மணிப்பூர்: உண்மை கண்டறியும் குழுவினர் மீது பாசிச ஒடுக்குமுறை!
தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல. - வினவு தளம்
அண்மையில் மணிப்பூருக்குச் சென்ற உண்மை கண்டறியும் குழு அம்மாநிலத்தில் நடைபெற்று வரும் இன மோதல்களுக்கு அரசு தான் காரணம் என்று குற்றம்சாட்டியது. இதனையடுத்து அக்குழுவின் மூன்று உறுப்பினர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அன்னி ராஜா (Annie Raja), நிஷா சித்து (Nisha Siddhu) மற்றும் தீக்ஷா திவேதி (Deeksha Dwivedi) ஆகியோர் மீது இம்பால் காவல் நிலையத்தில் ஜூலை 8-ஆம் தேதியன்று முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 28 முதல் ஜூலை 1 வரை மணிப்பூருக்கு பயணம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் (National Federation of Indian Women – என்.எஃப்.ஐ.டபிள்யூ) உண்மை கண்டறியும் குழுவில் இந்த மூன்று பெண்களும் இடம்பெற்றிருந்தனர். ராஜா என்.எஃப்.ஐ.டபிள்யூ-வின் பொதுச் செயலாளராகவும், சித்து அதன் தேசிய செயலாளராகவும் உள்ளனர். திவேதி டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆவார்.
அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல் (121- A), தேசத் துரோகம் (124A), இரு பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல் (153/153-A/ 153-B), அவதூறு (499), வதந்தி பரப்பி அமைதியைக் குலைத்தல் (504 & 505(2)), கூட்டு நோக்கம் (34) ஆகிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மூன்று பெண்களும் உண்மை கண்டறியும் குழுவின் மூலம் தாங்கள் கண்டறிந்ததைச் செய்தியாளர்கள் சந்திப்பின் போது விவரித்ததற்காக எல்.லிபென் சிங் (L. Liben Singh) என்பவர் இந்த புகாரை அளித்துள்ளார்.
முன்னதாக, ஒரு முன்னணி கல்வியாளர் மற்றும் இரண்டு குக்கி ஆர்வலர்கள் தி வயர் பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த பேட்டிகளின்போது வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் கருத்துக்களைக் கூறியதாகக் குற்றம்சாட்டி மைதேயி ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்குகளில் இம்பால் நீதிமன்றம் அவர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் நடந்த மோதல்கள் ”வகுப்புவாத வன்முறை மட்டுமல்ல, அது இரண்டு சமூகங்களுக்கு இடையிலான சண்டை மட்டுமல்ல” என்று உண்மை கண்டறியும் குழுவைச் சார்ந்த மூவரும் ஜூலை 2-ஆம் தேதி ஒரு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர். இது ”நிலம், வளங்கள், இனவெறியர்கள் மற்றும் போராளி குழுக்களின் இருப்பு பற்றிய பிரச்சினைகளை உள்ளடக்கியது. அரசாங்கம் அதன் மறைமுக கார்ப்பரேட் சார்பு நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துவதற்கான உத்திகளைப் புத்திசாலித்தனமாக மேற்கொண்டது தான் தற்போதைய நெருக்கடிக்கு வழிவகுத்துள்ளது”, என்று அவர்கள் கூறினர்.
மேலும், ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி என்ற முறையில் பிரேன் சிங் மாநில மக்களின், அவர்கள் எந்த சமூகங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, உயிரைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தார். ஆனால் அவர் அதைச் செய்யவில்லை. மக்களின் உயிரையும் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்றுவதற்கு அவர் தவறிவிட்டார். எனவே அவர் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும். வன்முறை வெடித்த ஒரு வாரத்திற்குள் அவர் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை” என்று அவர்கள் கூறினர்.
இந்த நிகழ்வுகளை ”அரசு ஆதரவு வன்முறை” என்று அவர்கள் அழைத்தனர். நியூஸ்கிளிக் இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், ”இந்த வன்முறை எந்தவொரு கட்டமைப்பும் இல்லாமல் நடக்கவில்லை. இரு சமூகங்களிடையே அவநம்பிக்கை மற்றும் பதட்டத்தைத் தெளிவாக மாநில மற்றும் மத்தியில் ஆளும் அரசுகள் தூண்டிவிட்டு ஒரு முழுமையான உள்நாட்டுப் போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளன”என்று அவர்கள் தெரிவித்தனர்.
“அரசாங்கத்திற்கு எதிராகப் போர் தொடுக்க மக்களைத் தூண்டுவதன் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கவிழ்க்க இவர்கள் (இம்மூவரும்) சதி செய்கிறார்கள்” என்பதை மேற்கூறிய கூற்று காட்டுவதாக அவர்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குக்கி மற்றும் மைதேயி சமூகங்களுக்கு இடையிலான வன்முறையை அரசு ஆதரவு வன்முறை என்று உண்மை கண்டறியும் குழுவினர் கூறியதோடு மட்டுமல்லாமல், மணிப்பூர் முதல்வர் என்.பிரேன் சிங் தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றதை ”மேடை நாடகம்” என்றும் வகைப்படுத்தியதாகப் புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளார். பிரேன் சிங் தனது முடிவை மாற்றுவதற்குக் காரணமான மீரா பைபி (The Meira Paibis) நடத்திய போராட்டங்களை இதன்மூலம் அவர்கள் அவமதித்து விட்டதாக லிபென் சிங் மேலும் குற்றம்சாட்டினார். மீரா பைபி என்பதற்கு விளக்கேந்திய பெண்கள் என்று பொருள். இவ்வமைப்பினர் இரவு நேரங்களில் சாலைகளில் பொதுமக்களின் பாதுகாப்புக்காகச் செல்லும்போது கைவிளக்குகளை / தீப்பந்தங்களை ஏந்திச் செல்வதால் இவர்களுக்கு இப்பெயர் ஏற்பட்டது.
பல்வேறு உள்ளூர் ஊடகங்களில் தங்கள்மீது பதியப்பட்ட எஃப்.ஐ.ஆர் குறித்த செய்திகள் வெளியானதன் மூலம்தான் வழக்குப் பதியப்பட்டிருப்பதை அறிந்துகொண்டதாகவும் எஃப்.ஐ.ஆர்-இன் நகல் இன்னும் கிடைக்கவில்லை என்றும் உண்மை கண்டறியும் குழுவைச் சேர்ந்த மூன்று பெண்களுள் ஒருவர் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.
மணிப்பூர் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது; மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஆனால், அதைப் பற்றியெல்லாம் பாசிச பா.ஜ.க அரசுக்குக் கவலையில்லை (மாநிலத்திலும் சரி மத்தியிலும் சரி). பாசிஸ்டுகளுக்கே உரித்தான இலக்கணப்படி, தனது பிம்பத்தின் மீது மட்டும்தான் அதற்குக் கவலை. தனது பிம்பம் உடைபட நேரிடும்போது அதற்குக் காரணமானவர்கள் மீது அடக்குமுறை ஏவப்படுகிறது; ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. உண்மை கண்டறியும் குழுவினரும் இதற்கு விதிவிலக்கல்ல.
(பொம்மி)
வினவு தளம்
www.vinavu.com /2023/07/12/manipur-case-against-fact-finding-team/