திராவிடம் என்ன சாதித்தது என்பதற்கு ஆ.ராசாவே ஓர் உதாரணம்
சே ரா

ஆ. ராசாவுக்கு பெரம்பலூர் சொந்த ஊராக இருந்தாலும் திராவிடம் அவரை நீலகிரியிலே நிற்கவைப்பதற்கான காரணம் அவருக்கே தெரிந்தாலும்...பிழைப்பிற்காக மேடைகளில் திராவிடம் சாதித்தது என்பார்.
என்ன சாதித்தது என்று நீங்களே ஒரு உதாரணம் ஆ.ராசா அவர்களே!!
அம்பேத்கரில் ஆரம்பித்து பெரியார் தொடர்ந்து ஆ.ராசா வரை ஒரு கருத்தை திரும்ப திரும்ப பரப்ப முயற்சிக்கின்றனர்.
சாதி ஒழிப்பெல்லாம் இப்போது தேவையில்லை வர்க்க ஒழிப்பு செய்ய வேண்டும் என்றனர் என்று. இப்படி இந்திய கம்யூனிஸ்ட்கள் எங்கும் சொன்னதும் கிடையாது, செயல்பட்டதும் கிடையாது.
வர்க்க விடுதலையை முன்னறுத்திய கம்யூனிஸ்ட்கள் பெரும் நிலவுடமையாளர்களின் சுரண்டல்களுக்கு எதிராக கூலி விவசாயிகளையும் குத்தகை விவசாயிகளையும் ஒன்றாக அணிதிரட்டினர். தங்கள் சுரண்டலுக்கு எதிராக ஒரே அணியாக ஆதிக்கத்தை எதிர்த்து போராடினர். இந்த போராட்டத்தில் செங்கொடியினருடன் ஈடுபட்ட திராவிட விவசாய தொழிலாளர் சங்கத்தை சேர்ந்த தோழர்களுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவர்தான் பெரியார்.
தோழர் மணலூர் மணியம்மை நிலவுடைமை ஆதிக்க பண்ணையார்களால் படுகொலை செய்யப்பட்டார். அன்று சாதியாதிக்கம் முழுவதும் பண்ணையார்களால் செய்யப்பட்டது. எந்த பண்ணையார்கள் நீதிகட்சியை ஆதரித்தார்களோ அந்த பண்ணையார்கள்தான் அங்கு உழைப்பு சுரண்டல், சாதிய ஆதிக்கத்தையும் செய்து வந்தனர். அவர்களிடம் நிதி வாங்கி கட்சி வளர்த்த காங்கிரஸை 1967 வரை ஆதரித்த பெரியாரின் தத்துவம்தான் சாதியாதிக்கத்தை எதிர்த்த தத்துவம் என்று கொஞ்சமும் நா கூசாமல் ஆ.ராசா கூறுகிறார். அந்த நிலவுடமை ஆதிக்கவாதிகளை அவர்களால் சுரண்டப்பட்ட விவசாய தொழிலாளர்களையும், குத்தகை விவசாயிகளையும் அணிதிரட்டி போராடி உரிமைகளை பெற்றுக்கொடுத்ததை விட சாதியத்திற்கெதிரான போராட்டம் வேறு என்னவாக இருக்க முடியும்?!
கீழ்வெண்மணியல் 44 பேரை படுகொலை செய்த பண்ணையார்களை கண்டிக்காமல் செங்கொடி சங்கத்தில் சேர்ந்ததால்தான் இறந்தார்கள் என்பதாக கம்யூனிஸ்ட்கள்தான் அவர்களை போராட தூண்டினார்கள் இப்போது இப்படி ஆகிவிட்டது என்ற கருத்தில் பேசியவர்தான் பெரியார். செம்பனார்கோவில் பொதுக்கூட்டத்தில் திமுகவை பாதுகாக்க கூட்டம் நடத்தினாரே தவிர படுகொலை செய்த பண்ணையார்களுக்கு எதிராக ஒரு வார்த்தை கூட பேசாதவர்தான் பெரும் சமூக நீதி தத்துவத்தினை தோற்றுவித்தவர் என்று மேடையில் பேசுகிறார் ஆ.ராசா.
1944ல் இந்திய கிஷான் சங்கத்தின் கொடி மன்னார்குடி மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த செங்கொடிக்கு அந்த பகுதி நிலவுடமை ஆதிக்க பண்ணையார்களால் வைக்கப்பட்ட பெயர் " தலித் கொடி ". அன்று கம்யூனிஸ்ட் கட்சிக்கு கிழக்கு தஞ்சை மாவட்டம் உட்பட பண்ணையாதிக்கம் அதிகமிருந்த அனைத்து பகுதிகளிலும் கட்சிக்கு பண்ணையார்கள் வைத்த பெயர் பள்ளன் பறையன் கட்சி. திராவிட இயக்கத்தை ஆதரித்த பண்ணையார்கள் வைத்த பெயரையே ஆ.ராசா மறந்துவிட்டாரா?
அன்றை செங்கொடி இயக்கம் விவசாய தொழிலாளர்களிடம் வைத்த முழக்கங்கள் என்பவை " இடுப்பு துண்டிற்கு (கோவணம்) பதிலாக வேட்டிக்கட்டுங்கள், பெண்கள் ரவிக்கை அணியுங்கள், அடித்தால் திருப்பி அடி, காலை 4 மணிக்கு வேலைக்கு கிளம்பி மாலை அந்தி சாய்ந்த பிறகு வீட்டிற்கு வரும் முறையை ஒழித்து உழைப்பிற்கான நேரத்தை நிர்ணயம் செய்" இந்த முழக்களுக்காக போராடி அதை நிலைநாட்டவும் செய்தது செங்கொடி இயக்கம். இதையெல்லாம் மறைத்துதான் வெறும் கூலி உயர்வு போராட்டம் என ஆ.ராசா போன்றோர்களும் அவர்களின் முன்னோடிகளும் பொய்யை பரப்பி வருகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு பிறகு இந்தியாவில் விவசாயிகளை ஒடுக்க கிஷான் போலிஸை உருவாக்கியவர்கள் என்ற பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக அரசாங்கம்தான். இந்த போலிஸ் பிரிவு பண்ணையார்களுக்கு எதிராக போராடும் செங்கொடி இயக்கத்தினரை வேட்டையாடுவதுதான். காங்கிரஸ் அரசு மாவோயிஸ்ட்கள் என்று கூறி அப்பாவி பழங்குடிகளை வேட்டையாட சல்வா கடும் என்ற அமைப்பை உருவாக்கியதற்கு முன்னோடியே நமது திராவிடமாடல்தான்.
பண்ணையார்களின் இடத்தில் வாழ்ந்து வந்த விவசாய தொழிலாளர்களை பண்ணையார்கள் விரட்டி அடிக்க தொடங்கியபோது விவசாயிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்து போராடி 1,80,000 வீட்டு மனை பட்டாக்களை பெற்றுக்கொடுத்தது செங்கொடி இயக்கம்.
திராவிடம் அதில் சிறு துரும்மைக்கூட அசைக்கவில்லை மாறாக பண்ணையார்களுடன் சேர்ந்து விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்கியது. எதற்கும் அடங்காமல் விவசாயிகள் செங்கொடி இயக்கத்தின் பின் அணிதிரண்டு நடத்திய போராட்டங்கள் பல்வேறு உரிமைகளை வேறு வழி இல்லமால் கொடுக்க அரசை நிர்பந்தித்தது.
விவசாயிகளுக்கு எதிரான காங்கிஸ் ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்த்து ஆட்சிக்கு வந்த திமுக ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளை பண்ணையார்களுடன் சேர்ந்து ஒடுக்கியது. தூய்மைபணியாளர்களுக்கு எதிரான அதிமுக ஆட்சியின் கொடுமைகளை சரி செய்வதாக கூறி ஆட்சிக்கு வந்த பிறகு கொடூரமாக ஒடுக்கியது போல. இவர்கள் அப்போதிலிருந்தே இப்படிதான்.
- சே ரா
https://www.facebook.com/100001614889440/posts/25030278699942614/?rdid=Ae6KOiZHc8j2VQFc
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு