பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -1)

உக்ரைன் மறுபங்கீட்டிற்கான ஏகாதிபத்திய நாடுகளின் பனிப்போரை உள்நாட்டு போராக மாற்றி சோசலிசப் புரட்சியை முன்னெடுப்பதே உக்ரைன் விடுதலைக்கான ஒரே வழி!

பனிப்போரின் யுத்த களமாக உக்ரைன்! (பகுதி -1)

உக்ரைனை மறுபங்கீடு செய்வதற்கான அமெரிக்க-நேட்டோ மற்றும் ரசிய ஏகாதிபத்திய வல்லூறுகளின் பனிப்போர் தொடங்கிவிட்டது. ரசிய ஏகாதிபத்திய வெறிநாய் உக்ரைன் மீது ஒரு கொடூரமான ஆக்கிரமிப்பு யுத்தத்தைக் கடந்த 25 நாட்களாக நடத்தி வருகிறது. உக்ரைனின் ஆளும் வர்க்க ஜெலன்ஸ்கி கும்பலின் பாசிச ஆட்சியைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி அமெரிக்க-நேட்டோ வல்லூறுகள் ஒரு பதிலிப் போரை - மறைமுக யுத்தத்தை (Proxy war) நடத்தி வருகின்றன. உக்ரைனைக் கடித்துக் குதறி வரும் ரசிய வெறி நாயின் நாசகர யுத்தத்தை அதன் கூட்டாளியான சீனா ஆதரித்து வருகிறது. அமெரிக்க-நேட்டோ மற்றும் சீன-ரசிய ஏகாதிபத்திய நிதியாதிக்க கும்பல்களின் இலாப வெறிக்கும், அமெரிக்க-நேட்டோவைச் சார்ந்து நின்று கொழுக்க விரும்பும் உக்ரைனின் பெரு முதலாளிகளின் நலன்களுக்காகவும் நடத்தப்பட்டு வரும் இந்த பனிப்போரில் உக்ரைன் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை 5000க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் இரு தரப்பிலும் கொல்லப்பட்டுள்ளனர். 10 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் உள்நாட்டிலும், அண்டை நாடுகளிலும் உணவின்றி - உடையின்றி - உறக்கமின்றி அகதிகளாக அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று மாதங்களாக உக்ரைனில் இராணுவ இருப்பை பலப்படுத்தி வந்த ரசியா, 24 பிப்ரவரி 2022 அன்று நேரடி யுத்தத்தை உக்ரைன் மீது தொடுத்தது. அமெரிக்க-நேட்டோ நாடுகளிடமிருந்து அரசியல்-பொருளாதார-இராணுவ உதவிகளைப் பெற்று யுத்த தயாரிப்பில் ஈடுபட்டு வந்த ஜெலன்ஸ்கி ஆட்சி அவற்றின் கருவியாக ரசியாவுடன் நேரடி இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு முந்திய நாள் வரை இராணுவப் பயிற்சிகளில் மட்டுமே ஈடுபட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்பு நடத்தும் எண்ணம் ஏதும் இல்லை எனவும், உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் முயற்சியை அமெரிக்கா கைவிட வேண்டும் எனவும் கூறிவந்த ரசியா 24/2 அன்று 'சிறப்பு இராணுவ நடவடிக்கை' எனும் பெயரில் உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு யுத்தத்தை நடத்தியது. வடக்கில் உக்ரைன் - பெலாரஸ் எல்லை, தெற்கில் கிரீமியா மற்றும் கிழக்கு உக்ரைன் பகுதியான டோன்பாஸ் (Donbas) பிராந்தியத்தில் அதிநவீன ஆயுதங்கள், 2 லட்சம் துருப்புகளை குவித்து உக்ரைன் மீது முப்படை தாக்குதல் நடத்தி வருகிறது. டோன்பாஸிலிருந்து முழு இராணுவ நடவடிக்கையைத் துவங்குவதற்காகவே, அப்பிராந்தியத்தில் உள்ள டொனட்ஸ்க் (Donetsk) மற்றும் லுஹான்ஸ்க் (Luhansk) அரசுகளை 2014ம் ஆண்டிலிருந்து கட்டுப்படுத்தி வந்த புதின் அப்பகுதிகளைச் சுதந்திரக் குடியரசுகளாக அங்கீகரிப்பதாக யுத்தம் தொடுப்பதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக 21/02/2022 அன்று அறிவித்தார். ஏற்கனவே 2014ல் இதன்பொருட்டே உக்ரைனின் தன்னாட்சி. பிரதேசமான கிரீமியாவையும் கைப்பற்றினார் புதின். தற்போது டோன்பாஸ் மற்றும் கிரீமியாவை இயங்கு தளமாகக் கொண்டும், பெலாரசிலிருந்தும் (இங்கு ரசியாவின் படுபிற்போக்கான பாசிச பொம்மை ஆட்சி நடக்கிறது) முழு உக்ரைனையும் தாக்கி வருகிறது ரசியா. பல முக்கிய நகரங்கள், தொழிற்தளங்களை கைப்பற்றி வரும் நிலையில் தலைநகர் கீவ்வை கைப்பற்றி தனது பொம்மை ஆட்சியை உருவாக்க இரத்த வெறியுடன் போரிட்டு வருகிறது ரசிய வெறி நாய்.

உக்ரைன் யுத்தம் அமெரிக்க-நேட்டோ மற்றும் ரசிய-சீன ஏகாதிபத்திய நலன்களுக்கானதே! உக்ரைன் விடுதலைக்கானது அல்ல!

உக்ரைன் போருக்கும் காரணம் அமெரிக்காதான் என ரசியாவும், ரசியாதான் காரணம் என அமெரிக்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன. உண்மையில் உக்ரைனில் தனது பொம்மை ஆட்சியைத் தக்க வைப்பதற்கான அமெரிக்க -நேட்டோ நாடுகளின் போர் தயாரிப்பும், ஜெலன்ஸ்கி ஆட்சியைத் தூக்கியெறிந்து விட்டு தனது பொம்மை ஆட்சியை உருவாக்குவதற்கான ரசியாவின் போர் தயாரிப்புமே இன்று பனிப்போராக வெடித்துள்ளது. உக்ரைனின் வேளாண் மற்றும் தொழிற்சந்தை, மூலப்பொருட்கள், கனிம வளங்கள் மற்றும் எண்ணெய் வளங்களைக் கொள்ளையடிப்பதன் மூலம் இரண்டு ஏகாதிபத்திய முகாம்களின் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாப வெறிக்கு உக்ரைனைப் பலியிடுவதற்காகவே இந்த பனிப்போர் நடந்து வருகிறது. ஈராக்கில், ஆப்கானில் ஜனநாயக ஆட்சியை நிறுவுவதற்கே யுத்தம் தொடுத்துள்ளதாக அமெரிக்க ஓநாய் கூறியது போலவே, உக்ரைனில் ஜனநாயக ஆட்சியை உருவாக்க யுத்தம் நடத்தி வருவதாக ரசிய ஓநாய் கூறுகிறது. ஓநாய்களுக்கு ஜனநாயகப் பண்பு இருக்கமுடியாது என ஆடுகள் அறியும்.

உக்ரைனை நேட்டோவில் இணைக்கும் அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நேட்டோ விரிவாதிக்க கொள்கையால் தனது எல்லைப் பாதுகாப்பிற்கும், இறையாண்மைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ரசியா கூறுகிறது. தனது நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்கவும், கிரீமியா மற்றும் டோன்பாஸ் பகுதிகளில் உள்ள ரசிய மக்களின் நலன்களுக்காகவும் தற்காப்பு யுத்தம் நடத்த வேண்டிய நிலைக்கு அமெரிக்கா தள்ளியுள்ளதாக ரசியா கூறுகிறது. மறுபுறம் அமெரிக்கா ரசியாவின் ஆக்கிரமிப்பிலிருந்து உக்ரைன் மக்களைக் காப்பாற்றவே உக்ரைனுக்கு உதவுவதாகக் கூறுகிறது. தங்களது அநீதி யுத்தங்களுக்கு முற்போக்கு மற்றும் ஜனநாயக முகமூடிகள் கொடுப்பது; மக்களை சுரண்டி கொழுப்பதற்குப் போர் நடத்தி மக்களுக்கான யுத்தம் என 'நீதி' மொழிகளை வெட்கமின்றி குரைப்பது ஏகாதிபத்திய நாய்களின் பிறவிக் குணம். உக்ரைன் ஆட்டுக்குட்டியை (மக்கள்) பாதுகாப்பதே தமது நோக்கம் என்ற அமெரிக்க - ரசியா ஓநாய்களின் பொய்யுரைகளை யாரும் நம்பத் தயாரில்லை. நேட்டோ விரிவாதிக்க எதிர்ப்பு; எல்லை பாதுகாப்பு என்பவை ரசியாவின் போருக்குத் தரப்படும் ஜனநாயக முகமூடிகள்.

நேட்டோவின் கிழக்கு நோக்கிய விரிவாக்கத்தில் மட்டுமின்றி நேட்டோ உருவாக்கத்திலேயே அமெரிக்காவின் உலக மேலாதிக்க நலன்கள் அடங்கியுள்ளன என்பது தெளிவு. கிழக்கு நோக்கிய நேட்டோ விரிவாதிக்கத்தால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என ரசியா கூறுவது சாரம்சத்தில் ரசிய மேலாதிக்கத்திற்கான, ரசியாவின் இராணுவ கூட்டமைப்பான சி.எஸ்.டி.ஓ (CSTOCollective Security Treaty Organisation) வின் கிழக்கு விரிவாக்கத்திற்கும் மற்றும் காலனியாதிக்க முயற்சிகளுக்குமான அச்சுறுத்தலே தவிர வேறு அச்சுறுத்தல் ஏதுமில்லை. நேட்டோ விரிவாதிக்க எதிர்ப்பு எனும் பெயரில், தற்காப்பு போர் என்ற பெயரில், பாசிச ஜெலன்ஸ்கி ஆட்சியின் நாஜி நீக்கம் எனும் பெயரில் ரசியா நடத்தும் போர் உக்ரைன் நாட்டு ஜனநாயகத்திற்கானதோ (அ) கிரீமியா, டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளில் வாழும் ரசியர்களின் நலன்களுக்கானதோ (அ) ரசிய நாட்டு மக்களின் நலன்களுக்கானதோ அல்ல; மாறாக ரசியாவின் ஆக்கிரமிப்புப் போர் என்பது காஜ்ப்ரோம் (Gazprom), ரோஸ்நெப்ட் (Roseneft), நார்ட் ஸ்ட்ரீம் ஏஜி (Nord Stream AG) உள்ளிட்ட ரசியாவின் பெரும் கார்ப்பரேட் எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் ரோஸ்டெக் போன்ற இராணுவ தளவாட கார்ப்பரேட்டுகளின் ஏகபோக நலன்களை - இலாப வெறியைப் பாதுகாக்கும் பொருட்டு அங்குத் தனது பொம்மை ஆட்சியை நிறுவுவதற்காக ரசியா நடத்தும் போரே ஒழிய, "இறையாண்மை அச்சுறுத்தல், தற்காப்பு" என்பதெல்லாம் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். ரசியா கூறும் இறையாண்மை, தற்காப்பு, அச்சுறுத்தல் என்பவையெல்லாம் காஜ்ப்ரோம் (Gazprom) உள்ளிட்ட கார்ப்ரேட்டுகளின் இறையாண்மை, தற்காப்பு மற்றும் அவற்றிற்கான அச்சுறுத்தல் என்பதுதான் எனப் பாட்டாளி வர்க்கமும் ஜனநாயக சக்திகளும் நன்கறிந்த ஒன்று. லாக்கீடு மார்ட்டின், ரேதியான் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ தளவாட கார்ப்பரேட்டுகள் மற்றும் பி. ஏ. இ (BAE systems) போன்ற பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவின் இராணுவ தளவாட கார்ப்பரேட்டுகளின் நலன்கள் இந்த பனிப்போரில் அடங்கியுள்ளன. ரசியா மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளை எதிர்கொள்ளும் வகையில் சீனா ரசியாவின் காஜ்ப்ரோம் நிறுவனத்துடன் எரிவாயு ஒப்பந்தம் போட்டுள்ளது. ஆகவே இந்த ஏகாதிபத்தியப் போரில் மக்கள் நலன் உள்ளதாகக் கருதுவதும், ஏகாதிபத்திய அநீதிகளில் நீதியைத் தேடுவதும், அவ்வாறு நீதி இருப்பதாக மக்களுக்குப் போதிப்பதும் பாட்டாளி வர்க்கத்துக்குச் செய்யும் பச்சைத் துரோகம் ஆகும்.

கிரீமியாவின் இறையாண்மையைப் பாதுகாப்பது; டோன்பாஸில் உள்ள டொன்ட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் குடியரசுகளின் சுதந்திர அரசுகளை அங்கீகரிப்பதுதான் உக்ரைனில் தலையிடுவதற்கான நோக்கம் என்று துவக்கம் முதல் கூறிவந்த ரசியா, தற்போது அப்பகுதிகளில் இராணுவ தளம் அமைத்து முழு உக்ரைனையும் கைப்பற்றி பொம்மை ஆட்சியை உருவாக்கவே அங்கு 'முழு இராணுவ நடவடிக்கையில்' ஈடுபட்டு வருகிறது. கிரீமியா, டோன்பாஸ் உரிமைகளுக்கான போர் என்று சொல்லி போரைத் துவங்கிய புதின் முழு உக்ரேனையும் ஆக்கிரமிக்க யுத்தம் நடத்துவார் என நாங்களே எதிர்பார்க்கவில்லை என்று ரஷ்ய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஜிகானோவ் (MP, CPRFCommunist party of Russian federation) கூறியுள்ளார். இதன் மூலம் ரசியாவின் உண்மையான இலக்கு என்ன என்பதைப் பாமரரும் அறிவர்.

உக்ரைனுடனான பேச்சுவார்த்தையின் போது ரசியா போரை நிறுத்த புதின் 1) நேட்டோவில் இணையும் முடிவை ஜெலன்ஸ்கியும் (நேட்டோவும்) கைவிட வேண்டும் 2) கிரீமியா டோன்பாஸ் பகுதிகளின் குடியரசுகளை அங்கீகரிக்க வேண்டும் 3) உக்ரைன் அரசு ஆயுத குறைப்பு செய்ய வேண்டும் என நிபந்தனைகள் விதித்தார். அதன் பிறகு, நேட்டோ ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்க மறுத்த நிலையில், ஜெலன்ஸ்கியும் நேட்டோவில் இணையும் முடிவை கைவிடுவதாக அறிவித்தார். ஆனாலும் ரசியா போரை நிறுத்தவில்லை.

ஒடுக்கப்பட்ட நாடுகளின் ஐ.நா குழு மூலம்

1) கிரீமியா மற்றும் டோன்பாஸ் பிராந்தியங்களில் நடந்த படுகொலைகள் குறித்து விசாரணை செய்வது 2) ஏகாதிபத்தியங்கள் சுயநிர்ணய உரிமையை எப்பொழுதும் ஏற்காது என்பதை மக்களிடையே பிரச்சாரம் செய்வது

3) ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கத்தின் கீழ் இராத கிரீமியா மற்றும் டோன்பாஸ் பிராந்தியங்களின் சுயநிர்ணய உரிமைகளை குறித்து ஒரு பொது வாக்கெடுப்பு நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஒரு இடைக்கால தீர்வை எட்ட முடியும். ஆனால் அதற்கு இரு தரப்பும் தயாராக இல்லை.

நேட்டோ விரிவாக்கம், வார்சா ஒப்பந்தம் உருவானது குறித்த வரலாற்றை சுருக்கமாகக் காண்பதும், அதன் தொடர்ச்சியாக உக்ரைன் பிரச்சினை உருவான விதத்தைக் காண்பதும் அவசியம். அப்போதுதான் அமெரிக்க-ரசிய ஓநாய்களின் வரலாற்றுத் திரிபையும், இடது வலது திரிபுவாதிகளின் வரலாற்றுப் பொய்களையும் நாம் அறிய முடியும். அமெரிக்க ஏகாதிபத்தியம் மாபெரும் போர்க்குற்றவாளியாக உலகளவில் முற்றாக அம்பலப்பட்டு நிர்வாணமாக நிற்கிறது. அதன் உலக மேலாதிக்க கனவு முற்றாகத் தகர்ந்து விட்டது. தற்போது ரசிய- சீன ஏகாதிபத்தியங்களுக்கு முட்டுக் கொடுக்கும் திருத்தல்வாதப் போக்கு பலமடைந்து வருகிறது. ஆகவே அதை அம்பலப்படுத்துவது பாட்டாளி வர்க்கத்தின் முக்கியமான கடமையாக மாறியுள்ளது.

நேட்டோ உருவாக்கம் (NATO)

இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டு ஐரோப்பிய நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டன. ஐரோப்பிய நாடுகளை மறுநிர்மாணம் செய்ய அமெரிக்கா 10லட்சம் கோடி திப்பீட்டில் 'மார்ஷல் திட்டத்தை'க் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் நோக்கம் ஐரோப்பிய நாடுகளில் அமெரிக்காவின் நிதி மூலதன முதலீடுகளுக்கான சந்தையை உருவாக்குவதே ஆகும். இதன் மூலம் அமெரிக்க-ஐரோப்பிய உறவுகளைப் பலப்படுத்தி சோசலிச சோவியத் யூனியனை வீழ்த்துவது ஏகாதிபத்திய நாடுகளின் பிரதான இலக்காக இருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவாக்கப்பட்ட 'மார்ஷல் திட்டத்தின்' நீட்சியாகவே 1949-ல் நேட்டோ (NATO) இராணுவக் கூட்டமைப்பு அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்டது. முதலில் அமெரிக்கா, பிரிட்டன், கனடா, பெல்ஜியம், டென்மார்க், பிரான்சு, ஐஸ்லாந்து, இத்தாலி, லுக்சம்போர்க், நெதர்லாந்து, நார்வே, போர்த்துகல் போன்ற 12 நாடுகளைக் கொண்டு 'நேட்டோ' உருவாக்கப்பட்டது. சோசலிச ரசிய குடியரசுகளை வீழ்த்துவது, அதன் மூலம் அமெரிக்கா தலைமையிலான உலக மேலாதிக்கத்தை நிறுவுவது நேட்டோவின் இலக்கு ஆகும்.

சோவியத் யூனியனின் முதலாளித்துவப் பாதையைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட வார்சா ஒப்பந்தம் (Warsaw Pact 1955)

சோவியத் யூனியனில் ரசியா, உக்ரைன், பெலாரஸ், ஜார்ஜியா, உஸ்பெக், அஜர்பைஜான், லித்துவேனியா உள்ளிட்ட 15 சோசலிசக் குடியரசுகள் (கிழக்கு ஜரோப்பா, பால்டிக், மத்திய ஆசியா) அங்கம் வகித்தன. சோசலிச நிர்மாணத்தைக் கட்டியெழுப்புவதில் தலைமைச் சிற்பியாக ஸ்டாலின் விளங்கினார். குருசேவ் போன்ற முதலாளிய பாதையாளர்கள் ஸ்டாலின் மறைவிற்குக் காத்துக்கிடந்தனர். 1953-ல் ஸ்டாலின் மறைந்த பிறகு, குருசேவ் கும்பல் அமெரிக்க ஏகாதிபத்திய ஆசியுடன் சோவியத் யூனியனில் முதலாளித்துவ மீட்சியை கொண்டு வந்தது. சோவியத் யூனியனில் இருந்த நாடுகள் முதலாளித்துவ நாடுகளாகவும், சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ கட்சியாகவும் மாற்றியமைக்கப்பட்டது. மேற்கு ஜெர்மனி 1955-ல் நேட்டோவில் இணைந்ததை அடுத்து, நேட்டோவின் ஆக்கிரமிப்புகள், அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், சோவியத் யூனியனின் முதலாளித்துவப் பாதையை பாதுகாக்கவும் 1955-ல் வார்சா கூட்டமைப்பு (Warsaw Pact) உருவாக்கப்பட்டது.

பிரஷ்னேவ் ஆட்சிக் காலத்தில் ரசியா ஒரு சமூக ஏகாதிபத்திய நாடாக வளர்ந்தது. ரசியப் பெருமுதலாளிகளின் ஏகபோக நலன்களுக்காகச் சோவியத் யூனியனில் அங்கம் வகித்த நாடுகளின் மீது சமூகப் பாசிசத்தை ஏவி தேசிய இனங்களை கொடூரமாக நசுக்கியது சோவியத் சமூக ஏகாதிபத்தியம். தேசிய இன உரிமைகள் பறிக்கப்பட்டு அவற்றின் வளங்கள் சுரண்டப்பட்டு மையப்படுத்தப்பட்டன. 1970களில் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் உலக மறுபங்கீட்டிற்கான பனிப்போரில் ஈடுபட்டது. ஆப்கானை 1978-ல் சோவியத் சமூக ஏகாதிபத்தியம் ஆக்கிரமித்தது. அங்கு ரசியாவின் பொம்மை ஆட்சியை வீழ்த்த இஸ்லாமியப் பயங்கரவாத குழுக்களை ஊட்டி வளர்த்தது அமெரிக்கா. ஆப்கான் மக்கள் அமெரிக்க, ரசிய ஏகாதிபத்திய நலன்களுக்காகப் படுகொலை செய்யப்பட்டனர். பனிப்போரில் ஈடுபட்டுத் தோல்வியடைந்த ரசியா பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளவும், முதலாளித்துவ பாதையைப் பாதுகாக்கவும் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகள் சோவியத் யூனியனை அமெரிக்காவிற்கு தாரை வார்த்தார்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளை அமெரிக்காவிற்கு தாரை வார்த்தார்கள். முதலாளியப் பாதையைப் பாதுகாக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தங்கள் போட்டு நாட்டைக் காட்டிக் கொடுத்தார்கள். இதன் விளைவாகச் சோவியத் ஒன்றியம் சிதறுண்டது. போலந்து, ஹங்கேரி, செக்கோஸ்லோவேக்கியா உள்ளிட்ட வார்சா நாடுகளில் எழுந்த மக்கள் போராட்டங்கள் கொடூரமாக ரசியாவால் நசுக்கப்பட்டன. இதன் விளைவாக வார்சா நாடுகள் ஒவ்வொன்றாக வார்சா கூட்டமைப்பிலிருந்து வெளியேறின. 1989-ல் பெர்லின் சுவர் இடிக்கப்பட்டு சோவியத் யூனியனில் இருந்த கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டு ஜெர்மனி ஒரே நாடானது. அமெரிக்காவின் கைக்கூலியான கோர்பச்சேவ் இதற்கு ஒத்துழைத்தார். அமெரிக்காவின் மேடையில் (Platform) நின்று கொண்டு "கம்யூனிசத்தை ஒழிப்பதே எனது முக்கிய குறிக்கோள்; பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தோற்றுவிட்டது; வரலாறு முடிந்துவிட்டது" என அறிவித்தார்.

இது பற்றி ஏ.எம்.கே கூறுவதாவது "சோவியத் யூனியனில் முதலாளிய மீட்சி நடந்து சோவியத் சமூக ஏகாதிபத்தியமாக மாறியது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள சமூக ஏகாதிபத்தியவாதிகள் அமெரிக்காவிற்கு நாட்டை தாரை வார்த்துவிட்டார்கள். நாட்டைக் காட்டிக் கொடுத்துவிட்டார்கள். முதலாளித்துவ பாதையைக் காத்துக் கொள்ள அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டார்கள். இதன் விளைவாக சோவியத் துண்டாடப்பட்டது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளைத் தாரை வார்த்தார்கள். பெர்லின் சுவர் விழுந்தது. ஜெர்மன் மேலாதிக்கத்தின் கீழ் கிழக்கு ஜெர்மன் வந்தது. இது கோர்பச்சேவ் கலைப்புவாதத்தின் விளைவு."

(சர்வதேச அரசியல் பொது வழியைத் தீர்மானிப்பது குறித்து ஓர் அறிமுகம், ஏ.எம்.கே, பக்கம் 29)

கிழக்கு ஜெர்மனி நேட்டோவில் இணைக்கப்பட்ட போது, ஜெர்மனிதான் நேட்டோவில் இணைக்கப்படும் கடைசி நாடு எனவும், இனி ஒரு இன்ச் கூட நேட்டோ கிழக்கில் விரிவுபடுத்தப் படாது எனவும் அமெரிக்கா கோர்பச்சேவிடம் வாய்மொழியாக வாக்குறுதி தந்தது. கோர்பச்சேவும் முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளின் உள் விவகாரங்களில் ரசியா தலையிடாது என வாக்குறுதி கொடுத்தார். ஆனால் இரண்டு தரப்பும் வாக்குறுதிகளை மீறின.

1991-ல் சோவியத் ஒன்றியம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. ஆகவே சோவியத் யூனியன் சிதறுண்டு போனதால் வார்சா அமைப்பும் சிதறுண்டு போனது. இதற்கு மாறாக "வார்சாவை ரசியா கலைத்துவிட்டது; அமெரிக்கா ஏன் நேட்டோவை கலைக்கவில்லை" என்று ரசிய ஆதரவாளர்கள் (திருத்தல்வாதிகள்) பேசுவது வரலாற்றுத் திரிபு. வார்சா கலைக்கப்படவில்லை. ரசிய சமூக ஏகாதிபத்திய வெறிநாயின் சமூகப் பாசிச ஒடுக்குமுறைகளால்தான் 'வார்சா அமைப்பு' கலைந்துபோனது. இன்னும் சொல்வதெனில் வார்சா நாடுகள் சோவியத் சமூக ஏகாதிபத்தியவாதிகளால் அமெரிக்காவிற்குத் தாரை வார்க்கப்பட்டது.

நேட்டோவுடனான ரசியாவின் மறுபங்கீட்டு மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகளும், நேட்டோ விரிவாக்கமும்

ரசியாவும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மீண்டும் தலை தூக்கவிடாமல் அவற்றை நசுக்கவும், ஐரோப்பிய யூனியனில் ஜெர்மனியின் வளர்ச்சியைத் தடுக்கவும், தனது உலக மேலாதிக்க கனவை முன்னெடுக்கவும் நேட்டோவை விரிவாக்கம் செய்வதற்காக அமெரிக்கா 1989ல் யுத்த தந்திர கொள்கையை வகுத்தது. கிழக்கு ஐரோப்பிய, மத்திய ஐரோப்பிய, பால்டிக் நாடுகளில் உருவான தேசிய இனப் பகைமைகளை நேட்டோவும் ரசியாவும் பயன்படுத்திக் கொள்ளத் துவங்கின. ரசியா தான் இழந்த சோவியத் யூனியனிலிருந்த நாடுகளை மீண்டும் கைப்பற்ற விரும்பியது. பல வண்ணப் புரட்சிகள், மலர் புரட்சிகள் மூலம் பொம்மை ஆட்சிகளை அமெரிக்கா உருவாக்கியது. அமெரிக்காவின் கிழக்கு நோக்கிய நேட்டோ விரிவாக்கத்திற்கு கிழக்கு ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு முயற்சிகள் தூண்டுகோலாகவும், காரணியாகவும் இருந்தன. அதைப் பயன்படுத்தி நேட்டோவை அமெரிக்கா விரிவுபடுத்தத் துவங்கியது. அந்நாடுகள் ரசியாவின் தூண்டிலிலிருந்து நேட்டோவின் தூண்டிலில் சிக்கிக்கொண்டன.

(தொடர்ச்சி பகுதி -2 ல்)