முதல்வர் சொன்ன சில நாளிலேயே விருதுநகரில் இப்படி நடந்திருக்கு..நீலம் பண்பாட்டு மையம் முக்கிய கோரிக்கை

ஒன் இந்தியா

முதல்வர் சொன்ன சில நாளிலேயே விருதுநகரில் இப்படி நடந்திருக்கு..நீலம் பண்பாட்டு மையம் முக்கிய கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த தலித் அருந்ததிய இளைஞரின் ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது என நீலம் பண்பாட்டு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் அம்மன்கோவில் காலனி தெரு பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து - மாரியம்மாள் என்பவரின் 21 வயது மகன் அழகேந்திரன்,அதே பகுதியில் வசிக்கும் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை அழகேந்திரன், மதுரை கள்ளிக்குடியில் உள்ள தனது உறவினரான அழகர் என்பவர் வீட்டிற்கு சென்றாராம். அப்போது அழகேந்திரன் காதலிப்பதாக கூறப்படும் பெண்ணின் மாமன் மகன் பிரபாகரன் என்பவர் அழகேந்திரனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தனியாக பேச வேண்டும் எனக் கூறி அழைத்துச் சென்றாராம்.

இதற்கிடையில், உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மகன் வீடு திரும்பவில்லை . இதனால் அழகேந்திரனின் தாயார் அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும் என காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அழகேந்திரனின் பெற்றோர் உடனடியாக கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே செவ்வாய்கிழமை, கள்ளிக்குடி அருகே வேலாம்பூர் கண்மாயில் அழகேந்திரன் தலை துண்டாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதையடுத்து இந்த கொலை வழக்கில் அழகேந்திரனை அழைத்துச் சென்ற பிரபாகரனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் நிகழ்ந்த தலித் அருந்திய இளைஞரின் ஆணவப் படுகொலையை வன்மையாக கண்டிக்கிறது என நீலம்பண்பாட்டுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், கோவிலாங்குளம் பகுதியைச் சேர்ந்த அழகேந்திரன் என்கிற அருந்ததிய சமூகத்தைச் சார்ந்தவரும், அதே கிராமத்தைச் சார்ந்த தேவந்திர குல வேளாள சமூகத்தைச் சார்ந்த பெண்ணும் காதலித்து திருமணம் செய்துள்ளதை அறிந்த பெண்ணின் உறவினர்கள் அருந்ததிய சமூக இளைஞரை கொடூரமாக தாக்கி அவரை வெட்டி ஆணவப் படுகொலை செய்துள்ளனர். அழகேந்திரனை ஆணவப்படுகொலை செய்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் காவல்துறை கைது செய்து தண்டிக்க வேண்டும். பட்டியலினத்திற்குள்ளாகவே நிகழ்ந்திருந்தாலும் இதனை ஆணவப் படுகொலையாக கருதி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தென்தமிழகத்தில் தொடர்ந்து பட்டியலின மக்களுக்கு எதிராக சாதிய வன்கொடுமைகளும், ஆணவப்படுகொலைகளும் நிகழ்வதைக் கண்டித்து தொடர்ச்சியாக போராடியும் கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தியும் வருகிறோம். ஆனால், சாதிய பெருமிதம், சுயசாதி பற்று, தான் மேலான சாதி, தனக்கு கீழான சாதி என்கிற கருத்துருவாக்கங்கள் பட்டியலின சமூகங்களிடையேயும் பரப்பப்பட்டு, அதன் மூலமாக நிகழும் இத்தகைய மோசமான சம்பவங்கள் பேராபத்தானது. இதனை களைய வேண்டும்.

சாதிய மேலாதிக்கத்தால் பட்டியலின சமூகத்திலும் ஆணவப்படுகொலை நிகழ்வது பெரும் அவலம். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டும்.


ஆணவக் கொலைகளுக்கு தனிச்சட்டம் தேவையில்லை என்று முதலமைச்சர் அறிவித்த ஓரிரு நாட்களில் நடந்த இந்த ஆணவக் கொலையை கருத்தில் கொண்டு முதலமைச்சர் தன் கருத்தை மறுபரிசீலனை செய்து சாதிய ஆணவக் கொலைகளைத் தடுக்க தனி சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் கோரிக்கை வைக்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://tamil.oneindia.com/news/virudhunagar/neelam-cultural-center-condemns-dalit-youth-massacre-near-virudhunagar-617475.html

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு