சாதி அடையாள அரசியலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது வரமா? சாபமா?

திருப்பூர் குணா

சாதி அடையாள அரசியலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது வரமா? சாபமா?

“வடகலை – தென்கலை என்று தங்களது அடையாளங்களை முன்நிறுத்தியதுதான் அடையாள அரசியல்; மாறாக, காலாகாலமாக அடையாளம் மறுக்கப்பட்டவர்கள் இப்போது தங்களது அடையாளத்தை முன்வைத்துக் கொண்டிருப்பது அடையாள அரசியல் அல்ல” என்று அடையாள அரசியலை உறுதியாக ஆதரித்து அந்த தலைமை தோழர் பேசியிருக்கிறார். கூடவே, “ஒடுக்கப்பட்டவர்களின் அடையாள அரசியலை மறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே இல்லை” என்று தீர்ப்பும் எழுதியிருக்கிறார்.

ஒரு முக்கியமான தலைவரின் இந்த கருத்து, அதுவும் இது கட்சியின் பத்திரிகையில் வெளிவந்தும் கூட, இப்போதைக்கு கண்டுகொள்ளாத மாதிரி ஒளித்துவைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கட்சிக்குள்ளும் வெளியிலும் இருக்கிற அடையாள அரசியலின் ஆதரவாளர்கள் இதை தங்களுக்கான ஆயுதமாக இனிமேல் எப்போதும் பயன்படுத்துவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம். எனவே முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்னையை நாம் வெளிப்படையாக பேசியே ஆகவேண்டும்.

முதலில், “காலாகாலமாக அடையாளம் மறுக்கப்பட்டவர்கள்..” என்பதை எடுத்துக்கொள்வோம்! அது உண்மைதான், ஆனால் அது இந்தியாவுக்கோ அல்லது சாதிய ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்களுக்கோ மட்டுமேயான சிறப்பு விதி அல்ல. வர்க்க சமுதாயத்தின் உலகுதழுவிய ஒடுக்குமுறையின் விதியே இதுதான்.

சனநாயகத்தின் வாசல் திறக்கிற முதலாளித்துவ காலகட்டத்தின் முந்தைய காலங்களில் (ஆண்டான் அடிமை மற்றும் நிலஉடமை காலங்களில்) ஒடுக்கப்பட்ட மக்களின் குரலோ, அடையாளங்களோ அங்கீகரிக்கப் பட்டதேயில்லை; படுவதில்லை என்பதுதான் உலகுதழுவிய வரலாறு. அதுவரைக்குமான அடையாளங்களும் வரலாறுகளும் ஆண்டைகளின் – ஆளும்வர்க்கங்களின் அடையாளங்களும் வரலாறுகளுமாக இருப்பதால்தான் அதனை மறுத்த மார்க்சியம், “ஏடறிந்த வரலாறுகள் அனைத்தும் வர்க்கப்போராட்டத்தின் – உழைக்கும் மக்களின் வரலாறேயாகும்” என்று உரத்துக் கூறுகிறது. 

அது அப்படித்தான் இருக்கும் என்பதும் முதலாளித்துவம்தான் தனது தேவையிலிருந்து தவிர்க்க முடியாமல் அனைத்து தரப்பு மக்களையும் அரசியல் அரங்கத்திற்கு கொண்டுவருகிறது என்பதும் வர்க்க சமுதாயத்தின் உண்மை. இங்கேயும் அதாவது இந்தியாவிலும் – தமிழ்நாட்டிலும் முதலாளித்துவத்தின் தேவையிலிருந்துதான் அனைத்து மக்களும் அரசியல் அரங்கத்திற்குள் நுழையும் போக்கு தொடங்கியது. தொடங்கியது முதலே, தலித்துகள் உட்பட அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும் ஒலிக்கத்தொடங்கின. அப்படித்தான் அயோத்திதாசப் பண்டிதர்களும் பூலேக்களும் பிறப்பெடுத்தார்கள். மட்டுமல்ல பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் அரசியல் நுழைவும் கூட இதே சமகாலத்தில்தான் தொடங்கியது. அதற்கு முன்பு இருந்ததெல்லாம் ஆண்டைகளின், பண்ணையார்களின், ஆளும்வர்க்கங்களின் அடையாளங்களேயாகும்.

இதில் பார்ப்பனர்களின் வடகலை – தென்கலை போன்ற அடையாளங்கள் காலாகாலமாக நீடிக்கிறதென்பது உண்மைதான். ஆனால் அது பார்ப்பனர்கள் வெறும் சாதியாக இருந்துகொண்டு தங்களது அடையாளத்தை வெளிபடுத்தவில்லை; வரலாறு நெடுகிலும் ஆளும்வர்க்கத்தின் ஒரு அங்கமாக இருந்துகொண்டு தங்களது அடையாளத்தை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஆக, ஆளும்வர்க்கங்களின் – ஆளும்வர்க்கத்தின் அங்கமாக இருப்பதால் பார்ப்பனர்களின் அடையாளங்கள் காலாகாலமாக நீடித்திருப்பதும் ஆளும்வர்க்கமாக இல்லாத அனைத்து மக்களின் அடையாளங்களும் மறுக்கப்பட்டிருந்தது என்பதையும் பேசாமல், தலித்துகளின் அடையாளம் மட்டுமே மறுக்கப்பட்டிருந்தது போல் பேசுவதுதான் தலித் அடையாள அரசியல்.

“தலித்துகள் மட்டும்தான் காலாகாலமாக புறக்கணிக்கப்படுகிறார்கள்” என்று உண்மைக்கு மாறாக பேசுவது அறியாமை அல்ல. அது ஒட்டுமொத்த தலித் மக்களின் – குறிப்பாக உழைக்கும் தலித்துகளின் குரலும் அல்ல. அது இந்த ஆளும்வர்க்கத்திடம்  “இரக்கம் தேடி” சலுகைகளுக்காக பேரம் பேசுகிற தலித் மத்தியத்தர வர்க்கத்தின் குரல்.

இந்த இரக்கம் தேடுகிற குரல் தர்மகர்த்தாக்களை (வர்க்கப் போராளிகளை அல்ல) அசைக்கிறது; நிலைகுலைய வைக்கிறது; ஏதோ பெரிய தவறிழைத்து விட்டோம் என்று குற்ற மனப்பான்மை அடைய வைக்கிறது. தன்னளவில் குற்ற மனபான்மைக்கு ஆளாகுகிற தர்மகர்த்தாக்கள், ‘தலித்துகள் விசயத்தில் இந்த உலகமே தவறிழைத்துவிட்டதாக’ கருதி, தான் மட்டுமே குற்றவாளி அல்ல என்று நிறைவடைகிறார்கள்.

நமது தலைவரும் கூட இந்த தர்மகத்தாக்களின் குற்ற மனப்பான்மைக்கு உள்ளாகித்தான், “ஒடுக்கப்பட்டவர்களின் அடையாள அரசியலை மறுப்பவர்கள் கம்யூனிஸ்டுகளே இல்லை” என்று தீர்ப்பு எழுதுகிறார். தான் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை பொறுப்பிலிருந்தும் கூட, சாதிப் பிரச்னையை ஆதியிலிருந்தே கம்யூனிஸ்டுகள் கவனமுடன் கையாண்டுவரும் வரலாற்றை புறம் தள்ளுகிறார். அதனால் அவருக்கு சிங்காரவேலர் முதல் சீனிவாசராவ் வரைக்குமான கம்யூனிஸ்டுகளின் வரலாற்றுப் பாத்திரத்தை அங்கீகரிக்க முடியவில்லை. இந்த வரலாற்று நாயகர்களின் வழிகாட்டுதலை தொகுத்துக்கொண்டு சாதிப் பிரச்சனையில் கம்யூனிஸ்டுகள் முன்னேறிக் கொண்டிருந்ததையும் அது அடையாள அரசியலால் பின்னுக்குத் தள்ளப்பட்டதையும் பிரித்தறிய முடியவில்லை.

இதுகுறித்து தேவைப்பட்டால் பின்னர் விரிவாகப் பார்க்கலாம். ஆனால் சாதி அடையாள அரசியலுக்கும் கம்யூனிஸ்டுகளின் சாதி அரசியலுக்குமான வேறுபாடு என்ன என்பதை மட்டும் சுருக்கமாகப் பார்த்துவிடுவோம்.

சாதி அடையாள அரசியலானது, தங்களதுப் பிரச்னையை தங்களைத் தவிர வேறு யாராலும் உணர்ந்துகொள்ள முடியாது; அதனால் தங்கள் பிரச்சனைக்கு வேறு யாரும் தீர்வுகாண முடியாது என்று அறுதியிட்டு கூறி மற்றவர்களை விலக்கி வைத்து, வர்க்கங்களின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கிறது. அதனால், அது இயல்பிலேயே நிலவுகிற அதிகாரத்தை வீழ்த்துவதற்கு (வீழ்த்துவதற்கு வர்க்கங்களின் ஐக்கியம் முதன்மையானது) எதிராகிவிடுகிறது. சாதி பலவீனமடைந்து, மறைந்து, ஒழிந்துபோவதற்கு வர்க்கங்களாக ஒன்றுகலத்தல் என்கிற வரலாற்று வழிமுறையை இது மறுப்பதால் சாதிய இருத்தலை அது பாதுகாக்கிறது. சாதிய இருத்தலைப் பாதுகாத்துக்கொள்வதன் மூலம் சலுகைகளை அடைவதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறது.

சலுகைகளை மட்டுமே குறிக்கோளாகக் கொள்வதன் வர்க்கப் பின்னணியை புரிந்துகொள்வது ஒன்றும் கடினமில்லையே!

கம்யூனிஸ்டுகளின் சாதி அரசியல் என்பது, சாதியை ஒழிப்பதற்கு அரசியல் அதிகாரம் முன்நிபந்தனை என்கிறது. அரசியல் அதிகாரத்தை அடைவதற்கு வர்க்க ஒற்றுமை முன்நிபந்தனை என்கிறது. வர்க்க ஒடுக்குமுறைகள் போலவே பெண்கள் மீதான ஒடுக்குமுறையையும் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே தீர்க்க முடியும்; அதேமாதிரித்தான் தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்குமுறைகளையும் அரசியல் அதிகாரத்தால் மட்டுமே தீர்க்க முடியும் என்று அறுதியிட்டுக் கூறுகிறது. தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு அரசியல் அதிகாரத்திற்கான முன்னணி அமைப்புகள் இருப்பதுபோலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் முன்னணி அமைப்பு தவிர்க்க முடியாததென்று அங்கீகரித்திருக்கிறது.

இப்போது நமது தலைவர் சொல்லட்டும், சாதி ஒழிப்பிற்கான அறிவியல் வழிமுறையை உடைய கம்யூனிஸ்டுகளை, சாதி அடையாள அரசியலை ஏற்றுக்கொள்ளச் சொல்வது வரமா? சாபமா?

எல்லாருக்கும் பொதுவாக ஒன்றை வலியுறுத்துவோம். நீங்கள் அடையாள அரசியலின் அபாயத்தை உணர வேண்டுமானால், 1950-களின் தொடக்கத்தில் இந்தியாவிற்கு வந்த அமெரிக்காவின் போர்ட் பவுண்டேசன், “சீனாவை இழந்துவிட்டோம்! இந்தியாவை இழக்க மாட்டோம்!” என்ற அரசியலையும் அதன் தொடர்செயல்பாட்டையும் அறிவதற்கு கொஞ்சமாவது முயற்சிக்க வேண்டும்.

- திருப்பூர் குணா

கட்டுரையாளரின் வலைதள பக்கத்திற்கு செல்ல கீழேயுள்ள இணைப்பை சொடுக்கவும்

https://ponnulagam.com/saathi-adaiyaala-arasiyalai-etrukkollachcholvathu/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. விவாதத்திற்காக இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு