"ஆயிரம் ரூபாய்க்கு மூக்குத்திகூட வாங்க முடியல" - திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை மிரட்டிய பிரசன்னா

விகடன் இணையதளம்

"ஆயிரம் ரூபாய்க்கு மூக்குத்திகூட வாங்க முடியல" - திமுக கூட்டத்தில் கேள்வி எழுப்பிய மூதாட்டியை மிரட்டிய பிரசன்னா

கேள்விகேட்ட மூதாட்டியைப் பார்த்து, "உனக்கு வர ஆயிரம் ரூபாயை நாளைக்கு நிறுத்துனா என்னைய கேக்கக் கூடாது’’ என்று தி.மு.க நிர்வாகி தமிழன் பிரசன்னா வாதம் செய்த வீடியோ வைரலாகி, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வடக்கு ஒன்றிய தி.மு.க சார்பில் படவேடு கிராமத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் செய்தித்தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு, தி.மு.க அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கிப் பேசிக்கொண்டிருந்தார்.

``கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைப் பிச்சை காசுனு பா.ஜ.க சொல்கிறது’’ என்று தமிழன் பிரசன்னா பேசியபோது, மேடை முன்பு நின்றுகொண்டிருந்த மாலதி என்கிற மூதாட்டி, "சார்... ஆயிரம் ரூபாய்க்குச் சின்ன மூக்குத்தி கூட எடுத்து போட முடியல. இன்னைக்கு நகை என்ன விலை விக்குது?’’ என்று கேள்வி கேட்டார்.

இதனால், கோபப்பட்ட தமிழன் பிரசன்னா அதட்டும் வகையில் குரலை மேலும் உயர்த்தி, ``பேசாம உக்காரு ஆத்தா. ஆத்தாவுக்கு என்ன ஆசைனா, ஆயிரம் ரூபாய்க்குப் பத்து பவுன் நகை கொடுத்தால்தான் ஆயிரம் ரூபாயை மதிப்பேங்குது..’ என்று ஒருமையில் வசைபாடினார்.

அதற்கு அந்த மூதாட்டி, "சார் நான் அப்படி சொல்லல. ஏழைபட்டவங்க எப்படி நகை எடுத்துப்போடுவாங்க. அதுவும் பொண்ணு குழந்தை வச்சிருக்கிறவங்க என்ன செய்வாங்க?’’ என்றார்.

கடுப்பான தமிழன் பிரசன்னா, ``நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா, உன் பேர் என்ன? உனக்கு ஆயிரம் ரூபாய் வருதா? வருஷத்துக்குக் கூட்டுனா பன்னிரண்டாயிரம். என்ன வேலைக்குப் போறீங்க. மாசம் எவ்ளோ சம்பாதிக்கிறீங்க...’’ என்று கேட்டார்.

மூதாட்டி, ``எல்லா வேலைக்கும் போறேன். ஒரு நாளை 300 ரூபாய் சம்பாதிக்கிறேன். நீங்க கொடுக்குற ஆயிரம் ரூபாயில மாசம் ஒரு சிப்பம் அரிசி எடுத்துக்கிறேன்’’ என்றார்.

``ஒருநாளைக்கு 300 ரூபாய்னா, 30 நாளைக்கு ஒம்பதாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறீங்க. ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வாங்குறதுக்குச் சில நிபந்தனைகள் இருக்கு.

உங்களுக்கு வர ஆயிரம் ரூபாயை நாளைக்கு நிப்பாட்டுனா என்னைய கேக்கக் கூடாது? இவுங்களே ஒம்பதாயிரம் சம்பாதிக்கிறாங்கனா, இவுங்க வீட்டுக்காரர் எவ்ளோ சம்பாதிப்பாரு’’ என்று மிரட்டல் தொனியில் பேசினார் தமிழன் பிரசன்னா.

அதற்கு மூதாட்டி மாலதி, ``எனக்கு வீட்டுக்காரர் இல்லைங்க..’’ என்கிறார்.

தொடர்ந்து பேசிய தமிழன் பிரசன்னா, ``பா.ஜ.க-காரனோட எண்ணோட்டமும், இவுங்க எண்ணோட்டமும் ஒண்ணாத்தான் இருக்கு.

`ஆயிரம் ரூபாயை நிப்பாட்டு. அது பிச்சைக் காசு’னு பா.ஜ.க சொல்லுது. இவுங்க `உன் ஆயிரம் ரூபாயை வச்சி என்ன பண்ணிட முடியும்’னு கேக்குறாங்க.

இங்க பாரும்மா, உனக்கு ரேஷன் கார்டு இருக்கா? அதுக்கு அரிசி வாக்குறீங்களா? அரிசிக்குக் காசு வாங்குறாங்களா? இல்லைல. ஆயிரம் ரூபாயும் வருது. எல்லாமே உங்க வீடுதேடி வருது. ஆனா, ஆயிரம் ரூபாய் பத்தலைனு சொல்ற’’ என்று கொந்தளித்தார்.

வாதம் நீண்டதால் கூட்டத்தை நடத்த முடியாமல் தி.மு.க-வினர் திணறினர். கூடியிருந்த பொதுமக்களும் மூதாட்டியின் ஒவ்வொரு கேள்விக்கும் சத்தமாக சிரித்தனர்.

இதனால், மேடையில் இருந்த தி.மு.க நிர்வாகிகளுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. இதையடுத்து, கேள்வி கேட்ட மூதாட்டியை அங்கிருந்து வெளியே அனுப்பிவிட்டு கூட்டத்தை நடத்தி முடித்தனர். இந்த வாதம் தொடர்பான வீடியோ வெளியாகி, சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

(லோகேஸ்வரன்.கோ)

விகடன் இணையதளம்

https://www.vikatan.com/government-and-politics/kalaingnar-magalir-urimai-scheme-the-old-woman-baffled-dmk-meeting-with-questions

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு