திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதி வெறியர்களின் தீண்டாமைக் கொடுமைகள்

செந்தளம் செய்திப்பிரிவு

திமுக ஆட்சியில் தலைவிரித்தாடும் சாதி வெறியர்களின் தீண்டாமைக் கொடுமைகள்

சமீபத்தில், தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளியின் சத்துணவுக் கூடத்தின் மீது மனித மலத்தை வீசியெறிந்துவிட்டு சென்றுள்ள சம்பவம் கேள்விபட்ட எல்லோரையும் பேரதிர்ச்சிக்கு தள்ளியிருக்கிறது.

ஆகஸ்ட்-2 அன்று, நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அம்பேத்கர் நகரில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில்தான் இந்த மனிதத்தன்மையற்ற செயல் அரங்கேறியுள்ளது. உணவுக் கூடத்தின் கதவின் மீதும், பூட்டின் மீதும் மனித மலத்தை அப்பிவிட்டுச் சென்றுள்ளனர்.

இது போதாதென்று, சத்துணவு ஊழியர்களைப் பற்றியும், ஆசிரியர்களைப் பற்றியும் ஆபாசமாக சித்தரித்து தனது வன்மத்தை வெளிபடுத்தியிருக்கின்றனர்.

இவை வழக்கம்போல, விவாதத்திற்கு உள்ளாக்கப்படாமலேயே உள்ளன.

வேங்கையல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சாதிய மலத்தை கலந்த சாதிவெறியர்களை பாதுகாக்க நினைக்கும் திராவிட மாடல் லட்சணத்தின் வெளிப்பாடே சிபி-சிஐடி விசாரணை 600 நாட்களுக்கு மேலாகியும் முடிந்தபாடில்லை. சாதிய மலத்தின் முடைநாற்றம் தீர்ந்தபாடில்லை.

இது தனித்த சம்பவம் அல்ல. திராவிட மாடல் ஆட்சியில் தாழ்த்தப்பட்ட மக்களின் குடியிருப்புகள், அவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் பள்ளிக்கூடங்களை குறிவைத்தே இது போன்ற வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருவதாக தெரிகிறது. 

சத்துணவுக் கூடத்தில் சாதிய மலத்தை வீசியெறிவதும் திராவிட மாடலே

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11,12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வகுப்பறைக் கதவுகளிலும், பூட்டுகளிலும் மலத்தை அப்பிவிட்டு சென்றுள்ளனர். இதைக் கண்டித்து, மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும், இது பற்றியும் செய்தி வந்ததோடு சரி, அடுத்தக் கட்ட விசாரணைகள் குறித்து எதுவும் நடப்பதாக தெரியவில்லை.

அதேபோல, செப்டம்பர் 2023ல், தர்மபுரி, பென்னாகரம் வட்டம், பாப்பாரப்பட்டியை அடுத்த பனைக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டியில் மனித மலம் கலந்தது போன்ற துர்நாற்றம் வீசுவதாக மாணவர்கள் புகார் தெரிவித்தனர். அதன்பிறகு, அங்கு வந்த மாவட்ட ஆட்சியர் சாந்தி, முதற்கட்ட விசாரணையில், தொட்டியில் மனித கழிவுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், இருந்தாலும், தண்ணீரின் மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருப்பதாக மட்டும் கூறிச் சென்றுள்ளார்.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், காவேரிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நடுநிலைப் பள்ளி ஒன்றின் சமையலறைக் கூடத்திலும் மனித மலத்தை அப்பிவிட்டு சென்றுள்ளனர்.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில், வேங்கைவயல் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கலந்துவிடப்பட்ட சாதிய மலத்தின் நாற்றம் தீர்ந்திடாத நிலையில், கந்தர்வக்கோட்டை அருகே உள்ள குருவாண்டான் தெருவில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டு சானத்தை கலந்துவிட்டுள்ளனர். குடிநீர் மாதிரியை ஆய்வு செய்த அதிகாரிகள், நோய்த் தொற்றுகள் ஏதுமில்லாததால் குடிப்பதற்கு உகந்தது என்று சான்றிதழ் அளித்துவிட்டு சென்றுள்ளனர்.

 

திராவிட மாடல் ஆட்சியில் புதிய புதிய வடிவில் தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்தப்பட்டு வருவதையே இவையனைத்தும் எடுத்துக் காட்டுகின்றன.

- செந்தளம் செய்திப்பிரிவு