தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன?
அறம் இணைய இதழ்
மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..?
‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என ஐஐடி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இசைஞானி இளையராஜா தன் வாழ் நாளில் உருவாக்கிய அனைத்து இசைக்கான நோட்ஸ்களையும்( சங்கேதக் குறிப்புகள்) தானமாகத் தர உள்ளாராம்!
தமிழகத்தின் தென் மேற்கு மாவட்டமான தேனி மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமான பண்ணைபுரத்தின் ஒரு எளிய குடும்பத்தில் இருந்து சென்னைக்கு வந்த ராசையா என்ற இளையராஜா இன்று இசையில் சாதனைகள் பல புரிந்து, வரலாறாக மாறி இருக்கிறார். அவர் இசைத் துறையில் விரைவில் பொன் விழா காணவுள்ளார்! இந்தியாவில் மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த இசை அமைப்பாளரும் இவ்வளவு நீண்ட காலம் திரை இசையில் தங்கள் கொடியை பறக்கவிட முடிந்ததில்லை! ஏனென்றால், திரைஇசையின் ரசனைப் போக்குகள் மாறிக் கொண்டே இருப்பவை! அப்படி மாறிக் கொண்டிருக்கும் இசை உலகில் காலத்திற்கேற்ப தானும் மாறி புதுப்புது இசை வடிவங்களை தருவது தான் இளையராஜாவின் சாதனையாகும்.
தன் தாயிடமிருந்தும், தன்னைச் சுற்றி வாழ்ந்த உழைக்கும் மக்களிடம் இருந்தும் இசைப் பாடல்களை கேட்டு வளர்ந்ததால் இயல்பாகவே நாட்டுப் புற இசையில் காலூன்றி மேலெழுந்து வந்தவர் தான் இளையராஜா! அவர் இன்று அடைந்திருக்கும் உயரத்திற்கு எல்லாம் அடித்தளமிட்டது அவர் கேட்டும், பாடியும் வளர்ந்த கிராமிய இசை தான்!
அதற்குப் பிறகு திரைப் பாடல்களை அப்படியே ஆர்மோனியத்தில் உள்வாங்கி இசை அமைக்கும் அவரது ஆற்றலுக்கு அடித்தளமிட்ட முதல் ஆசான் அவரது அண்ணன் பாவலர் வரதராஜன். பாவலர் வரதராஜன் பொதுவுடமைச் சமூக லட்சியத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மக்கள் கலைஞர். அவருடன் பட்டிதொட்டியெங்கும் பயணித்த பத்தாண்டுகாலப் மேடைப் பயிற்சி தான் இளையராஜாவிற்கு ஒரு இசை அமைப்பாளனாகும் ஆர்வத்திற்கு அடிக்கோலமிட்டது.
ஆயினும், பள்ளிப் படிப்பை கூட முடிக்க வசதி இல்லாத சூழலில், அவர் ஒரு தோட்டத் தொழிலாளியாகவும், கட்டுமானத் தொழிலாளியாகவும் உழன்று கொண்டே, இசைக் கனவில் திளைத்தார். பிறகு சென்னைக்கு சென்று போராடலாம் எனத் துணிந்து வந்து எட்டாண்டுகள் இயங்கிய காலத்தில் அவருக்கு திரை இசையில் நேரடி குருவானவர் ஜி.கே.வெங்கடேஷ்! அந்தக் குழுவில் உள்ள எளிய இசைக் கலைஞர்களுடன் பழகி தான், பல்வேறு இசைக் கருவிகளை வாசிக்க கற்றுக் கொண்டார் இளையராஜா!
அவரே கூறியது போல, அந்த காலத்தில் இசையைச் சொல்லித் தர நல்ல பள்ளிகளும் இல்லை. கற்றுக் கொடுக்க ஆசிரியர்களும் இல்லை. கிடாரை வாசிப்பதற்கு விபரமறிந்தவர்களிடம் கேட்டுக் கேட்டுத் தெரிந்து தான் நானே என்னை வளர்த்துக் கொண்டேன்.
அதற்கடுத்த நிலையில் அவருக்கு மேற்கத்திய சங்கீத உலகை திறந்து காண்பித்தவர் மாஸ்டர் தன்ராஜ் தான். மயிலாப்பூர் லஸ் கார்னர் சாயி லாட்ஜ் 13 ஆம் நம்பர் அறையில் தான் அவர் பீத்தோவனையும், மொஸார்ட்டையும், பாஹ்கையும், மேண்டல்ஸனையும், ஷீபர்ட்டையும், சைக்காவ்ஸ்கியையும் அறிந்துணர்ந்தார். வறுமையில் உழன்ற மாஸ்டர் தன்ராஜ் தன்னுடைய மேதமை அனைத்தையும் இளையராஜாவிற்கு வஞ்சகமில்லாமல் வாரி வழங்கினார் – எந்தக் கட்டணமும் வாங்காமல்! ஒரு நல்ல சீடன் கிடைத்ததையே பாக்கியமாக கருதிய தன்ராஜ் போன்ற உன்னத ஆசான்களை ஆண்டவனுக்கு இணையாக சொல்லலாம்.
இந்தப் பயிற்சிகளும், வாய்ப்புகளும் தாம் இளையராஜாவின் இன்றைய சாதனைகளுக்கு பின்புலமாகும். ஆனால், இளையராஜா எத்தனை சீடர்களை உருவாக்கினார்? அவரிடமிருந்து எத்தனை இசை அமைப்பாளர்கள் உருவானார்கள்..? தன்னைப் போன்ற கற்க வாய்ப்பில்லாத – ஆனால், இசை தாகம் கொண்ட எளியோர் எத்தனை பேரை அவர் உருவாக்கினார்?
ஒரு எஸ்.எம்.சுப்பையா நாயுடுவிடம் இருந்து எம்.எஸ்.வி உருவானார். ஒரு எம்.எஸ்.வியிடம் இருந்து ஜி.கே.வெங்கடேசும், சங்கர்-கணேஸும் உருவாயினர்! இளையராஜா சுமார் 48 ஆண்டுகளில் எத்தனை பேரை உருவாக்கி இருக்கலாம்?
இதோ தமிழ்நாடு அரசு நடத்தும் இயல், இசை நாடக கல்லூரியில் ஆண்டுதோறும் படிக்க வரும் மாணவர்கள் அனைவருமே எளிய குடும்பத்து பிள்ளைகளே! மாதத்திற்கு ஒரிரு மணி நேர வகுப்புகள் என்றாவது ஒரு நாள் சென்றதுண்டா..?
ஆனால், இன்றைக்கு நீங்கள் ஜாதிய மேலாதிக்கத்தின் தலை நகரமாக விளங்கும் கல்வி ஸ்தாபனமாகிய ஐ.ஐ.டிக்குள் சென்று, ”கிராமத்தில் இருந்து இசை கற்றுக் கொள்ள வந்த நான், இன்று என்னுடைய பெயரில் சென்டர் ஆரம்பித்து, இசை கற்றுக் கொடுக்கப் போகிறேன். இந்த மையத்தில் இருந்து குறைந்தது 200 இளையராஜா உருவாக வேண்டும்..”எனப் பேசி உள்ளீர்கள்!
உங்கள் அளப்பரிய விலைமத்திப்பில்லா இசை ஞானத்தை முழுக்க, முழுக்க மேல்தட்டு வர்க்கத்திற்கு கடை விரிக்கிறீர்கள்! சென்னை ஐ.ஐ.டி உதவியுடன் உங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஸ்பிக் மேகே ( spicmacay) என்ற அமைப்பு இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரங்களை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கானவர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொள்ளும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் ஒரு அமைப்பாகும். இவர்கள் மத்திய அரசின் அளப்பரிய நிதியைப் பெற்று, மேல்தட்டு பிள்ளைகள் படிக்கும் கல்வி நிறுவனங்களுடன் கைக்கோர்த்து இயங்குபவர்கள்!
நீங்கள் உருவானது எப்படி? உங்கள் வளர்ச்சியின் பின்னணி என்ன? இன்றைக்கு உங்களை பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? இவர்கள் நம்மவர்களும் இல்லை. நல்லவர்களும் இல்லை. இவர்கள் நன்றி உணர்ச்சியே இல்லாதவர்கள்!
இவர்கள் தான் கெளரி அம்மாள், பாலசரஸ்வதி போன்ற பாரம்பரிய நடனக் கலைஞர்களிடம் இருந்து ‘சதிராட்டம்’ என்ற நாட்டியக் கலையைத் திருடி, அதற்கு ‘பரதம்’ என்று பெயரிட்டு, அதன் மூலத்தையே மறைத்து, அதை நம்பி வாழ்ந்திருந்த தேவதாசி வம்சத்தையே வேரறுத்து, இன்று தங்கள் குலத்திற்கான தனிப் பெரும் சொத்தாக்கி கொண்டவர்கள்!
இவர்கள் தான் தமிழிசையைத் திருடி, அதற்கு கர்நாடக இசை எனப் பெயர் சூட்டிய மேல்குலத்தின் வாரிசுகள்!
தமிழ் இசை மும்மூர்த்திகளான முத்துத்தாண்டவர் (1560), அருணாசலக் கவிராயர் (1712 ), மாரிமுத்தாப் பிள்ளை (1717) போன்றோர், கர்நாடக இசை மும்மூர்த்திகளான தியாகராஜர் (1767), சியாமா சாஸ்திரிகள் (1762) முத்துசுவாமி தீட்சிதர் (1776) ஆகியோருக்கு முற்பட்டவர்கள் என்பதையும், தமிழிசை வாணர்களிடம் இருந்து பெற்றவற்றையே சற்றே மாற்றி அல்லது களவாண்டு கர்நாடக இசை உருவாக்கப்பட்டு இன்றைக்கு அது ஒரு குலத்தின் மேன்மைக்கான அடையாளமாகவும், கெளரவத்தின் சின்னமாகவும் மாறி நிற்கிறது என்ற ஒரு உண்மையை மறுதலிக்கும் கூட்டத்துடன் இளையராஜா கை கோர்ப்பதும், பயணிப்பதும் தான் நமக்கு வேதனை அளிக்கிறது.
இதுவா, உங்களை உருவாக்கிய தமிழ்ச் சமூகத்திற்கு நீங்கள் திருப்பியளிக்கும் பரிசு! இது பரிசல்ல, இசை ஞானி அவர்களே! பச்சை துரோகம் ஐயா!
”கர்நாடக சங்கீதமே மிக உயர்வானது” என செல்லும் இடங்களில் எல்லாம் பேசி வருகிறார் இளையராஜா! ஆனால், ‘அந்த கர்நாடக இசைக்கே மூலமானது தமிழ் இசை தான்’ என பல்வேறு தரவுகளுடன் நிருபித்தவர் ஆபிரகாம் பண்டிதர் தான்! இதை உலகம் முழுக்க உள்ள இசை விற்பன்னர்களை அழைத்து கருத்தரங்கள் நடத்திப் பேசியும், எழுதியும் பதிவு செய்துள்ளார் ஆபிரகாம் பண்டிதர்.
ஐ.ஐடி வளாக மேடையில் என்ன பேசினீர்கள்? ”என் அம்மா தந்த 400 ரூபாயுடன் சென்னை வந்தேன். சென்னைக்கு வந்த நாளில் இருந்து இதுநாள் வரை நான் இசையை கற்றுக் கொள்ளவில்லை. மூச்சு விடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதேபோலத் தான் எனக்கு இசையும் இயற்கையாக வருகிறது. என்னைப் பார்த்து யாராவது நன்றாக இசையமைக்கிறீர்கள் எனச் சொன்னால், நன்றாகச் சுவாசிக்கிறீர்கள் எனச் சொல்வது போலத் தான் இருக்கிறது. பாரதி சொன்னது தவறு, ‘எட்டுத்திக்கும் சென்று கலை கற்றுவந்து இங்குச் செயல்படுத்துங்கள்’ என்று அன்று பாரதியார் சொன்னார்..ஆனால், அது தவறு இங்கு இருந்து தான் எட்டுத்திக்கும் சென்று கலையைப் பரப்ப வேண்டும்” என்று பேசியுள்ளீர்கள்!
இப்படித் தத்துவார்த்தமாகப் பேசி மக்களை மட்டுமல்ல, உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்! பல ஆசான்களின் துணையும், ஆசீர்வாதங்களுமே இன்றைய உங்கள் உச்சத்திற்கு காரணம்! அத்துடன் பல்லாண்டு காலப் பயிற்சியும், அர்ப்பணிப்புமே சாதாரணமாக மூச்சு இழுத்து விடுவதைப் போல உங்களுக்கு இசை உருவாக்கத்தை எளிமையாக்கி உள்ளது. மேலும், ”சென்றீடுவீர் எட்டுத் திக்கும். கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என பாரதியார் பாடியதை தவறு என்றும் உபதேசிக்கிறீர்கள்!
உங்கள் இசை மேதமைக்கு மேற்கத்திய இசை மேதைகள் பீத்தோவனும், மொஸார்ட்டும், பாஹ்கும் எவ்வளவு ஆழமான தாக்கத்தை உருவாக்கினார்கள் என நீங்களே பல இடங்களில் பேசியும் ,எழுதியும் உள்ளீர்கள். இதன் விளைவாக பிரான்ஸுக்கும், ஜெர்மனிக்கும், வியன்னாவிற்கும் சென்று இவர்கள் வாழ்ந்த இடத்தையும், சாமாதியையும் பார்த்து விழுந்து வணங்கி வந்துள்ளீர்கள்! மேற்கத்திய இசையுடன் நம் நாட்டு இசையையும் இணைத்து நீங்கள் உருவாக்கிய இசை ஆல்பத்தை பிரான்ஸ் இசை கம்போஸ்ர் பால்மாரியாவிடமும், ஜெர்மனியின் கிளாசிக் மியூசி கண்டக்டர் அலெக்ஸாண்டரிடமும் தந்து வந்துள்ளீர்கள்! ஹவ் டூ நெம் இட், நத்திங் பட் விண்ட் ஆகியவை எப்படி உருவாகின?
அன்று எப்படி சாதாரண இசை வேளாளர் குடும்பத்தில் உருவான எம்.எஸ்.சுப்புலட்சுமியை இந்த மேல்தட்டு வர்க்கம் தனக்கானதாக ஆக்கிக் கொண்டதோ, அதே போல இசைஞானி இளையராஜாவை விழுங்கி ஜீரணிக்க எத்தனிக்கிறது! இளையராஜாவும் இதற்கு பலியாகிறார்! ஆன்மீகவாதி போல பேசும் இளையராஜா அதிகாரமிக்க பதவியான ராஜ்யசபா எம்.பி பதவியை பெற்றார். பாஜகவின் சகவாசம் இளையராஜாவை இந்தச் சூழலுக்கு தள்ளியுள்ளது.
ஐயா, இளையராஜா அவர்களே, உங்கள் பெயரில் ஒரு இசை கல்லூரியை நீங்களே உருவாக்குங்கள்! அதற்கான மாணவர்களை நீங்களே தேர்ந்தெடுங்கள்! இருநூறல்ல, ஈராயிரம் இளையராஜாக்களை உருவாக்குங்கள், எளிய சமூகப் பின்புலத்தில் இருந்து! அதுவே, உங்களை உருவாக்கி உச்சத்தில் வைத்த தமிழ்ச் சமூகத்திற்கு நீங்கள் செய்யும் கைம்மாறாகும்!
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்