அதானிக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் தமிழ்நாடு, கேரள அரசுகள்
வினவு தளம்
மோடி-ஷாவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இக்கட்சிகளே அதானிக்கு சேவையாற்றுவதன் மூலம், தங்கள் மாநிலங்களில் பாசிசக் கும்பலின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் அடித்தளமிடுகிறார்கள்.
பாசிசத்தை எதிர்ப்பதாகக் கூறும் தி.மு.க., சி.பி.எம். கட்சிகள் தாங்கள் ஆளும் மாநிலங்களில் பாசிச சர்வாதிகாரத்திற்கு காரணமாக இருக்கும் அதானியுடன் ‘பொருளாதார வளர்ச்சி’ என்ற பெயரில் கூடிக் குலாவுகின்றன. கேரளாவில் விழிஞ்சம் துறைமுகத்திற்காக போராடிய மக்களை ஒடுக்கியதிலேயே சி.பி.எம். கட்சியின் பாசிச எதிர்ப்பு சாயம் வெளுத்துப் போனது. தி.மு.க-வின் சாயமும் வெளுக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை அண்மையில் தமிழ்நாட்டில் நடைபெறும் நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.
கடந்த ஜூலை மாதம் 9-ஆம் தேதி, அதானி குழுமத்தின் தலைவரும் ஒன்றியப் பிரதமர் மோடியின் நாயகனான அதானி தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். சென்னையில், தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனை அதானி சந்தித்து சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகின. தி.மு.க-வானது மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளை எதிர்த்து வருவதாக தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்துவரும் சூழலில், அதானியே நேரடியாக வந்து சபரீசனை சந்தித்து சென்றது ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளானது.
சபரீசனுக்கும், அதானிக்கும் இடையே, தமிழ்நாடு அரசு அதானி நிறுவனத்தின் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுமதி வழங்கியிருப்பது; தமிழ்நாட்டின் பல துறைகளில் சுமார் நாற்பதாயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு செய்ய அதானி நிறுவனம் அரசுடன் ஒப்பந்தமிட்டிருப்பது; இந்தியா-ரஷ்யா இடையேயான கிழக்கு கடல்வழிப்பாதைத் திட்டத்திற்காக (Eastern Maritime Corridor) காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்குவது ஆகியவை குறித்து பேச்சுவார்த்தைகள் நடந்ததாகக் கூறப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் போருக்கு பிறகு, 2021-ஆம் ஆண்டில் ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருள்களின் மதிப்பு 8.7 பில்லியன் டாலரிலிருந்து 2023-ஆம் ஆண்டில் 67.1 பில்லியன் டாலராக அதிகரித்துள்ள நிலையில், பயணத் தூரத்தை 10,458 கி.மீ. ஆகக் குறைத்து இறக்குமதியை மேலும் அதிகரிக்கவே கிழக்கு கடல்வழிப்பாதைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், அதானி தி.மு.க-வைச் சேர்ந்த தலைவர்களையே சந்தித்து பேச முயன்றார்; ஆனால், அத்தகைய சந்திப்புகள் தி.மு.க. கட்சியின் மீதும் ஆட்சியின் மீதும் மக்களுக்கு அதிருப்தியை உருவாக்கும் என்பதால் தி.மு.க. தலைமை அதை மறுத்துவிட்டதாகவும், அதன் பிறகே அதானி சபரீசனை சந்தித்து பேசியதாகவும் கூறப்படுகிறது. தி.மு.க. அரசின் செயல்பாடுகளும் இதற்கேற்பவே இருக்கின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழ்நாட்டின் பல துறைகளில் அதானி குழுமம் ஆதிக்கம் செலுத்துவதற்கு வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது.
தமிழ்நாட்டிற்குள் மெல்லப் படரும் அதானியின் ஆக்டோபஸ் கரங்கள்
கடந்த 2012-16 வரையிலான அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதானி நிறுவனத்திடமிருந்து 1.19 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டது. அதானி நிறுவனம் 2,332 ரூபாய் மதிப்பிலான ஒரு மெட்ரிக் டன் நிலக்கரியை மூன்று மடங்கு விலை உயர்த்தி 7,650 ரூபாய்க்கு விற்றது. மேலும் 3,500 கிலோ கலோரியான நிலக்கரியின் தரத்தை 6,000 கிலோ கலோரி என உயர்த்தி விற்பனை செய்தது. இதன் மூலம் அதானி நிறுவனம் ரூ.6,000 கோடி முறைகேடுகளில் ஈடுபட்டது அம்பலமாகியது. இந்த முறைகேட்டில் அதானி நிறுவனத்தின் பங்கு மட்டும் ரூ.3000 கோடி என அறப்போர் இயக்கம் குற்றஞ்சாட்டுகிறது.
எதிர்க்கட்சியாக இருந்த போது அதானி நிறுவனத்தின் நிலக்கரி முறைகேடுகள் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “குஜராத்தைச் சார்ந்த அதானி நிறுவனத்தின் பின்னணிக் கதையையும் அதற்கும் பா.ஜ.க-வுக்கும் உள்ள நெருக்கமானத் தொடர்பையும் நாடே அறியும்” என்றெல்லாம் கூறி “சிபிஐ விசாரணையும்” கோரியிருந்தார். 2018-இல் அறப்போர் இயக்கமும் நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் குறித்து விசாரிக்குமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தது. ஆனால், 2021-இல் ஆட்சிக்குவந்த தி.மு.க. அந்தப் புகாரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அப்படியே கிடப்பில் போட்டது.
“2018-இல் அளித்த இந்தப் புகாரை விசாரிக்கலாமா? என அனுமதி கேட்டு பிப்ரவரி 2023-இல் தான் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது லஞ்ச ஒழிப்புத்துறை. அவர்களின் கடிதத்தை ஒன்றரை ஆண்டு கிடப்பில் போட்ட தி.மு.க. அரசு, அண்மையில்தான் விசாரிக்க ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அதுவும் அறப்போர் இயக்கமும், சமூக ஆர்வலர்களின் தொடர் வலியுறுத்தல்களாலே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. எனினும், இந்த முறைகேடு புகாரில் இன்னும் முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யப்படவில்லை” என்று கூறுகிறார் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன்.
இந்த நிலையில் அதானி-சபரீசன் சந்திப்பு நிகழ்ந்துள்ளதால் லஞ்ச ஒழிப்புத்துறையால் அதானி நிறுவனத்தின் மீதான நிலக்கரி இறக்குமதி முறைகேடுகள் புகார் முறையாக விசாரிக்கப்படுமா? என்று ஜனநாயக சக்திகள் பலர் கேள்வியெழுப்புகின்றனர்.
மேலும், ஜனவரி 9-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதானி குழுமத்துடன் பல ஒப்பந்தங்களை செய்திருக்கிறது தி.மு.க. அரசு. இம்மாநாட்டில், பசுமை எரிசக்தி துறையில் ரூ.25,000 கோடி, தரவு மையங்களில் ரூ.13,200 கோடி, சிமெண்ட் உற்பத்தியில் ரூ.3,500 கோடி, குழாய் எரிவாயு விநியோகத்தில் ரூ.1,568 கோடி என முதலீடு செய்ய தமிழ்நாடு அரசுடன் ஒப்பந்தமிட்டுள்ளது, அதானி குழுமம். இந்த ஒப்பந்தங்கள் மூலம் மேற்கண்ட துறைகளில் தன்னுடய ஏகபோக ஆதிக்கத்தை நிறுவுவதற்கே அதானி நிறுவனம் முயல்கிறது என்பதை தி.மு.க. அரசு அறிந்திருந்த போதிலும், அதானி நிறுவனத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.
மேலும், காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் அழியும்; சென்னை பாதிப்புக்குள்ளாகும் என்று தெரிந்துதான், அதானி நலனுக்காகவே காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்யவும் முயல்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மக்கள் விரோதத் திட்டங்களை அமல்படுத்தமாட்டோம் என்று வாக்குறுதியளித்த தி.மு.க., பரந்தூர் விமான நிலையம் போன்ற கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராக இரண்டு ஆண்டுகளாகப் போராடி வரும் விவசாயிகளுக்குத் துரோகமிழைக்கிறது. பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராகப் போராடும் மக்கள் ஆந்திராவிற்கு அகதிகளாகப் குடிபெயர்வோம் என்று அறிவித்த பிறகும் இத்திட்டத்தை தி.மு.க. அரசு கைவிடவில்லை.
ரஷ்யாவிலும், இலங்கையிலும் தனது எஜமானர் அதானிக்காக மோடி ஒப்பந்தங்களைப் பெற்றுத் தருகிறார்; ஸ்டாலினோ, தமிழ்நாட்டில் அதானிக் குழுமத்திற்காக நிலங்களைக் கையகப்படுத்துவது போன்ற கட்டுமானங்களை மேற்கொள்கிறார்.
அதானி – கேரளாவின் ‘வளர்ச்சி’ நாயகன்
அதானி சேவையில் தி.மு.க. அரசையே விஞ்சிவிட்டது நவகேரள மாடலின் சி.பி.எம்-இன் விஜயன் அரசு. அதானியின் நலனுக்காகத் தி.மு.க. அரசு செயல்படுகிறது என்றபோதிலும், தமிழ்நாட்டு மக்களுக்கு மோடி- அதானி கும்பலின் மீதுள்ள வெறுப்பின் காரணமாக தி.மு.க. அமைச்சர்கள் அதானியை ஆதரித்து வெளிப்படையாக பேசுவதில்லை. ஆனால், கேரள அரசின் முதல்வர் பினராயி விஜயனும், அமைச்சர்களும் அதானியை ‘வளர்ச்சி’யின் நாயகனாகப் புகழ்கின்றனர்.
கடந்த ஜூலை 11 அன்று, 1950 கண்டெய்னர்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட சார் பெர்னாண்டோ என்ற கப்பல், முதல் சரக்கு கப்பலாக விழிஞ்சம் துறைமுகத்துக்கு வந்தது. இந்த சரக்குக் கப்பலுக்கான வரவேற்பு விழா மற்றும் துறைமுகத்துக்கான அதிகாரப்பூர்வமான செயல்பாடுகளுக்கான திறப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பினராயி விஜயன், “நமது நீண்ட கால கனவு நனவாகி இருக்கிறது. துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் உந்து சக்தியாகும். விழிஞ்சம் துறைமுகத்தின் மூலம் இந்தியா உலக வரைபடத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைத்த அதானிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அதானியை வாழ்த்திப் பேசினார்.
பா.ஜ.க- தி.மு.க-சி.பி.எம் கட்சிகளுக்கு சித்தாந்தம், கொள்கை ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக கூறினாலும், வர்க்கப்பாசத்திலும், சேவையிலும் வேறுபாடில்லை என்பதையே இவர்களின் செயல்பாடுகள் அறிவிக்கின்றன.
இதற்கு முன்பு, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டம் இது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல” என்று பாஜகவினரைப் போல இந்த விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராகப் போராடிய மக்களை இழிவுப்படுத்தி, அதானிக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். இதைவிட இழிவாக, கேரள சி.பி.எம் கட்சியோ விழிஞ்சம் துறைமுகக் கட்டுமானப் பணிகளை ஆதரித்து பா.ஜ.க-வுடன் ஒன்றிணைந்து போராட்டங்களில் ஈடுபட்ட செய்திகள் கூட ஊடகங்களில் வெளியாகி நாறியது குறிப்பிடத்தக்கது.
மேலும், அதானி குழுமம் விழிஞ்சம் துறைமுகத்தில் கப்பல் முனையங்கள், கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்பும் பதுங்கு குழி, மீன்பிடி துறைமுகம், சிமெண்ட் அரைக்கும் ஆலை மற்றும் கடல் உணவு பூங்கா உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்துவதற்காகவும் ரூ.20,000 கோடியை ஒதுக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கும் பினரயி விஜயன் ஒப்புதல் அளிக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் விழிஞ்சம் கடற்கரையை சார்ந்து வாழும் மீனவர்கள் தங்களது வாழ்விடங்களைவிட்டே ஒட்டுமொத்தமாக விரட்டப்படுவர்.
இவ்வாறு மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து அம்மக்களை அகதிகளாக்கி சுற்றுச்சூழலையும் கடல் வளத்தையும் நாசம் செய்து மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தை ‘வளர்ச்சி’ திட்டமாக சித்தரிப்பது கேரள அரசின் அப்பட்டமான மக்கள் விரோத கார்ப்பரேட் சேவையாகும்.
அதானிக்கும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் உள்ள உறவோ, மோடி பிரதமரான பிறகு அதானி உலகப் பணக்காரராக வளர்ந்து வந்ததோ தமிழ்நாட்டின் தி.மு.க.விற்கும் கேரள சி.பி.எம்-க்கும் தெரியாமல் இல்லை. தாங்கள் ஆளும் மாநிலங்களுக்குள் அதானியை சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்பதன் மூலம் இக்கட்சிகளுக்கு வர்க்கப்பாசமே முதன்மையானது என்பது அம்பலமாகிறது. பா.ஜ.க- தி.மு.க-சி.பி.எம் கட்சிகளுக்கு சித்தாந்தம், கொள்கை ஆகியவற்றில் வேறுபாடு இருப்பதாக கூறினாலும், வர்க்கப்பாசத்திலும், சேவையிலும் வேறுபாடில்லை என்பதையே இவர்களின் செயல்பாடுகள் அறிவிக்கின்றன.
நம் நாட்டைப் பாசிச அபாயம் சூழ்ந்திருக்கிறது. அம்பானி, அதானி, அகர்வால் வகையறா கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகவே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.வின் தலைமையிலான காவி கும்பலின் பாசிசம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. இப்பாசிஸ்டுகளின் ஆட்சியில் தொலைதொடர்பு, மின்சார உற்பத்தி மற்றும் விநியோகம், துறைமுகங்கள், இரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட உற்பத்தி, கட்டுமானம், சேவை என அனைத்துத் துறைகளிலும் இக்கும்பலின் ஏகபோக ஆதிக்கம் நிறுவப்பட்டு கொண்டிருக்கிறது. மக்கள் நலன் என்பதைப் படிப்படியாகக் கைக்கழுவி, அரசு என்பது கார்ப்பரேட் கும்பலுக்காக உழைக்கும் மக்களை ஒடுக்குகிற நிறுவனமாக பட்டவர்த்தனமாக மாறி வருகிறது. மக்களின் ஜனநாயக உரிமைகளும், மாநில உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.
இச்சூழலில், மோடி-ஷாவின் பாசிச நடவடிக்கைகளை எதிர்ப்பதாக கூறிக்கொள்ளும் இக்கட்சிகளே அதானிக்கு சேவையாற்றுவதன் மூலம், தங்கள் மாநிலங்களில் பாசிசக் கும்பலின் வளர்ச்சிக்கும், ஆட்சிக்கும் அடித்தளமிடுகிறார்கள். பாசிச பா.ஜ.க. எதிர்ப்புணர்வில் இருந்து தங்களுக்கு வாக்களித்த மக்களின் முதுகிலும் குத்துகிறார்கள். இது கோடானுகோடி உழைக்கும் மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமல்லவா?
தி.மு.க., சி.பி.எம். கட்சிகளின் இத்தகைய நடவடிக்கைகள் பற்றி தங்களின் பிழைப்புவாதத்திற்காக அக்கட்சிகளில் ஒட்டிக்கொண்டு இருப்பவர்கள் வேண்டுமானால் கவலைப்படாமல் இருக்கலாம். இக்கட்சிகளில், கொள்கைக்காகவும், சித்தாந்தத்திற்காகவும் இருப்பவர்கள், பாசிசத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்று உணர்வுப்பூர்வமாக செயல்படக்கூடிய சக்திகள் இக்கட்சிகளின் அதானி சேவைக் குறித்து மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்.
அமீர்
(புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2024 இதழ்)
வினவு தளம்
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு