தேர்தல் பிரச்சாரம் என்பது தேர்தலைப் பற்றிய பிரச்சாரமும் கூட!

துரை. சண்முகம்

தேர்தல் பிரச்சாரம் என்பது தேர்தலைப் பற்றிய பிரச்சாரமும் கூட!

தேர்தல் பிரச்சாரம் என்பது தேர்தலைப் பற்றிய பிரச்சாரமும் கூட! 

மக்களிடம் கடவுள் நம்பிக்கை இருக்கிறதா? 

இருக்கிறது! 

மக்களிடம் தேர்தல் நம்பிக்கை இருக்கிறதா? 

இருக்கிறது!

ஏதாவது நல்லது நடக்காதா? எனும் எதிர்பார்ப்பும், கடவுளை விட்டால் வேறு கதி? எனும் நம்பிக்கையிலும் இது தொடர்கிறது. 

இதயமற்ற உலகத்தின் இதயமாக மதம் இருப்பது போல, ஏதும் மாற்று இல்லாத உலகத்தின் மாற்றாக  இந்தத் தேர்தல் இருக்கிறது. 

மக்கள் கடவுளை நம்புகிறார்கள் ! என்ன அறிவுப்பூர்வமாக விளக்கம் சொன்னாலும் அதன் பின்னாலேயே போகிறார்கள்! 

ஆகவே நாமும் அவர்கள் பின்னால் போவோம் என்று எப்படி ஒரு முற்போக்காளர் முடிவெடுக்க முடியாதோ! அப்படிதான் மக்களிடம் தேர்தல் நம்பிக்கை இருக்கிறது எனவே அவர்கள் பின்னாலேயே போவோம் என ஒரு கம்யூனிஸ்ட் கட்சி முடிவு எடுக்க முடியாது. கூடாது. 

முதலில் தேர்தல் என்றால் என்ன? இதில் நடப்பது என்ன? இது யாருக்காக நடக்கிறது? இதில் யாருக்கு அதிக பலன்?

போன்ற அரசியல்வாதங்களை மக்களிடம் நடத்துவதற்கு சலிப்படைந்து போய் இந்த சலிப்பின் தொடர்ச்சியாக மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளையும் நம்பவில்லை! வரவில்லை! ஆகவே அவர்கள் நம்பும் கட்சிகளுக்குள் இருப்பதிலேயே கொஞ்சம் முற்போக்காக இருப்பவர்களுக்கு போய் முட்டு கொடுப்போம் எனும் நிலைக்கு 

ஆளாகிறார்கள் பலர்.

"கோயில் கூடாது என்று சொல்லவில்லை! அது கொடியவர்களின் கூடாரமாக இருக்க கூடாது என்று சொல்கிறோம்!" என்று திமுக இந்துத்துவத்துடன் ஒரு சமரசத்திற்கான நியாயம் கற்பித்துக் கொண்டது போல 

இந்த தேர்தல் முறையுடன் ," தேர்தலில் தீர்வு என்று சொல்லவில்லை! இருந்தாலும் இதில் கொடிய பாஜகவை வீழ்த்துவது முதற்கடமை!" என்று சொல்கிறோம்! என்று நியாயம் கற்பித்துக் கொள்கிறார்கள் மாற்றாக கம்யூனிச அரசியல் சித்தாந்தத்தை நிறுவும் போராட்டத்தில் நிலை குலைந்தவர்கள். 

தேர்தல் என்பதைப் பற்றிய அரசியல் அடிப்படையிலான பிரச்சாரம் போதனைகளை மக்களிடம் செலுத்துவதில் முழுமை பெற்று விட்டதாக வேறு ஒரு தன்னிறைவில் தமக்கான மாற்று அரசியல் அமைப்பை உருவாக்கும் வேதனையான வேலையிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் விரும்புகிறார்கள். 

தேர்தல் புறக்கணிப்பு ஆதரவு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது நிலவும் தேர்தல் முறை பற்றிய முழு அரசியல் உண்மைகளை பேசுவதை கூட ரத்து செய்து விடுகிறது பலரின் "என்ன இருந்தாலும் திமுக!" எனும் இழுவை மனநிலை. இந்த 'என்ன இருந்தாலும்' என்பதற்குள் திமுக பாஜக எனும் பெயரில் இல்லாத பல இந்துத்துவ அடிப்படை வாதங்களை உள் இழுத்துக் கொண்டுள்ளது.

ஏன் திமுகவை குறிப்பிட வேண்டி இருக்கிறது என்றால், 

மற்றவை முழுக்க அம்பலப்பட்டு 

மக்களிடம் அரசியல் ரீதியாக முற்போக்கு வேடம் போடும் முகாந்திரத்தில் இல்லை. 

ஆனால் திமுகவை இன்னும் இன மொழி பகுத்தறிவு முற்போக்கு எனும் கொள்கையில் நிறைந்த கட்சியாக சித்தரிப்பதில் இயக்கம் சார்ந்த சாராத கருத்தியல் நிலவுவதால் அதை முதன்மையாகக் காட்டி பேச வேண்டி இருக்கிறது. 

ஏகாதிபத்திய உலக அரசியலின் கீழ் கண்டம் விட்டு கண்டம் பாயும் மூலதன ஆதிக்கத்தின் கீழ் இந்தியா குறிப்பாக தமிழ்நாடு கட்சிகள் என்பவை கார்ப்பரேட் மயமாகிவிட்டன. 

இதற்கு இடைஞ்சல் இல்லாத கூட்டணி மற்றும் வேட்பாளர்கள் தேர்வுகளே நாட்டை ஆள்கின்றன. 

இந்த எதார்த்தச் சூழலை அரசியலை பேசுவதே கூட தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு கடமையாக நாம் கருத வேண்டும். இந்த உண்மைகளை எல்லாம் பேசினால் பாஜக வந்து விடுவான்! எனவே அதைப் பற்றி மட்டும் பேசுவோம் எனும் சந்தர்ப்பவாதத்தால் உண்மையில் பாஜக உருவாக்க விரும்பும் எதிர்பற்ற அரசியல் சூழல் நம்மை அறியாமலேயே உருவாகிக் கொண்டிருக்கிறது.

தேர்தலை காரணம் காட்டி அனைத்தையும் இந்த கட்டமைப்புக்குள் நான் பார்த்துக் கொள்கிறேன்! என திமுகவின் பொய் தோற்றத்தை நம்பி , தேர்தலுக்கு வெளியே பேசினாலும் சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி அதை அடக்கி விடும் திமுக அரசு பற்றி அதன் வக்கத் தன்மையை பற்றி பேசுவதையும் தடை செய்து கொள்வதன் மூலம், பாட்டாளி வர்க்க அரசியல் இயக்கத்திற்கான அடிப்படைகளையே தடை செய்து விடுகிறது இந்த வகையிலான தேர்தல் வாதம். 

தேர்தல், ஓட்டு போடுவது என்பது நமக்கு வெளியே நடந்தால் என்ன? கம்யூனிஸ்டுகள் என்னும் வகையில் இதில் அரசியல் ரீதியாக குறுக்கீடு செய்வதற்கு எந்தத் தடையையும் நாம் வகுத்துக் கொள்ள கூடாது. 

பாட்டாளி வர்க்க அரசியல் நலன் அதற்கான இயக்க வளர்ச்சி எனும் அடிப்படையிலேயே தேர்தலையும் அணுக வேண்டும். 

அதற்கு நிலவும் தேர்தல் முறையைப் பற்றிய அரசியல் உண்மைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். 

யாருக்காவது ஓட்டு போட்டால் தான் நமக்காக வந்து நிற்பார்கள்! என்னும் பாமர அறிவுக்கு புரியும்படி நீங்கள் தேர்ந்தெடுப்பவரை விட நீங்கள் தேர்ந்தெடுக்காத அதிகாரிகள் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறார்கள் என்பதை அரசியலாக தேர்தல் பிரச்சாரமாக புரிய வைக்க வேண்டும். 

தேர்தல் என்பது இங்கே மக்கள் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பது என்ற பொருளில் இல்லாமல், மக்களை அடக்கி ஒடுக்கி சுரண்டி ஆளும்,  ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகள் தங்களுக்கான மக்கள் வாக்கை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் தெரிவாக இருக்கிறது.

இதன் ஊடாக தேர்தலே கூடாது எனும் மட்டை அடி வாதம் அல்ல, நம்முடைய நலன்களை பாதுகாக்க எத்தகைய தேர்தல் வேண்டும்? என்பதை நோக்கிய சிந்தனை நீட்சியாக மக்களிடம் ஒரு சேமிப்பு கருத்தாக இதை செலுத்த வேண்டும்.

மக்களுக்கு மாற்று நம்பிக்கையை அளிக்கும் அரசியல் அதிகார அமைப்புகளை உருவாக்கும் வரை இது ஒரு நீண்ட கால தொடர் பிரச்சாரமாகத்தான் இருக்க முடியும்.

ரத்தக்கண்ணீர் படத்தில் எம். ஆர். ராதா பேசும் ஒரு வசனம் போல, "கல்யாணம்னா என்னான்னே தெரியாது! ஆளுக்கு ஒன்னு பண்ணிப்பான்!"

என்று நடைமுறைகளில் குறுக்கிடும் பண்பாட்டு விமர்சனம் போல மக்களது அனைத்து நடைமுறைகளின் மீதும் அரசியல் விமர்சனமாக பேசும் துணிவு ஒரு கட்சிக்கு வேண்டும். 

தேர்தல் பிரச்சாரம் என்பது ஒரு கம்யூனிஸ்ட்டை பொறுத்தவரையில் மக்களுக்கான அரசியலைப் பிரச்சாரம் செய்வதுதான்!

https://www.facebook.com/100080904177819/posts/972391455467651/?rdid=i7MWulxLvajHNeTJ

================================================

தேர்தல் !

மக்கள் பார்வையில்.....

 

 " எங்க ஊர்ல இன்னமும் குடிநீருக்கு அலைய வேண்டியிருக்கு! நல்ல தரமான குடிநீர் கொடுத்தாலே எங்களுக்கு பெரிய விஷயம்!"

" ஆற பூரா சாக்கடை ஆக்கிட்டாங்க! நாள் முழுக்க மணல அள்ளி விக்கிறாங்க!

நிலத்தடி நீர்மட்டமே இறங்கிடுச்சு! எங்க புகார் கொடுத்தாலும் எதுவும் நிக்கல!"

" எங்க பழங்குடியின கிராமத்துக்கு சரியான சாலை வசதியே இல்ல! நிறைய வனங்களை மலைகளையும் அழிக்கிறாங்க.."

" இங்கே இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து போயி பஸ் புடிச்சு டவுன்ல கடைகளில் வேலை பார்க்கிறோம்! ஒரு நாளைக்கு 300 ரூபாய் சம்பளம் 10 மணி நேரம் ஆவுது!"

" நிறைய இளைஞர்கள் போதைக்கு ஆளாகிட்டாங்க! 

பொழுது போய் தனியா வீட்டுக்கு வரவே பயமா இருக்கு!"

  இதெல்லாம் தொலைக்காட்சிகள் நடத்தும் தேர்தல் சிறப்பு ஷோக்களில் இளைஞர்களும் பெண்களும் வெளிப்படுத்தும் கருத்துக்களின் சில துளிகள் மட்டுமே.

பெரும்பாலும் இந்த நிகழ்ச்சிகளில் பேசும் அந்தந்த ஊர் இளைஞர்கள் பெண்கள் தனிப்பட்ட முறையிலான தேவைகளைப் பற்றி அதிகம் பேசுவதை விட எங்கள் ஊர் இப்படியெல்லாம் அழியது என்று சொல்லும் ஆற்றாமை! 

அற்புதமான இளைஞர்களின் மன வெளிப்பாடு மண்ணின் மீது உள்ள பற்றோடு கூடிய அரசியல் எதிர்பார்ப்பை காட்டுகிறது.

ஓட்டுப் போட தயாராக இருக்கும் இந்த இளைஞர்கள் இந்த நாட்டைப் பற்றியும் இயற்கை வளங்களை பற்றியும் உழைப்பவர்களுக்கு உரிய கஷ்டங்களைப் பற்றியும் தன்னியல்பாக பேசுகிறார்கள். 

ஓட்டு கேட்டு பேசும் ஒருவன் கூட 

இப்படி ஊரின் இயற்கை வளங்களை பற்றியோ உழைப்பவர்களின் உரிமைகள் பற்றியோ ஒரு வார்த்தை பேசுவதில்லை. தேர்தலுக்காக கூட இதையெல்லாம் பேசுவதில்லை. 

பேசிப் பேசி எதுவும் நடக்காமல் வெறுத்துப் போன இளைஞர்கள் அரசியலையே வெறுக்கும் அளவுக்கு செய்து விடுவதுதான் இந்த அரசியல்வாதிகளால் ஆகும் மோசமான பாதிப்பு.

ஆனாலும் பல இடங்களில் இளைஞர்களின் பேச்சைக் கேட்கையில் ஒரு புதிய தலைமுறைகள் உருவாகி வரும் அழகிய வண்ணங்கள் தெரிகிறது. 

இதை ஒரு ஓவியம் ஆக்கும் தூரிகை கைகள்தான் இல்லாத துயரம் நிலவுகிறது!

https://www.facebook.com/100080904177819/posts/973129302060533/?rdid=gOwGcG8rtiNfAsFv

       - துரை. சண்முகம்