தேர்தல்: பகுத்தறிவு தேவையில்லையா?
துரை. சண்முகம்
மன்னர்கள் காலத்து முடியாட்சியில் மன்னன் வைத்ததுதான் சட்டம். மக்களுக்கு, ஏன்? என்று கேட்க எந்த உரிமையும் இல்லை.
ஜனநாயக குடியரசு எனும் அரசின் வடிவம் குடிமக்களது வாழ்க்கையில் நிலப்பிரப்புத்துவ காலகட்டத்தை விட ஒரு படி முன்னேற்றகரமானது.
இங்கே பழையபடி யாரோ ஒரு மன்னன் அமர்ந்து கொண்டு ஆளவில்லை என்பதை மக்கள் உணரும்படி செய்ய வேண்டி உள்ளது. எனவே மக்களே ஓட்டு போட்டு தங்களுக்கான அரசை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்வது எனும் பாணியில் சட்டமன்ற பாராளுமன்ற முறை இங்கே ஏற்படுத்தப்பட்டுள்ளது.
உண்மையில் மக்கள் ஆள்வதற்கான கட்சிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைதான் இங்கே இருக்கிறது.
தங்களுக்கு தேவையான பொருத்தமான ஒரு அரசை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை இல்லை.
இந்தக் கட்சிகள் அனைத்தும் ரகசிய காப்பு பிரமாணம் எனும் பெயரில் முதலாளித்துவ அரசமைப்புக்கு எதிராக செல்ல மாட்டேன் எனும் ஏற்புடன்தான் அமைக்கப்படுகிறது.
அரசு என்பது ஏற்கனவே முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கானது என்ற மன்னர் ஆட்சியின் மாறு வேடத்தை இது தரித்திருக்கிறது.
அதுவும் இரட்டை ஆட்சி என்பது
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஒரு அதிகார வர்க்கம் ஆள்வதற்கான சட்டபூர்வ உரிமை பெற்று வீற்றிருக்கிறது.
இன்னொரு பக்கம் தேர்தல் சட்டமன்றம் பாராளுமன்றம் வாக்கு எனும் வடிவத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளால் நாடு ஆளப்படுவதாக நம்ப வைக்கப்படுகிறது. நடப்பது இரட்டை ஆட்சி.
உண்மையில் தேர்தலுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த வடிவம் சிறிது காலம் கலைக்கப்படும். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஒரு நிமிடம் கூட இந்தியாவின் அதிகார வர்க்கத்தை தன்னிச்சையாக கலைக்க முடியாது. வேறு நோக்கத்தில் மாற்றி அமைக்கவும் முடியாது.
மக்களுக்கான ஜனநாயக ஆட்சி மலர்ந்து விட்டது என்று சொன்னாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகளை விட, ஆளும் வர்க்கத்தால் அமைக்கப்பட்ட அதிகார வர்க்கத்தின் கைகளில் தான் உண்மையான ஆட்சி இருக்கிறது.
ஆக இங்கே ஜனநாயக ஆட்சி என்பது தோற்றத்திலேயே பிராடு! ஜனநாயகம் என்றால் மக்கள் தங்களை ஆளக்கூடிய அனைத்து அரசு அதிகார உறுப்புகளையும் தாங்களே தேர்ந்தெடுக்கும் ஜனநாயக உரிமையை பெற்று இருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நலன்களுக்கு உதவிகரமாக இல்லை அல்லது எதிராக இருக்கிறார்கள் என்றால் அவர்களை அந்த அதிகாரப் பதவியில் இருந்து திருப்பி அழைக்கும் உரிமை பெற்ற ஜனநாயகமும் தேர்தல் முறையும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
உலகில் இதுகாரும் உள்ள அரசமைப்பிலேயே முன்னேற்றகரமானது முதலாளித்துவ ஜனநாயகம் என்றால் இந்த முழுமையை அது பெற்றிருக்கிறதா? என்று கொஞ்சம் பகுத்தறிந்து பாருங்கள்.
நான் மேற்சொன்ன இந்த முறை கூட முதலாளித்துவ அரசமைப்புக்கு அதன் நலன்களுக்கு உட்பட்டு கூட அவர்களால் செய்ய இயலும்.
ஆனால் அதைக் கூட முதலாளித்துவ ஜனநாயகம் அனுமதிக்காதது ஏன்? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!
ஒரு காரணம், முதலாளித்துவ ஜனநாயகம் என்பது பெரும்பான்மை உழைக்கின்ற மக்களுக்கு ஜனநாயக உரிமைகளை மறுப்பது என்பது தான். அப்படிப்பட்ட ஜனநாயக உரிமைகளை வழங்குவது மூலம் மேலும் சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரான சிந்தனையும் சமூகப்போக்கும் அபாயகரமாக தலை தூக்கும் எனும் எச்சரிக்கையும்தான். முக்கியமாக அதன் தோற்றமே மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கக் கூடாது என்பதுதான்.
எனவே இங்கே தேர்தல் ஜனநாயகம் என்பதும் அதை மக்கள் விரும்புகிறார்கள் என்பதும் கடவுள் இருக்கா? இல்லையா? என்பது அல்ல பிரச்சனை நம்ப வேண்டும் என்பதே நடைமுறையாக ஆக்கப்பட்டு இருக்கிறது.
முதலில் சிந்தனையிலேயே ஆணி அடித்த மாதிரி இந்த ஜனநாயகத்திற்கு அப்பாற்பட்டு வேறு ஒன்று கிடையாது என்பது போன்ற மாயவாதம் மக்களிடம் நிலை நிறுத்தப்பட்டு இருக்கிறது. ஓட்டுக் கட்சிகளும் அதற்கான ஒட்டுக் குழுக்களாக உருவாகி இருக்கும் புரட்சி குழுக்களும் இதற்குப் புடம் போடுகின்றன.
வரலாற்றில் முன்பு மக்களை வதைத்த மன்னராட்சி நிலப்பிரப்புத்துவ கொடுங்கோன்மையை மாற்றவே முடியாது! என்று மக்கள் நம்பி இருந்தால் இன்றைக்கு இந்த முதலாளித்துவ ஜனநாயக முறைக்குள் வந்திருக்க முடியாது.
வதைக்கப்பட்டு கிடக்கும் மக்களிடம் நிலப்பிரபுத்துவத்தை எதிர்ப்பதை அரசியல்படுத்திக் கொண்ட முதலாளி வர்க்கம், தான் அந்த இடத்தில் வந்து உட்கார்ந்த பிறகு இனி இதுதான் ! இந்த விதியை இனி மாற்றவே முடியாது! இந்த சதுரங்கத்துக்குள் வெட்டுப்படாமல் தப்பித்துக் கொள்! என்று போதிக்கிறது.
ஜனநாயகம் அதற்கான தேர்தல் என்று வரும்போது நாம் மேற் சொன்ன மக்களுக்கு அனைத்து அதிகாரமும் கொண்ட உரிமை பெற்ற ஜனநாயகம் என்று யோசித்தால் என்ன தவறு? அதை தடுப்பது எது?
கம்யூனிச ஆசான் காரல் மார்க் அவர்கள் மிகச் சரியாக ," முதலாளித்துவம் கடந்த காலத்தைப் பொறுத்தவரை புரட்சிகரமானதாகவும், எதிர்காலத்தை பொருத்தவரை எதிர்ப்பு புரட்சிகரமானதாகவும் இருக்கிறது!" என்று விளக்கினார்.
எது புரட்சி? எது மாற்றம்? என்று குறைந்தபட்சம் பகுத்து அறியாமலேயே சுரண்டலுக்கான நிலைப்பெற்ற இந்த ஒடுக்கு முறை அதிகாரத்தை ஜனநாயகம் என்று சென்ட் அடிக்கும் பார்ட்டிகளிடம் கொஞ்சம் எச்சரிக்கையாக எதிர்க் கேள்வி கேட்டு சிந்தியுங்கள் மக்களே!
நமக்கான ஜனநாயக ஆட்சிக்காகத்தான் தேர்தல் என்று சொல்லும் போது, ஜனநாயகம் பற்றிய பகுத்தறிவு பூர்வமான அரசியலை வாதிப்பதும் பேசுவதும் நமது உரிமைகளிலும் ஒன்று.
ஒவ்வொரு ஐந்து ஆண்டு தேர்தல் ஆட்சி மாற்ற நிலவரங்களில் இருந்து
இதுவரை உழைத்து வாழ்கின்ற நம்முடைய வாழ்க்கையில் இது என்ன அடிப்படை மாற்றங்களை முன்னேற்றங்களை கொண்டு வந்துள்ளது! நமக்கான வாழ்வியல் ஜனநாயகத்தை கடந்த காலத்தைப் போலவே சுரண்டலுக்கு எதிராக போராடும் உரிமையை இவர்கள் வழங்கி இருக்கிறார்களா?
ஒட்டு மொத்தத்தில் எல்லா ஓட்டுக் கட்சிகளுமே குறிப்பாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சிகள் நமக்கான உரிமைகளை பறிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். ஒருவருக்கொருவர் முழக்கங்களால் நிறம் மாற்றிக் கொள்கிறார்கள்!
கூலிக்கு உழைப்பை விற்கும் ஒரு வேலைக்கு நாம் போனாலே நம்மை ஆயிரம் முறையில் நேர்காணல் எனும் முறையில் பரிசோதிக்கிறான் ஒரு முதலாளி. தன்னுடைய சுரண்டும் ஜனநாயகத்திற்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டும் என்று நிர்பந்தப்படுத்தி சேர்த்துக் கொள்கிறான்.
ஆனால் மிகப் பெரிய ஜனநாயகம் தேர்தல் என்ற பெயரில் நம்மை ஆள்வதற்கான உரிமை பெற்றவர்களாக ஓட்டு கேட்டு வருபவர்களிடம் நமக்கு நேர்காணல் செய்யும் உரிமையோ! கேள்வி கேட்பதற்கோ! இதையெல்லாம் ஏன் எங்களுக்கு கிடைக்கச் செய்யவில்லை? இனி ஆட்சிக்கு வந்தால் எங்களுக்கான எல்லா ஜனநாயக உரிமைகளும் உழைப்புக்கான நியாயமான பணி நிலைமைகளும் ஏற்படுத்தித் தருவதற்கு என்ன உத்தரவாதம்? அவ்வாறு செய்யாவிட்டால் தேர்ந்தெடுத்த உங்களை திருப்பி அழைக்கும் ஜனநாயகத்தை எங்களுக்கு தருவீர்களா?
என்று அடுத்த கட்டத்திற்கு சிந்தித்துப் பாருங்கள்!
தேர்தல் என்றால் யாருக்கு ஓட்டு போடுவது என்பதை பற்றி மட்டும்தான் சிந்திக்க வேண்டும் என்று கட்டாயம் இல்லை!
ஓட்டு போடும் நம்மைப் பற்றி சிந்திப்பதற்கான தருணமாக இந்த ஜனநாயகம் நமக்கு உதவுகிறதா? என்பதை உங்கள் சொந்த அறிவுக்கு சிந்தித்துப் பாருங்கள்!
துரை. சண்முகம்
https://www.facebook.com/share/1CcKD75mbt/
Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு