பா.ஜ.க - தி.மு.க பாணியில் ஊழல்வாதிகளைத் தூய்மைப்படுத்தும் விஜய்யின் தூய சக்தி வாஷிங் மெசின்!
செந்தளம் செய்திப்பிரிவு
அதிமுகவின் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து த.வெ.கவில் ஏற்கனவே இணைந்த நிலையில், தற்போது அதிமுகவின் முன்னாள் அமைச்சர்களான சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், எம்.எஸ்.எம். ஆனந்தன் மற்றும் எஸ். வளர்மதி ஆகியோர் நேற்று தவெகவில் இணைந்தனர்.
குட்கா வழக்கு புகழ் சி.விஜயபாஸ்கரையும் நில மோசடி புகழ் எம்.ஆர். விஜயபாஸ்கரையும் விஜய் தன்னோடு இணைத்துக் கொண்டது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
நாங்கள் மக்கள் பணத்தைத் தொட மாட்டோம், தொட விடமாட்டோம்,
தொட்டவர்களையும் விடமாட்டோம்
என்று சட்டமன்றத்தில் பஞ்ச் டயலாக் பேசிய விஜய், ஊழல்வாதிகள் அனைவரையும் அரவணைத்து சரசமாடுகிறார் என பலரும் கூறி வருகின்றனர்.
அதிமுகவில் இருந்த மைத்ரேயன், பன்னீர் செல்வம், வைத்தியலிங்கம் போன்றோர் முன்னர் தி.மு.கவின் சமூகநீதி வாஷிங் மெசினில் சலவை செய்யப்பட்டனர். மீதமிருப்போரை த.வெ.கவின் வாஷிங்மெசினில் வைத்து விஜய் சலவை செய்து தூய சக்தியாக மாற்றி வருகிறார் என சமூக வலைதள அரசியல் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
தவறு செய்பவர்களை விடமாட்டேன் என்று சொல்லிய விஜய், அவர்கள் எல்லோரையும் தன் கட்சியில் சேர்த்து பதவி கொடுத்து தடவி கொடுப்பேன் என்பதை சொல்லாமல் விட்டிருக்கிறார் போல..!!
கீழ்நிலை லஞ்ச லாவண்யங்கள் மீது கவனத்தை திருப்பிவிட்டு, குட்கா, நிலபேரம்,2ஜி உள்ளிட்ட அதிகார வர்க்க ஊழலுடன் ஊழல்வாதிகளுடன் சமரசம் செய்து கொண்டு இந்த கட்டமைப்பிற்கேற்ப தனது கட்சியைக் கட்டமைப்பதுடன் தன்னை தகவமைத்துக் கொள்கிறார் விஜய்!
- செந்தளம் செய்திப்பிரிவு