பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் விடாதே!!

ஜி.மஞ்சுளா

பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் விடாதே!!

பள்ளிச் சீருடை தைக்கும் பணியை தனியாரிடம் விடக் கூடாது! என்ற தலைப்பிலான எனது கட்டுரை ஜனசக்தி இதழில்….

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம், சீருடை, புத்தக பை ஆகியவை ஆண்டுதோறும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் 1 முதல் 8 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு 4 இணை(set) சீருடைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

 சமூக நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின்படி  ‘மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களின்’ கீழ் உள்ள பெண் உறுப்பினர்கள் தான் கடந்த 40 ஆண்டுகளாக அரசு பள்ளி மாணவருக்கான இலவச சீருடைகளை குறைந்த கூலியில் தைத்து தருகிறார்கள். சமூகநலத்துறை தற்போதைய புள்ளிவிவரப்படி தமிழகம் முழுவதும் உள்ள தையல் தொழில் கூட்டுறவுச் சங்கங்களின் எண்ணிக்கை 84 ஆகும். அதில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 80,592.

ஒவ்வொரு ஆண்டும் 5சதவீதம் கூலி உயர்த்தி தரவேண்டும் என்ற அரசின் ஆணையை நிறைவேற்ற கோரியும், சீருடை தைக்க தரமான துணிகள் தரவேண்டும் என்பது உள்ளிட்ட மற்றும் பல கோரிக்கைகளுக்காக தையல் கூட்டுறவுச் சங்க பெண் தொழிலாளர்கள் ஏற்கனவே போராடி வருகின்றனர். இந்நிலையில் தற்போது பள்ளிகல்வித்துறை வெளியிட்டிருக்கும் ஒரு உத்தரவின் காரணமாக தங்கள் வாழ்வாதாரம் முழுவதுமே பறிக்கப்பட்டு விடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

கடந்த 23.04.24 அன்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிகளுக்கான உறுப்பினர் செயலர் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் “.…..ஒரு முன்மாதிரி முயற்சியாக குறிப்பிட்ட 50 பள்ளிகளில் மாணவர்களுக்கு சரியான அளவில் சீருடை தைத்து வழங்குவதை பள்ளி மேலாண்மை குழு மற்றும் முன்னாள் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். தேர்வு செய்யப்பட்ட 50 பள்ளிகளிலும் மாணவர்களுக்கான சீருடைகள் தைத்தலை சார்ந்த பள்ளிகளே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

அந்த சீருடைகளை தைப்பதற்கு சுயஉதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர் உதவியுடன் தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 4ம் வகுப்பு மாணவர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் 1முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கும் அளவுகளை மேற்கோள்ள வேண்டும்.

மேலும் மேலாண்மை குழு மூலமாக பள்ளி மாணவர்களுக்கு அளவெடுத்து தைப்பதற்குத் தேவையான துணியின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் சேகரித்து அனுப்ப மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2022 முதல் அனைத்து வகை அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்தப்பட்டு அதிலிருந்து பெற்ற தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு ஒரு முன்மாதிரி முயற்சியாக இத்திட்டம் செயல்படுத்தபடுவதாக அந்த உத்தரவு குறிப்பிடுகிறது. இதற்காக 50 பள்ளிகளை தேர்வு செய்து மாவட்டவாரியான பள்ளிகளின் விவரப்பட்டியல் மற்றும் சீருடை அளவீடுகள் பதிவுசெய்யும் படிவம் ஆகியவை இணைப்பாக வெளியிடப்பட்டுள்ளன.

மாணவர்களுக்குச் சரியான அளவில் சீருடை தைத்து தருவதற்கான இப்பணியைச் செய்து வரும் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்கள் கையில் இருந்து பறித்துத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முயற்சி ஆகும்.

 “தையல் தொழிலாளர்கள் பள்ளிக்கு நேரடியாக சென்று மாணவர்களின் அளவை எடுத்து சீருடை தைக்க வேண்டும். கேன்வாஸ் வைத்து தரமான பட்டன் காஜா வைக்க வேண்டும்” என்று சமூக நலத்துறை அலுவலர் விதித்த  கட்டுபாடுகளை எதிர்த்து கடந்த மார்ச் மாதம் தேனி பெரியகுளத்திலும் கூட்டுறவுச் சங்க பெண்கள் ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். சட்டைக்கு ரூ22, கால்சட்டைக்கு ரூ42 கூலி வழங்கப்படுகிறது. ஆனால் கேன்வாஸ், பட்டன் காஜாவுக்கே ரூ20 செலவாகும். இந்த தொழிலை நம்பி ஏராளமான மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்தோர் உள்ள நிலையில் இது கூடுதல் சுமையாக இருக்கும் என்று பெண் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களின் சட்டை தைக்க தற்போது தரப்படும் ரூ22 கூலியில் ரூ5.50 காஜா பட்டன் தைக்கவும் மற்றும் நூல், லேபிள், போக்குவரத்து செலவு, மின்சாரம், தையல் இயந்திர பாரமரிப்பு என அனைத்து செலவுகளையும் பெண்கள் தான் செய்கின்றனர். குறைந்த கூலியாக இருப்பினும் வீட்டில் இருந்து வருமானம் இயற்றும் வாய்ப்பை இழந்துவிடாமல் இருக்க வேதனையுடன் இப்பணியைச் செய்து வருகின்றனர்.

அதேபோல் சீருடைகளைத் தைப்பதற்கு சுயஉதவிக்குழு அல்லது உள்ளூரில் உள்ள தகுதிவாய்ந்த ஒரு தையல் கலைஞரை தேர்ந்தெடுக்க வேண்டும் என தற்போதைய உத்தரவில் உள்ளது. தைப்பதற்கு தையல் கலைஞரை தேர்வு செய்ய வேண்டும் என கூறுவதன் உள்நோக்கம் என்ன? தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களான பெண் தொழிலாளர்கள் அனைவரும் தையல் படிப்பை முடித்ததற்கான முறையான சான்றிதழ் வைத்துள்ளனர். இவர்கள் இருக்கும் சங்கங்கள் அனைத்தும் முறையாக சமூகநலத்துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அரசின் முயற்சி தனியார் ஒப்பந்ததாரருக்குச் சீருடை தைக்கக் கொடுப்பதற்கான வழிவகை செய்வதாக உள்ளது.

ஏனெனில் ஏழை பெண்கள், கணவரை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் நோக்கத்தில்தான் தையல் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு சீருடை தைப்பதற்கான பணியும் அதற்கான திட்டங்களையும் கடந்த காலங்களில் தமிழக அரசு வகுத்தது.

சமூகநலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் 2017-2018ம் ஆண்டு கொள்கை விளக்கக் குறிப்பில் ‘மகளிரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள்’ தலைப்பின் கீழ் இது குறித்து தெளிவாக முன்வைக்கப்பட்டுள்ளதை நாம் காணலாம். 

“பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு 98 மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் சமூக நல இயக்குநரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றன.

இவற்றில் 80 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ மாணவியர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கும் 4இணை சீருடைகள் தைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதர 18 சங்கங்கள், அலுவலகத்திற்கு தேவையான பதிவேடுகள், ஆவணங்கள், சாக்குகட்டிகள் மற்றும் கயிறு தயாரித்தல் போன்ற பணிகளோடு சீருடைகள் தயாரிக்கும் பணிகளையும் கூடுதலாக செய்து வருகின்றன…..

தமிழக அரசு 2012-13 ஆம் ஆண்டு முதல் 4இணை சீருடைகள் வழங்க ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டில் 43 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட 4இணை சீருடைகள் இம்மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலமாக தைத்து வழங்கப்பட்டுள்ளது. சீருடை தைப்பதற்கான தையல் கூலி 2011-12ஆம் ஆண்டு முதல் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சீருடைகள் தைப்பதற்கென ரூ90கோடி பள்ளிக் கல்வித் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தையற் தொழிற் கூட்டுறவுச் சங்கங்களின் பெண் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சீருடை தைத்தல் மற்றும் வழங்குதல் பணியானது அவர்களுக்கு கணிசமான வருவாயை ஈட்டித் தர வழிவகுத்துள்ளது.

10சத அரசு மானியத்துடன் 15,000 நவீன ரக தையல் இயந்திரங்கள் மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி நவீன ரக தையல் இயந்திரங்கள் மூலம் சங்க உறுப்பினர்களின் தைக்கும் திறன் மற்றும் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

இந்த சங்கங்கள், மகளிரின் சமூக நிலையை மேம்படுத்தும் மற்றும் நலிவுற்ற நிலையில் உள்ள மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்தும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சேலம் மற்றும் திருவண்ணாமலையில் பழங்குடியின பெண்களுக்கென செயல்படும் தையல் பயிற்சி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் 35 பழங்குடியினப் பெண்கள் தையல் பயிற்சி பெற்று வருகின்றனர்.” என கொள்கை விளக்க குறிப்பு கூறுகிறது.

இத்திட்டம் முறையாக செயல்படுத்தபடவில்லை. ஆண்டுக்கு 5சதம் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணை உள்ளபோதிலும் ஊதியம் உயர்த்தி தரப்படுவதில்லை. புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதில்லை. அளவெடுக்க தேவையான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை. இந்த குறைபாடுகளைக் களைந்து முன்மாதிரி முயற்சி எடுக்கப்பட வேண்டும்.

தமிழக அரசு இத்திட்டத்தின் குறைபாடுகளை நீக்கி 5சதவீதம் கூலி உயர்த்தி தரப்படுதல் உட்பட அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றி ஏழை பெண்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

இந்நிலையில் கடந்த 27.05.24 அன்று சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் பாண்டிமீனாள் தலைமையில் சிவகங்கை ‘மகளிர் தையல் தொழில் கூட்டுறவுச் சங்கத்தை’ சார்ந்த பெண் தொழிலாளர்கள் பள்ளி சீருடை தைக்கும் பணி தனியாருக்கு வழங்கப்படுவதை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர்.

வழக்கமாக பள்ளிக்கூடம் திறந்து சில தினங்களில் மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட வேண்டும் என்பதால் மே மாதமே சங்கங்களுக்கு துணிகள் அனுப்பபட்டு தைக்கப்பட்டு உரிய நேரத்தில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டு விடும். ஆனால் சிவகங்கை மாவட்டத்திற்கு தைக்க கொடுத்த 5000 துணிகளை திரும்ப பெற்று விட்டதால்தான் போராட்டம் நடத்தப்பட்டதாக பாண்டிமீனாள் கூறுகிறார். பள்ளிகல்வித்துறை அளித்துள்ள 50பள்ளிகள் பட்டியலில் ஒரு பள்ளி கூட சிவகங்கை மாவட்டத்திற்குள் வராத நிலையில் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட துணிகள் திரும்பபெறப்பட்டதற்கான காரணம் என்ன?

சிவகங்கையில் உள்ள 4 சங்கங்களில் ஒன்றின் தலைவராக செயல்பட்டு வரும் பாண்டிமீனாள் “பள்ளிக் கல்வித்துறையின் முடிவால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4சங்கங்களைச் சார்ந்த 2000 பெண்கள் தையல் பணியின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதன் மூலம் கிடைத்து வரும் ரூ.40000 ஆண்டு வருமானத்தை பெண்கள் இழந்துவிடுவார்கள்” என கூறுகிறார். இதுகுறித்து முதல்வரை நேரில் சந்தித்துப் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

- ஜி.மஞ்சுளா

https://www.facebook.com/share/p/dHnJSMuzhvVjhRDe/?mibextid=oFDknk

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு