நீதித் துறையை நிலைகுலையச் செய்யும் பாஜக அரசு!
அறம் இணைய இதழ்
‘எமர்ஜென்ஸி’ காலத்தை நினைவுபடுத்தும் நிகழ்வுகள் பல தற்போது அரங்கேறிக் கொண்டுள்ளன. தார்மீக செயல்பாடுகளை, அற வழி அணுகுமுறைகளை முன்னெடுப்பதில் நீதித் துறைக்கு பல தடங்கல்களை பாஜக அரசு ஏற்படுத்தி கொண்டிருக்கிறது! நீதித் துறைக்கு தரப்படும் நிர்பந்தங்களை விவரிக்கிறார் ஹரி பரந்தாமன்;
இன்றைய நீதித் துறையில் இந்திய நீதித்துறையின் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு நாள் 2018 ஜனவரி 12. இந்த நாளில் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய், மதன் லோக்குர் ஆகிய நால்வர் பொது வெளியில் மூன்று குற்றச்சாட்டுகளை வைத்தனர்:
# நீதிபதிகள் நியமனத்துக்கான நடைமுறைக் குறிப்பாணையை பிரதமர் நரேந்திர மோடி இறுதியாக்காமல் இழுத்தடிக்கிறார்;
# நீதிபதி லோயா மர்மமான முறையில் அகால மரணமடைந்தது தொடர்பான வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வெளிச் செல்வாக்குகளுக்கு ஆட்பட்டுள்ளார்;
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தொடர்புடைய வழக்குகளில் அக்கட்சிக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைப்பதற்குத் தோதாகத் தனக்குள்ள பணி ஒதுக்கீட்டு அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிபதி அமர்வுகளை செய்கிறார்.
மொத்தத்தில் நீதித் துறையின் சுதந்திரத்துக்கு ஆபத்து வந்திருப்பதாக அவர்கள் சுட்டிக் காட்டினார்கள். “நீதிமன்றம் என்ற இந்த நிறுவனத்தைக் காக்கத் தவறினால், அது சமன் செய்து சீர்தூக்கும் தன்மையைப் பேணவில்லை என்றால், இந்த நாட்டில் ஜனநாயகம் உயிர் பிழைக்காது” என்று நீதிபதி செல்லமேஸ்வர் தெளிவாகச் சொன்னார்.
இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய ஒன்றிய அரசோ அன்றைய தலைமை நீதிபதியோ மறுக்கவில்லை. நீதிபதிகள் நால்வரும் இன்று வரை தங்கள் குற்றச்சாட்டுகளை விலக்கிக் கொள்ளவும் இல்லை. தற்போதும் கூட ரஞ்சன் கோகாய் தவிர்த்து, மற்ற மூவரும் அன்றைய நிலைமைகள் இன்றும் தொடர்வதாகவும், அரசுக்கு ஆதரவான நிலை இப்போதும் நீடிப்பதோடு மோசமாகி உள்ளதாகவும் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
# 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதலே, நீதித்துறையைத் தங்கள் கட்டுக்குள் வைக்கும் முயற்சிகள் பல வழிகளிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. இதற்கு நீதிபதிகள் நியமனத்தை – அல்லது நியமன மறுப்பை – மற்றும் இடமாற்றத்தை ஒரு முக்கியக் கருவியாக மோடி பயன்படுத்தி வருகிறார்.
இந்திய உச்ச நீதிமன்றம் என்பது தலைமை நீதிபதி உட்பட 34 நீதிபதிகளைக் கொண்டது. 1993 முதல் உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான நீதிபதிகள் தேர்வுக் குழு (கொலீஜியம்) இயங்கி வருகிறது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதற்கான தேர்வுக் குழுவில் தலைமை நீதிபதியும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நான்கு மூத்த நீதிபதிகளும் இடம் பெற்றிருப்பார்கள். அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்கள் பற்றிய தங்களின் பரிந்துரைகளை இந்திய ஒன்றிய அரசுக்கு வழங்குவார்கள். பொதுவாக இந்தப் பரிந்துரைகளை ஏற்று நீதிபதிகளைக் குடியரசுத் தலைவர் நியமிப்பது தான் வழக்கமாக இருந்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பின் இந்த நிலை மாறி விட்டது.
அந்தந்த மாநில உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு, மாநில உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளும் அடங்கிய கொலீஜியம், உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்குப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்தப் பரிந்துரையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியும் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளும் அடங்கிய கொலீஜியம் ஒன்றிய அரசுக்கு இந்த நியமனங்கள் குறித்துப் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த நியமனங்களில் மாநில அரசின் பரிந்துரையும் கணக்கில் கொள்ளப்படும்.
பொருத்தம் அல்லது பாதுகாப்பு பற்றிய தகுந்த காரணங்களைச் சொல்லி கொலீஜியத்தின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யும் படி ஒன்றிய அரசு கேட்கலாம். ஆனால், கொலீஜியம் ஒன்றிய அரசின் எதிர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல் நிரகரித்துத் தனது பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தினால், ஒன்றிய அரசு அதனை ஏற்றுக் கொண்டு நியமனம் செய்தே ஆக வேண்டும். ஆனால், தற்போதோ, நீதிபதிகள் நியமனத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கொலீஜியத்துக்குக் கட்டுப்படுவதை மோடி விரும்பவில்லை.
2005 சேக் சொராபுதின் ஜோடிக்கப்பட்ட மோதல் கொலை வழக்கில் குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித்சா குற்றஞ்சாட்டப்படவராக இருந்தார். இவ்வழக்கில் நீதிமன்ற உதவியராக (amicus curiae) செயல்பட்டவர் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியம். இந்தக் காரணத்துக்காகவே கோபால் சுப்பிரமணியம் உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் பரிந்துரை செய்யப்பட்ட போதும் அவரை நீதிபதியாக நியமிக்க மோடி தலமையிலான பாஜக அரசு மறுத்து விட்டது.
பொய்-மோதல் கொலை வழக்குகளில் குஜராத் உள்துறை அமைச்சர் அமித்சா குற்றஞ் சாட்டப்பட்டவராக இருந்த நிலையில், ஜெயந்த் படேல், குரேஷி ஆகிய குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியாயமாகச் செயல்பட்டனர். மோடி அரசினால் பழிவாங்கும் முறையிலான இடமாற்றத்துக்கு உள்ளாக்கப்பட்டு ஜெயந்த் படேல் உயர்நீதிமன்ற நீதிபதிப் பதவியையே துறந்தார். மூத்த நீதிபதியான குரேஷிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் நியாயமான வாய்ப்பு மறுக்கப்பட்டது.
கொலீஜியம் தேர்வு முறையை ஒழித்துக் கட்ட பாஜக அரசு இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு 99ஆம் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றச் செய்து, கொலீஜியத்தின் அதிகாரத்தைப் பறித்தது. அதற்கு மாற்றாக, தேசிய நீதித்துறை நியமனங்கள் ஆணையத்தைத் தோற்றுவித்தது.
இந்தத் திருத்தச் சட்டம் செல்லாது என்று 2015 லேயே இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகளடங்கிய அரசமைப்பு அமர்வு தீர்ப்பளித்ததோடு, தேசிய நீதித்துறை நியமன ஆணையம் என்பது நீதித்துறையின் சுதந்திரத்துக்குப் பெருங்கேடு செய்வதாகும் என்றது உச்ச நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்புக்கு எதிர்வினையாக கொலீஜியம் பரிந்துரைத்தவர்களை உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்காமல் கிடப்பில் போட்டது மோடி அரசு. இன்றும் இதே நிலை தொடர்கிறது. கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டவர்கள் பாஜகவின் அரசியலோடு உடன்பட மறுப்பவர்களாக கருதப்படும் நிலையில் அவர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்படுவதில்லை.
தமிழ்நாட்டில் மூத்த வழக்கறிஞர்கள் அஜ்மல்கான், ஜான் சத்யன் ஆகியோர் காலேஜியத்தால் பரிந்துரைக்கப்பட்டும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படவில்லை.
# இந்திய நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் 87 விழுக்காடு வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களிலும், கீழமை நீதிமன்றங்களிலும் குவிந்து கிடக்கின்றன. நமது நாட்டில் ஒரு வழக்கில் இறுதித் தீர்ப்பு கிடைக்க ஆண்டுக் கணக்கில் ஆகிறது. உரிமையியல் வழக்குத் தொடுப்பவர் தன் வாழ்நாளுக்குள் தீர்ப்பைக் காணும் நிலை இல்லை என்று உச்ச நீதிமன்றத் தலமை நீதிபதி சந்திரசூட் அவர்களே கூறியுள்ளார்.
குவிந்து கிடக்கும் வழக்குகள் அனைத்தையும் நடத்தி முடிக்க 320 ஆண்டுகள் தேவைப்படுமாம். இந்தியச் சிறைகளில் அடைபட்டுக் கிடப்பவர்களில் நூற்றுக்கு 70 பேர் விசாரணைக் கைதிகளே. இத்தனைக்கும் குற்றஞ்சாட்டப்படுவோரில் 4.5 விழுக்காடு மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்.
# 2019, ஆகஸ்டு மாதம் பாஜக அரசு இந்திய அரசமைப்பின் உறுப்பு 370ஐ முடக்கி ஜம்மு காஷ்மீரத்தை உடைத்து, மாநிலத் தகுதியைப் பறித்து, ஐந்தாண்டுகளாகத் தேர்ந்தெடுக்கபட்ட அரசே இல்லாமற் செய்து, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தில் தலைவர்களைச் சிறைப்படுத்தி, காஷ்மீர் மக்கள் மீது கடும் அடக்குமுறையை ஏவிய போது உச்ச நீதிமன்றம் மெளனித்து கிடந்தது. காஷ்மீரில் இளஞ்சிறார்கள் முதல் பெருந் தலைவர்கள் வரை 13,000 த்துக்கு மேற்பட்டோர் சிறை வைக்கப்பட்டு, 600க்கு மேல் ஆட்கொணர்வு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டும், உச்ச நீதிமன்றம் செய்ததொன்றுமில்லை. மேலும், அண்மையில் ஆர்டிகள் 370 தொடர்பான ஒன்றிய அரசின் முடிவுக்கு ஒப்புதல் அளித்து விட்டது.
# பாஜக அரசால் மதப் பாகுபாடு காட்டும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் 2019இல் கொண்டு வரப்பட்ட போதும்,
அசாம் மாநிலத்தில் தேசியக் குடிமக்கள் பதிவேடு செயலாக்கப்பட்டு 19 இலட்சம் மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போதும்,
இவற்றுக்கு எதிரான நாடுதழுவிய அறப் போராட்டங்கள் மீது அடக்குமுறையும் வன்முறையும் ஏவப்பட்ட போதும்…,
மொத்தத்தில் நீதித்துறை செயலற்றுப் போனது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கைக் காலவரையின்றி கிடப்பில் போட்டுள்ள உச்ச நீதிமன்றம்… அச்சட்டத்தை எதிர்த்து, குறிப்பாக இசுலாமியப் பெண்கள் நடத்திய ஷாயின்பாக் போராட்டம் காலவரையின்றி சாலையில் நடப்பதை மட்டும் சட்டவிரோதம் என்று அறிவித்தது. மேற்சொன்ன 2019 குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயலாக்கும் விதிகளை தற்போது மீண்டும் மார்ச்11, 2024 இல் இந்த அரசு அறிவித்துள்ளது.
# 2018ஆம் ஆண்டு ஆளும் கட்சிக்குப் பெருநிதி திரட்டும் உள்நோக்கத்துடன் தேர்தல் பத்திரத்துக்கான சட்டம் மாநிலங்களவைக்கே செல்லாமல் குறுக்கு வழியில் பணச் சட்ட முன்வடிவு என்ற போர்வையில் இயற்றப்பட்டது. இப்போது தான் அது சட்டப் புறம்பானதென்ற தீர்ப்பு வந்துள்ளது. ஆறாண்டு காலமாய்த் தேர்தல் பத்திரம் என்ற போர்வையில் பல ஆயிரம் கோடி ரூபாயை நன்கொடையாகக் கார்ப்பரேட்டுகளிடமிருந்து வாங்கியதை மீட்பதற்கு வழியில்லை. இதில் 50 விழுக்காட்டுக்கு மேல் பாஜகவுக்கே சென்றுள்ளது.
# அவசரநிலைக் காலத்தில் கூட மிசா சட்டத்தில் கைது செய்வது அரசமைப்புச் சட்ட உறுப்பு 21க்கு எதிரானது என்று தொடரப்பட்ட எண்ணற்ற வழக்குகளை உடனடியாக விசாரிக்க அரசமைப்பு அமர்வை அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அமைத்தார். ஆனால் 2014க்குப் பின்னர் வந்த பல உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் முக்கிய அரசமைப்பு வழக்குகளை விசாரிக்கப் போதிய அரசமைப்பு அமர்வுகளை அமைக்கவில்லை.
# 1992 ல் பாபர் மசூதியை இடித்துத் தள்ளியது சட்டவிரோதம் என்றும், 1949 -ல் இராமர் சிலையை பாபர் மசூதிக்குள் வைத்தது சட்ட விரோதம் என்றும் கூறிய உச்ச நீதிமன்றம், இடித்தவர்களிடமே அந்த இடத்தை ஒப்படைத்து இராமர் கோயில் கட்டிக் கொள்ள அனுமதித்தது வினோதமான தீர்ப்பு. இந்தத் தீர்ப்பை வழங்கியது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வு.
இந்த நீதிபதிகளில் ஒருவர் மாநிலங்களவை உறுப்பினராகி விட்டார்.
மற்றொருவர் ஆளுநர் ஆகி விட்டார்.
மற்றும் ஒருவர் தேசியப் சட்டப் பல்கலைக் கழகத்தின் வேந்தர் ஆகி விட்டார்.
இன்னும் ஒருவர் தேசிய நிறுவனங்கள் சட்ட மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் தலைவர் ஆகி விட்டார்.
# முஸ்லிம் பெண்களின் கல்வி உரிமையை மறுக்கும் வகையில் அவர்களின் ஹிஜாப் உரிமையை மறுத்த கர்நாடக பாஜக அரசின் செயலை சரி என்று தீர்ப்பளித்த நீதிமன்ற அமர்வின் தலைவராகச் செயல்பட்ட கர்நாடக உயர் நீதிமன்றத் தலமை நீதிபதி, சட்ட ஆணையத்தின் தலைவரும், லோக்பாலில் நீதிசார் உறுப்பினரும் ஆகி விட்டார்.
# இந்தியாவில் ஆட்சியாளர்கள் அரசியல் எதிரிகளைப் பழிவாங்கக் காவல் துறையைத் தவறாகப் பயன்படுத்துவதில் பாஜக அரசு புதிய ’சாதனை’ படைத்துள்ளது! 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சி தொடங்கியதிலிருந்து முக்கிய அரசியல் தலைவர்கள் மீதான சிபிஐ விசாரணைகளின் எண்ணிக்கை 124 ஆகியுள்ளது. விசாரணைக்கு ஆளானவர்களில் 118 பேர் – 95 விழுக்காடு – எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள். மற்றவர்களிலும் பாஜகவினர் எவருமில்லை.
# எதிர்க் கட்சியினர் மட்டுமல்ல, மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்களும் பாஜக அரசால் விட்டு வைக்கப்படவில்லை. மனிதவுரிமைப் போராளி தீஸ்தா செதல்வாடு சிறைப்படுத்தப்படுவதற்கு உச்ச நீதிமன்றத் தீர்ப்பே காரணமானது தான் கொடுமையிலும் கொடுமை!
# ’உபா’ சட்டத்தின் கீழோ அல்லது பணப் பட்டுவாடா சட்டத்தின் (PMLA) கீழோ கைது செய்யப்படுகிறவர்களுக்குப் பிணை என்பதே சாத்தியமில்லை என்பதைப் பயன்படுத்தி இச் சட்டங்களின் கீழ் எதிர்க் கட்சியினரையும் மனிதவுரிமைச் செயற்பாட்டளர்களையும் ஆண்டுக் கணக்கில் சிறையில் வைத்துள்ளது பாஜக அரசு. இந்தத் தீர்ப்புகளையும் தீஸ்தா செதல்வாடு சிறை செல்லக் காரணமான தீர்ப்பையும் அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதியை அண்மையில் லோக்பால் தலைவராக அமர்த்தியுள்ளது பாஜக அரசு.
கொடிய உபா சட்டத்தின் கீழ் ஐந்தாண்டு காலத்தில் சிறைப்படுத்தப்பட்டவர்கள் 8,300க்கு மேல். இவர்களில் மிக அதிகமானோர் முஸ்லிம்கள். இஸ்லாமிய மாணவர்கள் கூட கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்புக்காக வாதிட்ட வழக்கறிஞர்களும் கூட உபாவில் சிறை வைக்கப்பட்டனர். பீமா கொரேகான் வழக்கில் சிறை வைக்கப்பட்ட வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமிக்குப் பிணை மறுக்கப்பட்டதால் காவலின் போதே உயிரிழந்த அவலம் உபாவுக்கும் மோடி அரசின் கொடுமைக்கும் அழியாச் சான்றுகளாகிவிட்டது. குடிமக்களின் கடைசிப் புகலிடமான நீதிமன்றம் அரசமைப்புச் சட்டப்படி செயல்படத் தவறியதே இவை அனைத்திலும் வெளிப்பட்டு நிற்கிறது.
அதே சமயம் வெகு மக்கள் மனதில் நீதித் துறை குறித்த மதிப்பீடுகள் குறையக் கூடாது என்ற அக்கறையுடன் அவ்வப்போது சில அழுத்தங்களையும் மீறி நேர்மையான வகையிலும், முற்போக்கு பார்வையிலும் நீதித்துறை செயல்படுவது சில தீர்ப்புகளில் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக சபரிமலைக்கு பெண்கள் செல்வதற்கான உரிமையை வழங்கியது, சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்த அட்டூழியங்களை பகிரங்கப்படுத்தி, கண்டித்து ரத்து செய்தது, ”தேர்தல் பத்திரங்கள் சட்டவிரோதமானது” என சொன்னதோடு அல்லாமல், மக்கள் மன்றத்தில் அரசியல் கட்சிகள் பெற்ற நிதியை அம்பலப்படுத்தியது போன்ற விவகாரங்களில் தற்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட்டின் துணிச்சல் பாராட்டுக்கு உரியதாகும்.
# பாஜக ஆட்சி மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை இயற்றியுள்ளது. நாடாளுமன்றத்தில் 146 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த போது விவாதமே இல்லாமல் இந்தப் புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன: 1860ஆம் ஆண்டின் இந்தியத் தண்டனைச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், 2023; 1872 ஆம் ஆண்டின் சாட்சியச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய சாக்சிய சன்ஹிதா, 2023; 1973 ஆம் ஆண்டின் குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்சா சன்ஹிதா, 2023. காலனியக் காலச் சட்டங்களுக்குப் பதிலாக இந்தப் புதிய சட்டங்களை இயற்றியிருப்பதாக பாஜக அரசு கூறிக் கொள்கிறது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 348 இன் படி இந்தச் சட்டங்கள் ஆங்கில மொழியில் இருக்க, பெயர்கள் மட்டும் வடமொழியில் சூட்டியிருப்பது சமஸ்கிருதத் திணிப்பாகும்.
இந்தப் பெயர் மாற்றத்திலும் கூட பழமைதான் வீசுகிறது. உருவத்திலோ உள்ளடக்கத்திலோ புதுமை ஒன்றுமில்லை. 160 ஆண்டுகளுக்குப் பிறகு இயற்றப்படும் புதிய தண்டனைச் சட்டத்தில் 80 விழுக்காட்டுக்கு மேல் பழைய சட்ட விதிகளே உள்ளன. 50 ஆண்டுக் காலத்துக்கு முற்பட்ட குற்ற நடைமுறைச் சட்டம் இடைக்காலத்தில் அவ்வப்போது திருத்தப்பட்டே வந்துள்ளது. மிகக் கடைசியாக 2018இல் கூட அது திருத்தப்பட்டது.
இந்தப் புதிய சட்டங்கள் காவல்துறையின் கையில் கட்டுமீறிய அதிகாரங்களை ஒப்படைக்கக் கூடியவை என்றும், இதனால் மனிதவுரிமைகள் கடுமையாகத் தாக்குறும் என்றும் மனிதவுரிமை ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். கைது செய்து காவலில் வைத்த பின் இப்போது 15 நாட்களுக்குள் என்பதற்குப் பதிலாகப் புதிய சட்டத்தில் 90 நாட்களுக்குள் காவல்துறைக் காவல் எடுக்க முடியும் என்பது காவல்துறைக் கொடுமைகளுக்கு வழிதிறந்து விடக் கூடியதாகும். சொத்துகளை முடக்கக் காவல்துறைக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. கைவிலங்கு மாட்டவும், பலப்பிரயோகமாக கைது செய்யவும் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படுவது என்கெளண்டர் கொலைகளுக்கு வழி செய்யக் கூடும்.
தண்டனைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள புதிய குற்றங்கள் ஆளும் கட்சியின் அரசியல் கண்ணோட்டத்தை எதிரொலிப்பவையாக உள்ளன. மக்களின் சாதாரண போராட்டங்கள், எதிர்ப்புகளைக் கூட பயங்கரவாதச் செயல்களாக வரையறுப்பதாக உள்ளது. இதன் படி ஓர் ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்ட வடிவமான ஆர்ப்பாட்டத்தையே கூட பயங்கரவாதச் செயலாக வரையறுக்க முடியும்.
காலனியாட்சிக் காலத்திய அரசத் துரோகச் சட்டத்தை அடியோடு நீக்கம் செய்வதாகக் கூறிக் கொள்ளும் பாஜக ஆட்சி, புதிய தண்டனைச் சட்டத்தில் அதனை மேலும் கடுமையாக்கி, அவற்றுக்குப் புதிய அரசியல் நோக்கங்களைக் கற்பிக்கிறது. ”இந்தியாவின் இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தான செயல்கள்” என்ற முத்திரையில், சாத்வீக எதிர்ப்பையும் கூட வரையறுப்பது ஏற்கதக்கதல்ல. இது வரை சிறப்புச் சட்டங்களின் படி குற்றங்களாக இருந்த பலவும், இப்போது இயல்பான சட்டத்திலேயே குற்றங்களாக்கப்படுகின்றன. இதன்படி மேடைப் பேச்சைக் கூடக் குற்றமாக்குவது கருத்துரிமையின் மீதான தாக்குதல் ஆகும்.
சட்டங்களின் பெயர்களை சமஸ்கிருதத்திற்கு மாற்றுவது மட்டுமே அவற்றைப் புதிய சட்டங்களாக்கி விடாது. உண்மையில் குற்றவாளிகளின் சீர்த்திருத்தம், மறுவாழ்வு என்ற நோக்கில் செய்யப்பட வேண்டிய முற்போக்கான திருத்தங்கள் செய்யப்படவில்லை. கொலைத் தண்டனை ஒழிக்கப்படாததோடு, அதன் வீச்சு விரிவாக்கப்பட்டுள்ளது. ஒருசில குற்றங்களுக்கு உள்ளபடியே சாகும் வரையிலான சிறைத் தண்டனை என்பது சீர்திருத்தக் குற்றவியலுக்குப் பெரும் பின்னடைவு ஆகும்.
# அருந்ததி ராய் சொல்வது போல, இப்போதெல்லாம் இந்தியாவில் நீங்கள் கைது செய்யப்படுவது நீங்கள் யார் என்பதற்காகத் தானே தவிர, என்ன செய்தீர்கள் என்பதற்காக அல்ல.
சட்டத்தின் ஆட்சியும், மக்கள் நலனுமே ஜனநாயகத்தின் அடிப்படைகள். இந்த இரண்டுக்குமே நேரெதிரானது பாசிசம். பாஜகவின் ஆட்சி பாசிச ஆட்சி. நீதித் துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டுமென்றால் பாஜகவின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். சட்டத்தின் ஆட்சியைப் பேணிக் காக்கும் கடமை அன்றாடம் சட்டப் பணி ஆற்றும் நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும், சட்ட மாணவர்களையும் சாரும். 2024 பொதுத் தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த நம் வாக்குரிமையைப் பயன்படுத்துவோம். இதற்காக விழிப்புணர்வூட்டும் கடமை சட்டச் சமுதாயத்துக்கு உண்டு. விழிப்புறுக! விழிப்பூட்டுக!
கட்டுரையாளர் ; து. அரிபரந்தாமன், உயர் நீதிமன்ற நீதிபதி (ஓய்வு)
அறம் இணைய இதழ்
aramonline.in /17168/political-pressure-in-judiciary/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு