வெளிநாடுகளுடன் கூட்டு... விவசாயிகளுக்கு வேட்டு... சத்தமில்லாமல் ஒப்பந்தம் போட்ட `56 இன்ச்' மோடி!

``ஒழுங்குபடுத்தப்பட்ட வணிகமே (Regulated trade) இந்திய விவசாயி களுக்கும் மக்களுக்கும் ஏன்... உங்களுக்குமேகூட நல்லது. அதைப் பாழாக்க வேண்டாம்..." - ஆனந்த விகடன்

வெளிநாடுகளுடன் கூட்டு... விவசாயிகளுக்கு வேட்டு... சத்தமில்லாமல் ஒப்பந்தம் போட்ட `56 இன்ச்' மோடி!

பெருவாரியான இந்திய விவசாயிகள் மீளாக் கடனிலும், தொடர் தற்கொலையிலும் தள்ளியதற்கு உலக வணிக ஒப்பந்தம் என்கிற மகாகொடூர ஒப்பந்தத்துக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. ஆனால், இதில்கூட சில சிறப்பு ஷரத்துகள் உண்டு, விவசாயிகள் ஓரளவு தப்பிப்பதற்கு. ஆனால், பாரதப் பிரதமர் திருவாளர் நரேந்திர மோடி தற்போது செய்திருக்கும் `வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம்', உலக மகா கொடூரமானதாக இருக்கிறது.

ஒரேயடியாக விவசாயிகளின் குரல்வளையைக் கடித்துக் குதறி, ஒட்டுமொத்தமாகப் பரலோகத்துக்கு பாஸ்போர்ட் எடுக்கக்கூடிய ஒப்பந்தமாகவும் இருக்கிறது என்பதுதான் பேரதிர்ச்சி! இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்தால்... விவசாயிகள் மட்டுமல்ல, தொழிலாளர்கள், சிறுவணிகர்கள், ஏன் சில கார்ப்பரேட் கம்பெனிகள்கூட வாழ்விழந்து சுடுகாட்டுக்குதான் வழிதேட வேண்டியிருக்கும்!

ஒட்டுமொத்த நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் வகையில், `வரியில்லா ஐரோப்பிய வணிகக் கூட்டமைப்புடன், வணிக மற்றும் பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை' (Trade and Economic partnership Agreement with European free Trade Association), நாடாளுமன்றத்தில்கூட விவாதிக்காமல், கடந்த மார்ச் 10 அன்று கையெழுத்திட்டிருக்கிறது மோசடி மோடி அரசு. இப்படி சத்தமில்லாமல் கையெழுத்திட்டுவிட்டு, நான் `விவசாயிகளின் காவலன்' என மேடைதோறும் மார்தட்டுகிறார் மோடி.

இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் யோசிக்கும்போது... `இந்த நாட்டில் என்னதான் நடக்கிறது?' என்று இதயம் பயங்கரமாக தடதடக்க ஆரம்பித்துவிடுகிறது.

வணிகம் என்பது உலகை வாழவைக்க, வறுமையை ஒழிக்க, கண்டுபிடிக்கப்பட்ட சித்தாந்தம் அல்ல. வணிகம் செய்பவனுக்கு வளத்தையும்... வாங்கி உபயோகிப்பவனுக்கு கஷ்டங்களையும் கொடுப்பதுதான் வணிகம். இதற்கு மனித முகம் கிடையாது; பாவ, புண்ணியம் பார்க்காது; கஷ்ட, நஷ்டம் தெரியாது; லாபம் ஒன்றுதான் அதன் ஒரே குறிக்கோள்.

இந்தியாவின் GDP கணிப்பை உயர்த்திய IMF; தேர்தல் சமயத்தில் இப்படி அறிக்கை வெளியிடுவது சரியா?

இந்த வணிகத்தை தங்கள் பிடிக்குள் கொண்டு வருவதற்காக உலகின் பெரியண்ணனான அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள்,  உலக வர்த்தக அமைப்பு (WTO - World Trade Organisation) என்பதை உருவாக்கின. இதைப் பற்றிக் கொஞ்சம் நாம் பேசிப் புரிந்து கொண்டால்தான், மோடி அரசின் தற்போதைய வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம்' பற்றிக் கொஞ்சமாவது பிடிபடும்.

உலகின் பெரும்பாலான நாடுகளும் உலக வர்த்தக அமைப்பில் இணைந்துள்ளன. இதன் சார்பில், உலக வணிக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டிருக்கும் ஒரு நாடு விரும்பினால், சில பொருள்களின் ஏற்றுமதிக்குத் தடை, இறக்குமதிக்குக் கூடுதல் வரி விதிக்கலாம். ஒவ்வொரு நாடும் தமது இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்வதற்கான வழிவகைகளும் இந்த ஒப்பந்தத்தில் உண்டு. ஆனால், கட்டுப்பாடுகள் எதுவுமின்றி திறந்த வீட்டில் தெரு நாய்கள் புகுந்ததுபோல `வரியற்ற தடையில்லா வணிக ஒப்பந்தம்' என்ற ஒன்றை வெகு கமுக்கமாகக் கையெழுத்திட்டிருக்கிறது மோடி அரசு.

1995-ம் ஆண்டில் உலக வர்த்தக அமைப்பு உருவானபோது, கலர்கலராக ரீல் விட்டார்கள். `ஆண்டிபட்டியில் விளையும் கத்திரிக்காயை, அமெரிக்காவில் விற்கலாம். டாலரில் பணம் குவிக்கலாம்‘ என்றார்கள். ஆனால், இப்போது கேரளாவையே தாண்ட முடியவில்லை. அது தனிக்கதை... பிறகு, பேசலாம்.

உலக வர்த்தக அமைப்பு என்கிற பெயரில் வளர்ந்த நாடுகள் பலவும், வளரும் நாடுகள் மீது காட்டும் ஏகப்பட்ட கெடுபிடிகளை எதிர்த்து, உலக வர்த்தக அமைப்பின் ஒவ்வொரு மாநாட்டிலும் உலக நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும், அதைத் தொடர்ந்து உருவாகும் சலசலப்பு களுக்கும் குறைவே இருக்காது. இறுதியில், ஒப்புக்கு ஏதோவொரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு, சங்கம் கலைந்துவிடாமல் மட்டும் பார்த்துக்கொள்வதைத்தான் உலக வர்த்தக அமைப்பு தற்போது வரைக்கும் பார்த்துக்கொண்டிருக்கிறது.

2001-ல் தோஹாவில் நடைபெற்ற உலக வர்த்தக அமைச்சர்களின் மாநாட்டில், விவசாயிகள் பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இறுதியில், `வளர்ந்த நாடுகள், விவசாயிகளுக்குக் கொட்டிக் கொடுக்கும் மானியங்கள் நிறுத்தப்படும் வரை விவசாயத்தை உலக வர்த்தக அமைப்பில் (WTO) சேர்க்கக் கூடாது' என்று முடிவு செய்தார்கள்.

2005-ல் ஹாங்காங்கில் நடைபெற்ற மாநாட்டில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் திணறியபோது, உலக நாட்டாமையான அமெரிக்காவின் அன்றைய அதிபர் புஷ் பேசிய வார்த்தைகள் இன்றும் நெஞ்சில் அபாயச் சங்காக ஒலித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அது அன்றைய மன்மோகன் சிங் தொடங்கி, இன்றைய மோடி வரையிலும் ஆட்சியாளர்களின் காதுகளை மட்டும் எட்டுவதே இல்லை. காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிக்கொண்டு விடுவார்கள் போல!

இந்தியாவின் நடுத்தட்டு மக்களின் எண்ணிக்கை, அமெரிக்காவின் ஒட்டுமொத்த மக்களின் எண்ணிக்கையைவிட அதிகம். எனவே, எக்காரணம் கொண்டும், என்ன விலை கொடுத்தேனும் சங்கம் (WTO) சிதைந்து விடாமல் காப்பாற்றப்பட வேண்டும்' என்று தன்னுடைய நாட்டு வர்த்தக அமைச்சருக்குக் கட்டளையிட்டார் புஷ்.

அப்போது, இந்தியாவின் மக்கள் தொகை 120 கோடிக்கும் மேல். இந்தியா, உலக அளவில் மிகப்பெரிய சந்தை. அதை இழந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தது அமெரிக்கா. ஆனால், நம்மைவிட அதிக மக்கள் தொகை கொண்ட சீனாவை குறி வைக்கவில்லை. காரணம்... அங்கெல்லாம் அமெரிக்க பருப்பு வேகாது என்பதுதான். இந்தியா, ஊழல்வாதிகளின் சொர்க்கம். எதையாவது கொடுத்து அல்லது எதையாவது காட்டி அல்லது மிரட்டியாவது இந்தியாவை இழுத்த இழுப்புக்கு பணிய வைக்கமுடியும் என்பது அமெரிக்காவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

ஆக, பலவிதமான கட்டுப்பாடுகளுடன்கூடிய ஒப்பந்தமே, உலக நாடுகளை ஆட்டுவிக்கும்போது, எவ்வித கட்டுப்பாடும் இன்றி, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுடன் `வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம்' போடுகிறார் என்றால், மோடிக்கு எவ்வளவு நெஞ்சுரம் வேண்டும் (சும்மாவா... 56 இன்ச் ஆயிற்றே)?

``இந்தியா எக்கேடு கெட்டுப்போனால் என்ன... எனக்கு `விசுவகுரு' என்ற பட்டம் இருந்தால் போதும்'' என்கிற சுயநலத்தைத் தவிர வேறு என்ன நல்ல நோக்கம் இதில் இருக்க முடியும்?

பால் பொருள்கள்

`வரியில்லா தடையற்ற வணிகம்' நடைமுறைப்படுத்தப்பட்டால், ஆரம்பத்தில் சில ஆண்டுகளுக்கு எல்லாமே பளபளப்பாக ஜொலிக்கின்ற மாதிரிதான் தெரியும். வளர்ந்த நாடுகள், தங்கள் நாட்டு உற்பத்திப் பொருள்களைக் குவித்து, ஆச்சர்யமூட்டுவார்கள். ஐரோப்பிய நாடுகளிலிருந்து பால் பொருள்களும்... விவசாய விளைபொருள்களும்... ஜப்பான், கொரியா, சீனாவிலிருந்து ஆலை உற்பத்திப் பொருள்களும் இந்தியச் சந்தையை குறிவைத்து குவியும். சுதாரித்து எழுவதற்குள் இந்தியாவுக்குச் சமாதி கட்டி விடுவார்கள். யானை புகுந்த சோளக்கொல்லை கதியாக இந்தியாவின் நிலைமை மாற்றப்படும். ஒரே ஆண்டில் இந்தியாவே காணாமல் போய்விடும்.

இப்படி ஒரு கேடுகெட்ட ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டு, `இது ஒரு வரலாற்று சாதனை, வணிக திருப்புமுனை’ என்று தமக்குத் தாமே புகழாரம் சூட்டிக்கொண்டு அலைகிறார் பிரதமர் மோடி.

இப்படித்தான் வாஜ்பாய் அரசின் அந்திம காலத்தில் `இந்தியா ஒளிர்கிறது’ என்று கூவினார்கள். ஆனால், வாஜ்பாய் அரசையே ஒழித்துக்கட்டினார்கள் மக்கள். இது புரியாமல் `கேரன்டி... வாரன்டி’ என்று இப்போது உதார் விட்டுக் கொண்டிருக்கிறார் மோடி.

வரியில்லா தடையற்ற ஒப்பந்தத்தில் கையெழுத் திட்டுள்ள இ.எப்.டி.ஏ (EFTA - European free trade association) எனும் கூட்டமைப்பில் பங்கு வகிக்கக்கூடிய ஸ்விட்சர்லாந்து, நார்வே, ஐஸ்லேண்டு மற்றும் லிக்டன்ஸ்டைன் (Liechtenstein) ஆகிய நான்கு நாடுகளுடைய மக்கள் தொகை... 1.5 கோடிதான். ஆனால், இந்தியாவின் மக்கள்தொகை 140 கோடி. ஆக, இந்திய மக்களை குறிவைத்தே வளர்ந்த நாடுகள், இந்திய பொருளாதாரத்தில் ஓட்டைப்போட முயற்சி செய்கின்றன. இப்போது போடப்பட்டிருக்கும் வரியில்லா தடையற்ற வணிக ஒப்பந்தம் என்பது... சிறிய ஓட்டை. இதுவே, நாளைக்கு இந்தியாவையே விழுங்கும் பெரிய பள்ளமாக மாறக்கூடிய அபாயம் காத்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

`வாழ்க்கை ஒரு வட்டம். கீழே இருப்பவன் மேலே வருவதும்... மேலே இருப்பவன் கீழே விழுவதும் இயல்பு’ (நன்றி: நடிகர் விஜய்). ஒரு சமயத்தில் ஒருவன் மட்டுமே மேலே இருக்க முடியும். இதுபோல ஒரு நாடு வணிக பொருளாதார மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி அடைகிறது என்றால்... மற்ற நாடுகள் தோற்றே ஆக வேண்டும்.

மிஸ்டர் மோடி... வேண்டாமே இந்த விபரீத விளையாட்டு. ஒழுங்குபடுத்தப்பட்ட வணிகமே (Regulated trade) இந்திய விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஏன்... உங்களுக்குமேகூட நல்லது. அதைப் பாழாக்க வேண்டாம். தேவையில்லாத கேரன்டி, வாரன்டிகளையெல்லாம் விட்டுவிட்டு, இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் இந்தியா உயிர்ப்போடு இருப்பதற்கான கியாரன்டி கொடுக்க முடியுமா என்று பாருங்கள் மிஸ்டர் மோடி!

(தூரன்நம்பி)

ஆனந்த விகடன்

https://www.vikatan.com/government-and-politics/governance/free-trade-agreement-affect-indian-farmers-modi-government-withdraw-this?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR1SWOrJ4VekKu4S9wggPkjfRiU81ASlruwTVO4guARBt9NMGQwFZW0_vHQ_aem_Af8heEuvm9Mha7Lt2pyviEw_IQpWO80PD8UCIs72x7R7zBcSfh6rgK7dVofLzriF4Et679YX0ogHn6dn7yYC_Gb1

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு