டாஸ்மாக் பார்களில் விஷம் கலந்த கள்ள மதுவா?

அறம் இணைய இதழ்

டாஸ்மாக் பார்களில் விஷம் கலந்த கள்ள மதுவா?

தமிழகத்தில் டாஸ்மாக் மதுவை குடித்த சில மணி நேரங்களில் குடிமகன்கள் மரணிகிறார்கள்! இந்த வகையில் அடுத்தடுத்து நான்கு இடங்களில் ஒரு மாதத்திற்குள் மரணங்கள் நடந்துள்ளன! ‘அரசு விற்கும் மது என்பதால் ஆபத்திருக்காது’ என்ற நம்பிக்கை தற்போது நொறுங்கியுள்ளது! என்ன தான் நடக்கிறது மது விற்பனையில்?

சென்ற மாதம் தஞ்சை கீழ் அலங்கம் டாஸ்மாக் பாரில் மது வாங்கி அருந்திய குப்புசாமியும், குட்டி விவேக்கும் சம்பவ இடத்திற்கு அருகாமையில் வாயில் நுரை தள்ள விழுந்து இறந்தனர். இது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது! இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழக அரசு சுதாரித்து இருந்தால், அடுத்தடுத்த மூன்று சம்பவங்களை தவிர்த்து இருக்கலாம்.

மயிலாடுதுறையில் பெரம்பூர் என்ற இடத்தில் கொல்லுபட்டறை நடத்தி வரும் பழனி குருநாதனும், அவரது நண்பர் பூராசாமியும் டாஸ்மாக் மதுவை வாங்கி அருந்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்! குடிக்கப்பட்ட மது பாட்டில் அருகே குடிக்கப்படாத மற்றொரு மது பாட்டில் இருந்துள்ளது. அதை சோதித்ததில் அதில் சயனைடு இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது. தஞ்சை சம்பவத்திலும் சயனைடு இருந்ததாக சொல்லப்பட்டது மாவட்ட ஆட்சியரால் என்பது நினைவிருக்கும்!

மிக சமீபத்தில் திருச்சி தச்சங்குறிச்சியில் கொத்தனார் முனியாண்டியும், கட்டுமான சென்டிரிங் தொழிலாளி சிவகுமாரும் டாஸ்மாக் மது குடித்ததில் இறந்தது பத்திரிகையில் பரவலாக வந்தது.

தற்போது சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கள்ளுக்கடை என்ற இடத்தில் அரசு மதுக்கடையில் மது வாங்கி அருந்திய கல்லாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற 35 வயது இளைஞர் மதுக்கடை வாசலிலேயே மயங்கி விழுந்து இறந்திருக்கிறார்!

இதைத் தொடர்ந்து, ”டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி குடித்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டு அரசு மதுக்கடைகளில் விற்கப்படுவது மதுவா, நஞ்சா, அமிலமா?” என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.

மேலும், ”அரசு நடத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளில் தொடர்ந்து மதுவை வாங்கி அருந்துபவர்கள் உயிரிழந்து வருகிறார்கள், தமிழ்நாட்டில் உள்ள அரசு மதுபானக் கடைகளில் விற்கப்படும் மது வகைகளின் தன்மை குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளார் அன்புமணி.

பிரபல மது உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்கும் மது வகைகள் முறைப்படி டாஸ்மாக் குடோன்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கணக்கு வைக்கப்பட்டு,  அதன் பின்னரே அங்கிருந்து டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும். இவை அனைத்திற்கும்  முறையாக கலால் வரியின் மூலம் அரசுக்கு வருவாய்  கிடைக்கும்.

ஆனால்,  பிரபல பிராண்ட்களின் பெயர்களில் தயாரிக்கப்படும் ‘கரூர் சரக்கு’ நேரடியாக டாஸ்மாக் மது அருந்தும் கூடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது. இவற்றிற்கு கலால் வரி செலுத்த தேவையில்லை என்பதால் லாபம் முழுக்க கள்ள மதுவை சப்ளை செய்யும் நிறுவனத்திற்கே போகிறது! இதில் மேலிடம் சம்பந்தப்பட்டு இருக்கிறது’’ என நேர்மையான அதிகாரிகள் நமக்கு தெரிவித்தனர்.

”கருணாநிதி, ஜெயலலிதா காலத்தில் பார்கள் முறையாக ஏலம் விடப்பட்டு, அந்த வருமானம் அரசு கணக்கில் வந்தது. அவற்றில் டாஸ்மாக் மது மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது! ஜெயலலிதாவின்  மரணத்திற்கு பின்பு அமைச்சர் தங்கமணி கள்ள மதுவை தயாரித்து டாஸ்மாக் பாரில் விற்கும் முறையை தொடங்கி வைத்தார். ஆனால், அவை மிகச் சில இடங்களில் மட்டுமே அப்போது விற்பனையானது’’ எனச் சொல்கிறார்கள்.

ஆனால், இந்த ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த கள்ள மது விற்பனை களை கட்டத் தொடங்கி விட்டது. இதில் முதல் சாவு,  அக்டோபர் 2021 வேலூர் திருப்பாக்குட்டை பகுதியில் சின்னசாமி என்ற முதியவரும், அவரது பேரனும் டாஸ்மாக் மதுவை குடித்து இறந்தது தான்! ஆனால், அதற்கு பிறகு இந்த ஆண்டு மார்ச் மாதம் மதுரை மேலூர் அருகே கேசம்பட்டி ஊராட்சியில் உள்ள சாணிபட்டியில் மேலூர்-நத்தம் சாலையோரம் டாஸ்மாக் கடையில் கலப்பட மது விற்பது குறித்து தொடர்ந்து புகார்கள் சொல்லப்பட்ட நிலையில், மது அருந்திய ஒருவர் இறந்ததைத் தொடர்ந்து அங்கு பெண்கள்  சாலை மறியல் போராட்டம் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இந்த இறப்பு சம்பவம் தொடர்பாக உறுதி செய்ய முடியவில்லை.

”திமுக அட்சியில் மொத்தமுள்ள 4,800 பார்களில் வெறும் ஆயிரம் பார்களை மட்டும் ஏலத்தில்விட்டு அரசுக்கு வருமானம் எடுத்தார்கள். அதே சமயம் சுமார் 3,800 பார்களை உரிமம் இல்லாமல் நடத்துகிறார்கள்! அதில் டாஸ்மாக் மதுவோடு கள்ள மதுவும் கணிசமாக விற்கப்படுகிறது! அதுவும் இந்த டாஸ்மாக் பார்கள் குறிப்பிட்ட அங்கீகரிக்கப்பட்ட நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் விற்கும் மதுவுக்கு இரட்டிப்பு கட்டணத்தையும் வாங்குகிறார்கள். இதில் மட்டுமின்றி, உள்ளே மது குடிப்பவர்கள் கட்டிங் கேட்கும் போது அவர்களே பாட்டிலை திறந்து டம்பளரில் ஊற்றிக் கொடுத்து விடுவதால், குடிப்பது எந்த மது என்பது குடிமகனுக்கு தெரிவதில்லை’’ என்று பெயர் சொல்ல விரும்பாத ஒரு நேர்மையான அதிகாரி தெரிவித்தார்.

பொதுவாக டாஸ்மாக்கில் விற்கும் மது வகைகள் தரமற்றவை! மெல்லக் கொல்லும் விஷமே! தமிழக அரசு மருத்துவமனைகளில் மது குடித்ததால் சிறுநீரக  பாதிப்பு, நரம்பு தளர்ச்சி, குடல் பாதிப்பு, கணையம் இழப்பு என குவியும் பலதரப்பட்ட நோயாளிகளே இதற்கு சாட்சி! ஆனால், இந்த நோயாளிகள் தங்கள் உடல் நலத்தை பலி கொடுத்து அரசுக்கு வருமானம் தருகிறார்கள்! ஆனால், கள்ள மது விற்பனை வருவாய் அனைத்தும் அரசின் கணக்கில் வருவதில்லை என்பது தான் கவனத்திற்கு உரியது! இதனால் தான் ”சுமார் 4,000 பார்கள் சட்டவிரோதமாக நடத்தப்படுகிறது” என எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

”டாஸ்மாக் மூலம் அரசுக்கு வந்த வரி வருவாய் தவிர்த்து, சுமார் இரண்டு லட்சம் கோடி இந்த வகையில் ஆளும் தரப்பால் சம்பாதிக்கப்பட்டுள்ளது” என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

”மரக்காணம் சம்பவத்தில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்கள் கூட, கள்ள மதுவை குடித்தவர்கள் தானேயன்றி, கள்ளச் சாராயத்தை குடித்தவர்கள் அல்ல” என முன்னாள் டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்!

”முன்பு போல தற்போதெல்லாம் சாராயம் காய்ச்சப்படுவதில்லை. கள்ள மது தயாரிப்பாளர்களிடம் ஸ்பிரிட் வாங்கி தான் கள்ளச் சாராய வியாபாரிகள் குறைந்த விலையில் மதுவை விற்கிறார்கள்! டாஸ்மாக் மது உற்பத்தி விலையைவிட பற்பல மடங்கு கொள்ளை லாபம் வைத்து விற்கப்படுவதால், அதை வாங்க முடியாத ஏழைகள் இதை வாங்கி குடிக்கிறார்கள்” என டாஸ்மாக் ஊழியர்களே தெரிவிக்கிறார்கள்!

தரமான பனங் கள்ளை குடிக்க தடை போட்டு பல லட்சம் விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாளர்கள் – பழங்கள், தானியங்கள் போன்றவற்றில் இருந்து மது தயாரிப்பதற்கு வழிமுறைகள் இருந்தும் அதை தடுக்கும் ஆட்சியாளர்கள் – ஆல்ஹகால் அதிகமுள்ள ஸ்பிரிட் மதுவை குடிமகன்களிடம் திணிப்பது நியாயமற்றது! அந்த ஸ்பிரிட் மதுவையும் கள்ளத் தனமாக தயாரிக்க ஊக்கமளித்து, விற்பனையும் செய்து மக்கள் உயிரை பலி வாங்கிக் கொண்டிருப்பது ஏற்க இயலாத கொடுமையாகும். இந்த விவகாரத்தில் பாமக தான் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இதற்கு தீர்வு எப்போது கிடைக்கும் என்று தான் தெரியவில்லை! மதுவுக்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சி வர வேண்டும் அல்லது தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள குடிமகன்கள் மீது ஆட்சியாளர்கள் கொஞ்சமாவது இரக்கம் காட்ட நினைத்தால் தான் தீர்வு  பிறக்கும்.

சாவித்திரி கண்ணன்

அறம் இணைய இதழ்

https://aramonline.in/13964/tasmac-madhu-deaths-t-n/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு