காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

மெட்ராஸ் ரிவியூ

காடுகளை சுரண்டும் வனப்பாதுகாப்பு சட்டத் திருத்தம் 2023!

பாரதிய ஜனதா அரசு கடந்த பாராளுமன்றக் கூட்டத்தொடரில் பல சட்ட மசோதாக்களை கொண்டுவந்தது. அதில் ஒன்று 1980-ம் ஆண்டு இயற்றப்பட்ட வனப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவரும் மசோதா. இதனை மார்ச் 29-ம் தேதி அறிமுகப்படுத்தியது. 

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு

காடு மற்றும் காட்டு வளங்களை பாதிக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன. இம்மசோதாவிற்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அறிமுகம் செய்யப்பட்ட அன்றே நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்காக மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கூட்டுக்குழுவின் தலைவர் ராஜேந்திர அகர்வால் எம்.பி இம்மசோதா மீது கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மே 18-க்குள் தங்கள் கருத்துகளை ஆங்கிலம் அல்லது ஹிந்தி மொழியில் அனுப்பிவைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்கள்.

வனப்பாதுகாப்புச் சட்டம் 1980

காடு என்கிற வரையறைக்குள் வருகின்ற பகுதிகள் அனைத்திலும் காடு சாராத திட்டங்கள் அதாவது நெடுஞ்சாலைகள் அமைப்பது, சுரங்கங்கள் அமைப்பது, அணைகள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது தேவைக்கு அதிகமாகவோ அல்லது தேவையில்லாமலோ காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் வனப் பாதுகாப்புச் சட்டம் 1980.

முடிக்கப்பட்ட கருத்துக்கேட்பு

பல்வேறு மொழி பேசக்கூடிய நாட்டில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தான் கருத்த சொல்ல வேண்டும் என்பதும் சட்ட மசோதாவை மக்களுக்கு அவர்களின் தாய் மொழியில் படிக்கும் வாய்ப்பைக் கூட கொடுக்காமல் கருத்து கேட்பை நடத்தி முடித்திருக்கிறது பாராளுமன்றக் கூட்டுக்குழு. 

ஆரவல்லி மலை பாதுகாப்பு இயக்கத்தின் எதிர்ப்பு

ஆரவல்லி மலைத் தொடர்

இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் இருந்து பல சிவில் சமூக அமைப்புகளும் அரசியல் கட்சிகளும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இந்த மசோதா குறித்து ஹரியானா மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மலை பாதுகாப்பு இயக்கம், இந்த சட்டம் வந்தால் 50,000 ஏக்கர் ஆரவல்லி மலைத்தொடர் ரியல் எஸ்டேட்டிற்கும், வணிகமயமாக்கலுக்கும் பலி கொடுக்கப்படும் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும்  இந்த சட்டத்தில் உள்ள பிரிவு 1 மற்றும் துணைப்பிரிவு 1 ஒட்டுமொத்தமாக நாட்டில் உள்ள ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காடுகளை இல்லாது செய்துவிடும் என்றும், காட்டிற்கு சொந்தமில்லாதவர்கள் காடுகளை ஆக்கிரமித்துக் கொள்வார்கள் என்றும் குற்றம் சாட்டியுள்ளது.

திரிபுரா ராஜ கனமுக்தி பரிஷத்

திரிபுராவைச் சேர்ந்த திரிபுரா ராஜ கனமுக்தி பரிஷத் என்ற அமைப்பு, ”இந்த சட்டத்திருத்தம்  2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வன உரிமைச் சட்டத்தை முழுமையாக நீர்த்துப் போகச்செய்யும். வன உரிமைச் சட்டமானது பழங்குடிகளின் வாழ்வாதாரத்திற்கு மிக முக்கியமானது” என்று கூறியுள்ளது.

பூவுலகின் நண்பர்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பு

தமிழ்நாட்டில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு பல கடசிகளையும் இயக்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டாக இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”இத்தனை ஆண்டுகாலம் காடுகளைப் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட அத்தனை சட்டங்களையும், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மசோதாவில் இடம்பெற்றுள்ள திருத்தங்களை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இந்த மசோதாவின் முதல் திருத்தமே ஹிந்தி மொழியைத் திணிக்கிறது. Forest(Conservation)Act 1980 என்று அழைக்கப்பட்டு வந்த இச்சட்டம் இனிமேல் “Van (Sanrakshan Evam Samvardhan) Adhiniyam” என அழைக்கப்படும் என மசோதா கூறுகிறது.

மேலும் விபரங்களுக்கு: வனப் பாதுகாப்பு திருத்த மசோதா 2023 மீதான பூவுலகின் நண்பர்கள் கருத்து

அதாவது காடு (பாதுகாப்பு(protection) மற்றும் மேம்பாடு(promotion)) சட்டம் என்று இதற்குப் பொருள். Conservation என்பதைப் பேணுதல் அல்லது ஓம்புதல் எனப் பொருள் கொள்ளலாம். Conservation என்பதை நீக்கிவிட்டு Promotion என்பதை சேர்த்ததே இச்சட்டத்திருத்தம் வணிக நோக்கில் காடுகளைத் துண்டாடுவதற்குத்தான் என்பது தெரிகிறது. ஹிந்தி மொழி பேசாத பல மாநிலங்களை நேரடியாக பாதிக்கப்போகும் ஒரு சட்டத்திற்கு ஹிந்தி மொழியில் பெயர் வைப்பது அம்மாநிலங்களையும், மாநிலத்தில் பேசப்படும் மொழிகளையும், அம்மக்களையும் அவமானப்படுத்துவதாகும். இது கூட்டாட்சித் தத்துவத்திற்கே எதிரானதாகும்.

இப்புதிய மசோதா ஏற்கேனவே இச்சட்டத்தின்கீழ் கட்டுப்படுத்தப்பட்ட பல நடவடிக்கைகளுக்கு விலக்களித்துள்ளது. அவை பின்வருமாறு;

தேச முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் நாட்டின் பாதுகாப்பு மற்றும் ராணுவம் சார்ந்த திட்டங்களுக்கு (Strategic and security projects of national importance) வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களிக்கிறது இம்மசோதா.

காடுகளில் அமைந்துள்ள ரயில்பாதைகள், சாலைகள் ஆகியவற்றைச் சுற்றியுள்ள 0.10 ஹெக்டேருக்கு மிகாத பகுதிகளில் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் செல்லாது எனவும் மசோதா கூறுகிறது. 

தேனி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள நியூட்ரினோ ஆய்வகத்தை தேச முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக அறிவித்துத்தான் மாநில அரசால் சுற்றுச்சூழல் அனுமதி மறுக்கப்பட்ட பின்னரும்கூட ஒன்றிய அரசால் அதற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இப்படியான திட்டங்களை தேச முக்கியத்துவம் என்கிற பெயரில் செயல்படுத்துவது காடுகளை துண்டாக்கும் முயற்சியாகும். இதனால் காட்டுயிர்களின் வாழிடம் சுருங்குவதால் அவை காட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும்.

இந்தியாவில் அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் காடுகளைத் தவிர தனியாருக்குச் சொந்தமான காடுகளும் உள்ளன. இத்தகைய பகுதிகளில் காடுகள் பாதுகாப்பு சாராத திட்டங்களை செயல்படுத்த முடியாது. இந்த வனப்பகுதிகளில் பயிர் செய்வதற்கும் வேறு பல கட்டுமானங்கள் மேற்கொள்ளவும் வனப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விலக்கு அளிக்க இம்மசோதா முயல்கிறது. தமிழ்நாட்டில் உள்ள காப்புக் காடுகள் மற்றும் புலிகள், யானைகள் போன்ற சரணாலயங்களில் பல ஹெக்டேர் பரப்பளவில் தனியாருக்குச் சொந்தமான காடுகள் உள்ளன. இவற்றை வனப் பாதுகாப்புச் சட்டத்திலிருந்து விலக்கினால் வணிக நோக்கில் அந்த இடங்களில் பணப்பயிர்கள் விதைக்கப்பட்டு மரங்கள் வெட்டப்படும். ஒரு காப்புக்காட்டிற்கு நடுவிலோ அதை ஒட்டியோ உள்ள தனியார் காட்டில் இப்படி மரங்கள் வெட்டப்பட்டால் அங்கு பெரியளவில் மண் அரிப்பு ஏற்படும். மழைக்காலங்களில் இந்த மண் அரிப்பினால் காப்புக் காடுகளின் சூழல்தன்மை பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.

இந்தியாவில் சில வனப்பகுதி நிலங்கள் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை ஆகிய இரண்டு துறைகளிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே 12.12.1996 க்கு முன்பாக காடுகள் சாராத பிற திட்டங்களுக்காக நிலப்பயன்பாடு மாற்றம் செய்யப்பட்ட பகுதிகளை இச்சட்டம் கட்டுப்படுத்தாது எனவும் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமும் எந்த வரையறையுமில்லாமல் வணிக நோக்கில் அந்த நிலங்களின் நிலப்பயன்பாடு மாற்றப்படும் அபாயம் உள்ளது.

Extended Reach Drilling எனும் தொழில்நுட்பத்திற்கான அனுமதி குறித்தும் மறைமுகமாக இச்சட்ட மசோதா குறிப்பிடுகிறது.  காடுகளுக்கு அடியில் பல ஆயிரம் அடி ஆழத்தில் இருக்கும் இயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளங்களை காடு என்பதற்கான சட்ட வரையறைக்குள் வராத ஒரு இடத்திலிருந்து துளையிட்டுச் சென்று அவ்வளங்களை எடுப்பதுதான் இந்த தொழில்நுட்பத்தின் அடிப்படை. இந்த தொழில்நுட்பத்தால் காட்டின் இயற்கையான இயங்கியல் தன்மை முற்றிலுமாக பாதிக்கப்படும். மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டிவிட்டு மேற்பரப்பில் மரங்களை நட்டு வைப்பதை நாம் பார்க்கிறோம். அதை நம்மால் காடு என ஒப்புக்கொள்ள முடியுமா? அதைப்போலத்தான் Extended Reach Drilling என்கிற தொழில்நுட்பத்தையும் நாம் நிராகரிக்க வேண்டும். காடு என்பது சில மரங்களும், அது ஊன்றியிருக்கும் மண்பரப்பும், அதற்கடியிலிருக்கும் வேரும் மட்டும் கிடையாது. பல ஆண்டு காலமாக நிலத்திற்கடியில் பல அடி ஆழத்தில் சேர்ந்த வளங்களை வெளியிலிருந்து உறிஞ்சி எடுத்து விட்டால் மேற்பரப்பு காட்டில் எதுவும் மிஞ்சாது.

இந்த நடவடிக்கையை அனுமதிப்பதற்காக காட்டில் உள்ள பல்வேறு வகையான கனிமங்கள், வளங்களை ஆய்வு செய்வதற்கும், களமுன் அளக்கை செய்வது, நில அதிர்வுச்சோதனை செய்வது போன்ற செயல்பாடுகளை காடுகள் பாதுகாப்பு சார்ந்த திட்டமாக அரசால் அறிவிக்க முடியும் என இம்மசோதா கூறுகிறது. இது இந்திய அரசே அறிவித்த தேசிய காடுகள் கொள்கை 1988க்கு முற்றிலும் எதிரானதாகும்.

இச்சட்ட மசோதா மூலம் மாநில அரசின்கீழ் இருந்த அதிகாரங்கள் ஒன்றிய அரசுக்கு மாறுகின்றன. இதன்மூலம் வன உரிமைச் சட்டம்-2006, பஞ்சாயத்து ராஜ் சட்டம், கிராம சபைக்கு வழங்கியுள்ள உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. இனி ஒன்றிய அரசு நினைத்தால் கிராம சபையின் ஒப்புதல் இல்லாமலேயே எந்தவொரு திட்டத்திற்கும் அனுமதி வழங்க முடியும். வன உரிமைச் சட்டம் 2006-ன் படி காடு மக்களுக்குச் சொந்தம். அவர்களின் அனுபவ நிலங்களுக்கும் குடியிருப்புக்கும், சமூகத்தின் பயன்பாட்டில் உள்ள நிலங்களுக்கும் அவர்களுக்கு உரிமை வழங்க வேண்டும். இப்போது கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்களின் மூலம் வன உரிமைச் சட்டம் நீர்த்துப்போயுள்ளது.

அடுத்ததாக வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றை காடு பாதுகாப்பு சார்ந்த திட்டங்களாகக் கருத ஒன்றிய அரசு முடிவு செய்கிறது. இதுவும் தனியார் நிறுவனங்களின் வணிக வெறிக்காக காடுகளை இரையாக்கும் நடவடிக்கைதான். இந்தியாவின் முதன்மை பணக்காரரான அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவில் 2019 முதல் சில தனியார் வன உயிரியல் பூங்காக்களை அமைக்கத் தொடங்கியுள்ளதும், 2020ஆம் ஆண்டு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையானது நாட்டிலுள்ள 160 வன உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதற்கு தனியாருடன் சேர்ந்து ஒப்பந்தமிட முடிவு செய்ததையும் நாம் இங்கு தொடர்புபடுத்த வேண்டியுள்ளது. எனவே இச்சட்டத்திருத்தம் மூலம் காடுகளின் இயல்பை பாதிக்கக்கூடிய வன உயிரியல் பூங்காக்கள், வன உலாக்கள் போன்றவற்றைத் தனியாருக்குத் தாரை வார்க்க அரசு திட்டமிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையானது 2021 தொடங்கி அடுத்த பத்தாண்டுகளை கால நிலை மாற்றத்தின் தாக்கத்திலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள மேற்கொள்ள வேண்டிய அத்தனை மாற்றங்களையும் செய்வதற்கான பத்தாண்டாக அறிவித்துள்ளது. மனிதப் பேராசை நடவடிக்கைகளால் காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டு வருகிறது. என்ன விலை கொடுத்தாவது அதைத் தடுக்க வேண்டிய கட்டாயத்தில் தற்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அதற்கான நடவடிக்கைகளை விட்டு காடழிப்பிற்கு வித்திடும் வகையில் சட்டத் திருத்தங்களை கொண்டு வர ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது கண்டனத்திற்குரியது.” இவ்வாறு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

மேலும், “வனப் பாதுகாப்புச் சட்டம் 1980-ல் திருத்தம் கொண்டு வருவது காட்டிற்குள் மற்றும் காட்டுப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடிகள் மற்றும் இதர பிரிவு மக்களை பெரிதும் பாதிக்கக்கூடியதும் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் தாக்கத்தையும் ஏற்படுத்தக் கூடியதாகும். அப்படியானதொரு முக்கியமான சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகையில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள திருத்தங்களை அனைத்து மொழி பேசும் மக்களும் அவர்களது மொழியிலேயே அறிந்து கொள்வதற்கு உரிமை கொண்டவர்களாவார்கள். ஆகவே, இம்மசோதாவை  அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளிலும் வெளியிட்டு, கருத்துகள் அனுப்ப கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

- மெட்ராஸ் ரிவியூ

madrasreview.com /environment/forest-protection-act-amendment-2023/

Disclaimer: இந்த பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு