லே ஆஃப் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
அண்மையில் கூகுள் நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. அதற்கு முன்னதாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டில் 6 பில்லியன் டாலர் அளவுக்கு முதலீடு செய்துள்ள பெரு முதலாளி கிறிஸ்டோபர் ஹான், சுந்தர் பிச்சைக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் “கூகுள் நிறுவனத்தின் பணியாட்களின் எண்ணிக்கை கவலை அளிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாது அந்தக் கடிதத்தில் ஹான் மேலும், அதிக எண்ணிக்கையில் ஊழியர்கள் இருப்பதால் கம்பெனியின் செலவினங்கள் அதிகரிக்கின்றன. சராசரியாக ஒரு கூகுள் ஊழியரின் சம்பளம் சந்தை நிலவரத்தைவிட பன்மடங்கு அதிகமாக இருக்கிறது. 2017 முதல் 2021 வரை நிறுவனம் வளர்ச்சிப் பாதையில் சென்றபோது ஆட்களின் மீதான செலவினம் பொருட்டாக இல்லை. ஆனால் இப்போது அது நிச்சயமாக பொருட்டாக இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
கூகுள் நிறுவனத்திற்கு இப்போது உலகம் முழுவதும் 1.87 லட்சம் ஊழியர்கள் இருக்கின்றனர். உலகளவில் மிகப் பெரிய ஊழியர்கள் பலம் கொண்ட நிறுவனங்களில் கூகுள் முக்கியமானதாக உள்ளது.
இப்போதைக்கு தொழில்நுட்ப ஜாம்பவான்கள் பல ஆட்குறைப்பு செய்வதற்கு முதலீட்டாளர்களின் நெருக்கடி, தொழிலதிபர்களின் தவறான கணிப்புகளும் பெரும் காரணம் என்று சொல்லலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
யாருக்கு அதிக பாதிப்பு? - "இந்த லே ஆஃப் நடவடிக்கைகளால் கனவுகளோடு வேலைக்குச் சேர்ந்த புதிய தலைமுறை பட்டதாரிகள், நடுத்தர வர்க்கத்தினர் தான் பாதிக்கப்படுவார்கள். அண்மையில் இரண்டு செய்திகள் படித்தேன். ஒரு ஐஐடி பட்டதாரி வேலைக்கு சேர்ந்த 6 மாதத்தில் லே ஆஃப் செய்யப்பட்டது ஒன்று. அது பற்றி அவர் லிங்க்டு இன்னில் புதிய வருடத்தை இப்படியும் ஆரம்பிக்கலாம் என்று எழுதியிருந்தார். இன்னொரு செய்தி அமெரிக்காவில் வேலைக்கு சேர்ந்த 2 ஆண்டுகளில் லே ஆஃப் செய்யப்பட்ட முதல் தலைமுறை பட்டதாரி பற்றியது. அவர் தனது வேலை இழப்பைப் பற்றி, நான் சமூக பொருளாதார தடைகளை உடைத்து வேலையில் சேர்த்தேன். இப்போது வேலையில்லை. மீண்டும் அடிப்படையிலிருந்து ஆரம்பிக்கப் போகிறேன் என்று பதிவு செய்திருந்தார்.
இந்த லே ஆஃப்களும் இப்படித்தான் வலிமையானவர்களுக்கு ஒரு தாக்கத்தையும் அடிப்படையில் இருந்து தங்கள் வாழ்வை கட்டமைக்க முயற்சி செய்பவர்களுக்கு ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தும். சாமானியர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவர். வருமானத்தை நம்பி வங்கிக் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் வைத்திருப்பவர்களுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அதுபோல், புதிதாக வேலையை எதிர்நோக்கியிருக்கும் இளைஞர்கள், கேம்பஸ் இன்டர்வியூவ்களுக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை மனதளவில் நொறுக்கும்" என்று பேராசிரியர் மணி கூறினார்.
இந்தக் கருணை போதுமா? - லே ஆஃப் அறிவித்துள்ள சில நிறுவனங்கள் சில கருணை அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. அவை ஓராண்டுக்கு மருத்துவக் காப்பீடு, 5 மாதங்களுக்கு சம்பளம், பயன்படுத்திய கேட்ஜெட்களை ஊழியர்களிடமே வழங்கிவிடுவது போன்று கருணை அறிவிப்புகள் உள்ளன. ஆனால், இந்தக் கருணை அறிவிப்புகள் மட்டும் போதுமா எனக் கேட்கின்றனர் பாதிக்கப்பட்ட ஊழியர்கள்.
உலகமே லே ஆஃப் பாணியில் செல்லும்போது 5 மாதங்களுக்குள் தாங்கள் வாங்கிய சம்பளத்திலேயே வேறு வேலை கிடைக்கும் என்பது என்ன நிச்சயம் எனக் கேட்கின்றனர். அதுமட்டுமல்ல, ஒரு நிறுவனம் லே ஆஃப் செய்த பின்னர் எந்த அடிப்படையில் அவர்கள் அறிவித்த சலுகைகளை உரிமையோடு கேட்க முடியும் என்றும் வினவுகின்றனர். ஒரு சில நிறுவனங்களை இவற்றை மின் அஞ்சல் மூலமாவாவது குறைந்தபட்சம் உறுதிப்படுத்தும் மற்ற நிறுவனங்கள் இதை வாய் வார்த்தையாக சொல்கின்றன என்பது ஊழியர்களின் வேதனையாக உள்ளது. அரசாங்கம் முறையாக தலையிட்டு ஒரு திட்டத்தை வரையறுக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகவும் உள்ளது.