கழகமே பொய்யடா கம்யூனிஸ்ட் ஆகி உய்யடா!

துரை. சண்முகம்

கழகமே பொய்யடா   கம்யூனிஸ்ட் ஆகி உய்யடா!

தமிழ்நாட்டில் இருந்த பண்ணையார் தலையாரி என்னும் கிராம நிர்வாக முறையை  பொது அரசு சிவில் நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தது பிரிட்டிஷ் அரசு. அதன் ஆதிக்கம். 

இப்படி ஒரு முறைக்காக நீதிக்கட்சியும் அதற்கு எதிரான பார்ப்பன கும்பலோ போராடியது கிடையாது. பார்ப்பனர் பார்ப்பனர் அல்லாத ஜமீன்தார்கள் கொட்டமடித்த வரலாறுதான் அது.

பிரிட்டிஷ்  நிர்வாகத்தின் கீழ்  கல்வி இட ஒதுக்கீடு முறைகளும் தொடங்கப்பட்டது.

அரசு ஊழியர் பொது நிர்வாக பிரிவுகளில் பங்கு பெற அனைத்திலும் பார்ப்பானே இருக்கிறான் பார்ப்பனரல்லாதவரும் வரவேண்டும்! எனும் முதலாளித்துவ ஜனநாயக கோரிக்கையை பயன்படுத்தி அதிலும் பெரும்பாலும் உழைக்கும் பிற்பட்ட சாதிகளின் வாய்ப்பை தட்டிப் பறித்து துவக்கத்தில் பயன்படுத்திக் கொண்டதுதான் நீதிக்கட்சியின் மேல் வர்க்க மேல் சாதி கும்பல். 

இது ஏதோ திராவிடம் பிடிக்காமல் நாம் அடித்து விடும் கதையல்ல. இட ஒதுக்கீடு அரசியல் வரலாற்று ஆவணங்களை படிப்பவருக்கு புரியும். பார்ப்பனர் அல்லாதோர் என கையை காட்டி அந்தப் பட்டியலில் உள்ள பார்ப்பனர் அல்லாத மேல் சாதி மேல்வர்க்க கும்பல் அரசு இட ஒதுக்கீட்டை பயன்படுத்திக் கொண்டதுதான் வரலாறு.

ரஷ்ய சோசலிச புரட்சியும் அதற்குப் பிறகான உலகெங்கும் கம்யூனிச அமைப்புகள் எழுச்சியும், தேசிய இனப் போராட்டங்களையும் எதிர்கொண்ட முதலாளித்து அமைப்பு, மக்கள் நல அரசு எனும் முகமூடியை தரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்த உலக வரலாற்றுத் தொடர்ச்சியின் பரிணாமத்தில் ஒன்றுதான் காமராசர் ஆட்சி தொடங்கி கல்வி சமூக நலத் திட்டங்கள் எனும் பாதையில் அரசு நடைபோட்டது.

இந்த தொடக்க வளர்ச்சியின் தொடர்ச்சியாக திமுக அரசு முதலாளித்துவ வளர்ச்சி பாதைக்கு உகந்த அரசு திட்டங்களை அமலாக்கியது. 

தானே நினைத்தாலும் பின்னோக்கி நகர்த்த முடியாத வரலாற்று சக்கரத்தின் ஒரு இடத்தில் அரசின் பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட திமுக, 

நாங்கள்தான் படிக்க வைத்தோம்

 நாங்கள்தான் சோறு போட்டோம்

நாங்கள் தான் வேலை கொடுத்தோம் 

நாங்கள் தான் பொது துறைகளை காமராசருக்கு பிறகு உருவாக்கினோம்

என்று வரலாற்றின் தொடர்ச்சியை துண்டித்து விட்டு தங்கள் ஆட்சி காலத்தின் முதலாளித்துவ பரிணாமத்தை சொந்த பெருமை போல பேசுகிறார்கள். 

சரி! அந்த வாதப்படியே வருவோம் 

இவ்வளவும் உருவாக்கியதாக சொல்லும் நீங்கள் இப்போது ஏன்? 

பொதுத்துறையை தனியார் மயம் ஆக்குகிறீர்கள்?

பொதுக் கல்வி முறையை படிப்படியாக குறைத்து தனியார் கல்வி பண்ணையார்களை உருவாக்குகிறீர்கள்? 

'சூத்திரனும்' படித்து மேலே வரும் காலகட்டத்தில் எதற்கு ஆத்திரமாக அரசு வேலைகளுக்கு மூடு விழா நடத்தி ஒப்பந்தப் பணியாளர் ஒப்பந்த முறையில் 'சூத்திரர்களின்' வாழ்வில் மண்ணை அள்ளி போடுகிறீர்கள்?

கனக விசயனின் தலையில் கல்லெடுத்து வந்த பரம்பரை என்று வீரம் பேசிய நீங்கள், 

தமிழர் நிலங்களில் கார்ப்பரேட் மயத்திற்கு வட இந்திய முதலாளிகளுக்கு  அடிமைச் சாசனம் எழுதிக் கொடுக்கிறீர்கள்? 

இதற்கும் இப்போது உங்களை தீர்மானிக்கும் முதலாளித்து அமைப்பு முறைதான் காரணம். 

தொடக்க கால முதலாளித்து அமைப்பு வளர்ச்சிக்கு தேவைப்பட்ட காரணங்கள் இனி அதன் மூலதன வளர்ச்சிக்கு தேவைப்படவில்லை. 

தனியார் மயம் தாராள மயம் உலக மயம் எனும் உலகளாவிய ஏகாதிபத்திய மூலதன வளர்ச்சிக் கொள்கைக்கான 

திராவிடமாடலாக நீங்கள் நிற்கிறீர்கள் என்பதுதான் வரலாற்று வளர்ச்சியின் உண்மை. 

அப்படியானால் திராவிடம் எதையுமே சாதிக்கவில்லை என்கிறீர்களா? என்று கேட்கலாம். 

கண்டிப்பாக திராவிடம் சாதித்தது, 

தொழிலாளர் உரிமைகள் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஒழிப்பதில் சீரழிப்பதில் சாதித்து விட்டீர்கள். 

கழுத்துப் பிடி கொடுத்த கம்யூனிஸ்டுகளை 'தோழமையுடன் இறுக்கி இறுக்கியே' நொறுக்கி விட்டீர்கள். 

பல கம்யூனிச அமைப்புகளிலும் உங்களுக்கான முழு நேர ஊழியர்களை முத்தாய்ப்பாக பெற்றுவிட்டீர்கள்.

இந்த சாதனைக்கு பின்னே 

கம்யூனிஸ்டுகள் தோற்றுவிட்டார்கள் 

என்று ஆ. ராசா சொல்வது உண்மைதான்! 

உண்மையில் திராவிடம் 

எதை ஒழித்தது? 

பார்ப்பனியத்தை ஒழிக்க வில்லை! இந்துத்துவ அரசியல் வடிவமான பாஜகவோடு கூட்டும் சேர்ந்து வளர்த்தது.

பண்ணையார்களை ஒழிக்கவில்லை! 

கேடுகெட்ட முதலாளிகளை ஒழிக்கவில்லை! 

பார்ப்பன டிவிஎஸ் ஐயங்காரும் தோழர்! பன்னாட்டு கம்பெனிகளும் தோழர்!

அப்படி எனில் திராவிடம் சாதித்ததுதான் என்ன?

இந்தப் பாதி கம்யூனிஸ்ட் 

மீதி கம்யூனிஸ்டையும் ஒழிக்கிறது.

திராவிடம் சாதித்தது, 

தமிழகத்தில் கம்யூனிச இயக்கங்கள் அளப்பரிய தியாகம் செய்த உருவாக்கிய கம்யூனிச இயக்கங்களை

தேர்தல் கூட்டணி என்ற பெயரில், சிறுகச் சிறுக அழித்தொழிப்பதுதான் நடக்கிறது.

இந்தச் சாதனைக்கு பின்னே 

தங்களது வர்க்க நோக்கை இழந்து திரிந்து போன இடதுசாரி தலைமைகளின் கைங்கர்யமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது! 

இதைச் சொல்வதற்கு வருத்தமாகவும் சிலருக்கு கோபம் வந்தாலும் இந்த சந்தர்ப்பத்திலாவது இதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்! 

     - துரை. சண்முகம்

https://www.facebook.com/story.php?story_fbid=831998509506947&id=100080904177819&post_id=100080904177819_831998509506947&rdid=QAZIfR86pcTR8yHE

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு