30 வருடத்திற்குப் பிறகு வர்த்தகப் பற்றாக்குறையில் சிக்கும் ஜெர்மனி
இரசியாவுடனான மோதலில் ஐரோப்பிய நாடுகள், தாங்கள் வீசிய கத்தியே தங்களை பதம் பார்கிறது!
ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனி, கடந்த முப்பது வருடங்களில் (1991க்குப் பிறகு) முதல் முறையாக மே 2022ல் வர்த்தகப் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. ஜெர்மனி நாட்டின் பொருளாதாரம் முப்பது வருடங்களாக இறக்குமதிகளை விட ஏற்றுமதி மதிப்பு அதிகம் பெற்றிருந்த நாடாகும்.
ஆனால் மே மாதம் ஏற்றுமதி 0.5% வீழ்ச்சியடைந்து, இறக்குமதி 2.7% அதிகரித்துள்ளது. அதனால் மே மாதம் 1பில்லியன் டாலர் வர்த்தகப் பற்றாக்குறையை பதிவுசெய்துள்ளது ஜெர்மனி. அதே சமயம் அதன் ஏற்றுமதி கடந்த வருட மே மாதத்தை ஒப்பிடும்போது 11.7% ஏற்றம் கண்டுள்ளதாகவும், கடந்த வருட இறக்குமதியை ஒப்பிடும்போது 27.8% உயர்ந்துள்ளதையும் கவணிக்க வேண்டும்.
ஜெர்மனியானது இரசிய சந்தையில் கணிசமான பங்கு ஆதிக்கம் செலுத்தி வந்தது. கடந்த பிப்பரவரி மாதம் இரசியா, உக்ரைன் மீது ஆக்கிரமிப்புப் போரை தொடுத்தது. இதன் காரணமாக இரசியா மீது அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற நேட்டோ நாடுகளும் பல்வேறு தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதனையொட்டி இரசியாவிற்கான ஜெர்மன் ஏற்றுமதி 50% வீழ்ச்சி கண்டுள்ளது. இதனால் இரசியாவும் தம்மீது போடப்பட்ட பல்வேறு தடைகளுக்கு பதிலடியாக, கட்டுபாடுகளையும் தடைகளையும் அமல்படுத்திய நாடுகளுக்கு எதிராக பல்வேறு கட்டுபாடுகளை அமல்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்ற எரிசக்தி பொருட்கள் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மூன்று மடங்கு அதிகரித்து வரலாறு காணாத அளவுக்கு எரிசக்தி பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் ஜெர்மனியின் இறக்குமதியில் எரிசக்தி மற்றும் உணவு இறக்குமதியின் பங்கு கணிசமான அளவுக்கு அதிகரித்துள்ளது. இதுவே வர்த்தகப் பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இரசிய பகாசுர நிறுவனமான காஸ்ப்ராம், இயற்கை எரிவாய்வை ”நார்ட் ஸ்ட்ரீம் - 1” வழியாக ஜெர்மனிக்கு அனுப்பி வந்தது. ஆனால் ஜூன் மாத இறுதியில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இயற்கை எரிவாய்வு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இரசிய நிறுவனமான காஸ்ப்ராம் கூறியுள்ளது. அதனால் 60% வரை எரிவாய்வு வரப்பு குறைந்துள்ளது. இரசியா தங்களை பணியவைக்கவும் மிரட்டவும் எரிசக்தியை ஒரு கருவியாக பயன்படுத்துவதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளதை கவணிக்க வேண்டும். அது மட்டுமில்லாமல் இந்த மாதம் (ஜூலை) ”ஆண்டு பராமரிப்பு” (Maintenance) காரணமாக எரிவாய்வு அனுப்புவதை இரண்டு வாரத்திற்கு மொத்தமாக நிறுத்தப் போவதாக இரசிய நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிகழ்வுகள் அணைத்தும், ஏற்கெனவே ஆட்டம் கண்டிருக்கும் ஜெர்மனி பொருளாதாரத்தை மேலும் கடுமையாக பாதிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வீழ்ச்சி
”நடப்பு ஆண்டு கணக்குப் படி மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1% ஆகக் குறையும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இது கடந்த ஆண்டு 7.6% ஆகவும், 2004 க்குப் பிறகு ஏற்பட்டுள்ள மிகக் குறைவான வளர்ச்சியாகவும் இருக்கபோகிறது” என்று UBS முதலீட்டு வங்கியின் மூத்த ஐரோப்பிய பொருளாதார நிபுணர் பெலிக்ஸ் ஹூஃப்னர் கூறியுள்ளார். அடுத்த ஒரு வருடத்திற்குள் ஐரோப்பிய நாடுகள் மந்த நிலையில் சிக்கப்போகிறது என்று மேலும் மேலும் பல பொருளாதார நிபுணர்கள் பேசி வரும் சூழலில் இந்த தரவுகள் அனைத்தும் அக்கூற்றுக்கு வளு சேர்பதாக அமைந்துள்ளது. எரிசக்தி பொருள்களின் விலையேற்றம், உணவு பொருட்களின் விலையேற்றம், கச்சாப் பொருள் மற்றும் உற்பத்தி சங்கிலியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பிளவுகளின் காரணமாக, இந்த மந்த நிலை உலகம் முழுவதும் பரவலாக மக்களை கடுமையாக பாதிக்கவுள்ளதாக பல்வேறு பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- செந்தளம் செய்திப் பிரிவு