இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் - இறுதி பகுதி - 4

சுந்தரசோழன்

இராமாயணத்தை மறுக்கும் தொல்லியல், வரலாற்றுச் சான்றுகள் - இறுதி பகுதி - 4

அயோத்திக்கும் சரயு நதிக்கும் தொடர்பில்லை

சரயு நதி இராமாயணத்துடன் பிரிக்க முடியாதவாறு இணைந்திருக்கும் நதி ஆகும். இராமன் பிறந்ததாகக் கூறப்படும் அயோத்தியானது இந்நதிக் கரையில் தான் அமைந்துள்ளதாக இராமாயணம் கூறுகிறது. இன்றைய அயோத்தியைச் சுற்றி ஓடும் நதிக்குச் சர்யு என்னும் பெயரும் உண்டு.

இராமனின் சகோதரனாகிய லட்சுமணன் இந்நதியில் மூழ்கி உயிரிழந்தார் என்றும் பின்னர் இராமனும் இந்நதியில் குதித்து இறந்தார் என்றும் பழங்கதைகள் கூறுகின்றன. இவ்வாறு இராமாயணக் கதை மாந்தர்களுடன் நெருங்கிய தொடர்புடையதாக இருந்த சரயுநதி, உத்திரப்பிரதேசத்தில் அயோத்தி என்றழைக்கப்படும் நகரைச் சுற்றி ஓடும் அதே நதிதானா என்பது நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் ஆய்வாளர்கள் இதனை மறுத்துள்ளனர் என்பது ஆர்வமூட்டும் விசயமாகும்.

ரிக்வேத காலம் குறித்து விரிவாக ஆய்வு செய்த இயற்பியல் விஞ்ஞானியும், ஆய்வாளருமாகிய ராஜேஷ் கொச்சார் யமுனை நதிக்கு மேற்குப் பகுதியில் தான் இந்நதியை அடையாளம் காண முயற்சிக்க வேண்டும் என்றார். யமுனைக்கும் சிந்து நதிக்கும் இடைப்பட்ட பகுதியில் பாயும் நதிகள் அனைத்தும் அடையாளம் காணப்பட்டு விட்டது என்பதால் அதற்கும் மேற்கில் பாயும் ஏதோ ஒரு நதி தான் இந்த சரயுவாக இருக்க முடியும் என்கிறார். அவர் கூறுவது முற்றிலும் ஏற்கத்தக்கதே ஆகும்.

The Vedic People Their His- tory and Geography ल ला ஆய்வு நூலில் இது பற்றி விரிவாக விளக்கியுள்ள அவர், இராமாயணத்தில் குறிப்பிடப்படும் சரயு என்னும் நதி, ஜெண்ட் அவெஸ்தாவில் ஹரோயு என்று குறிப்பிடப்படும் நதியே என்கிறார். இன்றைய ஆப்கானிஸ்தானத்தில் பாயும் அந்நதி ஹரிருத் என்று அறியப்படுகிறது !! ஆகவே, இராமாயணக் கதைக்கும் அதில் இடம் பெற்றுள்ள சரயுநதி மற்றும் அதன் கரையில் அமைந்துள்ள அயோத்தி ஆகியவற்றுக்கும் இன்றைய அயோத்திக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது என்ற முடிவுக்கு இது இட்டுச் செல்கிறது.

இராமாயணம் பல்வேறு பழங்குடி மக்களைப் பற்றியும் இராமாயணக் கதை மாந்தர்களுக்கும் அவர்களுக்குமான தொடர்புகள் அல்லது உறவுகள் குறித்தும் பல சமயங்களில் குறிப்பிடுகிறது. இவற்றைச் சுட்டிக் காட்டும் ஆய்வாளர் ராஜேஷ் 'இன்றைய இந்தியாவை கொச்சார், அவை இன்றைய இந்தியாவை விட ஆப்கானிஸ்தானுக்குப் பொருந்திப் போவதைச் சுட்டிக் காட்டுகிறார்.

இராமாயணத்தின் கதைக்கருவானது அடிப்படையில் வாய்மொழிக் கதைப்பாடலாக இருந்த ஒன்று எனப் பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கதையானது பல நூற்றாண்டுக் காலமாக மாற்றியும் திருத்தியும் தொகுத்தும் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டு அதன் தற்போதைய வடிவத்தைப் பெற்றுள்ளது. காலப்போக்கில் புதிய தேவைகளுக்கு ஏற்றவாறு புத்தாக்கங்களும் செய்யப்பட்டது. ஆகவே, அது ஒரு குறிப்பிட்ட காலம் அல்லது குறிப்பிட்டபுவியியல் பரப்பில் நடைபெற்ற உண்மைச் சம்பவங்களின் அணிவகுப்பைக் குறிப்பது அல்ல.அவ்வாறுமறுவார்ப்புச்செய்யப்பட்ட கதையும் அதன் உண்மையான புவியியல் பரப்புக்குத் தொடர்பற்ற வகையில். புதிய தேவைகளுக்காகவும் புதிய நிலப்பரப்புகளில் அதன் கதைப்பரவலுக்காகவும் அது மறுகட்டமைப்புச் செய்யப்பட்டது.

இலங்காபுரி என்பது இன்றைய ஸ்ரீலங்கா அல்ல

இறுதியாக,இராமாயணத்தில் இலங்கை குறித்து இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படும் குறிப்புகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை ஆகும்.

இராவணன் ஒரு தீவை ஆட்சி செய்து வந்ததாகவும் அது லங்கா அல்லது லங்காபுரி என அழைக்கப்பட்டதாகவும் வால்மீகி இராமாயணம் கூறுகிறது. ஆனால் பண்டைய குறிப்புகளின் படி அது இன்றைய சிறீ லங்காவைக் குறிப்பிடுவது ஆகாது. இன்றைய சிறீ லங்காவைப் பண்டைய இலக்கியங்கள் தாம்ரபர்ணி அல்லது சிம்ஹௗ என்று தான் குறிப்பிட்டனவே தவிர, அதைக் குறிக்கும் விதமாக லங்கா என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை என்பதை தொல்லியலாளர் எச்.டி. சங்காலியா சுட்டிக் காட்டுகிறார். அது மட்டுமின்றி, பிருஹத் சம்கிதை, பாகவத புராணம், மகாபாரதத்தின் வட இந்தியப் பதிப்பு மற்றும் வனபர்வம் ஆகியவற்றில் சிம்ஹௗ மற்றும் லங்கா ஆகிய இரண்டும் தனித்தனியாகப் பயன்படுத்தப் பட்டிருப்பது குறித்து நமது கவனத்தை ஈர்க்கிறார். (The Ramayana in Historical Perspective, H.D. Sankalia, McMillan India Limited, 1982, Page 150)

லங்கா என்பது இன்றைய சிறீ லங்காவைக் குறிக்கும் விதமாக வால்மீகி இராமாயணத்தில் சில பிற்காலக் குறிப்புகள் இருப்பினும், அவை பிற்காலத்தில் உள்ளே நுழைக்கப்பட்டவை என்கிறார் சங்காலியா. கி.பி. 10ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேடுகளில் கொங்கணிக் கடற்கரைப் பகுதிகள் லங்கா அல்லது சிம்ஹ எனக் குறிப்பிடப் பட்டுள்ளதைக் குறிப்பிடும் அவர், குறிப்பிட்ட சித்தரிப்புக்குரிய தீவுகள் அல்லது தனிமைப் பகுதிகள் சிம்ஹள அல்லது லங்கா என்றழைக்கப்பட்டதாகக் கூறுகிறார். இன்றும் கூட மத்தியப் பிரதேசத்தில் லங்கா என அழைக்கப்படும் பல பகுதிகள் இருப்பது பற்றி அவர் கூறி யிருப்பதும் உற்று நோக்கத் தக்கது. மிகச் சுருக்கமாகச் சொல்வதானால், இராமாயணக் கதை நடந்ததாகச் சொல்லப்படும் காலத்தில் (அதாவது அது ஒரு வேளை உண்மையாக நடந்தது என்பதை ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொண்டால்) மட்டுமின்றி, கி.பி. நான்காம் நூற்றாண்டுக்கு முன்பு வரை சிலோன் தீவானது சிம்ஹ அல்லது லங்கா என்றழைக்கப் படவில்லை, இராமாயண லங்காபுரியை இன்றைய இலங்கையுடன் தொடர்பு படுத்துவதற்கு பண்டைய சான்றுகளில் இடமேயில்லை.

வால்மீகி இராமாயணத்தில் லங்கா எனக் குறிப்பிடப்பட்ட நிலப்பகுதியைப் பல்வேறு சான்றுகளின் அடிப்படையில் ஆய்வு செய்த அவர், அது மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் அல்லது அதை ஒட்டிய எதோ ஒரு மலைப் பகுதியில் அமைந்த இடமாக இருக்க வேண்டும் என்கிறார். இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள இடப்பெயர்களைப் புவியியல் பார்வையில் ஆய்வு செய்த பரமசிவ ஐயர் என்பவரும் கிட்டத்தட்ட இதே கருத்தைக் கூறியிருப்பதும் குறிப்பிடத் தக்கது. மேலும் கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் சிலோன் தீவானது லங்கா என அழைக்கப்படத் தொடங்கியது, நாகார்சுனகொண்டா கல்வெட்டுகள் மற்றும் அசோகனின் பாறைச் சாசனங்கள் ஆகியவற்றில் இன்றைய சிறீ லங்கா தாம்ரபர்ணி அல்லது சிம்ஹௗ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார் சங்காலியா. அது மட்டுமல்ல. சிலோனின் துவக்ககால மத இலக்கியங்களில் இராமர் மற்றும் இராவணன் பற்றிய எந்தக் குறிப்புகளும் கிடையாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டத் தவறவில்லை!

இராமாயணம் வாய்மொழி கதையே

இந்துக்களின் புனித காவியங்களில் ஒன்றும் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் மிக முக்கியமான ஒரு அவதாரம் எனக் கூறப்படும் இராமனின் கதையைக் கூறும் இராமாயணம் குறித்த இத்தனைக் குழப்பங்களுக்குக் காரணம் தான் என்ன?

இராமாயணத்திற்கு அடிப்படையாக அமைந்திருந்த தொல்கதை ஆப்கானிஸ்தானத்து புவியியல் பரப்பை மையமாகக் கொண்டது என்பதை ராஜேஷ் கொச்சார் இராமாயணத்தின் உள்ளார்ந்த சான்றுகளின் உதவியுடன் சுட்டிக் காட்டுகிறார். பின்னர் இன்றைய கங்கை நதிப் பகுதியில் நடைபெற்றதாக மறுகட்டமைப்பு செய்யப்பட்டதே அதில் இடம் பெற்றுள்ள புவியியல் குறிப்புகள் தவறான தகவலைத் தருவதற்குக் காரணம் என்கிறார் அவர்.

இராமாயணத்தில் நதிகள் பற்றி இடம் பெற்றுள்ள குழப்பங்கள், அவரது கூற்று உண்மையெனத் தெளிவாகக் காட்டுகின்றன. அதைப் போலவே இராமாயணத்தில் இடம் பெற்றுள்ள சம்பூகன் வதம் போன்ற வர்ணாசிரமத்தை வலியுறுத்தும் வகையான கூறுகள், அது பிற்காலத்தில் பிராமணமயமாக்கப்பட்ட போது திணிக்கப்பட்டவையாக இருக்கும் என்று கூறலாம்.

இந்தச் சான்றுகள் அனைத்தும் சுட்டிக் காட்டுவது ஒன்றை மட்டுமே.

இறுதியாகச் சொல்வதானால், இராமாயணத்தில் உண்மை வரலாறு இல்லை.

உண்மை வரலாற்றில் இராமாயணத்திற்கு இடம் இல்லை.'

இராமாயணத்தை உண்மையென நிரூபிக்கும் விதமான நம்பகமான, கேள்விக்கிடமற்ற தொல்லியல் சான்றுகள் எதுவும் கிடையாது. அது காலம் காலமாகப் பேசப்பட்டு வரும் மதவியல் புனைகதை மட்டுமே ஆகும். அதன் அடிப்படைக் கூறுகள் தொல்லியல் மற்றும் வரலாற்றுக் காரணிகளால் தெளிவாக மறுக்கப் பட்டுள்ளன.

(நிறைவு)

(சுந்தரசோழன்)

- ஜனசக்தி

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு