சகலமும் தனியார் என்றால், உள்ளாட்சிகள் எதற்கு?
அறம் இணைய இதழ்
திராவிட மாடல், அரசாங்கத்திலும் சரி, அதன் உள்ளாட்சி அமைப்புகளிலும் சரி எல்லா வேலைகளையும் தற்போது தனியார் கைகளுக்கு தந்துவிட்டு பொறுப்பற்று இருப்பது வாடிக்கையாகிவிட்டது அதிர்ச்சியளிக்கிறது. நிதி நிலை அறிக்கை நீதியற்ற அறிக்கையாக உள்ளதே…!
அரசாங்கத்தை அதிகாரமற்றதாக்கும் வகையில், அனைத்து துறைகளிலும் தனியார் ஆதிக்கத்தை நிலை நிறுத்துவதை மத்திய பாஜக அரசு செய்கிறது என்றால், அது அவர்களின் ரத்தத்திலும், சித்தத்திலும் ஊறிய கொள்கை என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆனால், சிறியதொரு நிர்வாகமான உள்ளாட்சி அமைப்பான மாநகராட்சியைக் கூட இத்தனை கவுன்சிலர்களும், மேயர், துணை மேயர், ஆணையர் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தும் நிர்வகிக்க முடியாது என்றால், இதை எப்படி புரிந்து கொள்வது?
ஏற்கனவே குப்பை எடுப்பது தனியார் வசம் தான் தரப்பட்டு உள்ளது.
சென்னை நகரின் 786 பூங்காக்களில், 584 பூங்காக்களை பராமரிக்க தனியாரிடம் தரப்படுகிறது. அதற்காக அவர்களுக்கு ரூ 46 கோடிகள் கொடுக்கப்படுகிறது.
பொது – தனியார் கூட்டு என்ற பெயரில் மயான பூமி பராமரிப்பும், சாலையோர வாகன நிறுத்துமிட கட்டண வசூலும் செய்யபடுமாம். முன்பு வெறும் மூன்று மண்டலங்களில் மட்டும் தனியாருக்கு தரப்பட்டது, இந்த வாகன கட்டண வசூல்! தற்போது எஞ்சியுள்ள 12 மண்டலங்களையும் தனியாருக்கே தாரை வார்க்கிறார்கள்!
இந்த பொது தனியார் கூட்டு என்பதே அரசின் அனைத்து கட்டுமானங்களையும் தனியாரிடம் தந்துவிடுவது தானே! தனியார்கள் சிலர் லாபம் பார்ப்பதற்காகத் தான் மக்கள் ஓட்டு போட்டு இவர்களை தேர்ந்தெடுத்தார்களா..? நிர்வாகம் செய்யவும் தயாரில்லை. பொறுப்பு ஏற்கவும் தயாரில்லை. காண்டிராக்ட் விடவும், கமிஷனை வாங்கி பாக்கெட்டில் போட்டுக் கொள்வதற்காகவுமா மேயர், கவுன்சிலர் பதவிகள்?
கவுன்சிலர்களின் வார்டு மேம்பாட்டு நிதி ரூ.35 லட்சத்திலிருந்து ரூ.40 லட்சமாக உயர்த்தப்படுமாம். கவுன்சிலர்களுக்கு எதற்கு தனியாக வார்டு மேம்பாட்டு நிதி? இது ஊழலுக்கு தான் வழி வகுக்கிறது! ஒவ்வொரு திட்டத்திற்கும் இன்னின்ன அளவுக்கு என்று நிதி ஒதுக்கிய பிறகு இவ்வாறு கவுன்சிலர்களுக்கு ஒதுக்குவது தேவையற்றதாகும்.
2 லட்சத்து 50 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும் என அறிவித்துள்ளனர். மரக் கன்றுகள் நடுவது முக்கியமல்ல, அதை சரியாக பராமரிக்க வேண்டும். வழக்கமாக அதில் தான் கோட்டை விடுகின்றனர். மேலும் நடப்படும் மரக்கன்றுகள் சில வருடங்களில் உயர்ந்தோங்கி நிழல் தர வேண்டும். தரக் குறைவான குட்டை மரக் கன்றுகளை நடுவதை தவிர்க்க வேண்டும்.
10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் பள்ளி ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வார்களாம். கல்விச் சுற்றுலா நல்ல விஷயம் தான்! ஆனால், அதற்காக நூறு சதவிகித தேர்ச்சி என நிர்ணயிப்பது தேவையற்ற மன அழுத்ததை தான் ஆசிரியர்களுக்கு தரும். அந்த மன அழுத்தத்தை அவர்கள் மாணவர்களுக்கு தான் இறக்குவார்கள்! சுமாராக படிக்கும் மாணவர்களும், சரியாக படிப்பு வராத மாணவர்களும் இதனால் அழுத்தம் தாங்கமாட்டாமல் பள்ளியை விட்டு இடை நிற்பது தான் நடக்கும். சமீபத்தில் ப்ளஸ் டூ தேர்வில் சுமார் 50,000 மாணவர்கள் தேர்வு எழுத வராமல் இடை நின்றதை கவனத்தில் கொள்க!
இந்த நிதி நிலை அறிக்கையில் 2023-2024-ம் நிதியாண்டின் வருவாய் தலைப்பில் வரவு ரூ.4,131.70 கோடியாக காட்டப்படுகிறது. அதே சமயம் வருவாய் செலவினம் ரூ.4466.29 கோடியாக ஏன் இருக்கிறது. எவ்வளவு அதிகத் தொகை வருமானமாக வந்தாலும் அதை ஊதாரித்தனமாக செலவழிப்பது என்பது மாறாது போலும்.
ஆண்டுக்காண்டு மழை நீர் வடிகாலுக்கு ஆயிரம் கோடிகளுக்கு செலவு செய்யப்படுகிறது. ஆனால், அதற்கொப்ப பலன்கள் தாம் கிடைத்தபாடில்லை.
இதே போல மூலதன வரவு ரூ.3554.50 கோடியாகவும், மூலதனச் செலவு ரூ.3554.50 கோடியாகவும் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை மாநகராட்சியை ரூ.334 கோடி நிதி பற்றாக்குறைக்கு தள்ளிவிட்டனர். கொள்ளை வருமானம் கிடைத்தாலும் தனியார்மயமாக்கல் இருந்தால், இல்லை என்ற நிலைமை தொடரவே செய்யும். மாநகராட்சியின் உயிர் நாடியாகத் திகழ்பவர்களே துப்புறவு தொழிலாளர்கள் தான் அவர்களை தனியார்களிடம் ஒப்பந்தக் கூலிகளாக அடிமாட்டு கூலிக்கு வேலை செய்ய வைப்பதற்கு எதற்கு ஒரு மாநகராட்சி? எதற்கு ஒரு மேயர்?
வேலையற்று ஊழலில் ஊறித் திளைக்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கலாம். கடுமையாக பணியாற்றும் அடி நிலை தொழிலாளர்களை கண்ணியமான ஊதியத்திற்கு பணி நிரந்தரம் செய்யுங்கள்!
மத்திய மாநில அரசுகளைப் போல, எடுத்தற்கெல்லாம் சும்மா, சும்மா கடன் வாங்குவதை உள்ளாட்சி அமைப்புகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். தற்போதே வாங்கிய கடனுக்கு சுமார் 150 கோடி வட்டி கட்ட வேண்டிய அவலம் ஏற்பட்டுவிட்டது என்பதை சென்னை மாநகராட்சி உணர வேண்டும். .
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு