பாலஸ்தீன அதிகார சபையின் செல்வாக்கு மங்குவது காசா-வுக்கு பெருந்தலைவலிதான்!

தமிழில் : விஜயன்

பாலஸ்தீன அதிகார சபையின் செல்வாக்கு மங்குவது காசா-வுக்கு பெருந்தலைவலிதான்!

இவற்றோடு சேர்ந்து அமெரிக்காவின் நிதியுதவி துண்டிக்கப்பட்டதும், உள்நாட்டில் ஊழல், ஆட்சியதிகாரத்தில் அதீத தலையீடுகள் போன்றவற்றுடன் பல்வேறு கட்சிகளுக்கிடையிலான ஒத்துழைப்பின்மையும் சேர்ந்து தலைவலியை கடுமையாக்கிவிட்டுள்ளது.

அண்மை கிழக்கு பகுதியில் அடைக்கலம் தேடி வரும் பாலஸ்தீனியர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்காக UNRWA (United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East) என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. கடந்த மார்ச் 20ம் தேதியன்று, ஜெரூசலேமில் உள்ள இந்த ஐ.நா. சபை அமைப்பின்(UNRWA) அலுவலக நுழைவாயில் முன்பு இஸ்ரேலியர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அதன் படம் இங்கே காட்டப்பட்டுள்ளது.

 

ஜெரூசலேம், காசா, மேற்கு கரை என எல்லா பகுதிகளிலும் நிலைமைகள் மோசாமாகிக் கொண்டே சென்றதைத் தொடர்ந்து முன்பிருந்த பிரதமர் முகமது ஸ்த்தேயே கடந்த பிப்ரவரியில் பதவி விலகினார்; அவரைத் தொடர்ந்து பாலஸ்தீனிய அதிகார சபை பொருளாதார வல்லுநரான முகமது முஸ்தபாவை புதிய பிரதமராக கடந்த மார்ச் 14ல் நியமித்தது. சென்றாண்டு அக்டோபர் 7 முதல் இதுவரை காசாவில் மட்டும் 32,000 பேரும், மேற்கு கரையில் 483க்கும் அதிகமானோரும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழிந்துள்ளனர்.

20 ஆண்டுகளுக்கு மேலாக பாலஸ்தீனிய அதிகார சபையால் நியமிக்கப்பட்டவரும், குடியரசுத் தலைவருமான முகமது அப்பாஸ்(88 வயது) தற்காலிகமாக புதிய அமைச்சரவை ஒன்றை உருவாக்குவதற்கான அவசரச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார். முறைப்படி ஜனாதிபதிக்கானத் தேர்தல் ஜீலை 31, 2021ல் நடத்துவதென பாலஸ்தீனிய அதிகார சபையால் தீர்மானிக்கப் பட்டிருந்தது. தேர்தலில் கிழக்கு ஜெரூசலேம் பகுதியினர் பங்கேற்பதை இஸ்ரேல் முடக்கியதைத் தொடர்ந்து முகமது அப்பாஸ் குடியரசுத் தலைவருக்கான தேர்தலை காலவரையின்றி ஒத்தி வைப்பாக ஆணை பிறப்பித்தார்.

தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவை சட்ட விரோதமானது என்று ஹமாஸ் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு மாறாக, அதிபர் தேர்தல் நடத்தும் வரை ஃபதா(Fatah-முகமது அப்பாஸின்) கட்சி உட்பட அனைத்து பாலஸ்தீனிய அரசியல் பிரிவினரையும் உள்ளடக்கிய கூட்டுப் பொறுப்பு அரசாங்கத்தை உருவாக்க வேண்டுமென ஹமாஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு எதிர்வினையாற்றும் வகையில், ஏப்ரல் 3 அன்று, ஈரானுக்கு “சேவை” செய்யும் நோக்கில் அரபு நாடுகளின் உள் விவகாரங்களில் ஈரான் நாட்டின் தலையீட்டை அனுமதிக்கும் நோக்கில் ஹமாஸ் அமைப்பு செயல்படுவதாக ஃபதா கட்சியினர் விமர்சித்துள்ளனர்.

போர் முடிந்த பிறகும்கூட, காசா மீதான திறந்த வெளி சிறைக்கட்டுப்பாடுகள் தொடரும் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதோடு அதிகார சபையினரால் உருவாக்கப்பட்ட தற்காலிக அமைச்சரவையையும் அங்கீகரிக்க மறுத்துள்ளது.

2013ல் அப்போதைய பிரதமர் சலாம் ஃபயாத்-ன் பதவிக்காலம் முடிவடைந்தப் பிறகு பிரபல பொருளாதார வல்லுநரும் நீண்ட காலமாக முகமது அப்பாஸ்(குடியரசுத் தலைவர்)-ன் நெருங்கிய ஆலோசகராகவும் இருந்த முகமது முஸ்தபா அடுத்த பிரதமராகத் தேர்வு செய்யப்படுவார் என்று பொதுவாக செய்திகள் வெளியாகின. பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்ததற்காக பெயர்பெற்ற ஜோர்டான்-பாலஸ்தியரான சலாம் ஃபயாத் 2013ல் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். ஊகச் செய்திகள் ஒரு பக்கம் வந்தபோதும், ராமி ஹம்துல்லாஹ் பிரதமராக நியமிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு வரை செயல்பட்டார்.

2007ல் காசா பகுதி எப்போது ஹமாஸ் கட்டுப்பாட்டிற்கு சென்றதோ, அதன் பிறகு, மூப்படைந்து வரும் பாலஸ்தீனிய குடியரசுத் தலைவருக்கு மிக மிக நம்பகமான ஆலோசகராக முகமது முஸ்தபாவே இருந்து வந்தார். பாலஸ்தீனிய அதிகார சபையின் கீழ் இயங்கி வந்த நூற்றுக்கணக்கான அலுவலகங்கள், அமைப்புகள் எதுவும் ஹமாஸ் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடாமல் தடுத்ததும் முகமது முஸ்தபாதான். ஹமாஸ் கட்டுபாட்டிற்குள் சென்றுவிட்டால் சர்வதேசிய அளவிலான தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதற்காகவே இதைச் செய்துள்ளார். பாலஸ்தீனிய அதிகாரச் சபைக்கு சொந்தமான பாலஸ்தீனிய முதலீட்டு நிதியம் (PIF) இதில் குறிப்பிட்டுச் சொல்லுமளவிற்கு முக்கியமான அமைப்பாகும். பொருளாதாரச் சீர்த்திருத்தங்களை அமல்படுத்தக்கோரி மேற்கத்திய நாடுகள் கொடுத்த தொடர் அழுத்தங்கள் காரணமாக கடந்த 2003-ம் ஆண்டில் 1 பில்லியன் டாலர்கள் மதிப்பில் இந்த நிதியம் உருவாக்கப்பட்டது. 

2007-ம் ஆண்டு இந்த நிதியத்தில் தலைமை மேலாளராக முகமது முஸ்தபா நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து தலைமை நிர்வாக அதிகாரியாகவும், இயக்குநர் குழுவிற்கான தலைவராக நியமிக்கப்பட்டார். 2014ல் தேசிய பொருளாதார அமைச்சகத்துக்கான தலைவராகவும் முஸ்தபா நியமிக்கப்பட்டார். இவையனைத்தையும் செய்வித்தது குடியரசுத் தலைவர் முகமது அப்பாஸ்தான். 

2025 முடியும் வரை ஐ.நா.வின் கிளை அமைப்பிற்கான(UNRWA) நிதியுதவியை நிறுத்து வைப்பதாக அமெரிக்கா தீர்மானித்துள்ளது. இதைத் தொடர்ந்து எழக்கூடிய நிதி நெருக்கடியை சமாளிப்பதே புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள முகமது முஸ்தபாவின் முதற் பெரும் சிக்கலாக இருக்கும். காசா பகுதியில் இஸ்ரேல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வரும் முக்கிய அமைப்பாக UNRWA இருந்து வருகிறது. இந்த அமைப்பு செயல்படுவதற்கு வேண்டிய பெரும்பகுதியான நிதியை அதாவது 300 முதல் 400 மில்லியன் டாலர்களை ஆண்டொன்றிற்கு அமெரிக்காவே வழங்கி வருகிறது. அமெரிக்காவின் நிதியுதவி மட்டுமல்லாது, இன்னப்பிற முக்கிய நாடுகளின் நிதியுதவியும் நிறுத்தி வைக்கப்படுகிறபட்சத்தில் ஆண்டிற்கு 450 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான நிதித் தட்டுப்பாடு ஏற்படும். இதன் விளைவாக காசா பகுதி மக்களின் கையறு நிலை பன்மடங்கு மோசமடைவதற்கே வழிவகுக்கும்.

இப்போது வெடித்தள்ள மோதலிற்கான காரணமாக UNRWA இருந்து வந்துள்ளதே தவிர ஒருபோதும் தீர்வுக்காண்பதற்காக செயல்பட்டதில்லை என்று நீண்ட காலமாக இஸ்ரேல் சொல்லிக் கொண்டு வந்துள்ளது. இந்த அமைப்பிற்கான நிதியை அமெரிக்க நிறுதியுள்ளதை வைத்தே நாங்கள் சொன்னது எந்தளவிற்கு உண்மை என்பதை புரிந்து கொள்ள முடியுமென இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் குறிப்பிட்டிருந்தார். ஐ.நா.வின் நிவாரண உதவிகளை வழங்கி வரும் கிளை அமைப்பில்(UNRWA) வேலை செய்யக்கூடிய 30,000 ஊழியர்களில் 12 பேர் அக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய ஆயுத தாக்குதலில் பங்கேற்றுள்ளனர் என்று இஸ்ரேல் அரசு குற்றம் சாட்டியதைத் தொடர்ந்தே  ஜனவரியில் அமெரிக்கா இந்த அமைப்பிற்கான நிதியுதவியை நிறுத்தி வைத்தது. எனினும், இது குறித்து UNRWA அமைப்பின் தலைவர் ஐ.நா.வின் பொதுச் சபையில் கடந்த மார்ச் 4-ம் தேதி முதல் முறையாக பின்வருமாறு கூறினார்.  எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஊழியர்கள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் பங்கெடுத்தார்களா இல்லையா என்பதற்கான எந்த ஒரு திட்டவட்டமான ஆதாரத்தையும் இஸ்ரேல் வழங்கவில்லை. மேலும், எங்கள் அமைப்பை கலைக்க வேண்டும் என்பதற்கு பின்னால் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்றும் அவர் பேசியிருந்தார்.

இதுவொருபுறமிருக்க, UNRWA அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வந்தாலும் சில நல்ல செய்திகளும் வரத்தான் செய்கின்றன. கனடா, ஸ்வீடன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் சில ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த நாடுகளும் UNRWA அமைப்பிற்கு மீண்டும் நிதியுதவி வழங்குவது குறித்து பரிசீலித்து வருகின்றன. இஸ்ரேல் அரசின் குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் முன்வைக்கப்படாததால் இந்த நகர்வை மேற்கொள்வதாக கூறுகின்றனர். நிறுத்தி வைக்கப்பட்ட நிதியுதவியை ஈடு செய்யும் வகையில் நார்வே, ஸ்பெயின் போன்ற நாடுகள் வழங்கி வந்த நிதியுதவியை அதிகரித்து வழங்கி வருவதும் இங்கு கூடுதலாக கவனிக்க வேண்டிய நல்ல செய்தியாகும்.

சர்சைக்குரிய திட்டமான “தியாகிகளுக்கு நிவாரணம்” வழங்கும் திட்டத்தை இரத்து செய்வதற்கான பேச்சு வார்த்தையில் அமெரிக்காவும், பாலஸ்தீனிய அதிகார சபையும் ஈடுபட்டு வந்த நிலையில் இறுதி முடிவு எட்டப்படவிருக்கிறது. இஸ்ரேலியர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி அதனால் கொல்லப்பட்டிருந்தாலோ, காயமடைந்திருந்தாலோ அல்லது சிறைக்கு சென்றிருந்தாலோ அவர்களைத் தியாகியாகக் கருதி நிவாரணம் மற்றும் நிதியுதவிகளை வழங்குவதற்கு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது. “கொலைக்கு கூலி” தரும் திட்டம் என்றும், பயங்கரவாதத்தை ஊட்டி வளர்க்கும் திட்டம் என்றும் இஸ்ரேலிய அரசு இத்திட்டத்தை விமர்சித்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மறுபுறம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்பவர்களுக்கு இத்திட்டம் அவசியம் தேவையானதுதான் என்றே பல பாலஸ்தீனியர்கள் நினைக்கிறார்கள்.

தியாகிகள் நிதியம்

இஸ்ரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 3,550 பாலஸ்தீனியர்களின் குடும்பங்களுக்கும், 23,210 தியாகிகளின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக ஜெரூசலேமில் உள்ள பாலஸ்தீன் மீடியா வாட்ச் என்ற தொண்டு நிறுவனம் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறியுள்ளது. சமீபத்தில் அல்-அக்ஷா தியாகிகள் மருத்துவமனையின் மீது இஸ்ரேல் அரசு தொடுத்த தாக்குதலில் பலியானவர்கள் உட்பட  யார் யாரெல்லாம் தியாகிகளுக்கான நிவாரண உதவிகளைப் பெற்று வருகிறார்கள் என்பதை பாலஸ்தீனிய அதிகார சபையின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான அல்-ஹயாத் அல்-ஜதிதா ஒரு பட்டியலே வெளியிட்டுள்ளது. பாலஸ்தீனியர்களை சிறைபிடிப்பது அதிகரித்துக் கொண்டே போவதால் அவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவதற்கான நிதிச் சுமையும் கணிசமாக அதிகரித்துள்ளது. மாதந்தோறும் சராசரியாக 13,31,000 டாலர்கள் கூடுதலாக நிதிச் சுமை அதிகரித்துள்ளது. கடந்தாண்டோடு ஒப்பிடுகையில் பட்ஜெட்டில் 16 மில்லியன் டாலர்கள் செலவு அதிகரித்துள்ளது. 

தியாகிகளுக்கான நிவாரணத் திட்டம் என்பது பாலஸ்தீனிய அதிகார சபையால் கொண்டு வரப்பட்ட சட்டத்திட்டமாகும். மொத்த பட்ஜெட்டில் 7 சதவீதம் இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட வேண்டுமென இச்சட்டம் கூறுகிறது. இஸ்ரேலிய அரசால் சிறை வைக்கப்பட்டவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் மட்டுமல்லாது இஸ்ரேலிய அரசால் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும் மாதந்தோறும் குறிப்பிட்டத் தொகையை நிவாரணமாக வழங்குவதற்கு இத்திட்டம் பயன்படும் என்று இச்சட்டம் கூறுகிறது. எத்தனை இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர், எத்தனையாண்டு காலம் சிறையில் இருந்துள்ளார், குடுபத்தில் எத்தனை பேர் என்பதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

மேற்கு இஸ்ரேலில் அமைந்துள்ள ஜாஃபா துறைமுக நகரத்தில் மார்ச் 2016 ஆண்டு, கண்ணில்படும் இஸ்ரேலியர்களை எல்லாம் குத்திக் கொலை செய்யும் கலவரம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் 28 வயது நிரம்பிய அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர்(டெய்லர் போர்ஸ்) இந்தச் சம்பவத்தில் சிக்கி உயிரிழந்ததைத் தொடர்ந்தே இந்தத் திட்டத்தின் மீதான கவனம் அதிகமாகக் குவியத் தொடங்கியது. இஸ்ரேல் தலைநகரில்(டெல் எவிவ்) இஸ்ரேலிய அதிபர் சிமோன் பெரஸ் என்பவரை அப்போது அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் சந்திக்க வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்திற்கு எதிர்வினையாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆட்சியின் கீழ் டெய்லர் போர்ஸ் சட்டம் இயற்றப்பட்டது. தியாகிகளுக்கும், சிறைக் கைதிகளுக்கும் கொடுக்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையை நிறுத்தும் வரை பாலஸ்தீனிய அதிகார சபைக்கு அமெரிக்காவால் வழங்கப்பட்டு வரும் எந்தவொரு நிதியுதவியையும் முடக்குவதற்கு இச்சட்டம் துருப்பு சீட்டாக அமைந்தது. 

புதிதாக உருவாக்கப்பட்ட தற்காலிக அமைச்சரவையும் அதிலும் குறிப்பாக குடியரசுத் தலைவர் முகமது அப்பாஸ் மீதான விமர்சனமும் அதிமாகிக் கொண்டே செல்கிறது. அமைச்சர்களையும், அவர்களின் இலாக்காக்களையும் மாற்றியமைப்பதன் மூலம் சட்டப்படி ஆட்சி நடப்பதுபோல காட்டுவதற்கு முகமது அப்பாஸ் முயன்று வருகிறார் என்று Human Rights Watch என்ற தொண்டு நிறுவனத்தின் முன்னாள் செயல் தலைவர் கென்னத் ரோத் விமர்சித்துள்ளார். குடியரசுத் தலைவராக அப்பாஸ் நீடிக்கும் வரைக்கும், அரசுக்கெதிரான மாற்றுக் கருத்துக்களை ஒடுக்கி வருகிற வரைக்கும் வெறும் அமைச்சரவை மாற்றம் யதார்த்த நிலைமைகளில் எந்தவொரு நன்மையையும் கொண்டு வராது. ஊழலை குறைத்து செம்மையான ஆட்சியை தருவதற்கு பாலஸ்தீனிய அதிகார சபை முன்வர வேண்டும் என்று சர்வதேச அளவில் எழும் எச்சரிக்கை மணிகளை முகமது அப்பாஸ் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும் கென்னத் ரோத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மார்ச் 31 அன்று, மேற்கு கரை, ராமல்லாஹ்வில், பாலஸ்தீனத்தின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ள முகமது முஸ்தபாவுடன் நிற்கும் குடியரசுத் தலைவர் அப்பாஸின் படம் காட்டப்படுகிறது.

 

இஸ்லாமிய ஜிகாத் அமைப்புகள் மற்றும் ஹமாஸ் உடன் தொடர்புடைய போராளிக் குழுக்கள் புதிய அமைச்சரவை தொடர்பான அறிவிப்பு வெளியாகிய சிறிது நேரத்திலேயே துல்க்ராமில் உள்ள பாலஸ்தீனிய அதிகார சபையின் தலைமையகத்தின் மீது தாக்குதல் தொடுத்தனர். பாலஸ்தீனிய அதிகார சபைக்கும், பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் அமைப்பிற்கும்(PIJ) இடையில் துல்க்கராம் மற்றும் மேற்கு கரையில் உள்ள இன்னப் பிற பகுதிகளிலும் ஒரு உள்நாட்டு போர் மூளும் நிலை உருவாகி வருவதாக மனித உரிமை செயல்பாட்டாளர் இகாம் ஹாசன் குறிப்பிட்டிருந்தார். சராயா அல்கொய்தா என்பது இஸ்லாமிய ஜிகாத் அமைப்பின் இராணுவப் பிரிவான அல்கொய்தாவின் உள்ளூர் பிரிவாகும். மார்ச் 30 அன்று அதன் தலைவரை சிறைபிடிப்பதற்காக பாலஸ்தீனிய அதிகார சபை எடுத்த முயற்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து இரு பிரிவுகளுக்குமிடையிலான பதட்டம் அதிகரித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளைச் செய்வதாகக் கூறிக்கொண்டு காசாவில் பாலஸ்தீனிய அதிகார சபையின் ஆட்சியை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை கொண்டு வருவதே யூத இனவாத ஜியோனிச இஸ்ரேல் அரசின் சதித் திட்டமாக இருக்கிறது என்று தி எலக்ட்ரானிக் இன்டிபதா என்ற வலைதளத்தின் இயக்குநரான அலி அபுனிமா காட்டமாக விமர்சித்துள்ளார். பாலஸ்தீனிய மக்கள் நலன்களை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் காவு கொடுக்கும் பாலஸ்தீனிய அதிகார சபையின் ஆட்சியை துரோக ஆட்சி என்றும் விமர்சித்துள்ளார்.

மீண்டெழுந்து வர முடியாதளவிற்கு பாலஸ்தீனிய அதிகார சபை சீர்குலைந்து போய்விட்டதாக ராமல்லாவில் வசித்து வரும் ராஜா காலிதி என்ற சீர்திருத்தவாத பொருளாதார அறிஞர் விமர்சித்துள்ளார். காசா மீதான கட்டுப்பாட்டை திரும்பப் பெறுவதற்கு பாலஸ்தீனிய அதிகார சபைக்கு ஊக்கமளிப்பதற்கு பதிலாக பாலஸ்தீனிய மக்கள் தாங்களே ஒரு புதிய தற்காலிக அரசாங்கத்தை உருவாக்குவதற்கு முயல வேண்டும் எனக் கூறியிருந்தார்.

ஹமாஸ் குழுவுடனோ அல்லது, ஃபதா கட்சியுடனோ பேச்சு வார்த்தை நடத்தும் அளவிற்கான திறமை புதிதாக பொறுப்பேற்றுள்ள முகமது முஸ்தபாவிடம் இருப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில் புதிய அமைச்சரவைக்கு மக்களின் அங்கீகாரமும், இன்னப்பிற அரசியல் பிரிவினரின் அங்கீகாரமும் கிடைக்குமா என்பது சந்தேகமே. பல்வேறு குறைகளுடனும், ஓட்டைகளுடனும் தயாரிக்கப்பட்டுள்ள சமூக பாதுகாப்பு மசோதா காரணமாகவும், நிலையற்ற ஆட்சியை தரமுடியாமல் தவிப்பதும், எங்கு பார்த்தாலும் அதிகார சபையைச் சேர்ந்த உறவினர்களுக்கு தனிச் சலுகைத் தரப்படுவதன் காரணமாக மக்கள் மத்தியில் நம்பிக்கையின்மை அதிகரித்து கொண்டு வருவதை காண முடிகிறது. பாலஸ்தீனிய அதிகார சபையின் ஊழியர்களில் 40 சதவீதம் பேர் இராணுவ மற்றும் இன்னப் பிற பாதுகாப்பு தொடர்பான பணிகளில்தான் ஈடுபட்டு வருகிறார்கள். பாதுகாப்பு சார்ந்த விசயங்களில் இஸ்ரேல் அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்கப்பட்டிருப்பதால் பாதுகாப்பு ஊழியர்களின் செயல்பாடுகள் ஆக்கிரமிப்பு வேலைகளைச் செய்து வரும் இஸ்ரேல் அரசின் துணை இராணுவப் படை போலவே பார்க்கப்பட்டு வருகிறது. பாலஸ்தீனிய விடுதலை மற்றும் சுதந்திரமான பாலஸ்தீனிய அரசை கட்டியமைத்தல் என்ற இரண்டு அடிப்படையான இலட்சியங்களைக்கூட வென்றெடுக்க முடியாமல் பாலஸ்தீனிய அதிகார சபை தோல்வியடைந்துள்ளது.

பாலஸ்தீனிய அதிகார சபையின் ஊழல் மலிந்த ஆட்சிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த நிசார் பனாத் என்பவர் சிறைக் கொட்டடியில் வைத்து ஜீன் 2021ல் படுகொலை செய்யப்பட்டதை பார்க்கும் போது அரசியலும், சட்ட ஆட்சியும் எந்தளவிற்கு ஊழல் படிந்துபோய் இருக்கிறதென்பது புரிய வரும். இஸ்ரேல் அரசுடன் ஒன்றிணைந்து செயல்படுவதால் ஏற்பட்ட இந்த ஒற்றைச் சம்பவமே பாலஸ்தீனிய அதிகார சபைக்கு எதிராக குரல் கொடுக்கும் எவரையும் ஒடுக்குவதற்கு எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை அம்மக்களுக்கு புரிய வைத்தது. பாலஸ்தீனிய மக்களை பொறுத்தவரை அப்பாஸின் ஆட்சி முடிவுக்கு வரப் போகிறது என்றே நினைக்கிறார்கள். அவருக்கு பிறகு என்னவெல்லாம் நடக்கும் என்பது பற்றியும்கூட பேசத் தொடங்கி விட்டார்கள்.

புதிய பாலஸ்தீனிய அரசாங்கம் நிலைப்பதும், நீடிப்பதும்கூட எந்தளவிற்கு பல்வேறு அரபு நாடுகளும், மற்ற உலக நாடுகளும் அதற்கு ஆதரவும், அங்கிகாரமும் தருகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவு செய்ய முடியும். அதாவது, பாலஸ்தீனியத்தில் எடுக்கப்படும் எந்தவொரு அரசியல் முடியும் அந்நிய சக்திகளின் அழுத்ததிற்கும், இன்னப்பிற அரசியல் சூழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து இரையாக்கபடும் என்பதே இதன் சாராம்சமாகும். எனவே, பாலஸ்தீனிய அரசாங்கம் தற்போதுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்த்தெறிந்து, நாட்டு நலனிற்கான இலட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்பதென்பது கடும் சவால்கள் நிறைந்ததாகவே இருக்கிறது.

இஸ்ரேல்/பாலஸ்தீனம் சார்ந்த அரசியல் மற்றும் உளவியல் ஆய்வுகளில் ஈடுபட்டு வரும் எழுத்தாளரான இமாத் மூசா பின்வருமாறு கூறுகிறார்: புதிய அரசாங்கத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும் அதிகாரம் இஸ்ரேலிடம்தான் உள்ளது. பாலஸ்தீன அரசாங்கம் “ஒத்துழைப்பு தருகிறதா” அல்லது “பகைமை பாராட்டுகிறதா” என்பதை முடிவு செய்வதும் இஸ்ரேல்தான். இஸ்ரேலின் இராணுவத் தேவைகளை புதிய பாலஸ்தீன அரசாங்கம் எந்தளவிற்கு முன்னுரிமை கொடுக்கிறது என்பதைப் பொறுத்தும், இஸ்ரேல் அரசின் பிரதிநிதியாக நின்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பகுதிகளை எந்தளவிற்கு பாதுகாக்கிறது என்பதைப் பொறுத்தே இவையனைத்தும் முடிவு செய்யப்படும்.

அரசாங்கத்தில் ஊழலும், ஆட்சியில் அதீத அந்நியத் தலையீடுகளும் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் பிரிவினர்களுக்கிடையிலான ஒத்துழைப்பின்மையும் நிலவும் சூழலில் புதிய பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் முகமது முஸ்தபாவிற்கான பாதை அவ்வளவு எளிதானதாக இருக்கப் போவதில்லை. எல்லோரும் எதிர்ப்பார்ப்பது போல தொழில்துறை சார்ந்த வல்லுநர்களால் நடத்தப்படும் ஆட்சியை(technocratic system) முஸ்தபாவால் உருவாக்க முடியுமா என்பதும், “பாலஸ்தீன பிரச்சனை” தொடர்பான சீர்த்திருத்தங்களை திறம்பட செயல்படுத்த முடியுமா என்பதும் உறுதிபடக் கூற முடியாது. ஐ.நா. சபையில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தீர்மானத்தை ஏப்ரல் மாதத்தில் பாலஸ்தீன அதிகாரச் சபை முன்வைக்கப் போவதாக தீர்மானித்துள்ளது. உள்நாட்டில் நிலவும் பிரச்சனைகளை சரிசெய்யாமல்,  இஸ்ரேல்-பாலஸ்தீனத்திற்கிடையிலான போர் தொடரும் வரை ஐ.நா. சபையில் முழு உறுப்புரிமை பெறுவதற்கான தடைகளும் தொடரவே செய்யும். உண்மையில் முஸ்தபா உறுதியான சீர்த்திருத்திங்களை மேற்கொள்வாரா அல்லது முன்பிருந்த அப்பாஸிற்கு மாற்றாக இறக்கிவிடப்பட்டுள்ள பலிக்கடாவாக மாறுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

புது தில்லியில் அமைந்துள்ள இந்திய-மேற்காசிய சிந்தனை குழாமின் ஆசிரியராக சுப்தா செளத்திரி இருந்து வருகிறார். மேற்காசிய நாடுகளின் அரசியலில் நிபுணத்துவம் பெற்றவர். மேலும், எகிப்து, மேற்குகரை, ஓமன் மற்றும் ஜோர்டனில் களப்பணியும் செய்துள்ளார்.

(சுப்தா சௌத்திரி)

- விஜயன் (தமிழில்)

மூலக்கட்டுரை : https://frontline.thehindu.com/world-affairs/palestinian-authority-declining-influence-trouble-gaza-war-west-bank-mahmoud-abbas-mohammad-mustafa/article68042334.ece