காவிரியை காவு தந்து மேக்கேதாட்டில் மெத்தனம் காட்டிய திமுக!

அறம் இணைய இதழ்

காவிரியை காவு தந்து மேக்கேதாட்டில் மெத்தனம் காட்டிய திமுக!

1
முதல்வர், எதிர்கட்சித் தலைவர் இருவருக்குமே மேக்கேதாட்டு பிரச்சினையில் சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகிறது!

எதிர்கட்சித் தலைவர் நல்ல ஆலோசனை தந்தால் ஏற்பது நல்லதே! 

அதில் மாற்றுக் கருத்தில்லை!

ஆனால், முதல்வர், எதிர்கட்சித் தலைவர் இருவருக்குமே மேக்கேதாட்டு பிரச்சினையில் சில அடிப்படை புரிதல்கள் தேவைப்படுகிறது!

‘’மேக்கேதாட்டுவிற்காக தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’’ என்கிறார் உதயநிதி. அதை விவாதமில்லாமல் ஏற்றுக் கொண்டார், முதலமைச்சர் விஜய்.

ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பளித்து, உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தியது தான் தமிழகத்திற்கு 177 டி.எம்சி தண்ணீர் கர்நாடகம் தர வேண்டும் என்பது!

இதுவே, 30 ஆண்டுகளாகப் போராடி – நாம் பாரம்பரியமாக பெற்றுக் கொண்டிருந்த 377 டி.எம்.சியில் இருந்து 200 டி.எம்.சியைக் குறைத்து - நமக்கு  நடுவர் மன்றத்தால் தரப்பட்ட தீர்ப்பு. 

மேக்கேதாட்டுவில் அணைகட்டினால், நடுவர் மன்றம் தந்த தீர்ப்பே செல்லாக்காசாகிவிடும். ஆகவே, மேக்கேதாட்டுவில் அணை வேண்டுமா? வேண்டாமா? என்பதற்காக தனி நடுவர் மன்றம் அமைத்து விசாரணைக்கு உடன்பட ஒப்புக் கொள்வதைவிட ஆபத்து வேறில்லை.

அது, தமிழகம் கொலை செய்யப்படுவதை அனுமதிக்கலாமா? வேண்டாமா? என்ற விசாரணைக்கு உடன்படுவது போன்றதாகும். ஆகவே, உதயநிதியின் யோசனை உதவாது என்பது மட்டுமல்ல, தமிழகத்தின் உயிரையே காவு கேட்பதற்கு வழிவகுத்துவிடும்.

காவிரி பிரச்சினையை இணக்கமான பேச்சு வார்த்தையின் மூலம் 1974 லேயே கருணாநிதி சுமூகமாக முடித்திருந்தால் அன்றைக்கு கர்நாடகம் தர முன்வந்த 350 எ.டி.எம்.சி நமக்கு கிடைத்திருக்கும். அவர் காவிரி பிரச்சினையை வைத்து தமிழ் உணர்வை கிளறினாரே அன்றி, தீர்க்க முனையவில்லை.

எம்.ஜி.ஆர் பேச்சுவார்த்தையில் சுமூகமாக தீர்க்க முனைந்தார். ஆனால், அப்போது பிரச்சினையை திசைமாற்றி நடுவர்மன்றம் கோரிக்கையை முன்னிறுத்தியது திமுக. அதற்காக அனைத்து கட்சிகள் போராட்டம், கடையடைப்பு, மனித சங்கிலி எனத் தமிழகமே போராடி நடுவர்மன்றம் அமைக்கப்பட்டது. அதையும் தாங்கள் சாதனை என்றது திமுக. 

அந்த நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு தர வேண்டும் என்று அழுத்தம் தந்தது திமுக அரசு. 1991 –ல் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தண்ணீர் என நடுவர் மன்றம் இடைக்கால தீர்ப்பு தந்தது. இந்த ஏமாற்றத்தை மறைக்க இதையும் தங்கள் தங்களின் மகத்தான வெற்றி என ஆர்பரித்தது திமுக. இதையடுத்து கர்நாடகா அரசு மேல்முறையீடு செய்தது. இதனால், இறுதி தீர்ப்பில் 2007-ல் நமக்கு நடுவர் மன்றம் தந்த தீர்ப்பு வெறும் 177 டி.எம்.சி தான். 

இந்த குறைந்தபட்ச தண்ணீரையும் கர்நாடகம் தரமறுத்தது. அதை தர வைப்பதற்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என்ற புதிய யோசனையை கோரிக்கையாக்கியது திமுக. இந்த கோரிக்கையை ஆதரிக்காதவர்கள் தமிழின விரோதிகள் ஆகிவிடுவார்கள் என்பதால் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஆதரித்தன.

இதற்காக நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க, எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டு அவையை முடக்கினர்.  தமிழகத்தில் அனைத்துக் கட்சியினர், விவசாயச் சங்கத்தினர், மாணவ அமைப்பினர், வியாபார சங்கங்கள் எனப் பலரும் போராட்டம், உண்ணாவிரதம் என ஈடுபட்டு காவிரி மேலாண்மை ஆணையத்தை கேட்டுப் போராடினர்.  கடைசியாக, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின்படி, 2018-ஆம் ஆண்டு மத்திய அரசால்  காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (Cauvery Water Management Authority - CWMA) அமைக்கப்பட்டது. 

அதற்கு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவரான எஸ்.கே.ஹல்தர் என்ற  நியாய உணர்வில்லாதவரே தலைவராக நியமனம் செய்யப்பட்டார். பிறகு அவரே ஓய்வு பெற்ற பிறகும் பல்லண்டுகள் காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவராக தொடர்கிறார். இவர் தொடக்கம் முதல் இன்று வரை தமிழகத்திற்கு எதிராகவே செயல்படுகிறார். 

''மேக்கேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம்'' என்ற தீர்மானத்தை நிறைவேற்றியதே திமுகவால் வலியுறுத்தி அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆக, காவிரி பிரச்சினையில் திமுகவின் அணுகுமுறைகளாலும், புதுப்புது  கோரிக்கைகளாலும் தமிழகத்திற்கு தீமையே விளைந்துள்ளது, மேன்மேலும் பின்னடவைவையே தந்துள்ளது. திமுக தன் சாதனையாக காட்டுவதெல்லாம் தமிழகத்திற்கு வேதனையையே பரிசளித்துள்ளன என்பதற்கு காவிரி நடுவர் மன்றமும்,காவிரி மேலாண்மை ஆணையமுமே சாட்சியாகும்.

அந்த வகையில் தான் எதிர்க்கட்சித் தலைவரான உதயநிதி ஸ்டாலின், ''மேக்கேதாட்டு விவகாரத்தில் தனி நடுவர் நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பதை தீர்மானத்தில் சேர்க்க வேண்டும்'' என்று வலியுறுத்தியதுமாகும்.

காவிரியில் இதுவரை அமைக்கப்பட்ட அமைப்புகளால் நாம் எந்தப் பயனையும் பெறவில்லை என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு (Cauvery Water Regulation Committee - CWRC) ஆகும். இது செயல்படுவதே இல்லை. பயிர்களுக்கு தண்ணீர் என்பது தினசரி தேவையாகும். அந்த வகையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தண்ணீரை தினசரி இவ்வளவு என்பதாக திறந்துவிடுவது என்பது இது வரை சாத்தியமாகவே இல்லை. 

காவிரியை சிறைபிடித்து மொத்தமாக மாதம் ஒருமுறை திறந்துவிடுகிறது கர்நாடகம். இதை எப்படித்தான் இரு திராவிட ஆட்சிகளும் ஏற்றுக் கொண்டு மெளனித்து வந்தனர் என்பதே புரியவில்லை. தினசரி தண்ணீர்வரத்து இயல்பாக நடக்க ஆவண செய்ய வேண்டும் என விவசாயத் தலைவர் செ. நல்லுசாமி  தொடர்ந்து சொல்லிக் கொண்டுள்ளார்.

உதயநிதியின் ஆலோசனைப்படி மேக்கேதாட்டுக்காக 'தனி நடுவர் மன்றம்' அமைத்தால், அது கர்நாடகத்திற்கு சாதகமாக அமையவே வாய்ப்புகள் அதிகம். கடந்தகால நமது அனுபவங்கள் இதைத் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளது.

மேக்கேதாட்டு அணைக்காக தனி நடுவர் மன்றம் அமைப்பது என்பது நம்மை கொல்வதற்கான கொலைக் கருவியை எதிரியிடம் நாமே எடுத்து தருவதாகும்.

சாவித்திரி கண்ணன்

https://www.facebook.com/100000227053317/posts/37501693542754744/?rdid=WGbLMZ6Xrgc56r53

======================================================

 


காவிரியை காவு தந்து மேக்கேதாட்டில் மெத்தனம் காட்டிய திமுக!

மேக்கே தாட்டு அணை விவகாரத்தில் திமுக, அதிமுக அரசுகள் காட்டிய மெத்தன போக்குகளே இன்றைக்கு கர்நாடகத்தின் துணிச்சலுக்கு காரணம்! காவிரி பிரச்சினையில் கருணாநிதி அவர்கள் இன உணர்வு அரசியலை நுழைத்து, தமிழகத்திற்கு ஆகப் பெரும் இழப்பை ஏற்படுத்தியதையும் மறக்க முடியாது;

இன்றைக்கு சட்டமன்றத்தில் உதயநிதி, ”காவிரி நீர் பிரச்சினைக்காக அனைத்து கட்சி பிரதிநிதிகளையும் முதல்வர் டெல்லி அழைத்துச் சென்று வலியுறுத்த வேண்டும்” என அக்கறை காட்டும் தொனியில் பேசுகிறார். ஆனால், ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடந்த போது, ‘காவிரிச் சிக்கலுக்கு அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தக் கோரி’ பலமுறை கோரிக்கை வைத்தும் நடத்தவில்லை, ஸ்டாலின்.

தொடர்ந்து தவிர்த்து வந்த நிலையில், கர்நாடகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்த பிறகு இங்கு தவிர்க்க முடியாமல் தமிழ்நாட்டிலும் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், அப்போதும் கூட கர்நாடகத்தைப் போல் அனைத்துக் கட்சிக் கூட்டமாக இல்லாமல், அனைத்து சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் கூட்டமாக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடத்தி ஒப்புக்கு சப்பாக தீர்மானம் இயற்றி சடங்காக முடித்தனர்.

இது மட்டுமா?

காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகேதாட்டு அணையைக் கர்நாடகம் கட்டிக் கொள்ளலாம் என்ற தீர்மானத்தை ஆணையத் தலைவர் எஸ்.கே. ஹல்தர் திமுக அரசின் பிரதி நிதிகளை வைத்துக் கொண்டே நிறைவேற்றினார்.  நிறைவேற்றினார். காவிரி மேலாண்மை ஆணையக் கூட்ட நிகழ்ச்சி நிரலில் மேகேதாட்டு அணை குறித்த பொருளை முன் வைத்தால் அக்கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு, 2024  பிப்ரவரி 1 -ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசின் நீர்வளத் துறைச்செயலர் கலந்து கொண்டார். ஏன்? எதற்கு? என்ற விளக்கமும் மக்களுக்கு சொல்லப்படவில்லை.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, ‘காவிரி நீரை 4 மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளிப்பது மட்டுமே காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் அதிகாரம். கர்நாடகம் புதிய அணையைக் கட்ட அனுமதி தரும் அதிகாரம் காவிரி ஆணையத்துக்கு இல்லை’ என்பதை முந்தைய திமுக அரசு உறுதிபட பேசவில்லை.

இதுமட்டுமின்றி, ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட மேகேதாட்டு அணைக்கு ஆதரவான தீர்மானத்தை தமிழ்நாடு அரசு கடைசி வரை கண்டிக்கவில்லை. ‘இந்த அணைக் கட்டப்பட்டால் தமிழ்நாட்டுக்கு  தண்ணீர் கிடைக்காது’ என்பது நன்கு தெரிந்தும் பாஜக அரசை பகைக்க தயங்கியது திமுக அரசு!

ஆகவே, மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் திமுக, அதிமுக என இரண்டு கட்சிகளுமே சட்ட சபையில் வீர வசனங்கள் பேசுவதோடு சரி. உண்மையில் மிக மோசமான மெத்தன போக்கையே கடைபிடித்தனர் என்பதே வரலாறு.

காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை, பாலாறுப் பிரச்சினை ஆகியவற்றில் அண்டை மாநிலங்களுடனான நமது நீண்ட நெடிய முடிவில்லா போராட்டங்கள், தீர்வை எட்ட முடியாத முட்டுக்கட்டை நிலை ஆகியவற்றுக்கு இரு அம்சங்களே காரணம;.

# மாநில கட்சிகள் தங்களை அந்த மண்ணின் மக்களுக்கான ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ளும் வாய்ப்பாக மட்டுமே ஆற்று நீர் பிரச்சினையை அணுகுவது.

# தேசியக் கண்ணோட்டத்துடன்  உண்மையான நீதியை நிலை நாட்டத் தகுதியற்ற மத்திய ஆட்சியாளர்கள் மற்றும் தேசிய கட்சிகள்!

மனம் வலிக்கும் ஒரு உண்மையைச் சொல்லவா?

காவிரியில் 1972 வரை கர்நாடக அரசே நாம் எந்தக் கோரிக்கையும் வைக்காமல் அனுமதித்துக் கொண்டிருந்த தண்ணீரின் அளவு ஆண்டுக்கு 377 டி.எம்.சி! அந்த ஆண்டுக்கான மேட்டூரின் உபயோக அளவு 414 டி.எம்.சி என பதிவாகியுள்ளது. ஆனால், கர்நாடகமோ வெறும் 168 டி.எம்.சியைத் தான் பயன்படுத்திக் கொண்டிருந்தது!

1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இருக்கும் போது போட்ட ஒப்பந்தத்தை 50 ஆண்டுகள் கழித்து புதுப்பிக்க வேண்டி இருந்த சூழலில் கர்நாடகம் தமிழகத்திடம் வேண்டியதோ, 200 டி.எம்.சி வரை தாங்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பதே!

நாம் அந்த வேண்டுகோளை ஏற்று இருந்தால், அன்றைக்கு நாம் 350 டி.எம்.சியை நிரந்தரமாக்கிக் கொண்டு, கர்நாடகத்தோடு நிரந்தர நட்பு பாராட்டி இருக்கலாம்.

அன்றைக்கு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி அவர்கள், ’’காவிரி நீர் என்பது எங்கள் உரிமை மற்றும் தன்மானம் சம்பந்தப்பட்டது. இதில் ஒரு சொட்டு நீரைக் கூட எங்கள் அரசாங்கம் விட்டுத் தராது’’ என்றார்.

இங்கு தான் தண்ணீர் பிரச்சினை என்பது இன உரிமை போராட்டமாக மாறியது. அது முதல் பல கட்டப் பேச்சுவார்த்தைகள் பயனற்று உச்ச நீதிமன்றம், நடுவர் மன்றம் என்னறெல்லாம் பல்லாண்டுகள் நீடித்த போராட்டமானது. 1991 ஆம் ஆண்டு நடுவர் மன்றம் இடைக்காலத் தீர்ப்பில் தமிழகத்திற்கு 205 டி.எம்.சி தான் எனத் தீர்ப்பளித்தது.

அதாவது, 377 டி.எம்.சி பெற்று வந்த நமக்கு வெறும் 205 டி.எம்.சி தண்ணீர் என்று தீர்ப்பு கிடைத்தது.

அப்போது இந்த இடைக்காலத் தீர்ப்பை, தங்களின் இமாலய சாதனையாக காட்டி, திமுக செய்த அலப்பறைகள், ஆர்ப்பரிப்புகள் கர்நாடகத்தில் எதிர்வினையாற்றி அவர்கள் மேல் முறையீடு சென்று இறுதி தீர்ப்பில் நமக்கு 177 டி.எம்.சி கிடைக்கும்படி செய்துவிட்டனர்.

இன்றைக்கு அந்த 177 டி.எம்.சியைக் கூட கர்நாடகம் நமக்கு தருவதில்லை…என்பது சோகத்திலும் சோகம்.

இடையே  எம்.ஜி ஆர் முதலமைச்சராக இருந்தது போது, அன்றைய கர்நாடகா முதல்வர் குண்டுராவ் எம்.ஜி.ஆரின் நெருங்கிய நண்பர். 1984 வரையிலும் கூட தமிழகத்திற்கு  கர் நாடகா தந்து கொண்டிருந்த தண்ணீர் 305 டி.எம்.சி. அப்போது குண்டுராவ் எம்.ஜீ.ஆரிடம், ”அண்ணே இப்ப 305 டி.எம்.சி தண்ணீர் உங்களுக்கு வந்து கொண்டுள்ளது. இதிலேயே நீங்க ஆண்டுக்கு 100 டி.எம்சிக்கு மேலே கடலில் வீணடித்துக் கொண்டு இருக்கிறீர்கள். இந்த தண்ணீர் அளவே உங்களுக்கு தாராளமானது. இதை அப்படியே ஒப்பந்தமாக்கிக் கொள்ளலாம். நீங்க கிடைக்கிற தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு முழுமையாக பயன்படுத்த முடியுமோ பயன்படுத்திக்கொள்ள சிறிய தடுப்பணைகள், கதவணைகள் கட்டிக் கொள்ளுங்கள்” என்று மன்றாடினார்.

முதல்வர் எம்.ஜி.ஆர் அன்றைய பொதுப்பணித் துறை பொறியாளர்களை அழைத்து பேசினார். ”உண்மை தான் சார். நமக்கு 305 டி.எம்.சியை உத்திரவாதப்படுத்திக் கொள்வதில் தப்பில்லை. இந்த ஒப்பந்தமே 1974ல் கையெழுத்தாகி இருந்தால் 350 டி.எம்.சி தந்திருப்பாங்க. இப்ப நாம் ஒத்துக்கொள்ளாவிட்டால் கர்நாடகத்தின் பயிர் செய்யும் பரப்பளவு விரிந்து போவதற்கு ஏற்ப, வருங்காலத்தில் அவர்களுக்கு இன்னும் அதிகம் தண்ணீர் தேவைப்படலாம். அப்போது இன்றைக்கு தருவதாக ஒப்புக் கொண்டதைக் கூட நிச்சயமாக தரமட்டார்கள். இது நல்ல வாய்ப்பு தான். ஆனால், அரசியல் ரீதியான விளைவுகளை ஆலோசித்து நீங்க முடிவெடுங்க’’ என்றனர்.

எம்.ஜி.ஆர் தன் அமைச்சரவை சகாக்களை அழைத்து விவரங்களை கூறினார்.

அமைச்சரவை சகாக்களோ, ‘’நல்ல வாய்ப்பு தான். இத்தோட பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். ஆனா, பிரச்சினை முடிவதை கருணாநிதி விரும்பமாட்டார். நான் 350 டி.எம்.சிக்கே ஒத்துக் கொள்ளவில்லை. எம்.ஜி.ஆர் 305 டிஎம்சிக்கு ஒத்துக் கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்துவிட்டார். எம்.ஜி.ஆர் தமிழனாக இருந்தால், இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருப்பாரா? எனக் கேட்பார். அந்த அரசியலை எதிர்கொள்வது கடினம். நீங்க காலியாகிடுவீங்க’’ என்றனர்.

எம்.ஜி.ஆரும் பின்வாங்கிவிட்டார். கருணாநிதியின் இனவாத அரசியலால் தமிழகம் இழந்ததில் முக்கியமானது காவிரி நீர்!

அதே பார்மூலாவைத் தான் தற்போதும் ஸ்டாலின், உதயநிதி காலத் திமுகவும் செய்கின்றது…!

இவர்களுக்கு தமிழகம் எவ்வளவு பாதிக்கப்பட்டாலும், தமிழர்கள் எவ்வளவு இழந்தாலும் ஒரு பொருட்டே இல்லை.  தங்களின் ‘தமிழினப் பாதுகாவலர்கள்’ இமேஜுக்காக எல்லாவற்றையும் ‘டேமேஜ்’ செய்து கொண்டே இருப்பார்கள்!

சாவித்திரி கண்ணன்

https://aramonline.in/24936/mekethadu-dam-dmk-tvk-govt/

அறம் இணைய இதழ்

Disclaimer: இந்தப் பகுதி கட்டுரையாளரின் பார்வையை வெளிப்படுத்துகிறது. செய்திக்காகவும் விவாதத்திற்காகவும் இந்த தளத்தில் வெளியிடுகிறோம் – செந்தளம் செய்திப் பிரிவு