தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அறிவிக்கும் 'இனாம்கள்' ! உண்மையில் மக்களுக்கானதா? அல்லது மக்களை ஏமாற்றும் 'லாலி பப்' அரசியலா?

தெய்வசுந்தரம் நயினார்

தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் அறிவிக்கும் 'இனாம்கள்' ! உண்மையில் மக்களுக்கானதா?  அல்லது மக்களை ஏமாற்றும் 'லாலி பப்' அரசியலா?

இந்தியாவில் கடந்த 75 ஆண்டுகாலத்தில் ஊரும் கட்டமைப்பும் நல்ல வளர்ச்சியைக் காட்டுவதுபோல ஒரு தோற்றம் இங்கு நிலவுகிறது. . இவ்வாறு இதுபோன்ற 'வளர்ச்சி ' இல்லையென்றால், பன்னாட்டு நிறுவனங்கள் இங்குத் தங்கள் தொழிலைத் தொடரமாட்டார்கள் . 

சாம்சங், ஹோண்டா போன்ற நிறுவனங்கள் இங்கு தங்கள் தொழிலைத் தொடங்கவேண்டுமென்றால், இவற்றையெல்லாம் இங்குச் செய்துதான் ஆகவேண்டும். 24 மணிநேர இணையவசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி . . . . குறைந்த ஊதியத்தில் மனித உழைப்பு . . . இப்படிக் கூறித்தான் நமது அமைச்சர்கள் அயல்நாடுகளுக்குச் சென்று , இங்கு வாருங்கள் வாருங்கள் என்று சிவப்புக் கம்பளம் விரித்துக்கொண்டிருக்கிறார்கள். 

ஆங்கிலேயர் இங்கு மின்சாரத்தையும் சாலைகளையும் ரயில் பாதைகளையும் கொண்டுவந்தது இங்குள்ள மக்களுக்காக இல்லை. அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு அவை தேவைப்பட்டன. அதில் நாமும் குளிர்காய்ந்துகொண்டோம். 

இன்று  இந்திய மக்களின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை நிலையைப் பாருங்கள். விலைவாசி, வேலையில்லாத்திண்டாட்டம், வீட்டு வசதிப் பிரச்சினை, நடைபாதை வாசிகள் , உள்நாட்டு மூலதன வளர்ச்சி , ஒரு நேர உணவுக்காகப் பள்ளிக்கு வரும் குழந்தைகள் . . .  இவையே இன்று நீடிக்கின்றன!  

அடித்தட்டு மக்களின் ''நலன்களுக்கான'' பல 'அரசுத் திட்டங்களை' நடைமுறைப்படுத்தப்படுவதுபோல மாயை உருவாக்கப்பட்டுள்ளன. . உண்மைதான்! நான் மறுக்கவில்லை! ஆனால் 'இத்திட்டங்கள்'' எல்லாவற்றிற்கும் 'அரசியல் கணக்குகளே அடிப்படை! 

இதுபோன்ற '' திட்டங்கள்'' எல்லாம், நாட்டின் உற்பத்தி வளர்ச்சியில் . . . விவசாயம், தொழில் உற்பத்தி ஆகியவற்றில் கிடைக்கும் உபரியில் இருந்து கொடுக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும். ஆனால் இங்கு அவ்வாறு இல்லை. இதுபோன்ற திட்டங்களுக்கு செலவிடப்படும் பணம் எல்லாம் '' எந்தவித உற்பத்தி வளர்ச்சியையோ'' அல்லது '' லாப உபரியைத் தருகிற " முதலீடோ ' இல்லை. மாறாக, இந்தப் பணம் "unproductive"! 

இன்று இந்தியாவில் விவசாய உற்பத்தியோ தொழில் உற்பத்தியோ பன்னாட்டு நிறுவனங்களின் மூலதனத்தையே பெரும்பாலும் சார்ந்திருக்கிறது. ரொக்கமாக ஆயிரங்களுக்கும், பொங்கல், தீபாவளி இனாம்களுக்கும் மக்களை 'கையேந்த வைக்கிற' திட்டங்களே! 

இதற்கு மாறாக, விலைவாசி குறைவதற்கும் வேலையில்லாத் திண்டாட்டம் குறைவதற்கும், உள்நாட்டு மூலதனத்தில் வளர்கிற விவசாய, தொழில் வளர்ச்சி உருவாக்குவதற்கும் எந்தவகையிலும் பயன்படாத 'உற்பத்தி வளர்ச்சியைத் தராத (Unproductive) ' மூலதனங்களே! 

அதாவது, மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அளிப்பதற்குப் பதிலாக, எப்போதும் 'கையேந்திகளாக' நீடிக்க வைக்கிற 'மூலதனமே'! ஒருவருக்கு மீன் கொடுப்பதைவிட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கிற முறையே சரியானது என்னும் பழமொழியை இங்கு மனதில் கொள்ளலாம். இந்த 'இனாம்கள் எல்லாம்' அரசு இருக்கைகளில் அமரத் துடிக்கும் 'அரசியலற்ற அரசியல்வாதிகளுக்கே' உதவும். 

மக்களுக்கு கிடைக்கவேண்டிய நிரந்தரத் தீர்வைப் பற்றிக் கவலைப்படாமல், 'அன்னதானம்' தன்மைகொண்ட இதுபோன்ற 'இனாம்கள்' உண்மையில் அடித்தட்டு மக்களைத் தொடர்ந்து வறுமையில் நீடிக்கவைக்கவே செய்யும்! 'வெளியே தாழம்பூ, உள்ளே பேண், ஈறு' என்னும் பழமொழியையும் இங்குக் குறிப்பிடுவது சரியாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

தெய்வசுந்தரம் நயினார்

https://www.facebook.com/100004424580477/posts/3596175697206548/?rdid=ZyYUTmcJ0c3VJTTy

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு