என்.எல்.சி-யை தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு

செந்தளம் செய்திப்பிரிவு

என்.எல்.சி-யை தனியாருக்குத் தாரைவார்க்கும் மோடி அரசு

1991 – 92, 1992 – 93 நிதியாண்டுக் காலத்திலேயே நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி நிறுவனத்தின் 6.44% பங்குகளை தனியாருக்கு விற்று விட்டது காங்கிரசு அரசு. அதன்பின் மீண்டும் 2006-இல் விற்க முயன்ற போது மாநில அரசின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது கைவிடப்பட்டது. திரும்ப 2013-இல் 5% பங்குகளை விற்க முனைந்த போது தமிழ்நாட்டில் பெரும் போராட்டம் வெடித்தது. அப்போது முதல்வராயிருந்த ஜெயலலிதா அந்த 5% பங்குகளை தமிழ்நாடு வாங்கிக் கொள்ளும் எனக் கூறி, தமிழ்நாடு வாங்கியது. அப்போதும் புரட்சிகர அமைப்புகள் இது பொதுத்துறை நிறுவனங்களை ஒழிக்கும் சதியின் ஓர் அங்கமே என எதிர்த்து போரடியதன் விளைவாகவே அது நடந்தது.

2013-இல் 5% பங்குகளை விற்ற பின் இன்று என்.எல்.சி-யில் மத்திய அரசு வைத்திருக்கும் மொத்தப் பங்கு 72.2% மட்டுமே. படிப்படியாக என்.எல்.சி. பங்குகள் விற்கப்படுவதையே இது காட்டுகிறது. 2011 – 2012 நிதியாண்டிலேயே என்.எல்.சி-யின் லாபம் ரூ. 1,411 கோடி (மொத்த வருவாயில் 24.77%). 2025 –2026ம் நிதியாண்டில் நிகர லாபம் 3,769.46 கோடி. இது என்.எல்.சி. வரலாற்றிலேயே அதிகபட்ச ஆண்டு லாபம்.

நெய்வேலி சுற்றுவட்டார கிராம மக்கள் 30ஆண்டுகளுக்கு முன்பு தங்களுடைய நிலங்களை கொடுத்தனர். நிலக்கரி தட்டுப்பாட்டினால் தற்போதுகூட என்.எல்.சி. நிறுவனம் விரிவாக்கம் என்ற பெயரில் விளைநிலங்களைச் சூறையாடி வருகிறது. இதனால் கடந்த மூன்று வருடங்களாக அதாவது 2021,22,23 ஆண்டுகளில் பெரும் போராட்டங்கள் நடைபெற்றது. தமிழ்நாட்டின் விலைநிலங்களை கையகப்படுத்தி இரண்டு சுரங்கங்கள் உருவாக்கப்பட்டு என்.எல்.சி(நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்) என்ற பெயரில் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த நிறுவனம், தற்போது நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் என்பதிலிருந்து நேஷனல் லிக்னைட் கார்ப்பரேஷன் என்று பாசிச மோடி அரசால் சில வருடங்களுக்கு முன்பு மாற்றப்பட்டது.

மோடி அரசு இப்பொழுது மூன்று சதவீத பங்குகளை தனியாருக்கு விற்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.  பாசிச மோடி அரசின் இந்த செயல்பாடுகளுக்கு மாநில அரசோ, கட்சிகளோ, திராவிட அமைப்புகளோ சிறு கண்டனங்கள் கூட தெரிவிக்காத நிலையில் கம்யூனிச கட்சிகளும், அதன் தொழிற்சங்கங்களுமே தொடர்ந்து எதிர் வினையாற்றி வருகின்றன.

தற்போது என்.எல்.சி தொழிலாளர்களின் பிரதிநியாக உள்ள தொ.மு.ச மற்றும் அண்ணா தொ.மு.ச போன்ற திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிற் சங்கங்கள் வாய் மூடி மௌனம் காத்து வருகிறார்கள். தொழிலாளர்களின் வாக்குகளை மட்டும் வாங்கி கொண்டும், தங்களை தொழிலாளர்களின் பிரதிநிதிகள் என்று சொல்லி கொள்ளும் தொ.மு.ச தொழிற்சங்கமோ தங்களை நம்பியுள்ள அப்பாவி என்.எல்.சி தொழிலாளர்களுக்காக  ஒரு கண்டன ஆர்ப்பாட்டம் கூட நடத்தவில்லை. இதன் மூலம் தெரியவருவது திராவிட கட்சிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொழிற்சங்கங்கள் ஆளும் பாஜக அரசை எதிர்த்து போராடாமல், பாஜக அரசின் கைப்பாவையாக தொழிலாளர்களை வைத்து சந்தர்ப்பவாத - பிழைப்புவாத அரசியலை நடத்தி வருகின்றன. 

பாசிச பாஜக அரசின் இந்த செயல்பாட்டுக்கு தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்களையும்,  ஒப்பந்த தொழிலாளர்களையும் ஒன்றிணைத்து ஒரு குடையின் கீழ் பெரும் போராட்டத்தை தொடங்க வேண்டும்.

- செந்தளம் செய்திப்பிரிவு