இன்னும் எத்தனை நாள் இந்த நாடகம்..?
அறம் இணைய இதழ்
பாஜக அரசு ஒரு கட்சியை அழிக்கவோ, அடிமைப்படுத்தவோ விரும்பினால் அவர்கள் டார்கெட் செய்வது அந்த கட்சியில் உள்ள ஊழல் பெருச்சாளிகளைத் தான். அதை திமுகவும் அறியாத கட்சியல்ல. ரெய்டுகள், விசாரணைகள், கைதுகள்..எல்லாம் செய்யப்பட்ட குற்றத்துக்காகவா? செய்ய வேண்டிய குற்றத்திற்காகவா..?
செந்தில் பாலாஜியை சிறைக்கனுப்பிய கையோடு பொன்முடியை அடுத்த டார்கெட் செய்துள்ளது அமலாக்கத் துறை! பாஜக அரசு எந்த மாதிரி செயல்படுகிறது என்பதற்கு இந்த இரண்டு அமைச்சர்கள் விவகாரத்தில் அமலாக்கத்துறை அணுகுமுறைகளே உதாரணங்களாகும்!
அதாவது, இவர்கள் விசாரணைக்கு தூக்கும் அமைச்சர்கள் தற்போது உச்ச பட்ச ஊழலில் ஈடுபடுபவர்களாக இருப்பதை நன்கு அவதானித்தே தூக்குகிறார்கள்! செந்தில்பாலாஜி டாஸ்மாக்கிலும், பொன்முடி உயர்கல்வித் துறையிலும் கொள்ளையோ,கொள்ளை நிகழ்த்துபவர்கள் என்பது எல்லோரும் சந்தேகமற அறிந்த விஷயம் என்றாலும், அதற்காக விசாரணை எனச் சொல்ல மாட்டார்கள்! ஆனால், இவர்கள் ரெய்டுகளில் அதை டார்கெட் வைத்தே ஆவணங்களை எடுக்கிறார்கள்! ஆனால், அது பற்றி கோர்டில் கூட சொல்வதில்லை!
ஏதோ பழைய வழக்குகிற்காக தூக்குவது போல கணக்கு காட்டுகிறார்கள்! அதற்குத் தான் அமலாக்கத் துறை என்ற ஒன்றை பயன்படுத்துகிறார்கள்! கமுக்கமாக காரியம் செய்துவிட்டு, எல்லாவற்றையும் மறைப்பதால் இதற்கு அமலாக்கத் துறை என்பதற்கு பதிலாக, ‘உண்மைகளை அமுக்கும் துறை’ எனப் பெயர் வைக்கலாம். பாவம், ஆட்சியாளர் என்ற எஜமானுக்கான அடியாள் வேலை செய்கிறார்கள்! இவர்கள் பிடித்துக் கொடுக்கும் குற்றவாளிகளை பாஜக ஆட்சியாளர்கள் தண்டிப்பதில்லை.சற்றே துன்புறுத்தி ஏதோ பேரம் பேசி ஊழல் பணத்தில் கணிசமாக கறந்து கொண்டு, விட்டுவதையே பெரும்பாலும் செய்கிறார்கள்! அதைத் தான் அதிமுக அமைச்சர்கள் விவகாரத்திலும் செய்தனர். தற்போது திமுக விஷயத்திலும் அதுவே நடக்கிறது. அதாவது, குற்றத்திற்காக தண்டிக்க வேண்டும் என்ற தார்மீகப் பார்வை சிறிதுமில்லை. எல்லாம் நாடகமே!
செந்தில்பாலாஜி வேலைக்காக வாங்கிய ஊழல் பணம் ஒரு கோடி சொச்சம் தானே! அதற்காகவா அம்பதுக்கு மேற்பட்ட இடங்களில் நூற்றுக்கணக்கான ஆபீசர்களை ஈடுபடுத்தி ரெய்டு நடத்தினார்கள்! ஆபீசர்களுக்கு பாதுகாப்பு தர நிறுத்தப்பட்ட காவல்துறை கூட்டம் வேறு. பழைய ஊழல் விவகாரத்திற்காக தற்போது டாஸ்மாக்கிற்கு டிரான்ஸ்போர்ட் ஒப்பந்த நிறுவனத்தில் ஏன் ரெய்டு செய்யப்பட்டது? த்லைமை செயலகத்தில் ஏன் ரெய்டு செய்யப்பட்டது..? இவ்வளவையும் செய்து விட்டு அது பற்றி நீதிமன்றத்தில் நீதிபதியிடம் கூட தகவல் சொல்லவில்லையே! ஆதாரமில்லாமல் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதாக வழக்கறிஞர் கபில்சிபல் குற்றம் சாட்டிய போது, ”இதோ இன்னும் நிறைய ஆதாரங்கள்” என நீதிபதியிடம் சீல் வைத்த கவரிலாவது தந்திருக்கலாமே!
சென்ற திமுக ஆட்சியின் போதே உயர்கல்வித் துறையில் பொன்முடி கண்டபடி சுரண்டிக் கொழுத்தார். துணைவேந்தர் நியமனம் தொடங்கி பேராசிரியர்கள் நியமனம், தனியார் கல்லூரிகள் லைசென்ஸ் என எல்லாவற்றிலும் காசு பார்த்தார்! அப்படிப்பட்டவரை மீண்டும் அதே துறைக்கு அமைச்சராக்கி கல்வித் துறையை கந்தர்கோலமாக்க துணிந்த முதல்வர் ஸ்டாலினை என்னென்பது..?
பொன்முடி கனிம வளங்கள் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்த போது, தன்னுடைய மகன் கவுதம சிகாமணி, மற்றும் ராஜ மகேந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோருக்கு செம்மண் குவாரியின் உரிமத்தை வழங்கியதே குற்றம் தான். அத்துடன் நில்லாமல், இதில் அத்துமீறி 20 அடி ஆழத்துக்கு மட்டுமே செம்மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் 90அடி ஆழம் வரை குவாரியில் செம்மண் எடுக்கப்பட்டது. அந்த வகையில் 2.64 லட்சம் லோடு லாரி செம்மண் அனுமதி இல்லாமல் எடுக்கப்பட்டதால் அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டின் பேரில் 2012 லேயே பொன்முடி கைதானவர் என்ற நிலையில் அவரே தான் மீண்டும் அமைச்சராக வேண்டுமா?
இந்த ஆட்சியில் கவர்னர் ஆர்.என்.ரவியின் உளறலுக்கு ஆரம்ப கட்டத்திலேயே ஒரு நிகழ்வில் சிறந்த முறையில் பதிலடி தந்தார் பொன்முடி. மத்திய அரசின் உளவாளியான ஆளுநர் அப்போது முதலே பொன்முடி தொடர்பான விவகாரங்களை சேகரிக்க தொடங்கி இருக்கக் கூடும். சமீபத்தில் கவர்னர் ரவி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து வந்த நிலையில் பொன்முடி மீதான விசாரணை, ரெய்டுகள் நடந்ததை நாம் கவனிக்க வேண்டும்.
இப்படியே திமுகவில் உள்ள மற்ற ஊழல் அமைச்சர்களையும் தூக்கினார்கள் என்றால், திமுக மற்றொரு தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி போல ஆக வேண்டி வரலாம். பாஜகவை எதிர்ப்பது போல பாவலா காட்டிக் கொண்டு எதிர்கட்சிகளிடம் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் உருவாகலாம். திமுகவை அடிபணிய வைத்தால் மட்டும் போதாது! கொத்தடிமையாக்கி ஆட்டுவிக்க வேண்டும்…என்ற பாஜகவின் நோக்கமே ரெய்டுகளுக்கான காரணமாகும். அதிமுகவை அழித்தாலும் திமுகவை பாஜக அழிக்காது. ஏனென்றால், ஒரு சரியான எதிரி இல்லாவிட்டால் பாஜகவும் உயிர்த்திருக்காது! அந்த எதிரியை பலமில்லாதவனாக வைத்திருக்கவே அது விரும்புகிறது.
இப்படியே ரெய்டு,விசாரணை, கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் ஏழெட்டு அமைச்சர்களை பலி கொடுத்து, மக்களிடம் அனுதாபத்தை பெற்று ஸ்டாலின் வளர்வதற்கான வாய்ப்பாகவும் இது மாறலாம். ஏற்கனவே தமிழகத்தில் கவர்னர் ரவி சனாதனக் கருத்துக்களைப் பேசி மக்கள் வெறுப்பை பெற்று, தன்னை அழித்துக் கொண்டு திமுகவிற்கு சேவகம் செய்வது போதாது என்று தற்போது அமலாக்கத்துறையைக் கொண்டு திமுகவுக்கு பாஜக அரசு புத்துயிர்ப்பு தருகிறது என்பது தான் உண்மை!
ஒரு மோசமான குற்றவாளி மற்றொரு மோசமான குற்றவாளியை பெரும்பாலும் தண்டிக்கமாட்டான்! தனக்கு கீழ் வைத்து பலனடையவே எண்ணுவான்! பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல குற்றவாளிகள் ஒருவரை ஒருவர் அறிவர். இதில் மக்கள் தான் ஏமாளிகள்! தொடர்ந்து பாதிப்புக்கு ஆளாகிறவர்கள்! அவர்களை மீட்டெடுக்க உண்மையான தலைமை இங்கு இல்லை! மக்களுக்கு அப்படியான நேர்மையான தலைமை குறித்த தேடல் இருப்பதாகவும் தெரியவில்லை.
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்
aramonline.in /14267/raid-ponmudi-bjp-ed/
Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு