`சி.எம்., மந்திரி வீட்டுக்கு ஃப்ரெஷ் மீன் வேண்டும்; மீனவர் நலன்..?” - கொந்தளிக்கும் நொச்சிக்குப்பம்
விகடன்
விற்பனைக்குரிய மீன்களைச் சாலைகளில் வீசி தர்ணாவில் ஈடுபடுகின்றனர் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள். மீன்பிடிக்கச் செல்லவேண்டிய படகுகள் சாலைகளை மறித்து நின்றுகொண்டிருந்தன. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர், நீதிபதிகள் ஆகியோரை எதிர்த்து உரக்க கோஷம் எழுப்பிக்கொண்டிருந்தனர் நொச்சிக்குப்பம் பகுதி மக்கள். ஏன் இந்தப் போராட்டம்... என்ன காரணம்... ”மீன்கடைகள் சாலையை ஆக்கிரமித்திருக்கின்றன. ஒரு வாரத்துக்குள் அகற்றுங்கள்” என உயர் நீதிமன்றம் சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டதுதான் காரணம்.
தாமாக முன்வந்த நீதிமன்றம்..!
நொச்சிக்குப்பம் பகுதி மக்கள் கடற்கரையோரம் வைத்திருக்கும் மீன்கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருக்கின்றன என தாமாக முன்வந்து பொதுநல வழக்காகக் கருதி விசாரித்தது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கை விசாரித்த நீதியரசர்கள் எஸ்.எஸ்.சுந்தர், பி.பி.பாலாஜி ஆகியோர் `ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்துங்கள்’ என உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர். `மீன்களை விற்கவும், சாலைகள், நடைபாதைகள் ஆகியவற்றை ஆக்கிரமித்து உணவகங்களை நடத்தவும் அனுமதித்தது ஏன்?’ எனக் கேள்விகளை அடுக்கியிருக்கிறார்கள் நீதியரசர்கள்.
மேலும், ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு இது குறித்து ஏப்ரல் 18-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. `சென்னை மாநகராட்சி தரப்பில், லூப் சாலையில் மீன் சந்தை சுமார் 9.97 கோடி செலவில் கட்டப்பட்டுவருகிறது. கட்டடப் பணிகள் நிறைவுபெற்றதும் மீன்கடைகள் மாற்றப்படும்’ என அரசு சார்பில் தெரிவித்தற்கு நீதிபதிகள் அந்த வாதத்தை ஏற்கவில்லை. அதைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறையும் நொச்சிக்குப்பம் பகுதியிலுள்ள மீன்கடைகளையும், மீன் உணவகங்களையும் அகற்றினார்கள். கடந்த சில தினங்களாகவே மீன் விற்க அனுமதி மறுக்கப்படுகிறது.
கொந்தளித்த நொச்சிக்குப்பம் மக்கள்!
நொச்சிக்குப்பம் பகுதியில், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நாகவள்ளியிடம் பேசினோம். “நாங்க நாலஞ்சு தலைமுறையா இங்க இருக்கோம், 40 வருஷத்துக்கு முன்னாடி இங்க ரோடே கிடையாது. ஓலைக்குடிசை போட்டு வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். சின்ன வண்டி போகுற மாதிரி, தார் ரோடு சின்னதா இருக்கும். ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி, `உங்க நலனுக்காக ரோடு போட்டுத் தர்றோம்’னு சொல்லி, ரோடைப் பெருசாக்கி பிளாட்ஃபார்ம் போட்டுக் கொடுத்தாங்க, அதுல இருந்து கார்ப்பரேஷன்காரங்க பிரச்னை பண்றாங்க. இப்ப என்னடான்னா, `நீங்க இருக்கக் கூடாது.
சிங்காரச் சென்னையா மாத்தப்போறோம். இங்க நாத்தம் அடிக்குது. இந்த எரியாவுல நீங்க இருக்கக் கூடாது’னு சொல்றாங்க. நாங்க எங்க போறது... எங்க வாழ்வாதாரம் இதுதான். கடலுக்குப் போய் பிடிச்சுட்டு வந்து காலம் காலமா மீன் விக்குறோம். ரெண்டு பக்கமும் கடை போடக் கூடாதுனு சொல்றாங்க. அப்போ நாங்க எங்க போய்ப் பொழைக்கறது... நாங்க எங்கயும் போறதா இல்லை. நாங்க இங்கதான் இருப்போம்” என்றார் ஆக்கிரோஷத்துடன்.
தொடர்ந்து பேசிய அவர், ``எங்க கடைகளை ஆக்கிரமிப்புனு சொல்றாங்க. நாங்க வாழ்ந்துட்டு வந்த இடம் இது. அங்க ரோடு போட்டு ஆக்கிரமிச்சது நீங்க. இப்போ வந்து `இது ஆக்கிரமிப்பு, கடையையெல்லாம் காலி பண்ணுன்னா என்னங்க நியாயம்... சென்னைல எத்தனையோ கட்டடம் ஆக்கிரமிப்புல கட்டியிருக்காங்க. அதெல்லாம் தெரியலை உங்களுக்கு... ஓரமா தார்ப்பாய விரிச்சு கடைபோட்டது ஆக்கிரமிப்பா...
சரி உங்களை யார் இந்த ரோட்டுக்கு வரச் சொன்னது... இந்த ரோட்டுக்கு வராம நேராகூட போகலாமே... இது ஒரு உள்புற ரோடுதானே... இந்த இடம் நாறுதுன்னு சொல்றீங்கதான... நேரா போகவேண்டியதுதான... எதுக்கு நொச்சிக்குப்பத்துக்குள்ள வர்றீங்க... இது எங்க ஊரு. இது எங்க கடை. நாங்க இங்கதான் இருப்போம்” என்கிறார் ஆக்ரோஷத்துடன்.
நம்முடன் பேசிய முகுந்தா என்பவர், “திடீர்னு கார்பரேஷன்ல இருந்து வர்றாங்க. மீனை வாரிப்போட்டு, வலைய காலால எட்டி உதைக்குறாங்க. எங்களுக்கு கடல் தெய்வம். அது கொடுக்குற பொருள் எங்களுக்கு தெய்வம். அதை எட்டி உதைக்குறாங்க. அதிகாரத்துல இருந்தா என்னவேணா பண்ணுவீங்களா... எங்களோட கஷ்டத்த வெயில்ல உக்காந்து பாருங்க தெரியும். நெருப்பு மாதிரி கொதிக்குற வெயில்ல வியாபாரம் செய்யுறோம். அதுதான் எங்களுக்குத் தெரியும். இப்போ மீன்கடை போடக் கூடாதுன்னா சாப்பாட்டுக்கு என்ன பண்றது சொல்லுங்க?” என ஆவேசமடைந்தார்
தொடர்ந்து பேசிய அவர் “சி.எம் வீட்டுக்கு, அமைச்சர் வீட்டுக்கு ஃபிரெஷ் மீனு வேணும்னு அதிகாரத்துல இருக்குறவங்க மீன் வாங்க இங்கேதான வந்தாங்க... ஃப்ரெஷ் மீனு தேவைப்படுது, வாழ்வாதாரத்துக்கு மீன் விக்கிற எங்க நலன் கண்ணுக்குத் தெரியலயா... நாங்க உங்ககிட்ட ஏதாவது கேட்டோமா... ஏன் எங்க இடத்தை கேக்குறீங்க... ஓட்டு வேணும்னு வர்றீங்களே, உங்களுக்கு இங்க கடைபோட்டுத் தர்றோம்னு சொன்னீங்கல்ல, இதுவரைக்கும் ஏதாவது செஞ்சீங்களா... ஆட்சியில இருக்குறவங்க வந்து அடிப்படை விஷயமாவது செஞ்சது உண்டா... எதுவுமே இல்லை” என்றவர், “எங்க வாழ்வாதாரத்துல கையவெச்சா இங்கயே விஷம் குடிச்சுட்டு சாகத்தான் செய்யணும்” எனக் கொதித்தார்
`` `மெரினாவை அழகுபடுத்தப்போறோம்’னு, கட்டுமரங்களை அங்கே நிறுத்தக் கூடாதுனு சொல்லிட்டாங்க. இப்போ நொச்சிக்குப்பம் பகுதியை ஆக்கிரமிக்கிறோம்னு எங்க பொழப்புல மண்ணள்ளிப் போடுறாங்க. இன்னையோட அஞ்சு நாள் ஆச்சு. கடை போட விடலை. தினக்கூலி நாங்க. இப்படியே போச்சுன்னா பட்டினியாத்தான் கிடக்கணும்” என வருந்தினார் மூதாட்டி ஒருவர்.
போராட்டத்தில் பங்கேற்ற சீமான்!
நொச்சிக்குப்பம் மக்கள் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ``கடல் இருக்கிறது, கரையில் படகு வந்து இறங்குகிறது. அங்கே ஒரு குடைவெச்சு மீன் விக்குறாங்க, இதில் என்ன பிரச்னை... கடற்கரையில மீன் விக்கக் கூடாது. ஆனா, பேனா சிலை வைக்கலாமா... கடற்கரை ஓரத்துல மீன் சந்தை போடக் கூடாது. ஆனா, சமாதி இருக்கலாமா... மக்களின் கடைகளை காலி செய்வதில் இவ்வளவு தீவிரம் காட்டுகிறீர்களே... நீதிமன்றம் சொன்ன அனைத்தையும் நிறைவேற்றிவிட்டீர்களா... இவங்க இங்க மீன் விக்குறதுனால யாருக்கு, என்ன இடையூறு வந்ததுன்னு சொல்லுங்க’’ எனக் கொந்தளித்த சீமான். ``மாண்புமிகு நீதியரசர்கள் தங்களின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும்படி அன்புடன் வேண்டுகிறேன்” எனக் கோரிக்கையையும் முன்வைத்தார்.
”பல தலைமுறைகளாக மீன்கடை நடத்தி, தங்கள் வாழ்வாதாரத்தைக் காத்துவருகின்றனர் நொச்சிக்குப்பம் மீனவர்கள். கடைகளை காலி செய்யச் சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். சென்னை மாநகராட்சி கட்டிவரும் சந்தையின் கட்டடப் பணி முடியவே ஆறு மாதங்கள் ஆகிவிடும் என்கிறார்கள். அப்படியெனில், இவர்கள் எங்கே செல்வார்கள்... அதுவரை நொச்சிக்குப்பம் மீனவர்களின் வாழ்வாதாராம் என்னவாகும்... தமிழ்நாடு அரசு முன்வந்து நொச்சிக்குப்பம் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்த்து அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்” என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு